உண்மையான அன்பு போரடிக்குமா...

"சாமான்யர்களின் அன்பு... நேசம், பாசம், கோபம், வாஞ்சை, பரிதவிப்பு, பாசம், நெருடல் இதுதான் படத்தின் ஒன்லைன்''.
உண்மையான அன்பு போரடிக்குமா...

"சாமான்யர்களின் அன்பு... நேசம், பாசம், கோபம், வாஞ்சை, பரிதவிப்பு, பாசம், நெருடல் இதுதான் படத்தின் ஒன்லைன்''. இரண்டே வார்த்தைகளில் கதையின் பேசுப்பொருள் பேசி அமர்கிறார் பாலையா டி.இராஜசேகர். பரத் பாலாவின் மாணவர். "காத்திருப்போர் பட்டியல்' மூலம் கதை சொல்ல வருகிறார். 

என்ன சொல்ல போகிறீர்கள்?
ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலுக்கவே அலுக்காத வார்த்தைகள், பயணங்கள் பற்றியதாகவே இருக்கின்றன. 
என் வாழ்க்கையில் சரிபாதி பொழுதுகள் பயணங்களுடன்தான் கழிந்திருக்கின்றன. விதவிதமான பஸ்களும், ரயில்களும், ஒலிகளும், ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சி படிமங்களாக மனதில் படிந்து கிடக்கின்றன. அப்படித்தான் இங்கே சென்னை நகரிலும் அதிகமாக ரயில்களிலேயே பயணப்படுவேன். சினிமா கனவு, ரயில் பயணம் என அது ஒரு ரசனை. அப்படி போகும் அந்த ரயில் பயணங்கள் என்னால் மறக்கவே முடியாத ஒன்று. அந்த பயணங்களில் நான் சந்தித்த முகங்கள் பல. அந்த மனிதர்கள் பொசுக்கென்று எல்லாவற்றையும் வெளித்தள்ளி மனதில் நிரம்பி விடுவார்கள். பயணங்களில் யாரோ நீட்டுகிற வாட்டர் பாட்டில், புளியோதரைப் பொட்டலம், ஒரு புன்னகை, விசாரிப்பு, சிநேகம், காதல்... என எல்லாவற்றிலும் ஒரு காவியத் தன்மை வந்து விடுகிறது. யாரோ ஒரு மனிதர் அதுவரை தெரியாத யாரிடமோ பேசிக் கொண்டே வரும் போது அந்த ரயில் ஏதோ உறவினர் வீடு மாதிரி ஆகி விடுகிறது. இந்தப் பின்னணிதான் கதைக்களம். ஒரு பயணம்... ஒரு ரயில்... பல முகங்கள் என கதை போகும். காதல், அன்பு, மனிதநேயம், சமூக அக்கறை என்று படத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் மென்மையான உணர்வுகள் நிரம்பி இருக்கும்.
உள்ளடக்கம் பற்றி இன்னும் பேசலாமே? 
ரயில்வேயில் ஆர்.பி.எஃப் என்று ஒரு போலீஸ் பிரிவு உண்டு. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சிறு சிறு தவறுகள் செய்பவர்களை பிடித்து அவர்களுக்கு தண்டனை தருவதுதான் இவர்களின் வேலை. தவறுகளுக்கு ஏற்ற மாதிரி அவர்களுக்கு வரி விதிப்பு, இன்னப் பிற தண்டனைகளை அந்த பிரிவு போலீஸôர் விதிப்பார்கள். வரி செலுத்த முடியாதவர்களை ஒரு நாள் முழுவதும் அமர வைத்து பின் விட்டு விடுவார்கள். இதுதான் ஆர்.பி.எஃப்பின் வேலை. இப்படி அந்த போலீஸிடம் சிக்கி கொண்டு ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கும் சில, பல மனிதர்களை பற்றியதுதான் கதை. சச்சின் மணி, அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், சித்ரா லெட்சுமணன் இப்படி பலர் குறிப்பிட்ட ஒரு நாளில் ஆர்.பி.எஃப் போஸீஸôரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். வசதி வாய்ப்பு, பெரும் தேடல்கள் என எதுவும் இல்லாதவர்கள் இவர்கள். எந்த பிரமிப்பும் ஏக்கமும் இவர்களுக்கு இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. வாழ்க்கைப் பற்றிய குழப்பமோ, சிக்கலோ சிலருக்கு இல்லை. மிக எளிமையாக இந்த வாழ்க்கையை அணுகுபவர்கள். அன்பு மட்டுமே இந்த வாழ்வின் நிரந்தரம் என்ற மனப்பக்குவம் கொண்ட ஒருவர். இப்படி பல தரப்பட்ட மனிதர்களின் மனசும், நிகழ்வுகளும்தான் கதை. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஒரு எளிய வாழ்க்கைதான் படம். அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற ஒரு அழகான காதலும் உண்டு. சச்சின் மணிக்கு ஜோடியாக நந்திதா வருகிறார். 
இந்த அளவுக்கு மென்மையான ட்ரீட்மென்ட் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்குமா...?
நிச்சயமாக... பெரும் நம்பிக்கை உண்டு. திரைக்கதையில் இருக்கும் புதுமையும், ரசனையும்தான் இதற்கு காரணம். உண்மையான அன்பு போரடிக்குமா என்ன...மத்தவங்க கஷ்டத்தைப் பார்த்துக் கண்ணீர் 
விடுறதைவிட, கண்ணீரைத் துடைக்கிறவனுக்குத்தான் மரியாதை அதிகம். முகம் தெரியாத ஒரு மனிதனின் ஏதோ ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், பிரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே பயணிக்கும் சிலரின் வாழ்க்கைதான் படம். இந்தப் படம் உங்களை நிச்சயமாக கவனிக்கவைக்கும். வசனங்கள் நிச்சயம் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமானவர்களை நினைத்துப் பார்ப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். 
லால்குடி இளையராஜா, ஷான் ரோல்டன், சுகுமார் என சக கலைஞர்களின் கூட்டணி பலமா இருக்கே...?
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்துவது தனி சவால். நேரம், காலம் எல்லாவற்றுக்கும் காத்திருக்க வேண்டும். தாம்பரம் ரயில்வே நிலையத்தில்தான் முழுக் கதையும் நடக்கும். சில காட்சிகளை அங்கேயும், பல காட்சிகளை அது மாதிரியே செட் போட்டும் நடத்தியிருக்கிறோம். லால்குடி இளையராஜா அதை நேர்த்தியாக செய்து கொடுத்திருக்கிறார். உங்களுக்கு எந்த இடத்திலும் அந்நியம் தெரியாது. ஒவ்வொரு காட்சியிலும் உயிர்ப்பு உருக்கும். கேமிராவுக்கு சுகுமார் பொறுப்பு. மொத்த படத்தையும் தூக்கி சுமந்து வந்திருக்கிறார். இது அவருக்கு இன்னுமொரு முக்கியமான சினிமா. ஷான் ரோல்டனின் இசை அவ்வளவு அருமையாக பொருந்தி வந்துள்ளது. யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் பாட்டு வரிகளுக்கு அவ்வளவு துடிப்பாக இசை தந்திருக்கிறார் ஷான் ரோல்டன். எந்த சூழலையும் இசையால், வரியால் நிறைத்து விடுகிற மனிதர்கள் இந்தப் படத்துக்கு பெரும் பலம். அதே மாதிரியான மெல்லிசை பாடல்கள் மீது எனக்கு தனிப் பிரியம். அதற்கான சூழலும் இங்கே இருந்தது. காதலையும், பிரியத்தையும், அன்பையும் வெளிப்படுத்துகிற சூழல்கள் அப்படி வந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருந்த லேடி ட்ரீம் சினிமாஸ் நிறுவனத்தின் பைஜா டாமிற்கு அன்பின் நன்றிகள்.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com