தமிழ்த்தாய் வாழ்த்தாக வந்திருக்க வேண்டிய பாடல்!

மகாகவி பால பாரதி ச.து.சுப்பிரமணிய யோகியார் (1904-1963) கடந்த நூற்றாண்டின் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா,
தமிழ்த்தாய் வாழ்த்தாக வந்திருக்க வேண்டிய பாடல்!

மகாகவி பால பாரதி ச.து.சுப்பிரமணிய யோகியார் (1904-1963) கடந்த நூற்றாண்டின் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, திரைப்பட இயக்குநர் (பக்த அருணகிரி), விடுதலைப் போராட்ட வீரர் என பல்வேறு முகங்களுக்குச் சொந்தக்காரர். நவம்பர் 30-ஆம் தேதி அவரது 113-ஆவது பிறந்தநாள்.
தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக உருமாறியிருக்க வேண்டிய பாடலை யோகியார் படைத்தார். "தமிழ்க்குமரி' என்ற நூலில் உள்ள அப்பாடல் இதோ:
"பங்கயத்து குமரிமுனைப் பாதம் சேர்த்தாள்
பசும் பொன்முடி வேங்கடத்தைப் புனைத்தங் கார்த்தாள்
பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள்
புறமூன்றும் கடற்கன்னி பணியப் பார்த்தாள்
மங்கலம்சேர் மேலைமலைச் செங்கோ லுற்றாள்
மலர் மொட்டுலங்கையெனும் மகளைப் பெற்றாள்
எங்கள் குலத் தெய்வம் தாய் - எமக்கு வீடு
இளமை குன்றாக் கன்னி எங்கள் தமிழர் நாடு''.
யோகியாரின் நினைவு நாள் கூட்டமொன்றில் கவியரசர் கண்ணதாசன் பேசும்போது, ஒரு விமர்சனம் எப்படியிருக்க வேண்டும் என்பதை அழகாகக் குறிப்பிட்டார். யோகியாரின் விமர்சனங்களைப் பற்றி குறிப்பிடும்போது, "யோகியாரின் விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாது, வசை பாடாது, தவறு இருந்தால் நாசுக்காக சுட்டிக்காட்டும் தன்மையுடையது. எனது புத்தகங்கள் பலவற்றை யோகியார் விமர்சனம் செய்திருக்கிறார். எந்த விதத்திலும் எழுத்தாளரின் மனம் நோகும் வண்ணம் அதில் ஒரு எழுத்துகூட இருக்காது'' என்றார்.
சாத்தனார் எழுதிய "கூத்த நூல்' என்ற புத்தகம் நாட்டிய சாஸ்திரத்தை மையமாகக் கொண்டது. அக்காலத்தில் சாத்தனாரின் ஓலைச்சுவடியில் எழுதிய சூத்திரங்களைப் படித்து அதற்கு பொழிப்புரை, பதவுரையை எழுதியவர் யோகியார். இச்சுவடி அவருக்குக் கிடைத்ததொரு சிறப்பான கதைதான்.
யோகியார் புதுமை விரும்பி. பழமையைப் பேணிக் காப்பவர். எந்த ஊருக்குப் போனாலும் அந்த இடத்தின் சிறப்பினை தெரிந்து கொள்ள விரும்புவார். ஒருமுறை தான் பயின்ற ஊரான ஈரோட்டிற்குச் சென்றிருந்தார். அங்குதான் சாத்தனார் எழுதிய ஓலைச்சுவடி விவரத்தை யோகியார் அறிந்தார். அதைப் பெறுவதற்காக தேடும் பணி தொடர்ந்தது. இந்தச் செய்தி காட்டுத்தீயென பரவி, ஓலைச்சுவடி வைத்திருந்தவருக்கு செய்தி தெரிந்தது. இனி இந்த ஓலைச்சுவடி யோகியாரிடம் இருக்க வேண்டுமென முடிவு செய்தார். 
"கூத்த நூல்' ஓலைச்சுவடியை அவரே நேரில் வந்து யோகியாரிடம் சேர்ப்பித்தார். " இந்தச் சுவடியின் பெருமை முழுவதும் உணர்ந்தவர் நீங்கள் தான். இந்தச் சூத்திரங்களின் பொருள் கூட எனக்குத் தெரியவில்லை. இனி நீங்களே சூத்திரங்களைப் படித்து, பொருளுணர்ந்து கற்றறிந்து அறிஞர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். என் பெயரைக் கூட வெளியிடவேண்டாமென வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
யோகியாரின் இறுதி வாழ்வு வரை அச்சூத்திரங்களை எங்கிருந்துப் பெற்றார் என்பதைக் கூறவேயில்லை. சாத்தனார் எழுதிய "கூத்த நூல்' பல்வேறு நடனமணிகளைக் கவர்ந்த நூலாகும். இலக்கியம் பயின்ற தமிழ்ப் பண்டிதர்கள் அறிந்து கொண்ட சிறந்த நூல். ஆச்சரியமான வேண்டுகோள்!
சுருங்கச் சொன்னால் இந்நூலிலுள்ள தமிழ் பலருக்கு இன்றும் கூடப் புரியவில்லை என்பார்கள். ஆனால் யோகியார் மட்டும் பதவுரை, பொழிப்புரை ஆகியவற்றைச் சிறப்பாக எழுதி தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
சாகித்ய அகாதெமி வெளியிட்ட "இந்திய இலக்கிய சிற்பிகள்' நூலிலிருந்து..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com