ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -27: படத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

எம்.கே. தியாகராஜ பாகவதருடைய "புதுவாழ்வு' படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்காக கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டிற்கு மருதகாசியையும், இசையமைப்பாளர்  ஜி. ராமநாதனையும் அழைத்துச் சென்றார்கள்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -27: படத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

எம்.கே. தியாகராஜ பாகவதருடைய "புதுவாழ்வு' படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்காக கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டிற்கு மருதகாசியையும், இசையமைப்பாளர்  ஜி. ராமநாதனையும் அழைத்துச் சென்றார்கள். அந்தப் படத்தில் என்.எஸ்.கே.யும், டி.ஏ. மதுரமும் பாடுகின்ற பாடல் அது என்பதால் என்.எஸ்.கே.யின் ஒப்புதலைப் பெறுவதற்காகக் கூட்டிச் சென்றார்கள்.
அப்போதுதான் முதல்முறையாக என்.எஸ்.கே.யின் அறிமுகம் மருதகாசிக்குக் கிடைக்
கிறது. மருதகாசியிடம் என்.எஸ்.கே. ""எனக்கு இதுவரை உடுமலையாரும், கே.பி. காமாட்சி சுந்தரமும்தான் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலை சந்தானகிருஷ்ண நாயுடு மட்டும் எழுதியிருக்கிறார். நீங்கள் எழுதுகின்ற பாடல் எனக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் உடுமலையாரைத்தான் அழைக்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால் அதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. அதற்குச் சம்மதமானால் எழுதுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
அண்ணன் மருதகாசி அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, ""காட்சி என்ன? அதைச் சொல்லுங்கள்'' என்றிருக்கிறார்.
""ஒரு குருவிக்காரனும் குருவிக்காரியும் தனித்தனியாக வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு தங்கள் குடிசைக்குத் திரும்புகிறார்கள். அப்போது குருவிக்காரன், குருவிக்காரி இருந்த தோற்றத்தைப் பார்த்து சந்தேகத்தோடு சில கேள்விகள் கேட்கிறான் அவளும் பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள்.
முடிவில் ஒரு உண்மையைச் சொல்கிறாள். அதாவது ஒரு காலிப்பயல் தன்னைக் கையைப் பிடித்து இழுத்ததாகவும் அதனால் ஏற்பட்ட சண்டையில் கைவளையல் உடைந்ததாகவும் சொல்கிறாள். உடனே கோபத்துடன் அவனுக்குப் புத்தி புகட்டப் போவதாகச் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். இதுதான் காட்சி'' என்று என்.எஸ்.கே. விளக்கியிருக்கிறார்.
""இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வருகிற சிங்கன் சிங்கி கதைதானே!'' என்று மருதகாசி சொல்ல ""ஓ, உங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?'' என்றார் என்.எஸ்.கே."தனக்கு இலக்கியப் பயிற்சியளித்தவர்
பாபநாசம் ராஜகோபாலய்யர்' என்றும் "தனது மானசீக குரு உடுமலை நாராயணகவி'யென்றும், "ராமநாடகக் கீர்த்தனை எழுதிய சீர்காழி அருணாசலக் கவிராயர், நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வமத சமரசக் கீர்த்தனைகள் எழுதிய மாயூரம் முன்சீப் வேத நாயகம்பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் இவர்களெல்லாம் என் வழிகாட்டிகள்' என்றும் மருதகாசி சொல்லியிருக்கிறார்.
உடனே என்.எஸ்.கே. அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ""உடுமலையார் இருக்கும் இதயத்தில் உங்களுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டேன். நீங்கள் நன்றாக வளருவீர்கள்'' என்று வாழ்த்தினார். மறுநாள் அந்தப் பாடலை எழுதிக்கொண்டு மருதகாசி என்.எஸ்.கே.யைச் சந்தித்துப் பாடிக் காட்டினார். அவரும் பரவசப்பட்டார்.
ஆனால் அந்தப் படத்தில் அந்தப் பாடல் இடம் பெறவில்லை. அதை என்.எஸ்.கே.யும் பாடவில்லை. 1955-இல் வெளிவந்த "முல்லைவனம்' என்ற படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. அது இதுதான்.
ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
சேலம்பட்டு ஜரிகைச் சேலை
ஓரங்கிழிஞ்ச தென்னடி - என் குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி
பெண் : பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும்போது
ஆணிமாட்டிக் கிழிஞ்சு போச்சுடா
என் குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா
ஆண் : சீவிச் சிணுக்கெடுத்து
சிங்காரிச்சுப் பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே - என் குருவிக்காரி
கூந்தல் கலைஞ்ச தென்னடி
பெண் : கோயிலுக்குப் போயி நானும்
கும்பிட்டதும் என் மேலே
சாமிவந்து ஆடினதாலே - என் குருவிக்காரா
கூந்தல் கலைஞ்சு போச்சுடா -         
இப்படிப் போகும் அந்தப் பாடல்

"நீங்கள் எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லையென்றால் உடுமலை நாராயண கவியை வைத்துத்தான் பாடல் எழுதுவேன். அப்புறம் நீங்கள் வருத்தப்படக்கூடாது' என்று கலைவாணர், மருதகாசியிடம் சொன்னாரல்லவா? அதுபோல் எனக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
"எங்க ஊரு ராசாத்தி' என்றொரு படம். ராதிகாவும், சுதாகரும் நடித்தது. கதை வசனம் இயக்கம் கலைமணி. ஒருநாள் கலைமணி என்னை அழைத்து இந்தப் படத்தில் வரக்கூடிய ஒரு காட்சியைச் சொல்லி,  ""இதற்குப் பாடல் எழுதுங்கள். ஏற்கெனவே இந்தக் காட்சிக்குக் கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். அது எங்களுக்கு மன நிறைவாக இல்லை.
அதனால், நீங்கள் எழுதுங்கள். எங்களுக்குப் பிடித்தால் உங்கள் பாடலை வைத்துக் கொள்கிறோம். இல்லையென்றால், வாலியின் பாடலைத்தான் வைக்க வேண்டியிருக்கும்'' என்றார். உடனே நான் ""நீங்கள் வாலியிடமே சொல்லி வேறு பாடலை எழுதி வாங்க வேண்டியதுதானே'' என்றேன்.
""இல்லை. அவர் பெரிய கவிஞர். "நீ கொடுக்கிற பணத்திற்கு அதுபோதும். எழுத முடியாது' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதனால் நெருங்கிய நண்பர் என்ற முறையிலே உங்களிடம் கேட்கிறேன்'' என்றார் கலைமணி.
""யார் மியூசிக்? டியூனைப் போட்டுக் காண்பியுங்கள்'' என்றேன். ""கங்கைஅமரன் மியூசிக்'' என்று சொல்லிவிட்டு அவர் போட்ட டியூனை டேப் ரிக்கார்டரில் போட்டுக் காண்பித்தார். வாலி எழுதிய பாடலையும் பார்த்தேன். பரவாயில்லை என்ற வகையில்தான் இருந்தது.
உடனே அதை சவாலாக எடுத்துக்கொண்டு மறுநாளே பாடலை எழுதி கலைமணியிடம் காட்டினேன். அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. கங்கை அமரனும் பாடலைப் பார்த்து கைகுலுக்கிப் பாராட்டினார். இதற்கு மூன்று பல்லவிகள் எழுதினேன். மூன்றும் நன்றாக இருந்தது. என்றாலும் ஏதேனும் ஒரு பல்லவியைத் தானே வைக்க வேண்டும் என்று ஒரு பல்லவியைத் தேர்ந்தெடுத்து, எழுதிய நான்கு சரணங்களில் இரண்டு சரணங்களையும் தேர்ந்தெடுத்தார்கள்.
அந்தப் படத்தில் பிரபலமான பாடலே இதுதான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. நான் எழுதிய அந்தப் பாடல்தான் அந்தப் படத்தின் பேரையே இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இலங்கை வானொலியில் அப்பாடல் ஒலிப்பரப்பாகாத நாளே இல்லை என்ற வகையில் ஒலிபரப்பப்பட்டது. அந்தக் காலக் காதல் ஜோடிகளுக்கும் கல்லூரி மாணாக்க மாணாக்கியருக்கும் மிகவும் பிடித்த பாடல்.

ஆண் : பொன்மானைத் தேடி - நானும்
பூவோட வந்தேன்
நான்வந்த நேரம் - புள்ளி
மான் அங்கே இல்லே - அந்த
மான்போன மாயமென்ன - ஏ ராசாத்தி
அடி - நீ சொன்ன பேச்சு நீர்மேலே போட்ட
மாக்கோலம் ஆச்சுதடி - அடி
நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும்
காத்தோட போச்சுதடி
இதில் இரண்டாவது சரணத்தில்
உன்னை மறக்க முடியலே
உயிரை வெறுக்க முடியலே
ஏ - ராசத்தி
நீயும் நானும் ஒண்ணாச் சேரும்
காலம் இனிமேல் வாராதோ?
பெண் : இன்னோரு ஜென்மம் - இருந்தா
அப்போது பொறப்போம்
ஒண்ணோடு ஒண்ணா - கலந்து
அன்போட இருப்போம்
அது - கூடாமப் போச்சுதுன்னா
ஏ - ராசாவே
நான் - வெண்மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பொறந்திருப்பேன்
என்னை - அடையாளம் கண்டு நீ ஓடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்.

-இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் பலர் என்னிடம் உதவியாளராகச் சேரவேண்டும் என்று வந்தார்கள். அவர்களுடைய திறமையை அறிந்து என்னிடம் உதவியாளராக இருப்பதைவிட நல்ல டைரக்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேருங்கள் என்று அனுப்பி வைத்தேன். அப்படிச் சேர்ந்தவர்கள் சிலர் டைரக்டராகவே ஆகிவிட்டார்கள். அவர்கள் படத்திற்கும் நான் எழுதியிருக்கிறேன்.
கலைமணி முதன்முதல் கதை வசனம் எழுதி இயக்குவதாக அறிவித்த படம் "ஆசைகள்'. சங்கர் கணேஷ் இசையில் அந்தப் படத்தின் முதல் பாடலை நான்தான் எழுதினேன்.

தெய்வம் நீயே - உந்தன்
திருக்கோயில் மணித்தீபம் நான்
-என்று தொடங்கும். அப்பாடலை வாணிஜெயராம் பாடினார். ஆனால் படம் வெளியாகவில்லை. பாடல் மட்டும் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு படம் வெளிவந்தால்தான் வானொலியில் பாடல் ஒலிபரப்பப்படும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. அதனால் அந்தப் பாடல் அப்புறம் ஒலிபரப்பப்படவில்லை.
கலைமணி பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியவர். அவர் வசனம் எழுதிய முதல் படம் பாரதிராஜா இயக்கிய "16 வயதினிலே'  படம்தான். பின்னர் "எவரெஸ்ட் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். அதில் முதல் படம் "கோபுரங்கள் சாய்வதில்லை'. இதில், இளையராஜா இசையில்,
ஏம் புருஷன்தான்
எனக்கு மட்டும்தான்
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்பைமட்டும் எனக்குவிட்டு
மனக்கதவைத் தான்
சாத்திவிட்டுப் போனாரே
- என்று நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே பிரபலமான பாடல். படமும் நூறுநாட்கள் ஓடியது.
பின்னர்,  "பிள்ளைநிலா',  "சிறைப்பறவை',  "முதல்வசந்தம்',  "இங்கேயும் ஒரு கங்கை' ஆகிய படங்களைத் தயாரித்தார். இவற்றில் எல்லாம் நான் பாடல் எழுதியிருக்கிறேன். இதில் "முதல் வசந்தம்' படத்தில் நான் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது. இளையராஜா இசையில் நான் எழுதிய அந்தப் பாடல்,
ஆறும் அது ஆழமில்லே - அது
சேரும் கடலும் ஆழமில்லே
ஆழம் எது ஐயா - அந்தப்
பொம்பளெ மனசு தாய்யா
அடி - அம்மாடி அதன் ஆழம் பார்த்த தாரு
அடி - ஆத்தாடி அதைப் பார்த்த பேரைக் கூறு நீ
-என்று ஆரம்பமாகும். இளையராஜாவே பாடி அந்தப் பாட்டுக்குப் பிரபலம் கொடுத்தார். இதே பாட்டை அந்தப் படத்தின் கதாநாயகி
ரம்யாகிருஷ்ணன் பாடுவது போல வரும் காட்சியில் பல்லவியின் கடைசி இரண்டு வரியையும், சரணத்தையும் வேறு வார்த்தைகளைப் போட்டு எழுதினேன். அதை உமா ரமணன் பாடியிருப்பார். அதுவும் பிரபலமானது ஒரே மெட்டு என்பதால்.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com