சங்கீத மலர் கொண்டு துதித்தாரே! - கவிஞர் முத்துங்கம்

பசைக்கு மயங்காதவர் பலர் இருந்தாலும் இசைக்கு மயங்காதவர் எவரும் இருக்க முடியாது. பசை என்றால் பணம் என்பதை அனைவரும் அறிவர். ஓரறிவு முதல் ஆறறிவுடைய உயிர் வரை அனைத்தும் இசைக்கு மயங்கும்.
சங்கீத மலர் கொண்டு துதித்தாரே! - கவிஞர் முத்துங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -29

பசைக்கு மயங்காதவர் பலர் இருந்தாலும் இசைக்கு மயங்காதவர் எவரும் இருக்க முடியாது. பசை என்றால் பணம் என்பதை அனைவரும் அறிவர். ஓரறிவு முதல் ஆறறிவுடைய உயிர் வரை அனைத்தும் இசைக்கு மயங்கும்.
ஆனாய நாயனார் குழல் ஊதியபோது பசுக்கள் மேய்வதை மறந்தும், கன்றுகள் பால் குடிப்பதை மறந்தும், பறவைகள் இரை எடுப்பதை மறந்தும் மெய்மறந்து சோர்ந்து நின்றன என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுவார்.
கல்லையும் கரைந்து உருகச் செய்யக்கூடிய ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. ஆனால் இசைக்கு மயங்காதவன், இசையை விரும்பாதவன் ஒருவன் இந்நாட்டில் இருந்திருக்கிறான். இசைக் கலைஞர்களெல்லாம் மற்ற வேலைகளைச் செய்யாமல் வீணாகப் பொழுது போக்குகிறார்கள் என்று அவர்களைத் தண்டித்தும் இருக்கிறான். அவன்தான் முகலாய மன்னன் ஒளரங்கசீப்.
அவன் காலத்தில் மட்டுமல்ல அவனுக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இசைக்கலையும், நடனக் கலையும் இணைந்தே வளர்ந்து வந்திருக்கின்றன இரட்டைக் குழந்தைகளாக.
இசை பற்றிய இலக்கண நூல்களும் இருந்தன. களரியாவிரை, முதுநாரை, முது குருகு, இசை நுணுக்கம், பஞ்ச மரபு அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை யாவும் முதலிரண்டு கடல் கோளிலும் எஞ்சியிருந்தவை பின்னரும் அழிந்துவிட்டன.
"மதிவாணர் நாடகத்தமிழ்' என்ற நாடக இலக்கண நூலும், "செயிற்றியம்' என்னும் நாட்டிய இலக்கண நூலும் அழிந்தன என்றும் அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் கூற்றிலிருந்து அறிகிறோம்.
நாட்டிய வகை பற்றியும், நாட்டிய இலக்கணம் பற்றியும், நாட்டிய அரங்கு எவ்வளவு உயரம், எவ்வளவு அகலம், எவ்வளவு நீளம் இருக்க வேண்டுமென்றும் என்னென்ன திரைச்சீலைகள் அரங்குகளில் தொங்கவிடப்பட்டன என்றும் சிலப்பதிகாரம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.
அந்நாளில் நாட்டிய அரங்கு ஒருகோல் உயரம், ஏழுகோல் அகலம், எட்டுக்கோல் நீளம் என்ற அளவில் இருந்தது. இன்றைய எழுபது சென்ட்டி மீட்டர்தான் அன்றைக்கு ஒரு கோல். ஒரு கோலுக்கு என்ன கணக்கு வைத்திருந்தார்கள் என்றால் நன்கு வளர்ந்த உத்தம மனிதன் ஒருவனது இருபத்து நான்கு பெருவிரல் நீளம் கொண்டது ஒரு கோல்.
பொதிய மலை போன்ற புண்ணிய மலைச்சாரலில் கணுவுக்குக் கணு ஒரு சாண் இடைவெளியுள்ள விளைந்த மூங்கிலை வெட்டி வந்து சிற்ப நூல் அளவுப்படி இருபத்து நான்கு பெருவிரல் கொண்டு அளந்து துணித்து எடுப்பது ஒரு கோலாகும்.
பெருவிரலுக்கும் ஒரு கணக்கு உண்டு. எட்டு அணுக் கொண்டது ஒரு இம்மி. எட்டு இம்மி கொண்டது ஒரு தேர்த்துகள். எட்டுத் தேர்த்துகள் கொண்டது ஒரு எள். எட்டு எள் கொண்டது ஒரு நெல். எட்டு நெல் கொண்டது ஒரு பெரு விரல்.
ஏழு கோல் அகலம் எட்டுக்கோல் நீளமென்றால் என்ன கணக்கு வரும் என்பதை நாம் அலகிட்டுக் கொள்ளவேண்டும்.
நாட்டிய அரங்கில் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி ஆகிய மூன்று வகைத் திரைச்சீலைகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது நான் நாட்டியத்தைப் பற்றி சொல்லப்போவதில்லை. இசையைப் பற்றித்தான் சொல்ல இருக்கிறேன்.
தியாகய்யர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்றவர்கள் தெலுங்கிலும், வடமொழியிலும் கீர்த்தனைகள் எழுதும் முன்னர், தமிழிசை மும்மூர்த்திகளான முத்துத் தாண்டவர், சீர்காழி அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளை போன்றவர்கள் தமிழில் இசைப் பாடல்கள் பாடித் தமிழிசைக்குப் பெருமை சேர்த்தனர்.
முதன் முதல் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற, அதாவது பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற, பகுப்பு முறையை முத்துத் தாண்டவர் தான் கொண்டு வந்தார். அதையொட்டி மாரிமுத்தா பிள்ளையும் அருணாசலக் கவிராயரும் பாடல்கள் எழுதினர்.
முத்துத் தாண்டவரின் இந்தப் பகுப்பு முறையை நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு கேட்டுத் தெரிந்து கொண்டுதான் தியாகய்யர் போன்றவர்கள் பல்லவி அநுபல்லவி சரணம் என்ற பகுப்பு முறையில் எழுதத் தொடங்கினர். முத்துத் தாண்டவர் காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு கி.பி.1525-இல் பிறந்து 1600 வரை எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தவர்.
தியாகய்யர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர். கி.பி.1767-இல் பிறந்து 1847 வரை வாழ்ந்தவர்.
பண்டைய தமிழன் கண்டுபிடித்த பண்தான் இன்றைக்கு ராகம் என்ற பெயரில் விளங்குகிறது. பண்ணப்படுவது பண். இசைக்கப்படுவது இசை. அன்றைய தமிழன் கண்டுபிடித்த "யாழ்முறி' என்ற பண்ணுக்கு இன்றைய பெயர் அடாணா ராகம். இந்த அடாணா ராகத்தில் அமைந்த பாடல்தான் மகாகவி காளிதாஸ் படத்தில் இடம்பெற்ற,
ஆர்தருவார் இந்த அரியாசனம் - புவி
அரசோடு எனக்கிந்தச் சரியாசனம்
என்ற கண்ணதாசன் பாடல்.
அன்றைய "செம்பாலைப் பண்ணுக்கு' இன்றைய பெயர் கல்யாணி ராகம். "திருவருட் செல்வர்' என்ற படத்தில் இடம்பெற்ற "மன்னவன் வந்தானடி' என்ற பாடல் இந்த ராகத்தில் அமைந்த பாடலாகும். மேலும் "காவேரி' என்ற படத்தில் இடம்பெற்ற "மஞ்சள் வெயில் மாலையிலே' என்ற பாடல் "தங்கப் பதுமை' என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய "முகத்தில் முகம் பார்க்கலாம்' என்ற பாடல், "தாய் மூகாம்பிகை' படத்தில் இளையராஜா இசையில் வாலி எழுதிய "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ' போன்ற பாடல்கள் எல்லாம் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்கள்தாம்.
"வைகறைப் பாணி' என்ற பழைய தமிழ்ப்பண்ணுக்கு இன்றைய பெயர் சிவரஞ்சனி. "தில்லானா மோகனாம்பாள்' படத்தில் இடம்பெற்ற "நலந்தானா' என்ற பத்மினியின் நாட்டியப் பாடல் இந்த ராகத்தில் அமைந்த பாடல்தான். "கன்னிப் பருவத்திலே' என்ற படத்தில் இடம்பெற்ற "பட்டுவண்ண ரோசாவாம்; பார்த்த கண்ணு மூடாதாம்' என்று சங்கர்கணேஷ் இசையில் எழுந்த பாடல். இளையராஜா இசையில் "இங்கேயும் ஒரு கங்கை' என்ற படத்தில் இடம் பெற்ற "சோலைப் புஷ்பங்களே' என்ற பாடல் இவையெல்லாம் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்தவை.
அன்றைய "செவ்வழிப் பண்'ணுக்கு இன்றைய பெயர் எது குல காம்போதி. "சந்திரோதயம்' படத்தில் எம்.ஜி.ஆரும், நாகேசும் பாடுவதாக இடம்பெற்ற "காசிக்குப் போகும் சந்யாசி; உன் குடும்பம் என்னாகும் நீ யோசி' என்ற பாடல் இந்த ராகத்தில் அமைந்த பாடல்.
செந்துருத்தி என்ற பழைய தமிழ்ப் பண்ணுக்கு இன்றைய பெயர் "மத்தியமாவதி'. "பொன்னூஞ்சல்' என்ற படத்தில் இடம்பெற்ற "ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா' என்ற பாடல். "நெஞ்சிருக்கும் வரை' என்ற படத்தில் இடம்பெற்ற "முத்துக்களோ கண்கள்; தித்திப்பதோ கன்னம்' என்ற பாடல், "பொண்ணு ஊருக்குப் புதுசு' என்ற படத்தில் இடம்பெற்ற "சோலைக்குயிலே காலைக்கதிரே' என்ற பாடல், இவையெல்லாம் மத்தியமாவதி ராகத்தில் அமைந்த பாடல்கள்தாம்.
"மருள்' என்ற பழைய தமிழ்ப் பண்ணுக்கு இன்றைய பெயர் "இந்தோளம்'. "மணிப்பூர் மாமியார்' என்ற படத்தில் நான் எழுதிய,
ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே
அலைபாயுதே மனம் ஏங்குதே
ஆசைக் காதலிலே
என்ற பாடல் இந்தோளத்தில் அமைந்த பாடல். மலேசிய வாசுதேவன், சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடியிருப்பார். அவருடன் சைலஜா இணைந்து பாடியிருப்பார். இளையராஜா இசையில் உருவான பாடல் அது.
இதில் நடிப்பதாக இருந்த ஜெயலலிதா, பிறகு நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. கங்கை அமரனும் நானும் தான் பாடல்களை எழுதியிருந்தோம். 
படம் வெளிவரவில்லையென்றாலும் பாடல்கள் இசைத்தட்டாக வெளிவந்தது. அதில் நான் எழுதிய அந்தப் பாடல்தான் பிரபலமானது.
மலேசிய வானொலியில் "ஆனந்தத் தேன்காற்று' என்ற தலைப்பில்தான் அங்கு தமிழ்ப்பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. மலேசியாவிற்கு நானும் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணனும் சென்றபோது என்னுடைய பேட்டியை அங்கு ஒலிபரப்பினார்கள். அப்போது அவர்கள் சொன்னதுதான் இந்தத் தகவல்.
அதுபோல் "மதர்லேண்ட் பிக்சர்ஸ்' தயாரித்த "இளமைக் காலங்கள்' என்ற படத்தில் "ராகவனே ரமணா ரகுநாதா' என்ற பாடலும் இந்தோளத்தின் அடிப்படையில் அமைந்ததுதான். இதை எழுதியதும் நான்தான். இளையராஜா மெட்டை வாசித்துக் காட்டியபோது,
"கோவிந்தனே ரமணா கோபாலா' - என்று பல்லவியைத் தொடங்கினேன். பக்கத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து "கோவிந்தனே' என்று தொடங்குவதற்கு பதில் "ராகவனே' என்று தொடங்கினால் இசையைப் பற்றியும் சொல்வதற்கு ஏதுவாக இருக்குமே. அதுவும் கொலு வைக்கும்போது பாடுகின்ற பாடலாக இருப்பதால் "ராகவனே' என்று தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்றார். அதுதான் சரியென்று எனக்கும் பட்டது. அதன்பிறகு தான்,
ராகவனே ரமணா ரகுநாதா
பாற்கடல் வாசா
ஜானகி நேசா
பாடுகின்றேன் வரம்தா
என்ற பல்லவியை எழுதினேன். அருகில் இருந்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி, ""ஜானகியென்று எழுதியிருக்கிறீர்கள். தலைவர் பெயர் வருவது மாதிரியும் சரணத்தில் எழுத முடிந்தால் எழுதுங்கள்'' என்றார். அதற்கேற்ப இரண்டாவது சரணத்தில்,
தியாகேசர் உனைநெஞ்சில் பதித்தாரே
சங்கீத மலர்கொண்டு துதித்தாரே
ஸ்ரீ ராமச்சந்த்ரா தசரத ராமா
ஆனந்தா... அன்பைத் தா
என்று எழுதினேன். இளையராஜா பாட்டைப் பார்த்துவிட்டு, "தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே; சங்கீத மலர் கொண்டு துதித்தாரே' என்ற வரிகள் மூலம் என் உள்ளத்தில் நீங்கள் ஆழப் பதிந்து விட்டீர்கள் என்று கூறினார். 
ஆனால் அதன் பிறகு அவர் என்னைப் பாடல் எழுத அழைக்கவில்லை. அதனால் ஆழப் பதிந்துவிட்டேன் என்று கூறினாரா, ஆழப் புதைந்துவிட்டேன் என்று கூறினாரா என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. பல படங்களுக்குப் பிறகுதான் என்னைப் பாடல் எழுத மீண்டும் அழைத்தார்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com