தெரிந்த பெயர், தெரியாத விவரம்: கங்கை கொண்ட சோழபுரம்

மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன்.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: கங்கை கொண்ட சோழபுரம்

• மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன். தந்தை ராஜராஜன் கி.பி.1014-இல் காலமான பிறகு, சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன்.

• ராஜேந்திர சோழனின் ஆட்சி கி.பி. 1012 முதல் 1044 வரை ஆகும். "பரகேசரி' எனும் பட்டப்பெயர் உண்டு. இவனது ராணிமார்கள் திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன், 2-ஆம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார்.

• ராஜேந்திர சோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரை பரந்து விரிந்து கிடந்தது. சோழ சாம்ராஜ்யம் கடல் கடந்தும் பர்மா அதாவது இப்போதைய மியான்மர் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் இவையும் ராஜேந்திரன் ஆட்சியின் கீழ் இருந்தன. ஸ்ரீவிஜய ராஜ்ஜியங்களான சுமத்ரா, ஜாவா, மலேயா தீபகற்பகம் தவிர தூரக்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் சோழ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவை தவிர சோழ கடற்படை வென்றெடுத்த நாடுகளும் பலப்பல. 

• வங்கதேசம், (இப்போதைய பிகார்) மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன். கி.பி. 1019-ஆம் ஆண்டு தனது கங்கை வெற்றியை கொண்டாடும் நினைவாக கி.பி. 1023-ஆம் ஆண்டு ஜயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் என்று புதிய தலைநகரை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்தவாறு நிர்வகித்தான். அங்கு அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினான்.

• தனது தந்தை தஞ்சையில் கட்டியதைவிட பெரியதாக கோயிலை கட்டினான். தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டிருந்தாலும் இது பல வகையிலும் மாறுபட்டது. தஞ்சை பெரிய கோயில் விமானம் நான்கு பக்கங்களை கொண்டது. இக்கோயிலோ எட்டு பக்கங்களோடு,நளினத்தோடு அமைக்கப்பட்ட விமானம் கொண்டது. கிழக்கு நுழைவு வாயில் பெரிய நந்திபகவான். பிரம்மாண்டமான மூலமூர்த்திகள். ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் வானசாஸ்திர முறைப்படி வெகு அழகாக செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள். 60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரு கல்லில் வடிவமைக்கப்பட்ட லிங்கம். இது தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம். லிங்கத்தின் அடியில் சந்திரகாந்தக்கல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது. 

• இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள லிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சியாகும். 

• 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது. 

• கோயில் கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீரை தன்னிடம் தோற்ற மன்னர்களின் தலையில் ஏற்றி இங்கு கொண்டு வரச் செய்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோயிலுக்கு உள்ளேயே கிணறு வெட்டச் செய்து, அந்த புனித நீர் அங்கு வந்து சேரும் படி நேர்த்தியாக ஏற்பாடு செய்தான். கிணற்றுக்கு அருகில் சிங்கமுக வடிவம் அமைத்து தரிசனம் செய்ய வரும்போதெல்லாம் அதன் வாய் வழியாக உள்ளே சென்று இந்த புனித நீரை எடுத்து தலையில் தெளிக்கும் வகையில் உள்ளது.

• இங்குள்ள அம்மன் பெரியநாயகி, பெயருக்கு ஏற்றார்போல் பெரிய உருவத்தில் அம்மன் சிலை. ஆலயத்தின் வலது பக்கத்தில் 20 கைகள் ஆயுதங்கள் தாங்கி, புன்பூரிப்புடனும் காணப்படும் துர்க்கை அம்மன் சிலை. கோயிலின் ஒரு மீட்டர் தொலைவில் எழுத்தாணியுடன் விநாயகர் சிலை, தென்கிழக்கு மூலையில் முப்பரிமாண நடராஜர் சிலை இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் கால கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

• இதை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து பராமரித்து வருகிறது. இதனால் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கண்டு அதிசயிக்கின்றனர்.

• தனது சாதனைகளின் காரணமாக "பரகேசரி' என்றும் "யுத்தமல்லன்' என்றும் அழைக்கப்படுகிறான். "கடாரம் கொண்ட சோழன்' என்ற பெயரும் பெற்றான். 

• சாளுக்கியர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று சாளுக்கிய தலைநகரை கைப்பற்றியது தான் ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தம். இந்த வெற்றியின் நினைவாக தனது தந்தைக்கு இரண்டு ஜதை துவார பாலகர் சிலைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒன்று இக்கோயிலின் வாயிலிலும் மற்றொன்று திருப்புவனம் சரபேஸ்வரர் கோயிலும் வைக்கப்பட்டுள்ளது. 
-சி. சண்முகவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com