தமிழகத்தை தலைநிமிர்த்தும் சக்தி!

தமிழகத்தை மக்கள் சக்தி கொண்ட மாநிலமாக்க மூன்றாவது சக்தி பொறுப்பேற்கிறது' என்ற உற்சாகத்தோடு அந்தக் கூட்டம் முடிந்திருக்கிறது.
தமிழகத்தை தலைநிமிர்த்தும் சக்தி!

தமிழகத்தை மக்கள் சக்தி கொண்ட மாநிலமாக்க மூன்றாவது சக்தி பொறுப்பேற்கிறது' என்ற உற்சாகத்தோடு அந்தக் கூட்டம் முடிந்திருக்கிறது. இந்த முழக்கத்தைக் கேட்டதும் நமக்கு அரசியல் கட்சிகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதை தமிழகத்தில் உள்ள சேவை அமைப்புகள் ஒருங்கிணைந்து எழுப்பின என்பதுதான் ஆச்சரியம்.
சேவையின் மூலமே மக்களை ஒன்றிணைக்க முடியும் என்ற இலக்குடன் ஒருங்கிணைந்து, காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். வளாகத்தில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி சேவை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் "மூன்றாவது சக்தி' என்று பெயரில் கலந்துரையாடினர்.
இந்தக் கருத்தரங்கத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சமூக சேவகர்கள் பங்கேற்றாலும், வண்ணமயமான விளம்பரங்களோ, அழைப்பிதழ்களோ இல்லை. மக்கள் பணிகளில் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வரும் சேவை அமைப்புகளைப் பட்டியலெடுத்து பொறுப்பாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு வரவைத்திருந்தனர். 82 சமூக அமைப்புகளைச் சேர்ந்த 1,136 தன்னார்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தன்னார்வலர்கள்அனைவரையும் சென்னை நகரைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என 50 முக்கியப் பிரமுகர்கள் வாசலில் நின்று வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் மாணவர்களும் பங்கேற்றது, தன்னார்வலர்களுக்கு உற்சாகமளித்தது. வாசலில் போடப்பட்டிருந்த கோலம், வரவேற்பு தளம், உணவிடம், அரங்கத்தில் நடைபெற்ற செயல்பாடுகள், தொப்பு என அனைத்திலும் வருங்கால தலைமுறையினர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பெரியளவில் நெகிழி (பிளாஸ்டிக்) தவிர்க்கப்பட்டது. தேநீர் அருந்தவும், தண்ணீர் குடிக்கவும் சில்வர் கோப்பைகள் பயன்படுத்தப்பட்டன. பதாகைகள் துணிகளால் செய்யப்பட்டன. உணவு பரிமாறும் விதத்திலும், நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் இயற்கையோடு இணைந்து செயல்பட்டனர். 
கல்வி, மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், நேர்மையான அரசு நிர்வாகம் அமைத்தல், அரசு உதவிகளைப் பெற மக்களுக்கு வழிகாட்டுதல், மாணவர் சக்தியை தேச வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்தல், கிராம சபைகளை வலுப்படுத்துதல், இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்த குழுக்கள் அமைத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 
நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., காமராஜ் ஐ.ஏ.எஸ்., எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் எம்.பி. நிர்மல், குத்தம்பாக்கம் இளங்கோவன், தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா, நடிகர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஆரி, பாலா டூரிஸ்ட் சேர்மன் பாலகிருஷ்ணன், இந்திய மின்னணு கழகத்தின் முன்னாள் பொது மேலாளர்
தியாகராஜன், ஃபிரண்ட்லைன் பத்திரிகை இணை ஆசிரியர் இளங்கோவன் ராஜசேகரன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
""மூன்றாவது சக்தி கூட்டம் இதுவரை சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்தது. இனி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மூன்றாவது சக்தி கூட்டங்கள் நடைபெறும். ஓராண்டுக்குள் மாவட்டந்தோறும் 100 சமூக சேவகர்களை இணைக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம்'' என்கிறார் இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான "நல்லோர் வட்டம்' பாலசுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com