சென்னை கதைக்கு விருது!

ஏற்கெனவே கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியப் படம், சிறந்த மனித உரிமைக் கருத்துக்காக இந்தோனேஷியாவின் வெள்ளிப் பதக்கம், இந்த ஆண்டு பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஜூரி விருது என்று பல
சென்னை கதைக்கு விருது!

ஏற்கெனவே கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்தியப் படம், சிறந்த மனித உரிமைக் கருத்துக்காக இந்தோனேஷியாவின் வெள்ளிப் பதக்கம், இந்த ஆண்டு பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஜூரி விருது என்று பல விருதுகளை வென்ற "டு லெட்' செழியனின் முதல் தமிழ்த் திரைப்பட முயற்சி. இதற்கு முன்னால் ஒன்பது திரைப்படங்களுக்கு காமிராமேனாகப் பணியாற்றியவர். 
செழியனின் முதல் படம் "கல்லூரி', இந்திய பனோரமாவில் திரையிடப்பட்டு அவர் திறமைக்குப் பெருமை சேர்த்தது. அவர் பணியாற்றிய "பரதேசி' லண்டன் ஃபிலிம் மேக்கர்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் விருது பெற்றது.
செழியனின் ஆறு புத்தகங்கள் சினிமா பற்றி வெளியாகியிருக்கின்றன. இரானிய திரைப்படங்கள், இயக்குநர்கள் பற்றி மிக உயர்ந்த கருத்து வைத்திருக்கிறார் செழியன். இவருடைய சிறுகதை "கதா' பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிபெயர்ப்பாக வெளியாகியிருக்கிறது. 
"டு லெட்' என்ற ஆங்கிலத் தலைப்பு இருந்தாலும், செழியனின் கதை சென்னைக் கதை. ஐ.டி. தொழில் திடீரென்று சென்னையில் செழித்து வளரும் பின்னணியில் உருவான கதை. மனைவியும், குழந்தையும் இருக்கிற கதாநாயகன் இளங்கோ, வீடுகளின் வாடகை உச்சத்துக்கு ஏறியபோது வாடகை வீடு தேடி அலையும் அவலத்தைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது.
எங்கே பார்த்தாலும் ஆகாயத்தைத் தொடும் அடுக்குமாடிக் கட்டடங்கள். அவை ஐ.டி. தொழிலில் இருப்போருக்கு மட்டுமே கிடைக்க சாத்தியமாகும் நிலையில், வெறும் ஓர் உதவி இயக்குநராக விளம்பரத்துறையில் இருக்கும் இளங்கோவுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. குடியிருக்கும் வீட்டு அம்மாள் ஒரு மாதம் அவகாசம் கொடுக்கிறார். நாட்கள் ஓடுகின்றன. கடைசியில் தானும் ஓர் ஐ.டி. ஊழியன் என்று சொல்லி, வீடு தேடுகிறான் இளங்கோ. 
சென்னையின் யதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இந்தத் திரைப்படம் செழியனின் கற்பனைத் திறனுக்குக் கிடைத்த விருது. இத்தாலியில் இந்த ஆண்டு நடந்த திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு குழந்தை நட்சத்திர விருது கிடைத்தது. சந்தோஷ் ஸ்ரீராம் இளங்கோவாக நடித்திருக்கிறார். மனைவி அமுதாவாக சுசீலாவும், குழந்தை சித்தார்த் ஆக தனுவும் நடித்திருக்கிறார்கள். கதை, வசனம், இயக்கம், காமிராமேன் எல்லாமே செழியன் தான். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங், தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ப்ரேமா செழியன்.
செழியன் கவிதைகள் எழுதுவார். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி, மத்திய கலாசாரத் துறையின் ஃபெலோஷிப் பெற்றிருக்கிறார். எளிமை, அடக்கம், தெளிவாகக் கருத்து எடுத்துவைப்பது எல்லாம் செழியனின் பண்புகள். 
99 நிமிடங்கள் திரையில் ஓடும் "டு லெட்' திரைப்படம், வண்ணத்தில், டிஜிட்டல் வடிவில், ஆங்கில சப் டைட்டிலில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் திரைப்படம் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்கிறார் செழியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com