ராஜஸ்தான் நாடோடிக் கதை: ஓர் ஊசியின் பிறப்பு

சொர்க்கத்தில் சயீனா என்று ஒரு தேவதை இருந்தாள். ஆடைகளைத் தைத்து அவற்றின் மேல் பூவேலை செய்வது அவளது வழக்கம். அவள் தைத்த ஆடைகளை வாங்க மக்கள் போட்டி போடுவார்கள். 
ராஜஸ்தான் நாடோடிக் கதை: ஓர் ஊசியின் பிறப்பு

சொர்க்கத்தில் சயீனா என்று ஒரு தேவதை இருந்தாள். ஆடைகளைத் தைத்து அவற்றின் மேல் பூவேலை செய்வது அவளது வழக்கம். அவள் தைத்த ஆடைகளை வாங்க மக்கள் போட்டி போடுவார்கள். 

ஒருநாள் சொர்க்கத்தின் மகாராணி அவளை அழைத்து தனக்கு ஓர் ஆடை தைத்துக் கொடுக்கச் சொன்னாள். அந்த ஆடை தயாரானபோது அதில் இருந்த பூவேலை ராணியை அதிசயிக்க வைத்தது. சயீனாவின் கைத்திறனை மெச்சிய ராணி, சயீனாவுக்கு முத்துக்கள் பதிந்த நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்தாள். 

ராணிக்கு ஒரு யோசனை தோன்றியது. வீணாகப் பொழுதைக் கழிக்கும் தனது இளவரசிகளை துணி தைப்பதன் மூலம் பயனுள்ள தொழிலில் ஈடுபடுத்த வேண்டுமென்று எண்ணி அதற்கு சயீனாவே பொருத்தமானவள் என்று கருதினாள். இந்த விஷயத்தில் தனது நண்பர்களைக் கலந்தாலோசித்தாள். 

அவள் தன் நண்பர்களிடம், ""இதோ பாருங்கள். இந்த இளவரசிகள் ஒரு வேலையும் இல்லாமல் ஊர் சுற்றியே பொழுதைக் கழிக்கிறார்கள். எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. விளையாடிக்கொண்டே அவர்கள் ஏதாவது ஒரு வேலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டாள்.

ராணியின் தோழிகள் சொன்னார்கள். ""நல்லதுதான். இளவரசிகள் வண்ண, வண்ண ஆடைகள் தைப்பதை விரும்புவார்கள். பூ வேலையும் கற்றுக்கொள்வார்கள்'' என்றனர். அப்போது சரஸ்வதி தேவி குறுக்கிட்டு, ""சொர்க்கத்தில் உள்ள பூந்தோட்டத்தில் அழகிய வண்ண மலர்கள் உள்ளன. இளவரசிகள் விரும்பிய மலர்களை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்'' என்றாள்.
""உங்கள் யோசனையை நான் ஏற்கிறேன். இப்போதே சயீனாவை வரச் சொல்லி காற்றில் செய்தி அனுப்புகிறேன்'' என்றாள் ராணி. 

அப்போது சரஸ்வதி தேவி ராணியிடம், ""சொர்க்கத்தில் ஆடை தைப்பதிலும், பூ வேலைகள் செய்வதிலும் சயீனா மட்டும்தான் சிறந்தவளா என்ன? இன்னும் எத்தனையோ பேர் சிறந்தவர்களாக இருக்கலாம் அல்லவா? எனவே, அவர்களுக்குள் போட்டி வைத்து அதில் வெற்றி பெற்றவள்தான் இளவரசிக்குக் கற்றுத் தர வேண்டும்'' என்றாள்.

இதைக் கேட்ட ராணி, ""ஆகா அற்புதம். தையற்கலையில் சிறந்தவளைத் தேர்ந்தெடுக்க நீ தான் உதவி செய்ய வேண்டும்'' என்று சரஸ்வதி தேவியைக் கேட்டுக் கொண்டாள். சரஸ்வதியும் ஒப்புக்கொண்டாள்.

சொர்க்கத்தில் அன்று திருவிழா. மக்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். தேவதைகள் ஆடைகளைத் தைத்துக் கொண்டிருந்தனர். சயீனாவும் போட்டியில் பங்கு கொண்டாள். அனைவரும் பல வண்ணங்களில் ஆடைகளைத் தைத்து, விதவிதமான பூ வேலைகளையும் செய்திருந்தனர். பல்வேறு விதமான பூ வேலைப்பாடுகள் வசந்த காலத்தில் வானவில் வண்ணங்களோடு போட்டியிடுவதாக அமைந்திருந்தது. போட்டி முடிந்ததும் அனைத்து ஆடைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சயீனா தைத்த ஆடை மற்ற ஆடைகளுடன் வேறுபட்டு மகோன்னத அழகுடன் இருந்ததால் அதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்தனர். யாருக்கும் ஏமாற்றமோ, பொறாமையோ ஏற்படவில்லை. மக்கள் அனைவருமே சயீனாவைப் பாராட்டினார்கள்.

திட்டமிட்டபடியே சயீனா இளவரசிகளுக்கு ஆடை தைக்கும் தொழிலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியை ஆனாள். இளவரசிகளும் சிரத்தையுடன் அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டனர். சொர்க்கத்தில் இருந்த மற்ற தேவதைகளும் அவளுக்கு வேலை கொடுத்தனர். அதனால் அவளுக்கு முழுநேரமும் வேலையிருந்தது.

சயீனா வந்த புகழ் காரணமாக நாளடைவில் அவள் கர்வப்படத் தொடங்கினாள். மற்றவர்களுடன் பேசும்போது கர்வம் வெளிப்பட்டது. மற்ற தேவதைகளுக்கு ஆடை தைக்கும் பணியை அவள் உதாசீனப்படுத்தினாள். இளவரசிகளுக்கு போதிக்கும் காரியமும் பழைய அக்கறையோடு நடைபெறுவது குறைந்தது.

சொர்க்கத்தில் வசந்த உற்சவத்துக்கான நாள் நெருங்கி கொண்டிருந்தது. உற்சவ நாளுக்காக ஓர் ஆடையைத் தனக்காக தைக்கும்படி, சயீனாவிடம் வேண்டினாள் சரஸ்வதி. மிகவும் பிரியத்துடன், ""சயீனா. நாளைய தினம் வசந்த உற்சவம். எனக்கான ஆடையை இன்று மாலைக்குள் தைத்துத் தர முடியுமா?'' என்று கேட்டுக்கொண்டாள். ஆனால் கர்வம் தலைக்கேறிய சயீனா எரிச்சலுடன் ""வர வர இந்த தைக்கும் தொழிலே எனக்கு பிடிக்கவில்லை. நீ ஏன் வேறு யாரையாவது தைக்கச் சொல்லி கேட்கக்கூடாது?'' என்றாள்.

சரஸ்வதி தேவி திகைப்புடன் சயீனாவை ஏறெடுத்து பார்த்தாள். செருக்கு, ஆணவம், பொறாமை இவை சொர்க்கம் அறியாத குணங்கள். உடனே மகாராணியைச் சந்திக்கப் புறப்பட்டாள் சரஸ்வதி.

மகாராணி சயீனாவின் ஆணவத்தை ஏற்கெனவே மற்ற தேவதைகளிடத்தில் அறிந்து வைத்திருந்தாள். ""சயீனாவைப் போன்ற திறமை வாய்ந்த தையல்கலை தேவதை இம்மாதிரி செருக்கு உணர்வுக்கு ஆளாகியிருப்பது வருத்தத்திற்குரியது. இவளது நல்ல காலத்திற்கு முடிவு நேருமோ என்னவோ?'' என்று சரஸ்வதி வருத்தத்துடன் தெரிவித்தாள்.

உடனே, சயீனாவை அழைத்து வரச் செய்தாள். ஆணவத்தின் உச்சியில் இருந்த சயீனா, ராணியையும் மதிக்கவில்லை. ""சொர்க்கத்தின் அரசியே! நீங்கள் சொல்வதை சுருக்கமாகச் சொல்லுங்கள். எனக்கு நிரம்ப வேலை இருக்கிறது'' என்றாள் ஆணவத்துடன்.

திகைத்துப் போன ராணி, ""நீ சொர்க்கத்தைச் சேர்ந்த தேவதைப் பெண் என்பதை மறந்துவிட்டாயா? கர்வம் கொள்ளும் யாரும் இங்கிருந்து பூமிக்கு அனுப்பப்
படுவது உனக்குத் தெரியாதா?'' என்று கண்டிப்புடன் கேட்டாள். ராணியின் வார்த்தைகளைக் கேட்ட சயீனா அறண்டு போய் நடுங்கினாள். அடுத்த கணமே அவளது ஆணவத்தால் செய்திருந்த பெரும் தவறை உணர்ந்து, அதற்கு தண்டனையாக சொர்க்கத்தை விட்டு பூமிக்கு செல்ல வேண்டுமென்பதை உணர்ந்தாள்.

""நீ பூமிக்குச் செல்வதைத் தடுக்கவே முடியாது. ஆனால் நீ கைத்தொழிலில் சிறந்த தேவதை என்பதால் எந்த வடிவில் செல்ல வேண்டும் என்பதை நீயே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வாய்ப்பைத் தருகிறேன்'' என்றாள் ராணி.
அதற்கு சயீனா, ""மகாராணி! ஆண்களும் பெண்களும் என்னை விரும்பி மரியாதை செலுத்தக்கூடிய வடிவத்தை நீங்களே எனக்காக தேர்வு செய்யுங்கள். பூலோக மக்களுடன் வாஞ்சையாகப் பழகி அவர்களுக்கு தொண்டு செய்வேன்'' என்றாள்.

அப்போது மான்தோலும், இலை தழைகளும் அணிந்த ஒரு மானுட உருவம் வானில் தோன்றி இறங்கி வந்தது. வியப்பில் ஆழ்ந்த ராணி, ""ஒரு மனிதனான நீ இந்த உருவத்தில் எப்படி சொர்க்கத்திற்கு வர முடிந்தது?'' என்று கேட்டாள்.
அதற்கு அந்த மனிதன், ""மகாராணி! எனது வாழ்க்கையில் என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்தேன். விரதமிருந்து இறைவனை பிரார்த்தனை செய்தேன். அதற்குப் பரிசாக இந்த உருவிலேயே சொர்க்கத்திற்கு வரும் பேறு பெற்றேன்'' என்றான். மகாராணி அவனிடம் வந்த விஷயத்தைக் கூறுமாறு கேட்டாள்.

""பூமியில் பருத்தி செடிகள் பூத்துக்காய்க்கின்றன. அவற்றின் காய்கள் வெடித்து மிருதுவான பஞ்சு வெளிப்படுகிறது. அந்த பஞ்சிலிருந்து மெல்லியதும், பருமனுமான நூலை நூற்கிறோம். அந்த நூலைக்கொண்டு துணியையும் நெய்கிறோம். ஆனால் அவற்றைக் கொண்டு ஆடைகள் தைத்துக்கொள்ள எங்களுக்குத் தெரியவில்லை. முரட்டு துணியால் எங்களைப் போர்த்திக் கொள்கிறோம். அவை காற்றிலும் மழையிலும் அடித்துச் செல்லப்படுகின்றன. வெயிலிலும் மழையிலும் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு நல்ல ஆடைகள் தேவைப்படுகின்றன. எனவே ஆடைகள் செய்யும் கலையைக் கற்றுக்கொள்ள உங்கள் சொர்க்கத்துக்கு இறைவன் என்னை அனுப்பி வைத்தான்'' என்றான் அந்த மனிதன்.

அதைக் கண்ட சயீனா, ""மகாராணி! என்னை ஒரு ஊசியாக பூமிக்கு அனுப்பி வையுங்கள். என்னைக் கொண்டு ஆடையைத் தைக்க கற்றுக்கொள்வார்கள்'' என்றாள்.

மகாராணியும் அதை ஏற்றுக்கொள்ள அடுத்த கணம் பளீரென மின்னிய ஒலிக்கீற்றில் பிரகாசித்த தையல் ஊசியாக மாறினாள் சயீனா. பூமியில் ஊசிகள் ஒரு பக்கம் தட்டையாகவும், மற்றொரு பக்கம் கூராகவும் இருப்பது இதனால்தான். ஆனால் சொர்க்கத்திலோ இப்போது உள்ள ஊசிகள் இருமுனைகளிலும் கூராகவும், இடையில் மட்டுமே நூலை கோர்க்கும் வசதியுடன் காணப்படுகின்றன. இப்படியாகத்தான் பூலோகத்தில் ஊசிகள் பிறப்பெடுத்தன. தொடங்கிய காலத்தில் இருந்து ஏழை, பணக்காரன் என்று வித்தியாசமின்றி, ஊசியானது அனைவருக்கும் தொண்டு செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com