கதைச் சொல்லியாக இருப்பதே மகிழ்ச்சி! 

தமிழகத்தில் நாடகம் இன்னும் உயிர்ப்போடு இருப்பது கிராமங்களில்தான். இப்போதும் கிராமங்களில் கோயில் திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நாடகங்கள் போடப்பட்டு வருகின்றன.
கதைச் சொல்லியாக இருப்பதே மகிழ்ச்சி! 

தமிழகத்தில் நாடகம் இன்னும் உயிர்ப்போடு இருப்பது கிராமங்களில்தான். இப்போதும் கிராமங்களில் கோயில் திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நாடகங்கள் போடப்பட்டு வருகின்றன. ஆனால்  மக்களை நேருக்கு நேராக அவர்களது மொழியில் பேசி விழிப்புணர்வூட்டிய வீதி நாடகங்கள் இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டன. 

ஆனால், இப்போதும் கிராமங்களில் ஒற்றை ஆளாக வீதி நாடகங்களை நடத்தி வருகிறார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர் மு.சு.மதியழகன். அருகில் உள்ள கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மசாலா விற்பனை செய்யும் இவர், அறிவொளி இயக்கங்கள் அறிமுகமான 1992- களில் கிராமம் கிராமமாகச் சென்று வீதி நாடகம் போட்ட குழுவில் பயிற்சி பெற்றவர். இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல் மற்றும் குழந்தைகளுக்கான வீதி நாடகங்களை கடந்த 25 ஆண்டுகளாக விடாமல் நடத்தி வருகிறார். 

அதோடு "பூ',  "நினைவுகள் அழிவதில்லை', "கோடை மழை',  "மன்னார் வளைகுடா',  "சீமராஜா',  "தொரட்டி',  "வாழ்க விவசாயம்' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். "தேவதை', "கிருமிகள்' போன்ற சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். 

இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர்.நல்லகண்ணு, ஆகியோரிடம் பாராட்டையும், விருதுகளையும் பெற்றுள்ளவரிடம் இன்றைய வீதி நாடகம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

""ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத குடும்பச் சூழ்நிலை.  ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து தெருக்களில் நாடகம் போடுவேன். நாடகம் மேல் தீராத காதல் உண்டு. குற்றாலத்தில் நாடகப் பயிற்சி கொடுப்பதை அறிந்த ஆசிரியர்கள் 2 பேர் என்னை அதில் சேர்த்து விட்டார்கள்.  அங்கு எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 25 பேருக்கு பயிற்சி கொடுத்தார்.  அவர்களோடு நானும் பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு 1992-இல் "அறிவொளி' இயக்கத்தில் சேர்ந்து, கிராமம் கிராமாகச் சென்று கல்வி விழிப்புணர்வு நாடகம் போடுவோம்.

அறிவொளி இயக்கம் முடிந்த பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் சேர்ந்து கலை இரவு மேடைகளில், பொது நிகழ்ச்சிகளில் குழந்தைகளை வைத்து நாடகம் போட்டேன். இப்போது தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் நாடகம் போட்டு வருகிறேன். சில நேரங்களில் மாணவர்கள் வரமுடியாத நிலை ஏற்படுவதால் குழந்தைகள் மத்தியில் தனியாகவும் நாடகம் போடுகிறேன்.

சுற்றுச் சூழல், இயற்கை விவசாயம், நீர்நிலைகள், சிறுதொழில் பாதிப்பு, பறவை, விலங்குகள் பாதுகாப்பு என சமூக அக்கறையுள்ள நாடகங்களை போட்டு வருகிறேன். நாடகம் போட்டாலும் குழந்தைகளின் கதை சொல்லியாக இருப்பதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. காக்கா நாடகம் போட்டால் காக்கா வேடமணிந்து குழந்தைகளிடம் பேசுவேன். கோமாளி வேடம் போட்டு கோமாளியாக வந்து நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் கதைகள் சொல்வேன். பல பள்ளிகளில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களையும் நடிக்க வைத்து வருகிறேன். இப்போது முழுக்க முழுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நாடகம் போடுகிறேன். நாடகம் என்ற அற்புதமான கலையை பாதுகாக்க வேண்டும். சமூக விழிப்புணர்வு மற்றும் சுதந்திரப் போராட்ட உணர்வை தூண்டிய கலைகளில் நாடகமும் ஒன்றல்லவா? நாடகம் பார்க்க எல்லாருமே விருப்பப்படுவார்கள். ஏனென்றால் மரபுரீதியான சிந்தனை அது. ஆனால் அதைக் கொண்டு சேர்ப்பதுதான் குறைந்து வருகிறது. வருங்கால தலைமுறைகளிடம் நாடகம் குறித்த விழிப்புணர்வை விதைத்துவிட்டுப் போக வேண்டும் என்பது என் விருப்பம். நாடகக் கலைஞர் என்கிற முறையில் அது எனது கடமையும் கூட.

பெட்டிக்கடைகளில் மசாலா போடுகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன்.  நாடகம் போட சென்றுவிட்டால் வியாபாரத்தை வேறு ஒருவர் பிடித்து விடுவார். இந்தக் கஷ்டங்களையெல்லாம் நாடகம் போடும்போது மறந்துவிடுவேன். அரசியலில் ஈடுபடுவது என்பது வேறு. அரசியல் பேசுவது என்பது வேறு. எனது நாடகங்கள் அரசியல் பேசும். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.  இங்கு அரசியல் இல்லாமல் ஏதுமில்லை'' என்கிறார்  மதியழகன்.

இவரது "குரங்கும் மனிதனும்' நாடகம் மிகப் பிரபலம். குரங்காட்டியாக இவர் வருவார். அப்போது குரங்கு (மற்றொருவர்) தின்பதற்கு பழங்கள் கிடைக்காமல் மனிதர்கள் கீழேபோட்டிருந்த பிளாஸ்டிக் பைகளைத் தின்று இறந்துவிடும். அவர் எழுந்து பார்த்தபோது இறந்துகிடக்கும் குரங்கைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுவார். அப்போது பிளாஸ்டிக்கை உபயோகிப்பதால் விலங்குகள் மடிவதையும், அதற்கு காரணமான மனிதர்கள் மீது குற்றம் சுமத்தி அவர் கதறுவதையும் பார்த்தால், பாலித்தீன் பைகளை பயன்படுத்தும் எவரும் அதை வாங்கமாட்டார்கள். அந்த அளவுக்கு நாடகம் மூலம் சமூகத்தை நோக்கி சிந்திக்க வைத்துவிடுவதுதான் அவரது நாடகத்தின் யுத்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com