சாம்பியா, பேம்பா - நாடோடிக் கதை: யானையும் நீர்யானையும்! 

குறும்புக்கார முயல் ஒன்று, ஒரு நீளமான கயிற்றைக் கண்டு அதை வைத்து ஏதாவது குறும்புத்தனம் செய்ய வேண்டும் என நினைத்தது.
சாம்பியா, பேம்பா - நாடோடிக் கதை: யானையும் நீர்யானையும்! 

குறும்புக்கார முயல் ஒன்று, ஒரு நீளமான கயிற்றைக் கண்டு அதை வைத்து ஏதாவது குறும்புத்தனம் செய்ய வேண்டும் என நினைத்தது. யானை ஒன்றைப் பார்த்து, ""வா, நீயும் நானும் கயிறு இழுக்கும் போட்டி போடலாம். அப்போது தான் நீ உண்மையிலேயே பலசாலியா என்பது தெரியும்'' என்றது. யானை உடனே கோபமாக, "நீ என் கால் நகத்தளவு கூட வளரவில்லை. என்னுடன் போட்டி போட வந்துவிட்டாயா' என்றது.
 அதற்கு, "யானையாரே கோபித்துக் கொள்ளாதீர், நான் சிறியவன் தான் என்றாலும் இந்தக் கயிற்றை என் வயிற்றில் கட்டிக்கொண்டு ஆற்றில் நின்றால், எனக்கு அசாத்திய பலம் வந்துவிடும். எதற்கும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் என் பலத்தைக் காண்பிக்க முடியும்' என்றது முயல்.
 யானையும் முயலை முழுவதுமாக நம்பாவிட்டாலும் முயல் என்னதான் செய்யப் போகிறது என்பதை அதன் போக்கில் விட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தது. யானையின் கழுத்தைச் சுற்றி கயிற்றைக் கட்டிய பின் முயல் தன் வயிற்றைச் சுற்றி கட்டிக்கொண்டு "நான் குரல் கொடுக்கும் வரை இழுக்கக் கூடாது. நான் ஆற்றுக்குள் செல்லும்வரை பொறுத்திரு' என்று சொல்லி, நாணல், கோரை அடர்ந்த ஆற்றங்கரையில் ஓடியது.
 ஆற்றின் புதருக்கருகே நீரில் மூழ்கிக் கொண்டிருந்த நீர்யானையைப் பார்த்து "என்னுடன் கயிறு இழுக்கும் போட்டியில் ஈடுபட முடியுமா?' என்று கேட்க, நீர்யானைக்கு சிரிப்பு தாளவில்லை. "நான் படகுகளைக் கூட தூக்கியெறிந்து விடுவேன். என்னளவு உயரம் கூடஇல்லாத நீ, என்னிடம் போட்டி போட போகிறாயா?' என்றது. முயலும் தந்திரமாக, "நான் சிறியவன் தான். ஆனால் அந்தக் குன்றின் மேல் நின்றால் எருமை பலம் வந்துவிடும் எனக்கு, நீங்கள் நம்பாவிட்டால் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்களேன்'' என்றது.
 நீர்யானையும் இந்த முயல் என்னதான் செய்யப் போகிறது என்பதைப் பார்க்கலாம் என்ற ஆவலில் போட்டிக்கு ஒத்துக்கொண்டது.
 முயலும் கயிற்றை நீர்யானையின் கழுத்தில் கட்டிவிட்டு, "அடுத்த முனையை அதோ அந்த குன்றின் அருகே விட்டுவிட்டு வந்துள்ளேன். அங்கு போய் நின்றவுடன் குரல் கொடுப்பேன். அப்போது இழுக்கலாம்' என்று சொல்லி குன்றை நோக்கி ஓடியது.
 ஓடிப் போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டு, "சரி, இப்போது இழு' என்று உரத்த குரலில் சொல்ல யானையும், நீர்யானையும் கயிற்றின் இருமுனைகளையும் இழுத்தன. ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல், விட்டுக்கொடுக்காமல் வலிமை வாய்ந்த மிருகங்களான யானையும், நீர்யானையும் கயிற்றை இழுத்தன. நீண்ட நேரம் சமபலசாலிகளான இவை கயிற்றை இழுத்தும் ஒருவரும் வெற்றி பெறவில்லை. வெகுநேரம் இழுத்த பின்னும் கயிற்றை தன் பக்கம் இழுக்க முடியவில்லை, எப்படி முயலுக்கு இவ்வளவு சக்தி வந்தது என்று நினைத்தன. இந்த நிலையை முயலிடம் சொல்லலாம் என்று ஒன்றை ஒன்று நோக்கி நடக்க ஆரம்பித்தன.
 யானையும், நீர்யானையும் தம் கழுத்தில் கட்டிக் கொண்ட கயிறுடன் எதிரும் புதிருமாக வந்தபோது முயலின் தந்திரத்தை அறிந்து கொண்டன. முயல் மேல் கோபம் கொண்டு முயலைத் துரத்திப் பிடித்தன. கட்டித் தொங்கவிட்ட பின் முயலைச் சமைக்க தீ மூட்ட விறகு தேடிச் சென்றன.
 அப்போது அவ்வழியே கழுதைப்புலி ஒன்று வந்தது. முயலைப் பார்த்து, "ஏன் உன்னைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள்' என்றது. "யானையும், நீர்யானையும் என்னை விருந்தாளியாக அழைத்தனர். இல்லை எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று சொன்னாலும் விடாமல், நான் இரை தேடி வரும் வரை ஓடிவிடாமல் இருக்க இப்படி கட்டிப் போட்டுப் போய்விட்டனர்' என்று ஒரேயடியாகப் புளுகியது. "அப்படியா! நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன். சாப்பாடு கிடைக்கும் என்றால் உனக்குப் பதிலாக நான் கயிற்றில் தொங்கி, அவர்கள் படைக்கப்போகும் விருந்தை சாப்பிடப் போகிறேன்' என்றது.
 "சரி, அப்படியானால் என்னை முதலில் அவிழ்த்துவிடு' என்றது முயல். கழுதைப்புலியும் அதன் கோரைப் பற்களால் கயிற்றைக் கடித்து முயலைத் தப்பிக்க வைத்தது. தப்பிக்க வைத்த கழுதைப்புலியை கயிற்றில் கட்டித் தொங்கவிட்ட பின், முயல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சொல்லி தலைதெறிக்க ஓடியது.
 சிறிது நேரம் கழித்து விறகுக்கட்டைகளுடன் வந்த யானையும், நீர்யானையும் கயிற்றில் தொங்கும் கழுதைப்புலியைப் பார்த்து அதிர்ச்சியுற்றன. கழுதைப்புலியோ சாவகாசமாக "முயலுக்குப் பதிலாக நான் உங்கள் விருந்திற்கு வந்திருக்கிறேன்' என்றது.
 கழுதைப்புலியை அவிழ்த்துவிட்டு இருந்த ஆத்திரத்தில் நையப் புடைத்து விரட்டிவிட்டன யானையும், நீர்யானையும். எல்லோரையும் ஏமாற்றிய முயலை காடுகளிலும், குன்றுகளிலும் யானையும், நீர்யானையும், புதர் பொந்துகளில் கழுதைப்புலியும் இன்றும் தேடிக் கொண்டிருக்கின்றன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com