காங்கோ புஷோங் நாடோடிக் கதை: நாய் மனிதனின் தோழனான கதை 

ஒரு காலத்தில் ஓநாய் குடும்பம் ஒன்று காடுகளில் வேட்டையாடி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தது.
காங்கோ புஷோங் நாடோடிக் கதை: நாய் மனிதனின் தோழனான கதை 

ஒரு காலத்தில் ஓநாய் குடும்பம் ஒன்று காடுகளில் வேட்டையாடி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் நரியும், நாயும் அண்ணன் தம்பிகளாகப் பிறந்தனர். அப்பா, அம்மா ஓநாய்கள் அவர்கள் இருவருக்கும் வேட்டையாடச் சொல்லிக் கொடுத்தன. நரியும், நாயும் பெரிதாக வளர ஓநாய் பெற்றோர் அவர்கள் இருவரையும் சுதந்திரமாக வாழ அனுமதிக்க, நரி-நாய் சகோதரர்கள் அடுத்துள்ள மலைக்காட்டிற்குச் சென்று வாழ முடிவு செய்தன. மலைக்குகையொன்றை தேர்வு செய்து அதில் வாழ ஆரம்பித்தன.
ஒருநாள் காடு முழுவதும் அலைந்து திரிந்த பின்னும் இரை கிடைக்காமல், பசியுடன் குகைக்குத் திரும்பின நரியும், நாயும். போதாததற்கு எலும்பைத் துளைக்கும் குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. "காதை அடைக்கும் பசி. போதாததற்கு குளிர் வேறு' என்று நாய் புலம்ப, "சரி, சரி புலம்பாமல் தூங்கு. பொழுது விடிந்தபின், இன்று தப்பியோடி விட்டதே அந்த முயலை நாளை பிடித்து சாப்பிடலாம்' என்றது நரி. ஆனால் நாய்க்கோ பசி காதை அடைத்தது, குளிர் உடலை மேலும் வருத்தியது. நரிபோல் உரோமம் அதிகம் இல்லாததால் நாய் குளிரில் நடுங்கியது. தூங்க முடியாமல் தவித்தது. அப்போது அதன் கண்களை தூரத்தில் தெரிந்த சிவப்பு உறுத்தியது. "நரியண்ணா, அந்த சிவப்பை கண்டாயா?' என நாய் கேட்க, "அது தூரத்து கிராமத்தில் எரியும் நெருப்பு' என்று பதில் அளித்தது நரி. "ஆகா, நெருப்பா? குளிர் காய உதவுமே. நீதான் என்னை விட தைரியசாலி ஆயிற்றே. நீ போய் கொஞ்சம் நெருப்பை திருடிவா' என்றது நாய். "என்னால் போக முடியாது. உனக்கு வேண்டுமென்றால் நீயே போய் எடுத்து வா' என்றது நரி. நாய்க்கு மனிதன் என்றால் பெரும் பயம் என்பதால் சுருண்டு படுத்துக் கொண்டது. ஆனால், படுத்திருந்தபோது நெருப்பின் கதகதப்பை நினைத்து ஏங்கியது. நெருப்பிட்டவர்கள் சுற்றிலும் அமர்ந்து சமைத்து சாப்பிட்டதையும் அவர்கள் தின்று எரிந்த எலும்புகளையும் நாய் கனவு கண்டபோது அதற்கு மேலும் பசி பெருகியது. ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். மனிதனைப் பற்றிய பயத்தைவிட, உணவு மேல் இருந்த ஆசையும், நெருப்பின் கதகதப்பும் நாயை கிராமத்தை நோக்கிச் செல்லத் தூண்டியது. "இனிமேலும் என்னால் தாங்க முடியாது. அதோ அந்த கிராமத்திற்குச் சென்று கொஞ்சம் நெருப்பை வாங்கி வரப் போகிறேன். அவர்கள் சாப்பிட்டு மீதி வைத்த எலும்புகளைத் தின்று விட்டு உனக்கும் கொண்டு வருகிறேன். நான் வழி தவறி உடனே திரும்பாவிட்டால், நீ என்னை ஊளையிட்டு அழைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டது. 

கிராமத்திற்கு அருகே வந்த நாய், மெதுவாக பதுங்கிப் பதுங்கி சென்றது. நெருப்பருகே மிஞ்சிக் கிடந்த உணவு நாயின் நாக்கில் எச்சிலை ஊற வைத்தது. ஆனால் நடுச்சாமத்தில் விழித்துக் கொண்ட கோழிகள் கூவ, கிராமத்தான் ஒருவன் விழித்துக் கொண்டான். ஈட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்தான். நாயை அதன் குரல்வளையில் பிடித்து, "என்னுடைய தோட்டத்தில் என்ன செய்கிறாய் திருட்டு நாயே?' என்று சத்தம் போட்டான்.
"ஐயா, என்னைக் கொன்று விடாதே. நான் திருட வரவில்லை. காட்டில் குளிர் பொறுக்க முடியவில்லை. இதோ, இங்கு அணையும் தீயின் முன் படுத்து சற்று குளிர் காயவே வந்தேன். தயவு செய்து என்னை சிறிது நேரம் இந்த நெருப்பு அருகே இருக்கவிட்டால், குளிர் காய்ந்துவிட்டு காட்டுக்கு ஓடி விடுவேன்' என்று அழாத குறையாகக் கேட்டுக் கொண்டது நாய். குளிரால் நடுங்கியவாறு கெஞ்சிய நாயைப் பரிதாபமாகப் பார்த்த அந்த கிராமத்தான், "சரி, சற்று நேரம் இருந்துவிட்டு யாருக்கும் தொல்லை கொடுக்காமல் ஓடிவிடு' என்று கூறிவிட்டு, குளிர் காய மேலும் சில விறகுக்கட்டைகளை போட்டு நெருப்பைத் தூண்டிவிட்டான். பின் தன் குடிசைக்கு சென்றான். நாயோ நெருப்பருகே கிடந்த எலும்புகளைத் தின்றவாறு, மேலும் சுருண்டு படுத்து குளிர் காய்ந்தது. கிராமத்தான் மறுபடியும் வந்து "குளிர் காய்ந்தது போதாதா?' என்று நாயிடம் கேட்டான். "இன்னும் இல்லை' என்றது நாய். "சரி, சரி இன்னும் கொஞ்ச நேரம் தங்கிவிட்டு ஓடிப்போ' என்று சொல்லிவிட்டு கிராமத்தான் தூங்கப் போய்விட்டான். நெருப்பின் கதகதப்பிலும், வயிராற மிஞ்சிய உணவை உண்டதாலும் நாய் ஆழ்ந்து தூங்கியது. இரவு விடிந்து காலையில் கிராமத்தான் வந்தபோது, நாய் உறங்கி எழுந்தது. கிராமத்தை விட்டுப் போக நாய்க்கு மனமில்லை. கிராமவாசி நாயைப் பார்த்து, "நீ இன்னும் இங்கேயா இருக்கிறாய்?' எனக் கேட்டான். பசியாறவும், இளைப்பாறவும் இடம் தந்த மனிதனிடம் நேரிடையாக தான் வந்த நோக்கத்தைச் சொல்லிவிடுவது நல்லது என்று எண்ணி, தன் வாலை ஆட்டியவாறு, "ஐயா, காட்டில் நான் உணவில்லாமல் தவித்தும், குளிரால் நடுங்கியும், கொடிய விலங்குகளுக்கு பயந்தும் கஷ்ட ஜீவனம் நடத்துகிறேன். என்னை, நீங்கள் இங்கேயே தங்க விடுவீர்களானால் நான் நீங்கள் வேட்டையாட உதவுவேன். காட்டு விலங்குகளின் தந்திரத்தைச் சொல்லித் தருவேன். உங்கள் கோழிகளைத் திருடும் என் அண்ணன் நரிபோல் இல்லாமல் அவற்றிற்கு பாதுகாப்பாகவும், உங்களுக்கு உற்ற தோழனாகவும் இருப்பேன்' என்றது.
நாயின் கண்களை உற்றுப் பார்த்த கிராமத்தான் அது உண்மை பேசுகிறது என்பதை உணர்ந்தான். "சரி,எப்போதும் நீ எனக்கு கீழ்ப்படிந்து நான் சொல்லும் வேலைகளைச் செய்வதாக இருந்தால் நீ இங்கேயே இருக்கலாம். நீ உண்ண உணவும், இருக்க இடமும் தருவேன்' என்றான். அன்றிலிருந்து நாய் மனிதனின் தோழனாகி, அவனுடன் கிராமத்தில் வாழ ஆரம்பித்தது. ஆனால் அதன் சகோதரன் நரியோ, தன் தம்பியாகிய நாய் நெருப்பு, உணவுடன் திரும்பி வருவான் என்று நம்பி ஏமாந்து, இரவில் ஊளையிட்டு நாயைக் கூப்பிடுவதை இன்றும் கேட்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com