பெருமாளின் பெயரால் ஒரு புனித இடம்!

பரபரப்பான பூந்தமல்லிக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில் ஹரித வாரண பெருமாளின் (தமிழில் "பச்சை வாரண பெருமாள்') பெயரில் ஒரு விஷ்ணு கோயில் உள்ளது.
பெருமாளின் பெயரால் ஒரு புனித இடம்!

பரபரப்பான பூந்தமல்லிக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில் ஹரித வாரண பெருமாளின் (தமிழில் "பச்சை வாரண பெருமாள்') பெயரில் ஒரு விஷ்ணு கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய கர்ப்பகிரகத்தில் தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஹரித வாரண பெருமாள் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இந்த கர்ப்ப கிரகத்துக்குச் செல்லும் பாதையில் கருடா, விஸ்வக்சேனா (விஷ்ணுவின் படைத் தளபதி), ஸ்ரீ ராமானுஜர், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரின் விக்ரகங்கள் இருக்கின்றன.
 ஸ்ரீ ராமானுஜரின் மருமகனும், அவரது சீடருமான முதலியாண்டான் என்னும் தாசரதி, கி.பி.1027-இல் பிறந்த இடம் நசரத்பேட்டை ஆகும். அதன் காரணமாக இக்கோயிலில் முதலியாண்டானுக்கு தனி சந்நிதியும், கல் மற்றும் உலோகத்தினால் ஆன விக்ரகங்களும் இங்கு உள்ளன. அத்துடன் ஸ்ரீ ராமானுஜருக்கு பணிவிடைகள் செய்த அவரது பிரதான சீடர் கூரத்தாழ்வாருக்கும் இங்கு விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது.
 இக்கோயிலில் லட்சுமிதேவி, அம்ருதவல்லி தாயார் என்று அழைக்கப்படுகிறார். தாயார் சந்நிதிக்கு முன் உள்ள மண்டத்தின் மெல்லிய, அழகிய தூண்கள் பண்டைய தமிழகத்தில் இருந்த மிகச்சிறந்த சிற்பக்கலைஞர்களின் அழகிய வேலைப்பாடுகளை பிரதிபலிக்கின்றன. ஆண்டாளின் சந்நிதியும் அருகிலேயே உள்ளது. ஹரித வாரண பெருமாள் கோயிலின் கட்டடக்கலை அம்சங்கள், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கட்டடக்கலையில் கம்பீரமாக விளங்கிய சோழர் மற்றும் விஜயநகர காலக்கட்டங்களின் சான்றாகத் திகழ்கின்றன.
 கிழக்கு வாசலில் ஐந்தடுக்கு போரமும் அதன் வலதுபுறத்தில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதாவின் சந்நிதியும் உள்ளன. கோபுரத்தின் முன், விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட நான்கு கால் மண்டபம் உள்ளது. பங்குனி மாதத்தில் இக்கோயிலில் வருடாந்திர உற்சவம் (பிரம்மோத்ஸவம்) நடைபெறுகிறது.
 பண்டைய பெயர்கள்: நசரத்பேட்டை பண்டைய காலத்தில், "புருஷமங்கலம்' என்றும், "தருமபுரி ஷேத்ரம்' என்று அழைக்கப்பட்டது.
 விமானத்தின் பெயர்: கர்ப்பகிரகத்தின் மேல் உள்ள கட்டுமானம், "தர்மகோடி விமானம்' என்று அழைக்கப்படுகிறது.
 கோயில் குளம்: கோயில் குளத்தின் பெயர் "தரும புஷ்கரணி'
 ஆசாரியருக்கு உற்சவம்: சித்திரை மாதத்தில் முதலியாண்டானுக்கு சிறப்பு உற்சவம் கொண்டாடப்படுகிறது.
 அமைவிடம்: பூந்தமல்லிக்கு மிக அருகிலேயே நசரத்பேட்டை உள்ளது. இது விஷ்ணு, சிவன் கோயில்களுக்காக பண்டைய காலத்தில் புகழ்பெற்ற பகுதியாகும்.
 கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்
 - கோயில் சிற்பங்கள் ஆய்வாளர்
 தமிழில்: பிரவீண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com