நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது வரலாறு!

நூற்றுக்கும் மேற்பட்ட பழங்காலக் கல்வெட்டுகளையும்,பழங்கால நாணயங்கள்-செப்புத்தகடுகள்-சிலைகள் போன்ற பலவற்றைக்
நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது வரலாறு!

நூற்றுக்கும் மேற்பட்ட பழங்காலக் கல்வெட்டுகளையும்,பழங்கால நாணயங்கள்-செப்புத்தகடுகள்-சிலைகள் போன்ற பலவற்றைக் கண்டுபிடித்தவரும், ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும்-ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர் தொல்லியல் அறிஞர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன். "இராசராசன் விருது', "கரிகாற்சோழன் விருது', "வாழ்நாள் சாதனையாளர் விருது', "குறள்நெறிச்செல்வர் விருது' எனப் பல விருதுகளைப் பெற்றவர்.

ஐம்பது வருட கடின உழைப்புக்குச் சொந்தக்காரர். "இராஜராஜேச்சரம்', "தஞ்சாவூர்', "தஞ்சை நாயக்கர் வரலாறு' மற்றும் "நந்திபுரம்' இவரது நூல்கள். உலகப் புகழ் பெற்ற தஞ்சை அரண்மனை நூலகமான சரசுவதி மகால் நூலகத்தில் காப்பாட்சியராகவும், நுண்படத்துறை வல்லுநராகவும் பின்னர் வெளியீட்டு மேலாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 

அவருடன்: தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் சிறுவயதில் குடவாயிலுக்கு அருகே பெருமங்கலம் என்ற கிராமத்தில் கருவேல மரங்கள் நிறைந்த காடு ஒன்றுண்டு. அது என் தந்தையின் பொறுப்பில் இருந்தது. பெருமழைக் காலத்தில் தரை மண் அரிக்கப்பட்டு வாய்க்கால்களாகப் பெருக்கெடுத்து ஓடும். அப்போது எங்களூருக்கு அருகிலுள்ள வடவேர் என்ற ஊரினைச் சார்ந்த ஒரு பழங்குடி இனத்தவர் அக்கருவேலங்காட்டிற்கு வந்து தரையில் இருந்து வெளிப்படும் செம்பு, வெள்ளி அரிதாகக் கிடைக்கும் தங்கக்காசுகள் ஆகியனவற்றைப் பொறுக்கி எடுத்து வந்து குடவாயில் கடை வீதியிலுள்ள பொன் வேலை செய்பவர்களிடமும், பழம்பொருட்கள் வாங்குவோரிடமும் விற்பர். அதைக் கண்ட நானும் காசுகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். எனக்கு சோழர் காலக் காசு,பாண்டியர் காலக் காசு மட்டுமின்றி சங்க காலக் காசும் கிடைத்தது. மேலும் சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறத்திலான பானை ஓடுகளும் கிடைத்தன. இப்படி தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறுவதற்கேற்ற சான்றுகள் கிடைத்தன. அக்காலகட்டத்தில் என் வீட்டிற்கு தினமணி நாளிதழ் வந்து கொண்டிருக்கும். அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் "தினமணி சுடர்' என்ற அநுபந்த பகுதி இருக்கும். அப்போதெல்லாம் அந்த சுடர் பகுதியில் வரலாற்றுக் கட்டுரை, கலையியல் கட்டுரை, பயணக்கட்டுரை, அறிவியல் கட்டுரை எனப் பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் வெளிவரும். அக்கட்டுரைகளை எல்லாம் நான் மிகவும் விரும்பிப் படிப்பேன். குறிப்பாக வரலாறு, கலையியல், திருக்கோயில்கள், கல்வெட்டுகள் பற்றி வருகின்ற கட்டுரைகளைப் படிப்பதோடு என் வீட்டு நூலகத்திலும் சேகரிக்கத் தொடங்கினேன். அது  போன்றே எங்கள் ஊரில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு நல்ல மாத, வார இதழ்கள் வந்து கொண்டு இருந்தன. பள்ளி விடுமுறை நாட்களில் நூலகத்திற்குச் சென்று கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் போன்ற இதழ்களில் என்னை ஈர்க்கக்கூடிய கட்டுரைகளைப் படித்து நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகளும் எடுத்து வருவேன். கீழத்தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பல உண்டு. சோழர் கால அடையாளங்கள் இல்லாமல் ஒரு குக்கிராமமும் இருக்காது. கும்பகோணத்தைச் சுற்றி அற்புதமான கோயில்கள் பல உண்டு. குறிப்பாக தாராசுரம் கோயில் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆக நான் பிறந்து வளர்ந்த சூழ்நிலையும் என் ஆர்வத்திற்கு முக்கியக் காரணம். இவை அனைத்தும் தான் என்னை ஒரு கல்வெட்டாய்வாளனாக, வரலாற்றுத் துறையில் சாதித்தவனாக, கலையியல் துறைக்கு சேவையாற்றுபவனாக மாற்றி இருக்கின்றது.

உங்களது ஆய்வில் சோழர்கள் வரலாற்றிற்கு சிறப்பிடம் அளிப்பது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

நான் பிறந்த மண்ணோ சங்க காலச் சோழர்களின் கோ நகரமான குடவாயிற் கோட்டமே. நான் பருகி வளர்ந்த காவிரி நீரோ சோழன் வெட்டிய சூடாமணி ஆற்று நீராகும். நான் சுவாசிக்கின்ற காற்றோ ராஜராஜனும், ராஜேந்திர சோழனும் சுவாசித்து விடுத்த காற்றே. நான் வணங்கும் கோயில் சோழன் எடுப்பித்த பெருங்கோயிலே. இவற்றால் தான் என் ஆய்வுத் தளமாக  விளங்குவது சோழ மண்டலம்.

ராஜராஜன், ராஜேந்திரன் இருவரைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்துள்ளீர்கள்.உங்களுக்கு இவ்விருவரில் மிகவும் பிடித்தவர் யார்? ஏன்?

இரண்டு கண்களில் வலது கண் சிறந்ததா?, இடது கண் சிறந்ததா? என்றால் என்ன பதில் சொல்வது? தன் மகனைப் பேரரசனாக்கிய பெருமை ராஜராஜனுக்கு உண்டு. அதே சமயம் ராஜராஜனுக்குப் பின்புலமாக இருந்து அவரது அனைத்து சாதனைகளுக்கும், வெற்றிகளுக்கும் காரணமாக இருந்தவர் ராஜேந்திரன். ராஜராஜனின் மறைவிற்குப் பிறகு பதவியேற்ற ராஜேந்திரனின் அனைத்துப் பெருமைகளுக்கும் அவரது மூன்று மகன்களே காரணம். அவர்கள் - ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன் மற்றும் வீர ராஜேந்திரன்.

கல்கியின் "பொன்னியின் செல்வன்' நூலைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

நிறைய கதாபாத்திரங்களைக் கல்கி படைக்கக் காரணம் என்னவாயிருக்கும்?
புதினங்களில் - சுவாரஸ்யத்திற்காகவே கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இருப்பினும், கல்கி அவர்கள் வரலாற்றுப் பயணம்  செய்து ஓரளவு வரலாறு சிதையாமல் எழுதியிருக்கிறார்.

சரித்திர நாவல்களில் வரும் பாதாளக்குகைகள், சுரங்கப்பாதைகள் ஆகியவை உண்மை தானா? கல்வெட்டுகளில் இவற்றைப் பற்றிய செய்திகள்(ரகசியம் காரணமாக) இடம் பெற வாய்ப்பே இல்லை. ஆகவே இந்த கேள்வி...

பாதாளக் குகைகள், சுரங்கப்பாதைகள் போன்றவை உண்டு. இவை எங்கிருக்கும் என்றால் அரண்மனையில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குத் தப்பிப் போவதற்கு அல்லது எதிரிகள் வரும்போது ஒரு ரகசிய அறையில் தங்கிக் கொண்டு வெளியில் வராமல் இருப்பதற்கு. இவை அரண்மனைக்குப் பக்கத்திலும், அரண்மனைக்குப் பக்கத்திலுள்ள காவற்காடுகளிலும் இருக்கும். ஆனால் தற்போது  ஆராய்ச்சியில் அவை கிடைக்கப் பெறவில்லை. காரணம், அரண்மனைகளே இல்லை எனும் நிலை இருப்பது தான். ஆனால், நாயக்கர் கால சுரங்கங்கள் தற்போதும் தஞ்சாவூரில் இருக்கின்றன.சிதிலமடைந்த காரணத்தினால் அதில் சிறிது தூரமே செல்ல முடியும். கோயில்களில் சுரங்க வழிகள் கிடையாது. நிலவறைகள் உண்டு. அங்கு கோயிலின் நகைகளையும், மதிப்புமிக்க பொருட்களையும் வைத்திருப்பார்கள். இத்தகைய நிலவறைகள் பல கோயில்களில் உண்டு.

கருவூர்ச்சித்தரும், ராஜராஜனும் சமகாலத்தவர் தானா? கருவூர்ச்சித்தரை குருவாக ராஜராஜன் கருதினான் என்பது நம்பத்தகுந்த செய்தி தானா?
கருவூர்ச்சித்தர் ராஜராஜனின் சமகாலத்தவரில்லை. மேலும், அவர் ராஜராஜனின் குருவும் கிடையாது. ராஜேந்திரனின் இறுதிக்காலத்தில் தான் அவரைப் பற்றிய பதிவுகள் வருகின்றன. ராஜராஜனின் குருவாக விளங்கியவர்கள் ஈசான சிவ பண்டிதர், சர்வசிவ பண்டிதர் மற்றும் லகுலீச பண்டிதர். கருவூர்த்தேவர் பல்வேறு சிவாலயங்களுக்கும் சென்று நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார். சில கோயில்களில் "என் மீது கருணை இல்லையா?' எனப் பாடும் அவரே திருவிடைமருதூர் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் பாடும் போது "உன்னை உணர்கிறேன்' என இறைவனிடம் கூறுகிறார்.இவை அனைத்தையும் பன்னிருத்திருமறையில் தொகுத்திருக்கிறார்கள்.அவர் பிச்சையெடுத்து வாழும் சிவயோகியாகவே வாழ்ந்திருக்கிறார்.பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசு காலத்தில் கருவூர்த்தேவரைச் சித்தராக்கி விட்டார்கள்.அது புராணமே தவிர வரலாறல்ல.

உங்கள் நூல்களைப் பற்றிச் சொல்லுங்கள்? நீங்கள் எழுதிய நூல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எது?
நான் இதுவரை 30 பெருநூல்களையும், 23 சிறுநூல்களையும், ஐந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த நூலாக "நந்திபுரம்' நூலைக் குறிப்பிடுவேன். பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி உட்பட - பழையாறை அருகில் இருப்பதே நந்திபுரம் என்று சொன்னார்கள். பழையாறை அருகிலும் வேதாரண்யம் அருகிலும் நந்திபுரம் என்ற ஊர்கள் இருந்தாலும், அரண்மனையும், ஆயிரம் சிவலிங்கங்களோடு உள்ள நந்திபுரம் என்பது கண்டியூருக்குக் கிழக்கே உள்ளது தான் என்பதை மிகத் தெளிவாகக் கல்வெட்டுகளின் மூலம் கண்டுபிடித்து எழுதியிருக்கிறேன்.

முழுவதும் என் பொருளைக் கொண்டே - இரண்டு ஆண்டுகள் - திருவாரூர் தேர் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், ஓவியங்களையும் ஆய்வு செய்து நான் எழுதிய நூல் "திருவாரூர் திருக்கோயில்' ஆகும். கோயிற் கட்டடக்கலையைப் பற்றி "தமிழக கோபுரக்கலை மரபு' என்ற நூலும்,சிறந்த வரலாற்று ஆசிரியரென எனக்குப் பெயர் ஈட்டிக் கொடுத்த ‘தஞ்சை நாயக்கர் வரலாறு' என்ற நூலும்,அருளாளர்களின் வரலாற்றை சிற்பக்கலைத் துணை கொண்டு  எழுதிய "தாராசுரம் திருக்கோயில்' என்ற நூலும், ஆகமம், சிற்பம், ஓவியம், நாட்டியக்கலை போன்ற நுண்கலைகளை உள்ளடக்கித் தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி எழுதிய "இராஜராஜேச்சரம்' என்ற நூலும்,ஒரு ஊரின் வரலாற்றை  கால அடிப்படையில் ஆதாரத்தோடு எழுதிய "தஞ்சாவூர்' என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை.

நடந்து முடிந்து போய் விட்ட வரலாறைப் படிப்பது அவசியம் தானா?அவற்றைத் தெரிந்து கொள்வதால் ஏற்படும் பலன் என்ன?
வரலாறு என்பது நாம் பின்னோக்கிப் பயணிப்பதாகும். வரலாறு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறது. பல்வேறு காலங்களில் நடந்த நிகழ்வுகள், செயல்பாடுகள், மனிதாபிமானங்கள், தீர்வுகள் ஆகியவற்றை அனுபவங்களாக எடுத்துக் கொண்டு நம் வாழ்வை செம்மையாக வாழ்வதேயாகும்.

தமிழக மக்களுக்கும்,ஆய்வு மாணவர்களுக்கும் தாங்கள் கூற விரும்புவது?
இங்குள்ள திருக்கோயில்களை சமயம் சார்ந்த ஒரு வழிபாட்டுத்தலம் என்று மட்டும் கருதாதீர்கள். அவை ஒவ்வொரு தமிழனின் முகவரியே ஆகும். அவை ஒவ்வொன்றும் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. சமூக மேம்பாடுகள் அனைத்தும் கோயில் சார்ந்தே நடந்துள்ளன. தமிழனுடைய பாரம்பரியம், கலாசாரம் அத்தனையும் திருக்கோயில்களில் தான் பொதிந்து திகழ்கின்றன. அவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழனின் தலையாய கடமையாகும். குறிப்பாக, கல்வெட்டுக்களிலும், ஓலைச்சுவடிகளிலும் காணப்பெறும் கிரந்தம் என்ற எழுத்து முறை தமிழன் கண்டுபிடித்துப் பயன்படுத்திய ஒரு  முறையேயாகும். கிரந்த எழுத்தில் உள்ள சம்ஸ்கிருத நூல்கள் எல்லாம் வடநாட்டவர் எழுதியவை என்று புறம் தள்ளாதீர்கள். அவை அனைத்ததும் தமிழன் படைத்தவையே என்பதை நாம் அறிந்து போற்றுதல் வேண்டும். தமிழன் எத்தனை மொழிகளைக் கற்றுக்கொள்ள இயலுமோ, அது அவனது மேம்பாட்டிற்கு நிச்சயம் உதவும் என்பதே என் கருத்து.

இளைய தலைமுறைக்கு: அறிவியல் சார்ந்த துறைகளில் அளப்பரிய சாதனைகள் புரியும் இளைஞர்கள் நம் வரலாற்றையும் பாரம்பரிய பெருமைகளையும் அறிதல் வேண்டும். அவை வெறும் வரலாறு மட்டுமன்று, அவர்களது அனுபவம் நமக்கு வழிகாட்டும் ஒரு தடமே என்பதை உணர்தல் வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு பின் வரும் சந்ததியினருக்கு குறைந்தபட்சம் தமிழ்மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுத்தர வேண்டும். இது எதிர்காலத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை. இதனைச் செய்யத் தவறினால் எதிர்கால வரலாறு நம்மைப் பழிக்கும்.

- முனைவர் வெ.கார்த்திகேயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com