நைஜீரியா - ஈபோ நாடோடிக் கதை: இடியும், மின்னலும்...!

வெகு காலத்துக்கு முன் இடி என்ற தாய் ஆடும், மின்னல் என்ற குட்டி ஆடும் வாழ்ந்து வந்தன. வாழ்ந்த காலத்தில் தாய்க்கும்
நைஜீரியா - ஈபோ நாடோடிக் கதை: இடியும், மின்னலும்...!

சு.கி.ஜெயகரன், சு.தியோடர் பாஸ்கரனின் சகோதரர். நீர்வள ஆய்வுத் துறை சார்ந்த பணிகளில் பல ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரிந்தவர். "கிளிமாஞ்சாரோ' மலையின் உச்சிக்குச் சென்ற பெருமை பெற்றவர். பல நூல்களின் ஆசிரியர்.  ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ஈபோ நாடோடிக் கதையை இங்கு அளிக்கிறார்.  (படமும் இவரே)

வெகு காலத்துக்கு முன் இடி என்ற தாய் ஆடும், மின்னல் என்ற குட்டி ஆடும் வாழ்ந்து வந்தன. வாழ்ந்த காலத்தில் தாய்க்கும் மகனுக்கும் மக்களிடையே நல்ல பெயர் இருக்கவில்லை. குட்டி ஆட்டுக்கு கோபம் வந்தால் உடனே வெகுண்டு ஆட்களை, குடிசைகளை, உடைமைகளை, பயிர்களை நாசம் செய்துவிடும். சில நேரங்களில் ஆட்களை எரித்தே கொன்றுவிடும். உடனே தாய் ஆடான இடி, தன் மகன் இவ்வாறு நடந்து கொண்டான் எனத் தெரிந்ததும் மகனைக் கண்டித்து இடியென முழங்கும். 

மகனின் அட்டகாசமும் அதைக் கண்டித்து தாய் போடும் சத்தமும் அங்கு வாழ்ந்த மக்களுக்கு பெரும் தொல்லையாக உருவெடுத்தது. ஒருநாள் மக்கள் அனைவரும் கூடி அந்தத் தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்து அந்நாட்டு அரசனிடம் சென்று முறையிட்டனர். மக்களின் குறை கேட்ட அரசன், தாய் ஆட்டையும், குட்டி ஆட்டையும் விசாரித்து அவர்களைத் தன் நாட்டை விட்டே விரட்ட ஆணையிட்டார். ஆடுகளும் அரசனின் ஆணைக்குப் பணிந்து  நாட்டை விட்டு வெளியேறி எல்லைக்கு அப்பால் வாழ ஆரம்பித்தன. ஆனாலும் குட்டி ஆடான மின்னலின் தொல்லை தீரவில்லை. நாட்டிற்கு வருவோரையும் போவோரையும் எல்லைக்கு அப்பால் வாழ்ந்த இடியும், மின்னலும் இம்சித்தன. ஆடுகளின் இம்சை பொறுக்காமல் மறுபடியும் மக்கள் அரசனிடம் முறையிட, அரசன் ஆடுகளைத் தன் சபைக்கு வரவழைத்தான். 

ஆடுகளைப் பார்த்து அரசன் கோபத்துடன், ""உங்கள் தொல்லை தாளாமல் தான் உங்களை நாட்டை விட்டே விரட்டினேன். இப்போது நாட்டின் எல்லைக்கு அப்பால் இருந்துகொண்டு வழிபோக்கர்களைத் துன்புறுத்துகிறீர்கள். இனிமேல் அப்படி செய்தால் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பேன். இன்று முதல் நீங்கள் என் நாட்டின் எல்லைகளையும் தாண்டி தூரத்தில் உள்ள கானகத்தில் போய் வாழுமாறு ஆணையிடுகிறேன். மறுபடியும் உங்கள் முகத்தில் விழிக்க விரும்பவில்லை'' என்றான்.

இடியும், மின்னலும் வேண்டா வெறுப்பாக அரசனின் கோபத்துக்குப் பயந்து அவனது ஆணையின்படி தூரத்தில் இருந்த கானகத்தில் வாழச் சென்றன. அவை காட்டில் வாழும் போது தங்கள் மீது குறை சொன்ன மக்கள் மீதும், நாட்டை விட்டு துரத்திய அரசன் மீதும் கோபம் கொண்டன. கோபத்தில் அவை மூட்டிய காட்டுத் தீ, சில சமயங்களில் ஊர் எல்லை வரை வந்து கிராம மக்கள் பயிர் செய்த நிலங்களில் இருந்த பயிர்களையும், தோட்டத்தில் இருந்த மரங்களையும் எரித்தது. சில நேரங்களில் ஊரில் பரவியும் சேதம் விளைவித்தது. இப்படி நடக்கும்போது, தாய் ஆடு மகன் ஆட்டைக் கண்டித்து இடியாகக் கத்துவது வழக்கம். ஆனாலும் மின்னலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

மக்கள் படும் அவதியை அறிந்த அரசன், தனது மந்திரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் ஆலோசனை நடத்தினான். கடைசியில் அவர்கள் இடியையும், மின்னலையும் பூமியிலிருந்தே விரட்டி விட முடிவு செய்தனர். முடிவைக் கேட்ட ஆடுகளும் இனியும் பூமியில் வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து பூமியை விட்டு வெளியேறி மேகங்களில் வாழ ஆரம்பித்தன. 

ஆனாலும் மின்னல் அவ்வப்போது கோபமுற்று, பூமியைத் தாக்குவதையும், அதைக் கண்டித்து தாய் ஆடு இடியாக இடிப்பதையும் இன்னும் கேட்கலாம். சில சமயங்களில் இடிக்கும் கூட மின்னலின் செயல் பிடிக்காமல் அந்த இடத்தை விட்டே  நகர்ந்து விடுவதால், சில நேரங்களில் வெறும் மின்னலை மட்டுமே நாம் பார்க்கிறோம். இடியோசையைக் கேட்க முடிவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com