ஆதி சங்கராச்சாரியார் ஹிந்து மதத்தின் மாபெரும் சிந்தனையாளர்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், இந்தியாவின் தூதராகவும், இந்தியக் குடியரசுத் தலைவர்களின் நேரடி உதவியாளருமான எழுத்தாளர் பேச்சாளர் பவன் கே. வர்மா சென்னை வந்திருந்தார்.
நூல்வெளியீட்டின்போது பவன் கே.வர்மாவுடன் கோபாலகிருஷ்ண காந்தி
நூல்வெளியீட்டின்போது பவன் கே.வர்மாவுடன் கோபாலகிருஷ்ண காந்தி

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், இந்தியாவின் தூதராகவும், இந்தியக் குடியரசுத் தலைவர்களின் நேரடி உதவியாளருமான எழுத்தாளர் பேச்சாளர் பவன் கே. வர்மா சென்னை வந்திருந்தார்.  காரணம் இல்லாமல் இல்லை. அவருடைய சமீபத்திய "தி சங்கரர்' நூலை வெளியிடவும், அவருடன் உரையாடவும் கோபாலகிருஷ்ண காந்தியும் வந்திருந்தார்.  
பவன் வர்மா பல தொலைக்காட்சிப் பேச்சுகளில் அமைதியாகத் தம் வாதத்தை எடுத்துச் சொல்வார். மற்றவர்கள் மாதிரி சத்தம் போட மாட்டார். அதில் பொருள் இருக்கும். மாநிலங்களவை எம்.பி. பிகார் முதல்வரின் ஆலோசகராக இருந்தவர். விற்பனையில் சாதனை படைத்த ஒரு டஜன் புத்தகங்களின் ஆசிரியர்.  "தி கிரேட் இந்தியன் மிடில் கிளாஸ்' இவரது புகழ் பெற்ற படைப்பு. லண்டன் நேரு சென்டருக்கு இயக்குநராக இருந்தவர். அங்கேயும் இவர் கோபாலகிருஷ்ண காந்தி விட்ட இடத்தைப் பிடித்தாராம்!  அமெரிக்க இந்தியானாபொலிஸ் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டமளித்து பெருமைப்படுத்தியது. கோபாலகிருஷ்ண காந்திக்குப் பிறகு, தாம் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமனுக்கு நேரடி செயலராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதை முதலில் நினைவு கூர்ந்தார்.  
ஆதி சங்கராச்சாரியார் தமது 22-ஆவது நூல் என்றார் பவன் வர்மா.  
ஜவாஹர்லால் நேரு தம் "டிஸ்கவரி ஆப் இந்தியா'-வில்
ஆதி சங்கரர் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், தெற்கிலிருந்து நடந்தே வடக்கே சென்று இந்தியாவை இணைத்ததைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதை கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டார்.      
கேரளத்தின் காலடியில் பிறந்து, கேதார்நாத்தில் முக்தியடைந்ததையும், முப்பத்திரண்டு வயதுக்குள் ஹிந்து மதக் கோட்பாடுகளை விளக்கி அதைப் புனரமைத்ததை வெகு தெளிவாகச் சொன்னார் பவன் வர்மா. ""காசியில் நான்கு நாய்களைப் பிடித்துக்கொண்டு வந்த புலையனை, "தள்ளிப் போ' என்று சங்கரர் சொல்ல, "எதைத் தள்ளிப் போகச் சொல்கிறாய்? இந்த உடலையா, அதனுள்ளிருக்கும் ஆன்மாவையா?' என்று பதில் அளித்ததைக் கேட்டு அவனையும் குருவாக ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டார்.  எனவே எல்லாச் சாதியையும் அவர் சமமாக ஏற்றுக்கொண்டார்'' என்றார் வர்மா.
பவன் வர்மாவின் நூல், அவர் கேரளத்தின் காலடியிலிருந்து புறப்பட்டதிலிருந்து தொடங்குகிறது.  ஆதி சங்கரர் பயணம் மேற்கொண்ட அத்தனை இடங்களுக்கும் சென்று வந்த பிறகே நூலை எழுதி முடித்தாராம். எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் சங்கரர் எவ்வாறு நாட்டின் நான்கு மூலைகளுக்கும் பாதை தேடி அலைந்து கண்டுபிடித்துச் சென்றார் என்பதை வியந்தார். கேதார்நாத் குகையில் ஆதி சங்கரர் தம் குரு கௌடபாதரைச் சந்தித்த இடத்தை தரிசித்திருக்கிறார்.  நர்மதா நதிக்கு விஜயம் செய்ததையும், காசியில் சங்கரர் வசித்ததையும் குறிப்பிட்டார்.  ஆனால் எங்கே வசித்திருப்பார் என்பதைத் தேடியிருக்கிறார். விவாதம் அப்போது ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சமாக இருந்தது. அப்போதெல்லாம் தர்க்கங்கள், விவாதங்கள்தாம் ஒரு பிரச்னைக்கு முடிவு காணப் பயன்பட்டதாக பவன் வர்மா கூறினார்.  
காஷ்மீர் சைவம் பற்றி கரண் சிங்கிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதையும், ஓம்காரேஷ்வர் போகுமுன் இரண்டு நிபுணர்களிடம் தகவல் கேட்டு அறிந்ததையும் குறிப்பிட்டார்.  
சில சமயங்களில், பதில்களைவிடக் கேள்விகள் அர்த்தம் நிறைந்தவையாக இருப்பதாக கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டார். 
""ஞானி ஆதி சங்கரர் பிறந்த நாட்டில் இப்போது ஏன் இத்தனை வன்கொடுமை?'' என்று கேட்டார், கோபால் காந்தி.  அதற்கு, ""மஹாத்மா காந்தி பிறந்த இந்த நாட்டில் ஏன் இந்த வன்கொடுமை?'' என்று பதில் அளித்தார் வர்மா.
தாம் சங்கரரின் பாஷ்யங்களை, அதாவது உரைகளைப் படித்ததில்லை என்ற கோபால் காந்தி, ஆனால் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பஜகோவிந்தம் சுலோகத்தைக் கேட்டிருப்பதை நினைவுகூர்ந்தார்.
""நம் சைவ மதத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்துச் சொன்னார் சங்கரர். அவர் சைவரா?'' என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். ""அவர் பாடிய பஜகோவிந்தம் பாடலைப் படியுங்கள். புரியும்!'' என்றார் வர்மா.
"கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதன் விளக்கமாக, செய்யும் பணியில் பற்றற்று இருப்பதே ஒரு மனிதன் உலகின் தேவைகளை நிறைவேற்றும்போது, கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை. 
உபநிஷதம் இதைத் தான் சொல்கிறது. "உன்னை நீ அறி' (தத்வம் அஸி) என்றார் பவன் வர்மா. "அடுத்து எந்தப் பத்திரிகையாளரைச் சந்திக்கப் போகிறீர்கள்?' என்ற கேள்விக்கு, "பர்க்கா தத்!' என்றார் பவன் சர்மா.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com