ஏழு தாளங்கள்

கர்நாடக இசையின் தாள வகைகளில் ஏழு தாளங்களும், தாள நடைகள் எனப்படும் ஐந்து ஜாதி வகைகளும் சொல்லப்படுகின்றன.

கர்நாடக இசையின் தாள வகைகளில் ஏழு தாளங்களும், தாள நடைகள் எனப்படும் ஐந்து ஜாதி வகைகளும் சொல்லப்படுகின்றன. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து வகையான தாள நடைகள் உலகின் எல்லாப் பாடல்களிலும் அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு ஏற்ற முறையில் அடிநாதமாக ஓடுகின்றன. 

திஸ்ர ஜாதி "தகிட' என்ற அடிப்படை சொற்கட்டில் மூன்று அட்சரங்களைக் கொண்டது. சதுஸ்ர ஜாதி "தகதிமி' என்ற அடிப்படை சொற்கட்டில் நான்கு அட்சரங்களைக் கொண்டது. கண்ட ஜாதி "தகதகிட' என்ற அடிப்படை சொற்கட்டில் ஐந்து அட்சரங்களைக் கொண்டது. மிஸ்ர ஜாதி "தகிடதகதிமி' என்ற அடிப்படை சொற்கட்டில் ஏழு அட்சரங்களைக் கொண்டது. சங்கீர்ண ஜாதி "தகதிமிதகதகிட' என்ற அடிப்படை சொற்கட்டில் ஒன்பது அட்சரங்களைக் கொண்டது. 

தமிழ்த் திரையிசையில் ஆதிகாலம் தொட்டு பொதுவாகப் பாடல்கள் திஸ்ரம் அல்லது சதுஸ்ர நடையிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இசையமைப்பாளர்கள் முக்கியமான சந்தர்ப்பங்களில் கண்டம் மற்றும் மிஸ்ர நடைகளில் பாடல்கள் அமைத்துள்ளனர். நான் இங்கு தாளங்களைக் குறிப்பிடாமல் அடிப்படை தாள நடைகளை மட்டும் குறிப்பிட்டு பாடல்களை மேற்கோள் காட்டுகிறேன். பல்வேறு இந்திய மொழிகளின் திரைப்பட இசையில் கண்ட நடை மற்றும் மிஸ்ர நடைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் கண்ட நடைப் பாடல்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக ஆக்ரோஷமான தாள நடை அல்லது ருத்ரதாண்டவ நடை என்று உணரப்படும் இந்த தாள நடையை திரைப்பட இசையமைப்பாளர்கள் பல்வேறு உணர்வுகளுக்கான திரைப்படப் பாடல்களில் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மேற்கத்திய இசையில் இந்த தாள நடை க்விண்ட்டுபுல் (ணமஐசபமடகஉப) என்று அழைக்கப்படுகிறது.

திரையிசைத் திலகம் கே. வி. மகாதேவன், "கந்தன் கருணை' படத்தில் "ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்' என்று பஹாடி ராகத்தில் அருமையாக மெட்டமைத்திருக்கிறார். வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன், "காரைக்கால் அம்மையார்' படத்தில் கே. பி. சுந்தராம்பாளின் தெய்வீகக் குரலில் "தகதகவென ஆட வா, சிவசக்தியோடு பாட வா' என்னும் பாடலில் திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம் மற்றும் மிஸ்ரம் என நான்கு நடைகளும் ஒரே பாடலின் நான்கு பகுதிகளாக வரும் வண்ணம் அற்புதமாக இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இந்த நடையில் கிட்டத்தட்ட பதினைந்திற்கும் மேலான எண்ணிக்கையில் பல்வேறு ராகங்கள் மற்றும் புதுமையான தாளக்கட்டுகளுடன் பாடல்களைப் படைத்திருக்கிறார். 1. அழகு மலராட- வைதேகி காத்திருந்தாள், 2. அதிகாலை நிலவே- உறுதிமொழி, 3.விழியில் புது கவிதை படித்தேன்- தீர்த்த கரையினிலே, 4.அன்பே உன் பாதமே சுப்ரபாதம்-புதுமைப்பெண், 5.கல்யாண மாலை- புதுப்புது அர்த்தங்கள், 6.பார்த்த விழி பார்த்தபடி- குணா, 7.இச்சென்று இச்சென்று-எனக்கு நானே நீதிபதி, 8.மழை வருது மழை வருது- ராஜா கைய வெச்சா, 9.மீட்டாத ஒரு வீணை- பூந்தோட்டம், 10. அலை மீது விளையாடும்- காதல் கவிதை, 11.என்னப் போல் ஒருத்தன்- தாண்டவக்கோனே,  12.கண்ணிரெண்டில் ஏற்றி வைத்த-அவதாரம், 13. தண்ணீர் குடம் கொண்டு- சர்க்கரைத் தேவன். 

ஏ. ஆர். ரகுமான் "மின்சாரக்கனவு' படத்தில் "அன்பென்னும் மழையிலே அகிலங்கள் நனையவே' என்ற பாடலையும், "பாபா' படத்தில் "சக்தி கொடு' பாடலின் ஒரு பகுதியையும் இந்த நடையில் அமைத்திருக்கிறார். திரைப்படப் பின்னணி இசையில் எல்லா இசையமைப்பாளர்களும் காட்சிக்குத் தகுந்த வகையில் இந்த தாள நடையில் இசைக் கோர்வைகளை அமைக்கத் தவறுவது இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com