சிக்கலான இசைச் சவால்களை சரித்திரமாக்கிக் காட்டியவர்!

சிக்கலான இசைச் சவால்களை சரித்திரமாக்கிக் காட்டியவர்!

தமிழ்த் திரை ரசிகர்களால் அன்போடு "மாமா' என்று கொண்டாடப்பட்ட கிருஷ்ணன் கோவில் வெங்கடாச்சலம் மகாதேவன் என்ற திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழாவில் அவரை மிகச் சிறப்பாக நினைவு

தமிழ்த் திரை ரசிகர்களால் அன்போடு "மாமா' என்று கொண்டாடப்பட்ட கிருஷ்ணன் கோவில் வெங்கடாச்சலம் மகாதேவன் என்ற திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழாவில் அவரை மிகச் சிறப்பாக நினைவு கூற ஒரு முக்கியமான காரணம் உண்டு.. தமிழ்த் திரையிசை வரலாற்றில் கே.வி.மகாதேவனைப் போல மிகச் சிக்கலான திரைக்கதைச் சூழல்களை சந்தித்தவர்கள் வேறு எவரும் கிடையாது. "பாட்டுக்குத் தான் மெட்டமைப்பேன்' என்று அவராகத் தேர்வு செய்த சவாலான இசையமைக்கும் வழி எல்லோருக்கும் தெரிந்ததே. அதையும் தாண்டி அவருக்கு திரைக்கதையில் வைக்கப்பட்ட சவால்களை சர்வ சாதாரணமாக தன் சரித்திரத்தின் மகுட மணிகளாக்கிக் காட்டியவர் கே.வி.எம்.
இரண்டு உதாரணங்களை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன். புராண கதைகளுக்கு அநேகம் பேர் இசையமைத்திருக்கின்றனர். இருப்பினும், கே.வி.மகாதேவனுக்கு ஈடாக வேறு எவரும் இதில் ஜொலிக்கவில்லை. "சம்பூர்ண ராமாயணம்' படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கயிலை நாதனான சிவபெருமானை தன்னுடைய கானத்தாலும் வீணை இசை நாதத்தாலும் கவர்ந்தவன் இலங்கை வேந்தன் ராவணன். எனவே, திரைப்படத்தில் இதனை மிகச் சுவாரஸ்யமான காட்சியாக்க முடிவு செய்கிறார் இயக்குநர் கே.சோமு. 
பொறுப்பு மாமாவின் தலையில் விழுகின்றது. ஏதோ ஒரு இனிமையான மெட்டில் பாட்டமைத்து கடந்து விட முடியுமா அந்தக் காட்சியை? கே.வி.எம். அந்த சந்தர்ப்பத்தை பல நூற்றாண்டுகளைக் கடந்து சாதனை படைக்கும் சரித்திரமாக்குகின்றார். சங்கீதத்தைக் கரைத்துக் குடித்த ராவணனின் திறமையையும், கர்நாடக இசையின் பெருமையையும் விளக்கும் வகையில் பாடலைக் கேள்வியும் பதிலுமாக அமைத்து திருச்சி லோகநாதன் பாடலைத் தொடங்க சி.எஸ்.ஜெயராமன் ராவணனின் குரலாய் கம்பீரமாக ஜொலித்தார்.
"வீணைக் கொடியுடைய வேந்தனே' என்ற காலத்தால் அழியாத காவிய ராகமாலிகைப் பாடலில் கே.வி.எம், காலை, உச்சிவேளை, மாலை, இரவு என்று ஒரு நாளின் பல பொழுதுகளில் பாட வேண்டிய ராகங்கள், நவரசங்களுக்கான ராகங்கள், தமிழ்ச் செய்யுள்களுக்கான ராகங்கள் (மோகனம் பூபாளம் சாரங்கா வசந்தா நீலாம்பரி தன்யாசி கம்பீர நாட்டை சங்கராபரணம் தோடி கல்யாணி காம்போதி ராகங்கள் ) என்று வெகுஜன ரசிகர்கள் எல்லோருக்கும் கர்நாடக சங்கீதத்தின் பெருமையை எடுத்துச் சென்று மகத்தான சாதனை புரிந்தார். பின்னாட்களில் அதே பாமரர்களை "சங்கராபரணம்' பட இசையமைப்பின் மூலம் கர்நாடக சங்கீத பாடல்களையே பாடவைத்தது அவரது ஒரு யுகச் சாதனை.
அடுத்து "திருவிளையாடல்' படம். கே.வி.எம் அனைத்துப் பாடல்களையும் தேனில் ஊறிய பலாச்சுளைகளாகக் கொடுத்த படம். படத்தில் ஒரு திருவிளையாடலில் அகம்பாவம் பிடித்த வடநாட்டு ஹிந்துஸ்தானி இசை மேதையான ஹேமநாத பாகவதர், பாண்டிய நாட்டு அரசவையைக் கலங்கடிக்கும் ஒரு சவாலை வைக்கிறார். தன்னோடு இசைப் போட்டியில் பாடும் பாண்டிய நாட்டுப் பாடகர் தோற்கும் பட்சத்தில் பாண்டிய நாடே தனக்கு அடிமையாக வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார். ஹேமநாத பாகவதர் போல அப்படி ஒரு இசை மேதையை அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் அந்தப் பாடல் எப்படி இருக்க வேண்டும்? ராகமாலிகைப் பாடல்களை இசையமைப்பதில் தலை சிறந்தவரான கே.வி.எம்., மிஸ்ர மாண்ட் என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் "ஒரு நாள் போதுமா' என்ற பாடலைத் தொடங்கி பின் தோடி, தர்பார், மோகனம், கானடா என்று தமிழ்த் திரையிசை வரலாற்றின் மிகச் சிறந்த ஒரு ராகமாலிகைப் பாடலைத் தருகின்றார். கவியரசு வரிகளில் ஜாலம் காட்ட கர்நாடக இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா குரலில் சொர்க்கலோகத்தையே காட்டினார். சரி இவரது சவாலை எதிர்கொள்வதற்காக பாண்டியனால் பணிக்கப்படும் பாணப் பட்டரை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே மீண்டும் ஒரு அற்புதமான ராகமாலிகை விருத்தத்தை படைக்கிறார். 
சிம்மேந்திர மத்யம ராகத்தில் தொடங்கி சாவேரி ஹிந்தோளம் என்று குரலிசை வித்தகர் டி.ஆர்.மகாலிங்கம் உச்ச ஸ்தாயியில் பஞ்சமம் வரை சாதாரணமாக சென்று வந்து உருக வைக்கிறார். பாண்டிய நாட்டு பாணர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டுவதற்காக இப்படி ஒரு வியக்க வைக்கும் படைப்பு. ஆனால் அப்பேற்பட்ட பாணப்பாட்டரே பாண்டிய மன்னனின் ஆணையைக் கேள்விப்பட்டு சொக்கநாதரிடம் வந்து பீம்பிளாஸ் ராகத்தில் "இசைத் தமிழ் நீ செய்த அருள்சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை' என்று கதறி அழுகிறார். இங்கேயும் கே.வி.எம் சவாலை தகர்த்தெறிகின்றார். 
அடுத்து க்ளைமாக்ஸ். இப்போது சிவபெருமான் விறகுவெட்டி வேடத்தில் ஹேமநாதரின் கர்வத்தை களைந்தெறிய முடிவு செய்து வருகின்றார். இங்கே கே.வி.எம். ஒரு விறகு வெட்டி உருவம் கொண்ட ஈசனின் இசை விஸ்வரூபத்தை உணர வைப்பதற்காக "பார்த்தா பசு மரம் படுத்துவிட்டா நெடுமரம் சேர்த்தா விறகுக்காகுமா?' என்ற சிந்துபைரவி ராக நாட்டுப் பாடலை வைக்கிறார். கண்ணதாசன் இந்த எளிய பாடலில் விஸ்வரூபம் எடுத்தார். இனி இறுதிக் கட்டம். பாணப்பட்டரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக உறங்கப் போகும் ஹேமநாதரின் செவியில் ஈசனின் இசை எறும்பாக நுழைந்து பின் கரும்பாகக் கனிந்து, அசையும் உலகை நிறுத்தி பின் இசையால் அசைத்து அப்பப்பா.....
பாண்டிய நாட்டின் ஒரு விறகு வெட்டியின் இசைக்கு இந்த ஹேமநாத பாகவதர் அடிமை என்று எழுதிக் கொடுத்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக ஓட வைத்த அந்தப் பாடல் கெüரி மனோகரி ராகத்தில் ஈடு இணையில்லாமல் மெட்டமைக்கப்பட்டு டி.எம்.செüந்தர்ராஜனால் கர்நாடக சங்கீதக்காரர்களே மெய்மறந்து அசந்து போகும் வகையில் பாடப்பட்ட "பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உன்னை நான் பாட வைத்தேனே' என்ற காலத்தை வென்ற பாடல். ஆம்... கே.வி.மகாதேவன் என்ற துருவ நட்சத்திரம் தமிழ் திரையிசை வரலாற்றில் அநேக பக்கங்களை அற்புதமான தன் இசையால் ஜொலிக்க வைத்த இசை வைரம் என்றால் மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com