ஆட்டோ ஓட்டுநரின் ஆசை!

"உலகத்திலேயே மிகக் கடினமான வேலை சும்மா இருப்பதுதான்' இது ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணியின் கருத்து. ஆட்டோவுக்கு மட்டும்தான் மூன்று சக்கரங்கள் இருக்கிறதா
ஆட்டோ ஓட்டுநரின் ஆசை!

"உலகத்திலேயே மிகக் கடினமான வேலை சும்மா இருப்பதுதான்' இது ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணியின் கருத்து. ஆட்டோவுக்கு மட்டும்தான் மூன்று சக்கரங்கள் இருக்கிறதா அல்லது அவரே கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு இருக்கிறாரா எனத் தோன்றும்படியான சுறுசுறுப்பு.
ஆட்டோவில் அவருடைய குடும்ப போட்டோ, பிள்ளைகள் பட்டம் பெறுவது போன்ற படங்கள் முகப்பிலும் ஓரங்களிலும் மாட்டப்பட்டிருக்கின்ற விதத்தில் நமக்கு ஆட்டோவுக்குள் நுழைவது போல் இல்லாமல் ஒரு வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காரணம் கேட்டால் நல்ல சுவாரஸ்யமான பிளாஷ் பேக் இருக்கிறது தண்டபாணியிடம்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி தனது 18 -ஆம் வயதில் ஐந்து ரூபாயுடன் பால் வண்டியில் ஏறி பட்டணம் புறப்பட்டு வந்தார். பூந்தமல்லியில் இறங்கி, கால்போன போக்கில் நடந்து அவர் சென்று சேர்ந்த இடம் வடசென்னையின் வியாசர்பாடி. 38 }ஆண்டுகளாய் அதுவே அவரது வாழ்விடமாய் இருந்து வருகிறது.
சென்னையில் பிழைப்பை நடத்த சைக்கிள் ரிக்ஷா ஓட்டி அதையே வீடாகவும் கொண்டு காலத்தைக் கழித்தவருக்கு சகவாசத்தால் புகை பிடிப்பது, மது என அத்தனை வேண்டாத பழக்கங்களும் வந்து சேர்ந்தன. இந்த நிலையில், இருந்தவருக்கு ஒருநாள் தெய்வமே தன்னை நல்வழிப்படுத்தித் தடுத்தாட்கொள்ள வந்ததைப் போல அவரது மனங்கவர்ந்த தலைவர் அன்றைய மக்கள் திலகம், பின்னர் முதல்வர் எம்.ஜி.யாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அண்ணா தொழிற்சங்க கூட்டத்திற்கு ஒருமுறை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்கள் அனைவரும் சென்று கலந்து கொண்டபோது எம்.ஜி.ஆர். அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசியிருக்கிறார். அந்த உரையை முன்னால் அமர்ந்து கேட்ட தண்டபாணி, அங்கே தனக்கான ஞானம் கிடைத்ததாகச் சொல்கிறார்.
"ஓட்டுநர்கள் உங்கள் வண்டிகளில் குடும்ப புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது வண்டியில் இரண்டாவது பிரேக். குடும்பம் பற்றிய அக்கறை உங்கள் மனதை சிதறவிடாமல் கவனமாக வேலை செய்ய வைக்கும். வேண்டாத வழி செல்லாமல் ஒழுக்கமாய் இருப்பீர்கள். ஆரோக்கியமாய் குடும்பத்தையும் வைத்துக் கொள்வீர்கள்''என்கிற எம்.ஜி ஆரின் இந்த வார்த்தைகளை அப்படியே மனப்பாடமாகச் சொல்கிறார் தண்டபாணி. அன்று முதல் தனது வேண்டாத பழக்கங்களை விட்டுவிட்டு உழைக்கத் தொடங்கி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் படங்கள் பார்ப்பதைத்தவிர வேறு எந்த பொழுதுபோக்கையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.
எம்.ஜி ஆர். தனது தலைவர், வழிகாட்டி என்று நிச்சயம் செய்து கொண்ட தண்டபாணி அவரது கட்சியில் இணைந்ததில் வியப்பொன்றும் இல்லை. நம் கட்சியினர் அனைவரும் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னவுடன் முதல் ஆளாகச் சென்று தன் வலது கையில் கட்சியின் சின்னத்தைப் பச்சை குத்திக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. ""முன்னேற்றப் பாதையிலே மனச வைத்து முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து''என்று "விவசாயி' படப்பாடலை ஆனந்தமாகப் பாடும் தண்டபாணி அதையே பின்பற்றிப் பத்து ஆண்டுகள் கடுமையாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டி உழைத்துப் பின் ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருக்கிறார்.
அதே காலத்தில் திருமணமும் செய்துகொண்டு இருக்கிறார். தன் குடும்பப் புகைப்படம் பிள்ளைகளின் படங்கள் என்று படங்களை மாட்டி கொள்வதோடு அவர் நின்றுவிடவில்லை எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் மிகத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே வாழ்ந்து பார்த்திருக்கிறார்.

அவர் பேசும்போது மேற்கோள்களாக எம்.ஜி.ஆரின் வசனங்களை அப்படியே பகிர்ந்து கொள்கிறார். மேற்கோள்களாக மட்டும் அவற்றைப் பயன்படுத்தாமல் வாழ்க்கைக்கான பாடமாகவும் அவர் அந்த வசனங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார். தன் ஆரோக்கியம் காப்பது, மனைவியை மரியாதையோடு நடத்துவது, பிள்ளைகளிடம் பாசம் காட்டுவது, அவர்களுக்குத் தேவையானஅன்பை, பண்பை, கல்வியை ஒரு குறைவுமின்றி வழங்குவது இப்படி நகர்கிறது தண்டபாணியின் வாழ்க்கை.
"ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி; உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி' இது வெறும் பாட்டு இல்லை வாழ்க்கைத் தத்துவம் என்று ஏற்றுக்கொண்ட தண்டபாணி, தன் பிள்ளைகளை அரும்பாடுபட்டுப் படிக்க வைத்திருக்கிறார். அறிவு வளர்ச்சியை அவர்களிடம் பார்ப்பதற்காக தண்டபாணி பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு அதனால்தான் அவரது பிள்ளைகள் கால்நடை மருத்துவராக, பொறியாளராக, உயர்கல்வி பெற்ற பெண்ணாக என்று மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
"இவை அத்தனைக்கும் எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் மட்டுமே காரணம்'' என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி. இப்படி அவர் பேசும்போது "ஆமாம்' என்பது போல புன்னகையோடு தலையசைக்கிறார் அருகில் அமர்ந்திருக்கும் அவரது மனைவி செந்தாமரை."இந்தப் பிறவி முழுமைக்கும் எம்.ஜி.ஆர். ஒருவரே என்னுடைய தலைவர்என்ற அவரது தழுதழுத்த வார்த்தைகள் அவருக்கு அவர் தலைவராக வரித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் மீதான பக்தியை வெளிப்படுத்துகிறது.
அவருக்கென ஆசைகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டால், "ஒரே ஒரு ஆசை இருக்கிறது'' என்கிறார். அது தன் தலைவன் பெயரால் நடக்கும் ஆட்சியில் முதல்வரை, அவரது அலுவலகத்தில் ஒரு முறை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டும் என்பதுதான்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது என்று அவரது கனவு கானல்நீர்க் கனவாகத் தொடர்கிறது. இப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் எம்.ஜி.ஆரின் "தொண்டன்' என்கிற முறையில் சந்திக்க வேண்டும் என்கிற பேராவலுடன், எம்.ஜி.ஆர். பாடல்களை இசைத்தபடி தனது ஆட்டோவில் சென்னை நகரை வலம் வந்து கொண்டிருக்கிறார் தண்டபாணி.
வியாசர்பாடியிலுள்ள அவரது வீடு, ஒரு எம்.ஜி.ஆர். காட்சியகமாகக் காட்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆரின் பாடல்களும், அவர் தனது படங்களில் பேசிய வசனங்களும்தான் தமிழகத்தின் இளைய தலைமுறைக்கு வருங்கால வழிகாட்டிகள் என்பது தண்டபாணியின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும்!
} ஜோதிலட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com