Enable Javscript for better performance
ஒரு மணி நேரத்தில் எழுதிய பாடல்! - கவிஞர் முத்துலிங்கம்- Dinamani

சுடச்சுட

  

   ஒரு மணி நேரத்தில் எழுதிய பாடல்! - கவிஞர் முத்துலிங்கம்

  By DIN  |   Published on : 12th August 2018 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 65

   "இந்த - அழகுத் தீபம் ஒளிவீசும் பொழுதினில்
   இரவுத்தீபம் ஏனோ - இது
   முகமோ மலர்வனமோ - எனை
   மயக்கும் மாயச் சுடர்தானோ'
   -இது "திறமை' என்ற படத்தில் சங்கர் கணேஷ் இசையில் நான் எழுதிய பாடல்.
   "மணிப்பூர் மாமியார்' படத்தில் நான் எழுதிய "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே' என்ற பாடலை சிதம்பரம் ஜெயராமன் குரலில் எப்படி மலேசிய வாசுதேவன் பாடினாரோ அதைப்போல் இந்தப் பாடலையும் ஜெயராமன் குரலில் மலேசிய வாசுதேவன் பாடியிருப்பார். அவருடன் உமா ரமணன் சேர்ந்து பாடியிருப்பார். இது 1985-இல் வெளிவந்த படம். இந்தப் பாடல் தனக்குப் பிடித்த பாடலென்று ஒருமுறை கலைவித்தகர் ஆரூர்தாஸ் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
   இது, ஒரு மணி நேரத்தில் ஏவி.எம். ஸ்டூடியோவில், சங்கர் கணேசின் கம்போசிங் அறையில் இருந்து எழுதிய பாடல். சங்கர் கணேஷ் போன்றவர்கள் எங்களுக்கு டியூன் கேஸட் கொடுப்பதில்லை. உடனுக்குடன் அங்கிருந்துதான் எழுதச் சொல்வார்கள்.
   அதுபோல் நடிகர் சங்கிலி முருகன் தயாரித்த "பெரிய மருது' என்ற படத்திற்கு ஒரு பாடலை இரண்டு மணி நேரத்தில் ஏவி.எம். ஸ்டூடியோ மேக்கப் அறையில் இருந்து எழுதினேன். அது இளையராஜா இசையமைத்தப் படம். நான் எழுதிய பாடல் தான் பூஜைப் பாட்டு. காலை பதினோரு மணிக்கு என்னை அழைத்தார்கள். பன்னிரெண்டு மணிக்குத்தான் இளையராஜா டியூன் கேஸட்டைக் கொடுத்தார்.
   பிற்பகல் இரண்டு மணிக்குள் அந்தப் பாடலை எழுதி முடித்தேன். நான் எழுதி முடிக்கும் வரைக்கும் சங்கிலி முருகன் கூடவே இருந்தார். அதன் பிறகு, இளையராஜாவிடம் காட்டினோம். அவர் எந்தத் திருத்தமும் பாடலில் செய்யவில்லை. பாடல் உடனே ஒலிப்பதிவு செய்யப்பட்டது. சொர்ணலதா பாடினார். பாடலும் பிரபலமான பாடலாக அமைந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சொர்ணலதா மறைந்துவிட்டார். அந்தப் பாடல் இதுதான்.
   "வெட லெப்புள்ளெ நேசத்துக்கு
   செவத்தப் புள்ளெ பாசத்துக்கு
   அழகர் மலைக் காத்து வந்து தூது சொல்லாதோ
   வாசமல்லி பூத்திருக்கு
   வாக்கப்படக் காத்திருக்கு
   சங்குமணிப் பூங்கழுத்தில்
   தாலிகட்ட வேணுமய்யா'
   - என்ற பல்லவியோடு தொடக்கமாகும். நடிகர் விஜயகாந்த்தைப் பார்த்து நடிகை ரஞ்சிதா பாடுவதுபோல் அமைந்த பாடல்.
   இந்தப் படத்தில் இன்னொரு பாடலையும் எழுதினேன். "இதை நீங்கள் தான் எழுத வேண்டும்'' என்று "சங்கிலி' முருகன் வற்புறுத்திக் கேட்டார். அது கிளைமாக்ஸ் பாடல்.
   தொகையறா
   "அம்மா - அருள்கொடுத்திடக் குடியிருப்பது
   சிந்தலக் கரையே
   அம்மா - உனை நினைத்திடத் தினம் துதித்திட
   இனிஇல்லை குறையே
   குலம் விளங்க நலம் விளங்க வரும் தேவி நீ
   பெயர் விளங்கப் புகழ்விளங்கும் பெரும் ஜோதி நீ
   பல்லவி
   பூந்தேரில் ஏறிவரும் காளி காளி
   பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
   தீயோரின் பாதைக்கொரு வேலி வேலி
   நல்லோரைக் காத்திருக்கும் சூலி சூலி
   பரமேஸ்வரி புவனேஸ்வரி ஜெகதீஸ்வரி
   ராஜேஸ்வரி மாதேஸ்வரி எமை ஆதரி'
   - என்று தொடக்கமாகும்.
   இந்தப் பாடலை இளையராஜாவுடன் இருந்து எழுதும்போது கூட இருந்தவர் அந்தப் படத்தின் இணை இயக்குநர். அவர் இணை இயக்குநர் மட்டுமல்ல. பல படங்களுக்கு வசனம் எழுதியவர். அவர் தான் இன்று தினமணி பத்திரிகையில் முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பர் ராஜ்கண்ணன்.
   அம்மன் பெயர்களில் என்னென்ன சொல்லலாம் என்பதை அவர்தான் இளையராஜாவிடம் சொன்னார். அவர் சொன்னதை இளையராஜா என்னிடம் சொல்லி அதை எழுத வைத்தார். அவர் சொன்ன அம்மன் பெயர்களில் சில அந்தப் பாடலின் இரண்டு சரணங்களிலும் வரும்.
   இதுவரை பாடல் எழுதிய அன்றைய பாடலாசிரியர்களில் கவிஞர் சுப்பு ஆறுமுகமும் அவினாசி மணியும் குறிப்பிடத்தக்க கவிஞர்கள். கவிஞர் அவினாசி மணியின் மகளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் நடிகர் பாண்டியராஜன்.
   அவினாசி மணி பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். "ஜானகி சபதம்', "ஆயிரத்தில் ஒருத்தி', "மிட்டாய் மம்மி', "வேடனைத் தேடிய மான்' போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். இதில் "ஜானகி சபதம்', "ஆயிரத்தில் ஒருத்தி' ஆகிய இரு படங்களில் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்களில் ஒருவர்தான் இன்றைய "இயக்குநர் இமயம்' பாரதிராஜா.
   "அடிமைப் பெண்' படத்தில் அவினாசி மணி எழுதிய
   "காலத்தை வென்றவன் நீ
   காவியம் ஆனவன் நீ
   வேதனை தீர்ப்பவன்
   விழிகளில் நிறைந்தவன்
   வெற்றித் திருமகன் நீ நீ நீ'
   என்ற பாடல் காலத்தை வென்று நிற்கும் பாடல்களில் ஒன்று.
   "கற்பூர நாயகியே கனகவல்லி' என்று எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பக்திப் பாடல் மிகமிகப் பிரபலமான தனிப்பாடல். இதை எழுதியவரும் அவினாசி மணிதான். ஆடி மாதம் அம்மன் கோயில் விழாக்களில் தவறாமல் இந்தப் பாடல் ஒலிபரப்பப்படும்.
   எம்.ஜி.ஆர். நடித்த "நேற்று இன்று நாளை படத்தில் இடம்பெற்ற,
   "அங்கே வருவது யாரோ - அது
   வசந்தத்தின் தேரோ
   கோடிக் கனவுகள் ஆடி வருகுது
   கோயில் சிலை ஒன்று நேரில் வருகுது
   அங்கே வருவது யாரோ - அது
   வள்ளலின் தேரோ'
   - என்ற பாடல்.
   அந்தப் படத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்று. இது அவினாசிமணி எழுதியது.
   அதுபோல் எம்.ஜி.ஆர் நடித்த "ரிக்ஷாக்காரன்' என்ற படத்தில் "கொல்லிமலைக் காட்டுக்குள்ளே' என்ற தொகையறாவுடன் ஆரம்பமாகி,
   "பம்பை உடுக்கை கொட்டி
   பரிவட்டம் மேலே கட்டி
   தங்கரதம் போலே ஆடும் வித்தாரக் கள்ளி - எந்தன்
   தாளத்தையே கேட்டுஆடு அச்சாரம் சொல்லி'
   - என்ற பல்லவியுடன் தொடங்குகின்ற அந்தப் பாடலை எழுதியவரும் அவினாசி மணிதான். இதை டி.எம். செüந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடியிருப்பார்கள்.
   அதுபோல் "கன்னிப் பெண்' என்ற படத்தில்,
   "ஒளி பிறந்தபோது - மண்ணில்
   உயிர்கள் பிறந்ததம்மா - இங்கு
   நீ பிறந்த போது - தெய்வம்
   நேரில் வந்த தம்மா'
   என்ற பிரபலமான பாடலை எழுதியவரும் அவினாசி மணிதான். எம்.எஸ். விசுவநாதன் இசையில் டி.எம்.செüந்தரராஜனும், எல்.ஆர். ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். இதுபோல் பல படங்களில் பல பாடல்களை எழுதியிருக்கிறார்.
   நான் பாட்டெழுதிய "காக்கிச் சட்டை' படத்திலும் இவர் ஓர் பாட்டெழுதியிருக்கிறார்.
   "பூப்போட்ட தாவணி
   போதையில் ஆடுதே'
   என்று அந்தப் பாடல் தொடக்கமாகும். அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டான பாடல்கள்தாம். எம்.ஜி.ஆர் நடித்த "நல்லநேரம்' படத்திலும் இவர் பாடல் எழுதியிருக்கிறார். கண்ணதாசன் தலைமையில் நடந்த கலைஞர் பற்றிய ஒரு கவியரங்கில் நானும் அவினாசி மணியும் கலந்துகொண்டு பாடியிருக்கிறோம்.
   நான் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது கே.கே. நகரில் வீட்டுவசதி வாரிய வீடொன்று சொந்தமாக வாங்கிக் கொள்ள எனக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கு இருபத்தையாயிரம் முன்பணம் கட்ட வேண்டும் என்று அவினாசிமணியிடம் பேச்சு வாக்கில் நான் சொல்லிக் கொண்டிருந்தபோது, " "மாட்டுக்கார வேலன்' படம் எடுத்த ஜெயந்தி பிக்சர்ஸ் கனகசபை செட்டியாரிடம் சொல்லி வாங்கித் தருகிறேன்'' என்றார்.
   ""சொன்னதற்கு நன்றி. அதெல்லாம் வேண்டாம். நானே சமாளித்துக் கொள்கிறேன்'' என்றேன்.
   இந்த விவரம் ஜுனியர் விகடனில் அப்போது செய்தியாக வெளிவந்துவிட்டது. "முத்துலிங்கம் படங்களில் தொடர்ந்து பாடல் எழுதி வருகிறார். மேலவை உறுப்பினராகவும் இருக்கிறார்.
   வீட்டு வசதிவாரிய வீட்டுக்காக இருபத்தையாயிரம் ரூபாய் கட்டமுடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை'-யென்று எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டு ராணி மேரிக்கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றிய எனக்கு மிகவும் வேண்டிய சகோதரி அரசு மணிமேகலை நேரில் வீட்டுக்கு வந்து, "உடனடியாகப் பணத்தைக் கட்டுங்கள்'' என்று பணத்தைக் கொடுத்தார்.
   "செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' என்ற திருக்குறள்தான் அப்போது என் நினைவுக்கு வந்தது. அவர் கொடுத்த பணத்தை மூன்று மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டேன். அவர் எங்கள் குடும்ப நண்பர். என் மகள் மோகனவல்லியின் மீது மிகுந்த பற்றுடையவர்.
   பிறகு சில காரணங்களால் அந்த வீட்டை, சாந்தி தியேட்டரில் புத்தகக் கடை வைத்திருந்த வேதகிரி என்பவருக்குக் கொடுத்துவிட்டேன். பத்திரிகையாளரும் எழுத்தாளரும் திராவிட இயக்க வரலாற்று அறிஞராகவும் விளங்கிய திருவாரூர் தியாகராசன் என்ற சின்னக் குத்தூசியின் பரிந்துரைதான் அதற்குக் காரணம்.
   (இன்னும் தவழும்)
   படங்கள் உதவி: ஞானம்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai