நாட்டியக் கலைக்கு சாதி, மதம் தடையில்லை! - நாட்டிய ஆசிரியர் பா.ஹேரம்பநாதன்

தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்தவர் பா.ஹேரம்பநாதன்,வயது 73. இவர் ஏறத்தாழ 60 ஆண்டுகளாக நாட்டிய ஆசிரியராகப் பணியாற்றியவர்.
நாட்டியக் கலைக்கு சாதி, மதம் தடையில்லை! - நாட்டிய ஆசிரியர் பா.ஹேரம்பநாதன்

தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்தவர் பா.ஹேரம்பநாதன்,வயது 73. இவர் ஏறத்தாழ 60 ஆண்டுகளாக நாட்டிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஏராளமான இளம் மாணவ, மாணவிகளுக்குப் பரத நாட்டியம் பயிற்றுவித்து, அரங்கேற்றம் செய்து வைத்து வருகிறார். இவரது மாணவிகள் நம் நாட்டிலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸிலும் பரதக் கலையில் புகழ்பெற்றுள்ளனர். தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நாட்டிய நாடகங்களைத் தயார் செய்து மேடையேற்றிய அனுபவம் கொண்டவர். மெலட்டூர், சாலியமங்கலத்தில் நடைபெறும் பாகவத மேளா கலைஞர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி அளிப்பதன் மூலம் மாணவர்களை உருவாக்கியவர். காங்கேயம் சிவன் மலை குறவஞ்சி நாடகத்தை உருவாக்கி மேடையேற்றியவர். தஞ்சாவூர் "ஸ்ரீ சரபேந்திர பூபால குறவஞ்சி' நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்து அரங்கேற்றியவர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி கோயிலில் நடைபெற்று வந்த "கைசிக புராண' நாட்டிய நாடகத்தின் மீட்டுருவாக்கத்தில் முக்கியப் பங்கேற்று தனது மாணவ, மாணவிகளுடன் முனைவர் அனிதா ஆர். ரத்னம் வழிகாட்டுதலுடன் 1999-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் நின்று போன சின்ன மேளம் நாட்டிய விழாவையும் மீட்டுருவாக்கம் செய்து தொடர்ந்து சித்திரைத் திருவிழாவில் நடத்தி வருகிறார். இக்கோயிலில் இவரது குடும்பம் பல தலைமுறைகளாகக் கலைப் பணியாற்றி வருகிறது.
அவரைச் சந்தித்து பேசியதிலிருந்து...

பரதக் கலையில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
எனது பாட்டி (அப்பாவின் அம்மா) ஜிவாயி நாட்டியக் கலைஞர். அப்பா பாவுப்பிள்ளை - மிருதங்க வித்வான். பரதநாட்டியத்துக்கு மிருதங்கம் வாசிப்பார். அதனால், அவருக்கு நாட்டியக் கலையிலும் ஆர்வம் அதிகம். அம்மா சாவித்திரி அம்மாள் - கர்நாடக இசைக் கலைஞரான அவர் ஹரிகதா காலட்சேபம் நிகழ்த்துவார். இவரைப் போல பெரியம்மா (அம்மாவின் சகோதரி) புஷ்பவள்ளி அம்மாள், மிகப் பெரிய இசைக் கலைஞர். இருவரையும் "தஞ்சாவூர் சகோதரிகள்' என அழைப்பர்.
இந்தக் காரணத்தால், எனக்கு சிறு வயதில் மிருதங்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயது இருக்கும்போது மிருதங்க வித்வான் தஞ்சாவூர் ராஜம் ஐயரிடம் பயிற்சி பெறுவதற்காகச் சேர்த்தனர். ஓரளவுக்குப் பயிற்சி பெற்றபோது அப்பா எனக்கு பரத நாட்டியம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு மிருதங்கம் வாசிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.
மேலும், பரத நாட்டிய ஆசிரியராகப் பணியாற்றினேன். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு தொடக்கப் பள்ளி ஆசிரியரானேன். 1967 முதல் 2003 வரை உதவி ஆசிரியர், தலைமையாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றேன். பள்ளி ஆசிரியராக இருந்த காலத்தில் பள்ளி நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தவிர, மீதமுள்ள நேரத்தில் பரத நாட்டியம் கற்றுக் கொடுக்க வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டபோது, அதில் பணியாற்றிய மருத்துவர்களின் குழந்தைகள் என்னிடம் பரத நாட்டியம் கற்றுக் கொள்வதற்காகச் சேர்ந்தனர். முதல் முதலாக 1970}இல் அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினேன். அதை மகா வித்வான் கிட்டப்பா பிள்ளை தொடங்கி வைத்தார். அக்காலகட்டத்தில் பாகவதமேளா நாட்டிய நாடகத்துக்கும் பயிற்சி அளித்து வந்தேன். அப்போது, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு. கருணாநிதி தஞ்சாவூருக்கு முதல் வருகை நிகழ்த்தியபோது, நான் நடத்திய இரண்டாவது அரங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
இதைத் தொடர்ந்து மெலட்டூர், சாலியமங்கலம் பாகவத மேளா நாட்டிய நாடகத்துக்கு நட்டுவாங்கம் செய்ய சென்றேன். இப்பணியில் எனது அப்பா காலம் முதல் 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். எனது பெரிய மாமியார் லட்சுமிகாந்தம் தொடங்கிய "பிச்சையா பிள்ளை பரதநாட்டிய வித்யாலயா' என்ற நாட்டிய பள்ளியை எனது மாமியார் துரைக்கண்ணம்மாள் தொடர்ந்து நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக இருந்து வந்தேன். இப்படி, 60 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.
பாத்திமா பீவி ஆளுநராக இருந்த காலத்தில் அவரது கையால் எனக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. சங்கீத நாடக அகாதெமி சார்பில் "மூத்த புரஸ்கார்' விருது அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி என்னை கெüரவித்தார்.
தமிழ், தெலுங்கு, மராத்தி மொழிகளில் நாடகங்கள் தயார் செய்துள்ளேன். "கைசிக புராணம்' என்பது பரதம் சார்ந்த நாடகம். 19 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வருகிறேன்.
சின்ன மேளம் பற்றி...?
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழன் 400 பெண்களை நாட்டியக் கலைஞர்களாக நியமித்து, அக்கோயிலில் நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினான். அக்காலத்தில் நாள்தோறும் மாலை நேரத்தில் ஒரு மணிநேரம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, மக்களுக்கு மாலை நேரத்தில் அதுதான் பொழுதுபோக்கு. கோயிலில் பூஜை முடிந்த பிறகு இப்போது இருக்கும் சுப்பிரமணிய சுவாமி சந்நிதி முன் உள்ள நர்த்தன மண்டபத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடத்துவர்.
அக்காலத்தில், பெரிய கோயிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். ராஜராஜசோழன் பிறந்த சதய நட்சத்திர நாளன்று தொடங்கும் இந்த விழா சித்திரா பெüர்ணமி அன்று முடிவடையும். இதில் "சின்ன மேளம்' என்ற நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும். கோயிலில் பணியாற்றிய நாட்டியக் குழுவுக்கு "சின்ன மேளம்' எனப் பெயர். நாகசுரம், தவில் குழுவைப் "பெரிய மேளம்' என அழைப்பர்.
சித்திரை திருவிழாவில் உற்சவ காலத்தில் சுவாமி உடன் 4 ராஜ வீதிகளிலும் "சின்ன மேளம்' குழுவினர் நாட்டியம் ஆடி வருவர். அதை பக்தர்கள் கூட்டம் ஆராதனை செய்தது. அந்த 18 நாட்களும் திருவிழா கோலாகலமாக இருந்தது. அப்படி கலை வளர்க்கப்பட்டது. இடையில் "சின்ன மேளம்' நாட்டிய நிகழ்ச்சி நின்றுபோனது.
மீண்டும் 2010-ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவியுடன் "தஞ்சாவூர் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாசாரக் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கி இந்த சின்ன மேளம் நாட்டிய விழாவை சித்திரைத் திருவிழாவில் நடத்தி வருகிறேன். பரதக் கலை வளர்ச்சி என்பது பாரம்பரிய நிலையை ஒட்டி இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்.
தஞ்சை நால்வரின் பங்களிப்பு என்ன?
உலகம் முழுவதும் நாட்டியக் கலை இருப்பதற்கு தஞ்சை நால்வர்தான் காரணம். 
சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேல் ஆகியோர்தான் தஞ்சை நால்வர். நாட்டிய நிகழ்ச்சியின் பிதாமகர்களான இவர்கள் 17 - 18-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு முன்பே பரதக் கலை தொடர்பாக "பரத சாஸ்திரம்', "அபிநய தர்ப்பணம்' உள்ளிட்ட நூல்கள் தமிழ், ஸம்ஸ்கிருதத்தில் இருந்தன. மேலும், இலக்கியங்களிலும், புராணங்களிலும் பரதக் கலையைப் பற்றியக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இவர்களுக்கு முன்பும் நாட்டிய ஆசிரியர்கள் இருந்துள்ளனர். மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர்கள், பரத சாஸ்திரத்தை வைத்து பரத நாட்டியத்தைக் கொண்டு வந்தனர்.
அடவு முறை, கால் தட்டு, கை அசைவு, முக அசைவு போன்றவை பரத சாஸ்திரத்தில் இருக்கின்றன. அதை தஞ்சை நால்வர் எடுத்து வகைப்படுத்தினர். முக பாவங்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என பட்டியலிட்டனர். நாட்டியப் பயிற்சிக்கான காலத்தை நிர்ணயம் செய்தனர். எந்த வயதில் பயிற்சியைத் தொடங்க வேண்டும்; எப்படியெல்லாம் பயிற்சி பெற வேண்டும் என்பதை நெறிப்படுத்தினர். இவர்களுக்கு முன்பே பதங்கள், கீர்த்தனைகள் இயற்றப்பட்டன. இதை எப்படி பாரம்பரிய முறைப்படி கையாளுவது, இசை நிகழ்ச்சிகளை எப்படி நடத்துவது என நெறிப்படுத்தினர்.
பின்னடைவுக்குக் காரணம்?
இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட பரம்பரைக்கு மட்டும்தான் நாட்டியக் கலை உரித்தானது என்ற மனநிலை மக்களிடம் இருந்தது. ஆனால், இசை வேளாளர் சமூகத்துக்குத்தான் இக்கலை என யாரும் சொல்லவில்லை. இக்கலையை இசை வேளாளர்கள் முன்னெடுத்துச் சென்றனர். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு இசை வேளாளர் சமூகத்தினரும் இக்கலையை விட்டுவிட்டு, படிப்பு உள்ளிட்ட பிற துறைகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால், இக்கலையில் தொய்வு ஏற்பட்டது.
பிராமணப் பெண்மணியான ருக்மணி அருண்டேல் பல புரட்சிகளைச் செய்துள்ளார். பிராமணரும் நாட்டியம் ஆடலாம் எனக் காலில் சலங்கைக் கட்டிப் புரட்சி செய்தவர் அவர். அதன் பிறகு பிராமணர்கள் உள்பட எல்லா சமூகத்தினரும் நாட்டியமாட வருகின்றனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் ஆர்வத்துடன் வருகின்றனர். இக்கலைக்கு சாதி, மதம் தடையில்லை.
இப்போதுள்ள நாட்டியம் பற்றி...?
இப்போது, நாட்டியக் கலை முன்னேற்றமடைந்து வந்தாலும், பாரம்பரியத்தை அனுசரித்து வருவதில்லை. பாரம்பரிய வரைமுறையைக் கையாளும் நிலை இல்லை. ஏராளமானோர் விவரம் தெரியாமல் படித்து பட்டம் வாங்கியவுடன் ஆசிரியராகிவிடுகின்றனர். இத்துறையில் படித்தால் மட்டும் போதாது. நடைமுறை அனுபவமும் தேவை. இதை புலமை வாய்ந்த பாரம்பரிய கலைஞர்களிடம் அணுகி கற்க வேண்டும்.
தற்போது சலங்கை பூஜை விழா நடத்துகின்றனர். இது, அவசியம்தான் என்றாலும், பல லட்ச ரூபாய் செலவு செய்து நடத்தத் தேவையில்லை. கிட்டத்தட்ட திருமணத்துக்கு ஆகும் செலவு சலங்கை பூஜைக்கு ஏற்படுகிறது. இதற்கு அச்சப்பட்டு பெற்றோர் தங்களது குழந்தைகளை நாட்டியத்தில் சேர்க்கத் தயங்குகின்றனர்.
இப்போது நடனம் கற்கும் ஆர்வத்தை விட அரங்கேற்றம் செய்வதற்கான அவசரம்தான் அதிகமாக இருக்கிறது. சலங்கை பூஜை என்பது பொது மேடை நிகழ்ச்சி அல்ல. நாட்டியம் கற்றுக் கொடுக்கும் குருநாதர் வீட்டில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு. எனவே, குருநாதர் வீட்டிலேயே எளிமையான முறையில் பாரம்பரிய முறைப்படி சலங்கை பூஜை நடத்துவதுதான் முறை.
நாட்டியக் கலையின் எதிர்காலம்...?
இன்றைக்கு உலக அளவில் தமிழர் நடனக் கலை செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால், மரபு வழி நடன ஆசான்களின் முறையான வழி நடத்தலோ, முழுமையான நடனப் பயிற்சியோ இல்லாத ஒன்றாகி வருகிறது. இதனால், தமிழரின் பாரம்பரிய சொத்தான நடனம் தனித்தன்மையை இழக்கக்கூடிய அச்சநிலை எழுந்துள்ளது.
ஆனால், இக்கலை எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை அடையும். இந்த வளர்ச்சி வரைமுறையுடன் இருக்க வேண்டும். முன்பை விட இப்போது நாட்டியப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். இதேபோல, கற்க வேண்டும் என்ற ஆர்வமும் குழந்தைகளிடம் அதிகரித்துள்ளது. பழைமையை அனுசரித்து செய்தால் நன்றாக இருக்கும். பழைமையை விட்டுவிட்டால் பாரம்பரியம் போய்விடும். அதன் விளைவாக இக்கலை எந்த நிலைமைக்குப் போகும் என்பது தெரியாது. நம்முடைய நாட்டு கலாசாரமும் சீரழிந்துவிடும். புதுமையைச் செய்வதைத் தடுக்கவில்லை. புதுமை இல்லாவிட்டால் இக்கலை வளராது. அது, பழைமையின் தாக்கத்துடன் இணைந்து வளர வேண்டும்.
- வி.என். ராகவன்
படங்கள் எஸ். தேனாரமுதன்
ப.ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com