இளையராஜா 75

இளையராஜாவுக்கு வயது 75. முதல் படமான "அன்னக்கிளி'யில் ஆரம்பித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த அவரது இசைப்பணி இன்று வரை தொடர்கிறது.
இளையராஜா 75

இளையராஜாவுக்கு வயது 75. முதல் படமான "அன்னக்கிளி'யில் ஆரம்பித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த அவரது இசைப்பணி இன்று வரை தொடர்கிறது. அவரது பாடல்கள் இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரையில் ஒலித்துக்கொண்டே இருக்கும். 
பாடலுக்கு நொட்டேஷன்தான் எழுதுவார் என்று நினைக்க வேண்டாம். அவருக்கு எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்கவும் தெரியும். ஒரே உதாரணம், சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள "கூகுள்' அலுவலகத்தில் தனது செல்ல இசைக்கருவியான புல்லாங்குழலில் அவர் இசையமைத்த பாடலின் வரியை வாசித்தார். 
அவருடைய முதல் படத்திலிருந்து இன்று வரை பல்வேறு சூழல்களுக்கு இசையமைத்துள்ளார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் சுகம், துக்கம், வீரம், காதல், ஆசை, தூக்கம் போன்றவற்றிக்கும், மாணவ மாணவியருக்கு, இளைஞர்களுக்கு, அம்மாவிற்கு மற்றும் மாமா, அத்தை ஆகியோருக்கும் பாடல் கொடுத்துள்ளார். 
ஏழு சுரங்களை வைத்து எந்த அளவிற்கு விளையாட முடியுமோ அந்த அளவிற்கு விளையாடி உள்ளார். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறார். 
இசையில் ஆயிரக்கணக்கான ராகங்கள் உள்ளன. அதில் மோகன ராகமும் ஒன்று. 
இளையராஜா மோகன ராகத்தின் மொத்த குத்தகைதாரர்.
மோகனம் - தொன்மையான தமிழ் ராகங்களில் முதன்மையான ஒன்று. பல்வேறு காலங்களில், பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. 
தென்கோடித் தமிழகத்தில் தொல்மக்களான இடைக்குல சிறுமிகள் துள்ளி கூத்தாடிப்பாடி மகிழ்ந்த, "முல்லைத்தீம்பாணி'-யான மோகனத்தைத்தான் இன்றளவும் அதன் ஆதார சுருதியுடன் பாடி மகிழ்கின்றோம். அதைக் காப்பாற்றி வருகின்ற இசைக் கலைஞர்களின், மக்களின் நுண்ரசனை போற்றத்தக்கது.
மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு, மோகன ராகத்தின் அடிப்படையில் அதிக பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. முதலில் இந்த ராகத்தில் வரும் வர்ணம் எதுவென்றால், "நின்னுக்கோரி வர்ணம்' என்று தொடங்கும் பாடல். கர்நாடக சங்கீதம் படிப்பவர்களுக்கு முதலில் சொல்லிக்கொடுக்கும் வர்ணம் நின்னுக்கோரி வர்ணம்தான். இளையராஜாவின் இசையில் மோகன ராகத்தில் அடிப்படையில் ஏராளமான பாடல்களை நமக்கு அள்ளித் தந்திருக்கிறார் இளையராஜா. அதில் ஒரு சில பாடல்கள்:

1979-ஆம் ஆண்டு வெளிவந்த "கரும்புவில்' என்ற படத்தில் இடம்பெற்ற
"மீன்கொடி தேரின் மன்மத ராஜன் 
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில் 
மதனே ரதியின் நினைவில்' என்று இப்பாடல் செல்லும். 
இப்பாடலுக்கு இடையே வரும் இசை எந்த இசையமைப்பாளரும் இசைக்கமுடியாத இசையாகும். மேலும் இப்பாடலின் இசை உயிரை உருக்கும். ஜென்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியிருப்பார்கள். இந்தப் பாடலை இரவில் கேட்டால், காதலே இல்லாதவர்களுக்குக் கூட காதலை தூண்டும். 
அடுத்து, "குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும்' என்ற பாடல். படம் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'. உண்மையிலேயே மோகன ரசம் இப்பாடலில் வடிந்திருக்கும்.
1979-ஆம் ஆண்டு கே.ஆர்.விஜயா தயாரித்து டி. யோகானந்த் இயக்கிய படம் "நான் வாழவைப்பேன்'. இப்படத்தில் வரும்
"திருத்தேரில் வரும் சிலையோ
சிலைபூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ' - என்ற பாடல். 
இளையராஜா இப்பாடலை மோகன ராகத்தில்தான் இசையமைக்கப் போகிறார் என்று கவிஞர் கண்ணதாசனின் கற்பனைக்கு தெரிந்திருக்கும் போல. அதனால்தான் என்னவோ, கவிஞர் தன் பங்குக்கு பாடல் வரிகளில் மோகனத்தை சேர்த்திருப்பார். மோஹனம் என்ற வார்த்தை வரும் பாடல் வரிகள்,
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன்மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேகங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதயமேடைதனில் அரங்கேற்றம்.
மேலும் மோகன ராகத்தில் இடம்பெற்ற ஒரு சில பாடல்கள்: "இரு பறவைகள் மழை முழுவதும்' (நிறம் மாறாத பூக்கள்), "கண்மணியே காதல் என்பது கற்பனையோ'(ஆறிலிருந்து அறுபது வரை), "நானொரு பொண்ணோவியம் கண்டேன்' (கண்ணில் தெரியும் கதைகள்), "ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு' (தர்மயுத்தம்), "கண்ணன் ஒரு கைக்குழந்தை' (பத்ரகாளி), "வந்ததே குங்குமம் தந்ததே சங்கமம்' (கிழக்கு வாசல்), "தேன்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே' (தியாகம்), "ஏ பி சி நீ வாசி வா ரோசி' (ஒரு கைதியின் டைரி), "கஸ்தூரி மானே கல்யாணத் தேனே' (புதுமைப்பெண்), "நின்னுகோரி வர்ணம் வரணும் இசைத்திட' (அக்னி நட்சத்திரம்)
மேற்சொன்ன பாடல்களைத் தவிர, ஏராளமான பாடல்களை மோகன ராகத்தில் கொடுத்த இளையராஜா, இதே மோகனத்தில் ஒரு ரகளையான பாட்டைக் கொடுத்துள்ளார். மலேசியா வாசுதேவன் குழுவினரோடு பாடியிருப்பார். 1987-ஆம் ஆண்டு வெளிவந்த "புயல் பாடும் பாட்டு' என்ற படத்தில் இடம்பெற்ற "வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு போடப்போறேண் டோய்' என்ற பாடல்.
இப்பாடலின் தொடக்கமாக மிருதங்கத்தை பயன்படுத்தியிருப்பார். அடுத்து மாணவி ஒருத்தி கச்சேரி செய்வது போல் வரும். மூன்றாவதாக விருத்தம் ஆரம்பிக்கும் பிறகு பாடல் ஆரம்பிக்கும். பாடல் எப்படி ரகளையா இருக்குமோ அதேபோன்று மேற்கத்திய இசைக்கருவிகளைக் கொண்டு இசை ஜாலமும் நடத்தியிருப்பார்.
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, ஆயிரக்கணக்கான காதல் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். காதலை சொல்லக்கூடிய ராகம் சுத்த சாவேரி. இதை ஹிந்துஸ்தானியில் "துர்கா' என்றழைப்பார்கள். இந்த ராகத்தை வரையறுத்தது இளையராஜாதானோ என்று நினைக்கும் அளவிற்கு அளப்பறிய பாடல்களைக் கொடுத்துள்ளார். இளையராஜா சுத்த சாவேரி ராகத்தில் இசையமைத்த ஒரு சில காதல் பாடல்கள்: "மலர்களில் ஆடும் இளமை புதுமையே' ( கல்யாணராமன்), "கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ' (கிழக்கே போகும் ரயில்), "சுகம் சுகமே தொடத் தொடத்தானே' (நான் போட்ட சவால்), "ராதா ராதா நீ எங்கே' (மீண்டும் கோகிலா), "காதல் மயக்கம்' 
(புதுமைப்பெண்).
இன்னும் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன. முத்தாய்ப்பாக ஒரு பாடலை விரிவாகச் சொல்ல வேண்டும். படம் "தேவர் மகன்'. கமலும் சிவாஜியும் நடித்த அற்புதமான படம். வேல்கம்பு வீச்சருவா எடுப்பவர்களுக்கு இப்படம் ஒரு பாடம். 
"மணமகளே மணமகளே வாழும் காலம்' என்று தொடங்கும் பாடல். கதாநாயகன் கமல், கெüதமியை கைவிட்ட சோகத்தோடு இருப்பார். அதற்காக இப்பாடலை ஷெனாயின் சோக இசையோடு ஆரம்பித்திருப்பார். இப்பாடல் முழுவதும் ஷெனாய், மிருதங்கம் மற்றும் தபேலா ஆகியவற்றின் இசை தாலாட்டு போல அமைந்திருக்கும். சுத்த சாவேரிக்கு இணையான ஹிந்துஸ்தானி ராகமான துர்கா ராகத்தில் இசைக்கப்படும் ஷெனாயை சுத்த சாவேரியில் அமைந்த இந்தப் பாடலுக்கு பயன்படுத்தியிருப்பார். கதையின் சூழலை இயக்குநர், நடிகர் மற்றும் கவிஞரின் எண்ணங்களையெல்லாம் தாண்டி இசையாலும் பேச(இசைக்க) முடியும் என்று நிருபித்தவர் இளையராஜா. சுத்த சாவேரி ராகத்தில் நாட்டுப்புறப் பாட்டைத் தந்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா தான். 
1979-ஆம் ஆண்டு வெளிவந்த படம் "கடவுள் அமைத்த மேடை'. இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் பாடல்களை வாலி எழுதியிருப்பார். அதில் ஒரு பாடல்,
"மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே' 
இப்பாடல் ஹம்சத்வனி ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல். பாடல் தொடங்குவதற்கு முன்பாக மேற்கத்திய இசைக்கருவியான கிதாரை பயன்படுத்தியிருப்பார். கிதார் இசை முடிந்தவுடன் இளையராஜாவின் செல்ல இசைக்கருவியான புல்லாங்குழலின் இசை வரும். அதையடுத்து வயலின் இசை வரும். அதன் பிறகு பாடல் ஆரம்பிக்கும். பாட்டின் ஒலிப்பதிவு முடிந்தவுடன் இசைக்குழுவில் உள்ள அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் என்பது ஓர் அபூர்வமான தகவல். 
ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த மேலும் சில பாடல்கள் "பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா' (என் புருசன்தான் எனக்கு மட்டும்தான்), "வா வா கண்ணா வா தா தா கவிதை தா' ( வேலைக்காரன்), "இனி வரும் காலம் மாறலாம்' (வாழ்க்கை }சிவாஜி நடித்தது)
ஏவிஎம் தயாரித்து 1983-ஆம் ஆண்டு வெளிவந்த படம் "தூங்காதே தம்பி தூங்காதே'. அதில் ஒரு பாடல், "வானம் கீழே வந்தால் என்ன, அட பூமி மேலே போனால் என்ன' என்று ஆரம்பமாகும்.
இந்தப் பாடலின் ஒலிப்பதிவு மும்பை ஒலிப்பதிவு கூடத்தில் நடைபெற்றது. ஆர்.டி.பர்மன் மற்றும் கல்யாண்ஜி-ஆனந்ஜி குழுவில் இசையமைக்கும் இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசையமைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல். ஒலிப்பதிவு முடிந்தவுடன் இசைக்குழுவினர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செய்தனர். பொதுவாக இசை ஒலிப்பதிவு முடிந்தவுடன் கரவொலி எழுப்புவது வழக்கம். ஆனால், எழுந்து நின்று கரவொலி எழுப்பியது இளையராஜாவுக்கு மட்டும்தான். 
"தென்றலே என்னைத் தொடு', 1985-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த படம். பாடல்களுக்காகவே ஓடிய படம். "புதிய பூவிது பூத்தது, இளைய வண்டுதான் பார்த்தது' என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு 15 மாண்டலின்கள் பயன்படுத்தியிருப்பார். கிதார் 4 பயன்படுத்தியிருப்பார். 
1977-ஆம் ஆண்டு வெளிவந்த படம் காயத்ரி. இப்படத்திற்காக கங்கை அமரன் எழுதிய வரிகளுக்கு மெட்டமைத்தார். அந்த மெட்டு தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திற்கு பிடித்து விடவே, அந்த மெட்டுக்கு அவரும் பாட்டெழுதினார். இளையராஜா அதற்கு இசை சேர்த்து இனிமையான பாடலை நமக்கு வழங்கினார். அதுதான் படத்திலும் வந்தது. அந்தப் பாடல், 
"காலைப் பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்' என்று தொடங்கும். சுஜாதா மோகன் பாடிய முதல் பாடல்.
ஹிந்தி திரைப்பட உலகில் கொடி கட்டிப் பறந்த இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். இளையராஜா மிகவும் நேசித்த இசையமைப்பாளர்களுள் இவரும் ஒருவர். பர்மன் இறக்கும் வரை, ஒவ்வொரு படத்திற்கு இசையமைத்து முடித்தவுடன் இசையமைத்த பாடல்கள் அடங்கிய ஒலிநாடா ஆர்.டி. பர்மனை சென்றடையும். 
இறுதியாக அம்மாவைப் பற்றி: யாருக்குத்தான் தன் பெற்ற அம்மாவைப் பிடிக்காது?அம்மாவைப் பற்றி ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அதில் அனைவரும் விரும்பும் பாடல் "மன்னன்' படத்தில் இடம்பெற்ற "அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே' என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் சிறப்பு, திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் உள்புறத்தில் உள்ள சுவரில் முழுப்பாடலையும் எழுதி வைத்திருப்பது தான்!
ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களுக்கு இசையமைப்பு, இது தவிர பக்திப்பாடல்கள் தொகுப்பு, திருவாசகத்திற்கு இசையமைப்பு, சிம்பொனி, இப்படி இசைக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இளையராஜா. மேலும் ஆயிரக்கணக்கான பாடல்களைத் தர வேண்டும். அநேகமாக அடுத்த தலைமுறைக்கு இளையராஜாவின் பாடல்களின் இசை, பின்னணி இசை போன்றவை விஷுவல் மீடியா படிப்பில் பாடங்களாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. 
- ரா.சுந்தர்ராமன்
படங்கள்: யோகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com