ஜெயலலிதாவை ரசிக்க வைத்த பேச்சு! - கவிஞர் முத்துலிங்கம்

கவிஞர் பொன்னடியான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சீடர் என்பதும், கடைசிக் காலத்தில் அவருடன் இருந்தவர் என்பதும், புரட்சிக்கவிஞர் தொடங்கிய தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தைத் தொடர்ந்து
ஜெயலலிதாவை ரசிக்க வைத்த பேச்சு! - கவிஞர் முத்துலிங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 57

கவிஞர் பொன்னடியான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சீடர் என்பதும், கடைசிக் காலத்தில் அவருடன் இருந்தவர் என்பதும், புரட்சிக்கவிஞர் தொடங்கிய தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தைத் தொடர்ந்து நடத்தி வருபவர் என்பதும் இலக்கிய உலகம் நன்கறிந்த செய்தி. திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர் முதல் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
அவர் முதன் முதல் பாடல் எழுதிய திரைப்படம் "நெஞ்சில் ஒரு முள்', மதி ஒளி சண்முகம் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய படம், இதற்கு இசையமைத்தவர் ஜி.கே. வெங்கடேஷ்.
"தேரோடும் வீதியெங்கும் பூமாலை ஊர்வலங்கள்
வாலிப நெஞ்சமெல்லாம் வாருங்களே - புது
வண்ணத்தின் கோலங்கள் பாருங்களே"
என்ற பாடல் மூலம் அறிமுகமானார். இதில் பூர்ணிமா ஜெயராமும், பிரதாப் போத்தனும் நடித்திருப்பார்கள். 
பூர்ணிமா ஜெயராமுக்கும் அதுதான் முதல் படம். இது 1981-இல் வெளிவந்தது. 
மதிஒளி சண்முகம் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதில் "காஷ்மீர் காதலி' என்ற படமும் ஒன்று. அதில், 
"காதல் என்பது மலராகும் - அது
கண்களிலே உருவாகும்
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் - அது
அழியாத தெய்வீகக் கதையாகும்'
என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். ஜி.கே. வெங்கடேஷ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல் இது.
மதிஒளி சண்முகம் இயக்கிய பல படங்களுக்கு கதை விவாதத்தில் மிகவும் உதவியாகவும், திரைக்கதை அமைப்பில் உறுதுணையாகவும் இருந்தவர் தினத்தந்தி சண்முகநாதன்.
தினத்தந்தியில் வெளிவந்த திரைப்படம் பற்றிய வரலாற்றுச் சுவட்டில் தொடர்ந்து ஒரு வாரம் என்னைப் பற்றி எழுதியவரும் சண்முகநாதன்தான். மிகச்சிறந்த பண்பாளர். பத்திரிகை உலகில் அப்படிப்பட்ட பண்பாளர்களைக் காண்பது அரிது. நானும் ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக இருந்தவன் என்ற 
முறையில் இதைக் கூறுகிறேன்.
இளையராஜா இசையில் பொன்னடியான் எழுதிய எல்லாப் பாடல்களும் பிரபலமான பாடல்கள்தாம்.
"போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்புக் கணக்கு'
இது "ராசாவின் மனசிலே' என்ற படத்தில் நடிகர் வடிவேலு பாடுவது போல் இடம் பெற்ற பாடல்.
"எல்லாமே என் ராசாதான்' என்ற படத்தில்,
"எட்டணா இருந்தா எட்டூருக்கு 
என் பாட்டுக் கேக்கும்'
இது நடிகர் வடிவேலு சொந்தக் குரலில் பாடிய பாடல். அந்தப் பாடலை ரொம்பப் பிடிக்கும் என்று நடிகர் வடிவேலு ஒருமுறை கூறியிருக்கிறார்.
நடிகர் விக்ரம் நடித்த "சேது' படத்தில் இடம் பெற்ற "கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா' என்ற பாடல், ரஜினிகாந்த் நடித்த "ராஜாராதி ராஜா' என்ற படத்தில் "எங்கிட்டே மோதாதே - நான் ராஜாதி ராஜனடா' என்ற பாடல், நடிகர் ராஜ்கிரண் தயாரித்து இயக்கிய "அரண்மனைக்கிளி' என்ற படத்தில் "என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே' என்ற பாடலெல்லாம் மறக்க முடியாத பாடல்கள்.
"அரண்மனைக்கிளி' என்ற படத்தில் நான் எழுதிய,
"அம்மன் கோயில் கும்பம் இங்கே
ஆடிவரும் நேரமடி
கும்பங்களை ஏத்திவச்சு 
குலவையிட்டுப் பாடுங்கடி
ஏ - பொங்கணும் பொங்கணும் பொங்கச்சோறு
ஏ - தங்கணும் தங்கணும் செல்வம் நூறு'
என்ற பாடலும் பிரபலமான பாடல் தான். கோயில் விழாக்களில் எல்லாம் இதை ஒலி
பரப்புவார்கள். அதில் இடம் பெற்ற அத்தனை காடல்களுமே பிரபலமான பாடல்கள் தாம்.
"குயிலுக்கொரு நிறமிருக்கு - அதன்
குரலுக்கொரு நிறமிருக்கா'
"சொல்லத்துடிக்குது மனசு' என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலைப் போல் எத்தனையோ பாடல்களை எழுதியவர் 
பொன்னடியான்.
நடிகர் சிவகுமார் நடித்த "ஒருவர் வாழும் ஆலயம்" என்ற படத்தில் இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களையும் எழுதியவர் இவர்தான். இந்த இடத்தில் சிவகுமாரைப் 
பற்றிச் சொல்ல வேண்டும்.
இதுவரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய நடிகர்களில் இலக்கியச் சொற்பொழிவாளராக இலங்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே நடிகர் சிவகுமார் தான். நண்பர் பாஸ்கரதாசுடன் சிவகுமாரை அவர் வீட்டில் சந்தித்தபோது, அவரது சொற்பொழிவு அடங்கிய இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் குறுந்தகடுகளைக் கொடுத்தார்.
அதைக் கேட்டுப் பிரமித்துப் போய்விட்டேன். ஜெயலலிதாவே சிவகுமாரின் சொற்பொழிவைக் கேட்டுச் சொக்கிப் போனாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இவர் எப்படிப்பட்டவர் என்பதை! இவ்வளவு பெரிய இலக்கிய ஆற்றலாளர் நடிகருக்குள் இத்தனை நாளும் எப்படி ஒளிந்திருந்திருக்கிறார் என்பதை நினைக்க நினைக்க வியப்புத்தான் மேலிடுகிறது. வீணாகப் பொழுதைப் போக்காமல் இலக்கியத் தேனாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார். இவரை மற்ற நடிகர்கள் பின்பற்ற முடியுமா என்றால் முடியாது. இதெல்லாம் பிறவியிலேயே அமைந்திருக்க வேண்டும்.
அண்மையில் தினமணி நடத்திய "அம்மா' புத்தக வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை அதுவும் அவர் அம்மாவைப் பற்றிச் சொன்னபோது நெஞ்சை நெகிழ வைத்தது. அவரும் கண்கலங்கிவிட்டார். எல்லா அம்மாக்களும் பிள்ளைகள் மேல் பாசத்தைப் பொழிபவர்கள்தாம். இவர் அம்மா சற்று வித்தியாசமாகப் பொழிந்திருக்கிறார். அதனால் தான் அவையோரை உருக வைக்கும் விதத்தில் அவர் பேச்சு அமைந்தது. அப்படிப் பட்டவரின் தொடர்பு தொடர்வதற்குக் காரணமாக அமைந்த நண்பர் பாஸ்கரதாசுக்கு என் நன்றி.
நான் முதன் முதலில் பாடல் எழுதியதே சிவகுமாரும், விஜயகுமாரும் இரட்ûடைக் கதாநாயகர்களாக நடித்த "பொண்ணுக்குத் தங்க மனசு' என்ற படத்தில் தான். இதை ஏற்கெனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட தங்க மனசு அவருக்கு இருப்பதால்தான் என் மகள் திருமண வரவேற்புக்கு வந்து ஓவியம் ஒன்றைக் கொடுத்து வாழ்த்தினார்.
அழைப்புக் கொடுக்காமலே வந்து வாழ்த்திய பெருந்தகையாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன். இத்தகைய பண்பாளர்களை இனிமேல் நாட்டில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
சிவகுமார் நடித்த "ஒருவர் வாழும் ஆலயம்' படத்தில் பொன்னடியான் எழுதிய "மலையோரம் மயிலே விளையாடும் குயிலே' என்ற பாடலும் பிரபலமான பாடல் தான். இளையராஜா இசையில் மட்டுமல்ல, எம்.எஸ். விசுவநாதன், ஜி.கே. வெங்கடேஷ், வி. குமார், சந்திரபோஸ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இசையிலும் பாடல் எழுதியிருக்கிறார். பல தமிழறிஞர்கள், கவிஞர்களால் பாராட்டப்பட்டவர் பொன்னடியான்.
1980 வரையிலும் சினிமாவோடு நாடகங்களுக்கும் வரவேற்பிருந்தது. நாடகங்கள் மூலம்தான் நடிகர்களும், கதாசிரியர்களும், கவிஞர்களும் திரையுலகிற்குள் நுழைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நான்கூட சென்னை வந்தபோது "அதிசயப் பறவைகள்' என்ற நாடகத்தின் மூலம்தான் கலையுலகில் காலடி எடுத்து வைத்தேன். நான் எழுதிய அந்த நாடகத்தை நடத்தியவர் முத்துக்குமார் என்ற சலவைத் தொழிலாள நண்பர்.
காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த மன்றாடியாருடைய கூவம் இல்லத்தில் அந்த நண்பர் பணிபுரிந்து வந்தார். என்னைப் போன்ற பலருக்கும் முத்துக்குமார் என்ற அந்த நண்பர்தான் அடைக்கலம் கொடுத்தார். 
உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடைவரையிலும் அவர் உபயம்தான். நாங்கள் எல்லோரும் கூவம் இல்லத்தில் ஒரு பகுதியில் இருந்த விடுதியில்தான் தங்கியிருந்தோம். இப்போது அதெல்லாம் இல்லையென்று நினைக்கிறேன். நாங்கள் அன்றாடம் அப்போது சாப்பிட்டது மந்திரி வீட்டுச் சாப்பாடுதான்.
யாராக இருந்தாலும் நமக்கு யார் யார் உதவினார்களோ அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும் என்பார் எம்.ஜி.ஆர். அந்த வகையில்தான் இதையெல்லாம் நினைவு கூர்கிறேன்.
கதாசிரியர் பாலமுருகன் "நீதியின் நிழல்' என்ற நாடகத்தின் மூலம்தான் சிவாஜியின் அன்பைப் பெற்று அவர் படங்களுக்கு எழுதத் தொடங்கினார். இவர் நாடக நடிகராக இருந்த காலத்தில் மதுரை ரீகல் தியேட்டரில் "திப்பு சுல்தான்' என்ற நாடகத்தை நடத்தினார். ஜான்பாபு என்பவர் எழுதிய நாடகம். அந்த அரங்கத்தில் ஐந்நூறு பேர்வரை அமரலாம். ஆனால் அன்றைய நாடகத்திற்கு மொத்தமே ஐம்பது டிக்கெட்தான் விற்றிருந்தது.
அன்றைய மதுரை மாவட்டத் தி.மு.க செயலாளர் அண்ணன் முத்துவை பாலமுருகன் நன்கறிவார். அதனால் அவரிடம் சென்று நாடகத்திற்கு ஐம்பது பேர்கூட வரமாட்டார்கள் போலிருக்கிறது. அதற்குக் காரணம் "நாடோடி மன்னன்' படத்தின் வெற்றிவிழாதான். எம்.ஜி.ஆர். விழாவுக்கு மக்கள் போவார்களா என் நாடகத்திற்கு வருவார்களா? உங்களிடம் கேட்டுத்தானே இந்த நாளில் நாடகத்தை வைத்தேன். இப்போது அரங்கிற்கு வாடகை கொடுப்பதற்குக் கூடப் பணம் வசூலாகவில்லை. "என்ன செய்வது?'' என்று அழாத குறையாகப்
பாலமுருகன் கேட்டிருக்கிறார்.
"வருத்தப்படாதே எம்.ஜி.ஆர். நாடகத்திற்குத் தலைமை தாங்குகிறார்'' என்று மட்டும் ஒரு தட்டியில் எழுதி வெளியே வைத்துவிடு. அப்புறம் பார் என்று அண்ணன் முத்து சொல்லியிருக்கிறார். அது போல் இவரும் விளம்பரத் தட்டியொன்றை உடனே ஏற்பாடு செய்து வைத்துவிட்டார். விளம்பரத்தைப் பார்த்ததும் உடனே இரு நூறு டிக்கெட் விற்றுவிட்டதாம்.
நாடகத்திற்குத் தலைமை தாங்க எம்.ஜி.ஆர் வந்தவுடன் நூற்றுக்கணக்கானவர்கள் அவர் பின்னால் வந்துவிட்டார்களாம். டிக்கெட் அதுவரை எந்த நாடகத்திற்கும் விற்காத அளவுக்கு விற்றதாம். டிக்கெட் கிடைக்காததால் பலர் வெறும் பணம் மட்டுமே கொடுத்துவிட்டு நுழைந்துவிட்டார்களாம்.
"எவ்வளவு வசூலானது?' என்று கேட்டபோது "பதினையாயிரம் ரூபாய்' என்றார் பாலமுருகன். அதுவரை எந்த நாடகத்திற்கும் அந்தக் காலத்தில் அவ்வளவு வசூலானதில்லை. 
1959-இல் பதினையாயிரம் ரூபாய் என்றால் இன்றைக்குப் பதினைந்து லட்சத்திற்குச் சமம். 
அரைமணிநேரம் மட்டுமே இருந்துவிட்டு எம்.ஜி.ஆர் விழாவுக்குச் சென்றுவிட்டார். எம்.ஜி.ஆருடைய செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதற்கு இதுபோல் எவ்வளவோ இருக்கின்றன. அந்த நாடகத்தின் போதுதான் பாலமுருகன் தன்னுடைய முதல் மகனுக்குப் பெயர் வைக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது "சந்திரமோகன்' என்று அவர் பேர் வைத்தார். இதெல்லாம் பாலமுருகன் 
என்னிடம் சொன்ன செய்தி.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com