தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - நா.கிருஷ்ணமூர்த்தி

எழுத்தாளர்களுக்கு முதல் நாவல் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு சிலருக்கு முதல் நாவலே வெற்றி படைப்பாக அமைந்துவிடுகிறது. சிலருக்கு முதல் நாவலை விட அடுத்து வரும் நாவல்கள் புகழ் ஈட்டி தந்துவிடுகின்றன.
தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - நா.கிருஷ்ணமூர்த்தி

எழுத்தாளர்களுக்கு முதல் நாவல் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு சிலருக்கு முதல் நாவலே வெற்றி படைப்பாக அமைந்துவிடுகிறது. சிலருக்கு முதல் நாவலை விட அடுத்து வரும் நாவல்கள் புகழ் ஈட்டி தந்துவிடுகின்றன. வேறு சிலருக்கு முதல் நாவலே பத்திரிகையில் தொடராக எழுதும் வாய்ப்பு பெற்று விடுகிறது. அதில் சிலர் பத்திரிகை பாதியில் நின்று போய் தொடர்ந்து எழுத முடியாமலும் போகிறது. பின் அதை எழுதி முடிக்கும் நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். எது எப்படியோ எழுத்தாளருக்கு எழுதுவதற்குண்டான பயிற்சியை முதல் நாவல் தந்து விடுகிறது.
 தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல் பற்றிய தகவல்களைச் சொல்லும் அதே நேரத்தில் அவர்களைப் பற்றியும், அவர்களது படைப்புகள் பற்றியும் கிடைத்த ஒரு சில தகவல்களையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இது.
 முன்சீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889)
 தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளையும் கற்றவர். சமரச சன்மார்க்க கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல்களைப் படித்து மனம் பறிகொடுத்த அவர், தமிழ் மக்கள் நல்ல உரைநடையில் எழுதப்பட்ட கதைகளைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே "பிரதாப முதலியார் சரித்திரம்' எழுதியதாக அவரது ஆங்கில முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவை நிகழ்வுகள், கருத்து வளமான பேச்சுகள் கொண்ட சுவாரசியமான அந்நாவலை எழுதும்போது அவருக்கு வயது 53. 1879-ஆம் ஆண்டில் "பிரதாப முதலியார் சரித்திரம்' வெளிவந்தது. அது அவரது முதல் நாவல் மட்டுமல்ல, தமிழ் மொழியின் முதல் நாவலும் கூட.
 பி.ஆர்.இராஜமையர், பி.ஏ., (1872-1978)
 இவர் வழக்குரைஞர், தத்துவவாதியும் கூட. "விவேக சிந்தாமணி' என்னும் மாத இதழில் 1893-95 வரை "ஆபத்துக்கிடமான அபவாதம்' அல்லது "கமலாம்பாள் சரித்திரம்' என்ற தொடரை எழுதினார்.அதுவே தமிழின் முதல் தொடர்கதை. அப்போது அவருடைய வயது 21. "எனக்கு கதையில் ஈடுபாடில்லை, தத்துவ விசாரத்தில்தான் ஈடுபாடு'' என்று சொல்லியிருக்கிறார். "கமலாம்பாள் சரித்திரம்' வாழ்க்கையைச் சொல்லும் யதார்த்தமான நாவல். 1896-இல் வெளிவந்தது. அது அவருடைய முதல் நாவல், தமிழின் இரண்டாவது நாவல். "கமலாம்பாள் சரித்திரம்' ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 மூவலூர் ஆர்.ராமாமிர்தம் அம்மாள் (1883-1962)
 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர், சுயமரியாதை இயக்கம், பெண்கள் முன்னேற்றம் என்று பல துறைகளிலும் செயல்பட்டவர். அதிகம் அறியப்படாத ஒரு பகுதி பெண்களின் வாழ்க்கையை அனைவரும் அறிந்து கொள்ளும்படி நாவல் எழுதியவர். நாவலின் பெயர்: "தாஸிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்.' அது அவரது முதல் நாவல் மட்டுமல்ல, ஒரே நாவலும் கூட. 1936-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்பொழுது அவருக்கு வயது 53. அதன் பின் பல ஆண்டுகள் மறுபதிப்பு காணாமலிருந்த இந்த நாவல், தற்போது மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
 கல்கி கிருஷ்ணமூர்த்தி (1899-1954)
 தமிழர்கள் விரும்பிப் படிக்கும் சரித்திர, சமூக நாவலாசிரியர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர். திரைப்படம், சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர். அவர் சினிமாவுக்கென்றே எழுதிய கதை "கள்வனின் காதலி.' அது ஆனந்த விகடனில் 1937-ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. அதுவே அவரது முதல் நாவல். அதை எழுதியபோது கல்கி-க்கு வயது 38.
 "கள்வனின் காதலி' நாடகமாக்கப்பட்டு டி.கே.எஸ். சகோதரர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 1954-ஆம் ஆண்டில் "கள்வனின் காதலி' புத்தகமாக வெளிவந்தது. கல்கியின் நாவல்களுள் அச்சில் வந்த முதல் புத்தகம் அதுதான்.
 பல சரித்திர, சமூக நாவல்களை எழுதிய ஆசிரியர் கல்கிக்கு "அலை ஓசை' நாவலுக்காக 1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. அது அவரது மறைவிற்குப் பிறகு வழங்கப்பட்ட விருதாகும்.
 க.நா.சுப்பிரமணியம் (1912-1988)
 கடுமையான விமர்சகர் எனப் பெயர் பெற்றுள்ள க.நா.சுப்பிரமணியம் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், புதுக்கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள், சர்வதேச நாவல்கள் மொழிபெயர்ப்பு என நிறையவே எழுதியுள்ளார். அவரது முதல் நாவல் "சர்மாவின் உயில்.' உளவியல்தான் கதை. சேலத்தில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு, முப்பது நாட்களில் அந்நாவலை எழுதி முடித்ததாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 1938-ஆம் ஆண்டில் தமது முதல் நாவலை எழுதியபோது அவரது வயது 30. அது பத்தாண்டுகளுக்குப் பிறகு வெளியானது. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைப் புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என ஏராளமாக எழுதிய க.நா.சு.வுக்கு "இலக்கியத்திற்கு ஒரு இயக்கம்' என்ற கட்டுரை நூலுக்காக, 1986-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
 ஆர்.சண்முகசுந்தரம் (1917-1977)
 கோவை மாவட்டத்தில் உள்ள கீரனூரிலிருந்து வந்த எழுத்தாளர், நாவலாசிரியர். மொழிபெயர்ப்பாளர். தமிழ் எழுத்தாளர்கள் பிரபல பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு சிறிய கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அதன் முரண்பாடுகள் பற்றி "நாகம்மாள்' என்ற சிறிய நாவலை எழுதியவர். அது 1942-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது அவரது வயது 25. பலரும் அறியாத நாவலாக இருந்த "நாகம்மாளை' அனைவரும் அறிய வைத்தவர் க.நா.சுப்பிரமணியம்.
 சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான "பதேர் பாஞ்சாலி' நாவலை (வங்க நாவலாசிரியர் விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதியது) இந்தி மொழி வழியாக தமிழில் மொழிபெயர்ந்தவர் ஆர்.சண்முகசுந்தரம். அதைத் தொடர்ந்து, பல வங்காள மொழி நாவல்களையும், சிறுகதைகளையும் இந்தி மொழி வழியாக தமிழுக்குத் தந்ததை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
 தி.ஜானகிராமன் (1921-1982)
 தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி அகில இந்திய வானொலியில் கல்வித்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள், பயணநூல்கள், மொழிபெயர்ப்பு என பல துறைகளில் நூல்களை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் சேர்ந்து அவர் எழுதிய "நடந்தாய் வாழி காவேரி' அதிக கவனம் பெற்றது. அவரது "மோகமுள்' நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. தி.ஜானகிராமனின் முதல் நாவல் "அமிர்தம்' தினமணி கதிரில் 1944-ஆம் ஆண்டு தொடராக வெளிவந்தது. 1945-இல் புத்தகமாகியது. அப்போது அவரது வயது 23.
 தி.ஜானகிராமனின் "சக்தி வைத்தியம்' சிறுகதைத் தொகுப்புக்கு 1979-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
 சுந்தர ராமசாமி (1931-2005)
 நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், புதுக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், தேர்ந்த விமர்சகர் என பல சிறப்புகளைப் பெற்றவர். அவர் மலையாள மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த தகழி சிவசங்கரன் பிள்ளையின் "செம்மீன்' நாவல் அதிகமாகப் படிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நாவலாகும். நாகர்கோவில் மணிக்கூண்டுக்கு அருகில் உள்ள புளியமரம் சொல்லும் கதையை "ஒரு புளியமரம்' என்ற பெயரில் "சரஸ்வதி'யில் தொடர்ந்து எழுதினார். "சரஸ்வதி' தொடர்ந்து வெளிவரவில்லை. 1966-ஆம் ஆண்டில் அந்த நாவல் "ஒரு புளியமரத்தின் கதை' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. சுந்தர ராமசாமியின் முதல் நாவல் அது. அப்போது அவரது வயது 35.
 அசோகமித்திரன் (1931-2017)
 தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு செகந்திராபாதில் பிறந்தார்.அவரது இருபதாவது வயதில் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அவர் திரைப்பட நிறுவனமான ஜெமினியில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். அப்பணி திரைப்படஉலகத்தின் பல்வேறு அம்சத்தைக் காட்டியது. படாடோபமாக இருக்கும் திரைப்பட உலகின் இருண்ட பகுதிகள் - அதில் சம்பந்தப்பட்டவர்கள் படும் இன்னல்களை வைத்து "கரைந்த நிழல்கள்' என்ற நாவலை எழுதினார். அது முதலில் "தீபம்' இதழில் 1968-69-ஆம் ஆண்டு தொடராக வெளிவந்தது. பின்னர் 1970-ஆம் ஆண்டில் புத்தகமாக வெளிவந்தது. அதுவே அவரது முதல் நாவல். அப்போது அவரது வயது 39.
 நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள் எழுதியுள்ள அசோகமித்திரன் சாகித்ய அகாதெமி, தமிழக அரசு விருது ஆகிய பல விருதுகளைப் பெற்றவர்.
 ஜெயகாந்தன் (1934-2015)
 தமிழ் மக்களின் அபிமான எழுத்தாளரான தண்டபாணி பிள்ளை முருகேசன் என்கிற ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியேறிய அவர், சிறுசிறு வேலைகளைப் பார்த்தார். கம்யூனிஸ்ட் கம்யூனில் வாழ்ந்தார்.
 அவரது முதல் நாவல் "வாழ்க்கை அழைக்கிறது.' அது "ஆனந்த விகட'னில் வெளிவந்தது. 1957-ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. அப்போது அவரது வயது 23.
 நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள் எழுதியுள்ள ஜெயகாந்தன் சாகித்ய அகாதெமி, ஞானபீடம் விருதுகளைப் பெற்றவர்.அவரது "உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் குடியரசுத் தலைவரின் விருது பெற்றது.
 - அடுத்த இதழில்..
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com