நான்கு லட்சம் கிலோ  கழிவுகளை  அகற்றினோம்!

கங்கை, யமுனை,  காவிரி   நதிகளில்  கழிவுகள்  சங்கமம் ஆகி   மாசுபடுவது குறித்து   அடிக்கடி  பத்திரிகைகளில்  செய்தி வெளியாகின்றன.
நான்கு லட்சம் கிலோ  கழிவுகளை  அகற்றினோம்!

கங்கை, யமுனை,  காவிரி   நதிகளில்  கழிவுகள்  சங்கமம் ஆகி   மாசுபடுவது குறித்து   அடிக்கடி  பத்திரிகைகளில்  செய்தி வெளியாகின்றன.  ஆயிரம் கோடிகள் செலவு செய்து  கங்கை நதியை  கழிவுகளிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொன்னாலும் கங்கை இன்னமும் கழிவுகளிலிருந்து முழுமையாக காப்பாற்றப்படவில்லை. இதே நிலைமைதான் யமுனை, காவிரி  நதிகளுக்கும்.  இந்நிலையில், இமயமலையில் ஏறுகிறேன் என்று போகிறவர்கள்  தாங்கள் கொண்டு போகும் பொருள்கள்,  உணவுப் பொருள், தண்ணீர் பாட்டில்கள்  போன்றவற்றை பயன்படுத்தியதும் அப்படியே போட்டுவிட்டு வந்துவிடுவதால், இமய மலையிலும்  கழிவுகளின்  குன்றுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன.  

அதே சமயம்,  இமய மலையின் அடிவாரத்திலும் சுற்றுலா பயணிகளால் கழிவுகள் பெருகி வருகின்றன.  மணாலி பகுதியில்  மட்டும்   இதுவரை  சுமார் நான்கு லட்சம் கிலோ கழிவுகளை அகற்றியிருக்கிறது  பிரதீப்  சங்வான் தலைமையிலுள்ள  குழு.  இமயமலை அடிவாரத்தில் அகற்றிய  கழிவுகளே இவ்வளவு என்றால் இன்னும் இமயமலை தொடரில் அகற்றப்படாத கழிவுகளின் அளவினை அனுமானம் செய்து கொள்ளலாம். இது குறித்து பிரதீப் விளக்குகிறார் : 

""இமயத்தில் போடும் கழிவுகளை அகற்ற "இமயத்தைக் குணப்படுத்த' "ஹீலிங்  ஹிமாலயாஸ்' என்ற அமைப்பைத் தொடங்கினேன்.  அதனால் ஹிமாச்சல் பிரதேசத்தில் குடியேறவும் செய்தேன். நான் படித்தது  அஜ்மீரில் உள்ள  ராணுவப் பள்ளியில்.  எதிலும் ஒழுங்கைக்  கடைப்பிடிப்பது   என்பது அங்கே   பாடத்துடன் சொல்லித்தரப்படும். அப்பா மாதிரி ராணுவத்தில் சேர என்னை  ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் எனது வாழ்க்கை. வேறு திசை நோக்கி  திரும்பிவிட்டது. கல்லூரியில் படிக்கும்போது  மலை ஏறுவது  பிடித்த பொழுது போக்காக மாறியது.  அது  என்னை மலையழகு மிக்க மணாலியில் குடியேறச் செய்தது. 

நான் மணாலிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. குளிர்காலத்தில் இங்குள்ள கடும்குளிர், வீசும் கொடுங்காற்றினை முதன் முதலாக அனுபவித்தேன். மைனஸ் டிகிரி குளிர்  சொல்லிக் கொடுத்த பாடத்தில் அடுத்த குளிர்காலம் தொடங்கும் முன் தேவையான பொருள்களை வாங்கி நானும் தயாராகிக் கொண்டேன். இங்குள்ள மக்கள் மிதமிஞ்சிய குளிர்  பற்றி அனுபவத்தால் உணர்ந்தவர்கள். அதனால், குளிர்காலம் தொடங்கும் முன்பு தேவையான உணவுப் பொருள்களை வீட்டில் சேமித்து வைத்துவிடுவார்கள். குளிருக்கான  உடைகள், குளிர்காய விறகுக் கட்டைகள்  எல்லாம் தயாராக இருக்கும். இயற்கை  விவசாயத்தில்  விளைந்த உணவு  உண்கிறார்கள்.

சமையலுக்கு உலோக பாத்திரங்கள்தான். தட்டுகளும் குவளைகளும் அப்படியே. அதனால்  பிளாஸ்டிக் கழிவுகளை  அவர்கள் உருவாக்குவதில்லை. ஆனால் சுற்றுலா பயணிகளுக்காக பலவித உணவு வகைகள்... உணவு முறைகள் பிளாஸ்டிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி விட்டன. மெல்ல மெல்ல  பிளாஸ்டிக்  கழிவுகள் மணாலி  மலைப்பகுதி முழுதும் ஆக்கிரமிப்பைத் தொடங்கின. "மெல்ல  இனி மணாலி  சாகும்'  என்ற எண்ணம் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து கழிவுகளை சேகரிக்க ஆரம்பித்தோம். காலையில் சாக்குகளை  கொண்டு சென்று  பிளாஸ்டிக் கழிவுகளை  மாலையில் கொண்டு வந்து சேர்ப்போம்.  

சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தோம். அது இன்றைக்கும்  தொடர்கிறது. சும்மா கணக்குப் பார்த்தோம். இதுவரை சுமார்  நான்கு லட்சம் கிலோ  கழிவுகளை மலையின் அடியிலிருந்து அகற்றியுள்ளோம். மலைப்பாக இருக்கிறது.. இத்தனையும் நாங்கள்தான் செய்தோமா என்று.. நான் இங்கே "ஹோம் ஸ்டே' (Homstay)  விடுதி ஒன்றினை நடத்தி வருகிறேன். அதுதான் எனக்கு வருவாய்  தருகிறது. 

சுற்றுலாவுக்கு வருபவர்கள்  இயற்கை அழகை ரசித்துவிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பும்போது  தாங்கள் கொண்டுவரும்  தண்ணீர்   பாட்டில்களை இங்கேயே போட்டுவிடாமல்  திரும்பக் கொண்டு செல்லுங்கள்.  அல்லது தங்கும் விடுதிகளில் சேர்த்து விடுங்கள். அதைவிட, சொந்தமாக பாட்டில் கொண்டு வந்தால் தண்ணீரை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒவ்வொரு முறையும்  வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. பிளாஸ்டிக் கழிவுகளும் கணிசமாகக் குறையும். பானங்கள் குடிக்கும்போது உறிஞ்சு குழாய் (straw) பயன்படுத்துவதை முழுமையாகத் தவிர்க்கலாம். உறிஞ்சு குழாய் பயன்பாடு வெளிநாட்டிலிருந்து தொத்திக் கொண்ட   (கெட்ட) பழக்கம்.  

அது போல  முகத்தை,  கைகளைத் துடைக்க  "ஈரமுள்ள வாசமுள்ள மென்மையான பிளாஸ்டிக் கைகுட்டைகள்'  பயன்படுத்துவது அதிகமாகிவருகிறது. அதற்குப் பதில் பருத்தி நூலால் நெய்யப்பட்ட கைகுட்டைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தட்டுகள் ஸ்பூன்களையும்  தவிர்க்க வேண்டும்'' என்கிறார் பிரதீப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com