காப்பாற்றக் கோரிக் கதறுகிறது காதல்!

காப்பாற்றக் கோரிக் கதறுகிறது காதல்!

காதலினால் மானிடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம்.. சிற்பமுதற் கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...! என்று காதல் செய்ய அழைத்தான் பாரதி.

காதலினால் மானிடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம்.. சிற்பமுதற் கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர்.. உலகத்தீரே...! என்று காதல் செய்ய அழைத்தான் பாரதி. "ஒரு பெண்ணை காதலிப்பதென்றால், அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள். அடிமுதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்றுவது, உறைந்துபோன ரத்தத்தில் கனவுகளில் சூடேற்றுவது என்று பொருள்' என்று பரம்பொருளான காதலுக்கு அர்த்தம் சொன்னார் சச்சிதானந்தம். "நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும்வரை நான் உன்னைக் காதலிப்பேன்' என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். ஆம், காதலைப் பேசாத... காதலை எழுதாத... காதலைக் கொண்டாடாத கவிஞர்கள் இல்லை; படைப்பாளிகள் இல்லை. காதலைக் கடக்காத... காதலுடன் கைகோர்க்காத மனிதர்களும் இல்லை... காதல்தான்... காதல்மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. எழுத்தா... ஓவியமா... புகைப்படமா... கவிதையா.. அறிவியல் கண்டுபிடிப்பா... அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது... உயிர்ப்பிக்கிறது. துரதிர்ஷ்டமாக இப்போது கொலைகளும்கூட. எங்கேயோ தொடங்கி கதையின் கருப்பொருளை தேடி வந்து நிறுத்துகிறார் இயக்குநர் மதுராஜ். "தொட்ரா' படத்தின் அழுத்தமான கதை சொல்ல வருகிறார். இயக்குநர் பாக்யராஜின் மாணவர்.
 
 உள்ளடக்கம் புரிய வருகிறது.... விரிவாக பேசினால் இன்னும் கொஞ்சம் விளங்கும்....
 நவீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்கிற மனம், புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உற்று நோக்கினால் இதுதான் பக்குவப்பட்ட சமூகமா என்ற கேள்வி எழுகிறது. தீவிரவாதத்தால் மாண்டவர்களைவிடக் காதலால், காதலின் பெயரால் இறந்தவர்கள்தான் அதிகம் என ஒரு புள்ளி விபரம் குருதி சொட்டச்சொட்டப் புலம்புகிறது.
 கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585. இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால் இறந்தவர்கள் 20,000. இதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர். காதல் தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளி விபரம். இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம். காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை.
 சில சமரசங்கள் இல்லாமல் இந்த விவகாரத்தை கதையாக செய்வது, இங்கே கடினம்...
 நான் மேற் சொன்னது 2015 வரையிலான துயரக் கணக்குத்தான்... இந்தக் கணக்கில் ஆதிக்கத்தால் தற்கொலை செய்யப்பட்ட இளவரசனும்... கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜும்... சங்கரும்... சோனாலியும், ஃப்ரானிசிகாவும், சுவாதியும் வரமாட்டார்கள். அந்தக் கணக்கும், அதன் பின்னால் உள்ள கதைகளும் கூடும்போது, இன்னும் அதிர்ச்சிகள். ஏன் இத்தனை கொலைகளும்... தற்கொலைகளும்...? ஒரே காரணம்தான்... "மனிதமாண்புகள் விழுமியங்கள் மாறிவிட்டன. இந்த காரணத்துக்குப் பின்னால் சாதி, மத, பண்பாடு சார்ந்த அழுத்தமான அரசியலும் இருக்கிறது. நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிடோம்... நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாட்டத்தை வெளித் தோற்றத்தில் முன்வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் உறவுச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இந்தப் புள்ளிவிபரம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் என்னை மனிதனாக உணர்ந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதனால் எந்த சமரசமும் இதில் இல்லை.
 சில அரசியல் சூழல்களையும் இங்கே பேச வேண்டிருக்குமே...
 ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் தனி மனிதனுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கி விட்டன. எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது... எவர் பின்னே செல்வது... என்பதெல்லாம் இந்த தலைமுறைக்கு சாபம் போல் விதிக்கப்பட்டுள்ளன. இது நேர்மையான குற்ற உணர்ச்சி என யாரிடமும் சொல்வதற்கு இல்லை. சாதி பூதம் தமிழகம் முழுக்க காதலர்கள் மத்தியில் உண்டாக்கும் பேரச்சத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றக் கோரிக் கதறுகிறது காதல். இதுதான் இப்போதையை நிலை. இதை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். விவசாயம், கிராமம், தமிழர்களின் முகம், காதல், அனுபவங்கள்தான் படம். அன்பும் பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம் என்பதை காட்சிகளின் வழியாக நின்று பேசியிருக்கிறேன். காதல்தான் இங்கே எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஏமாற்றி பிழைக்காதவர்கள், சுய நலமாக சிந்திக்காதவர்கள், பொய் முகம் காட்டி புன்னகைக்காதவர்கள், இந்த உலகம் கொடுத்த காதலை அதன் வழியாக நின்று தரிசிக்கிற காதல் ஜோடி. அவர்களின் பயணத்தில் வருகிற காதல் அவர்களை உன்னதமாக்குகிறது.
 நடிகர்களின் பங்களிப்பு....
 இயக்குநர் பாண்டியராஜன் மகன் பிருத்வி ஹீரோ. கேரளத்துப் பொண்ணு வீணா ஹீரோயின். இந்த இரண்டு பேருக்குமான உரையாடல்களும், அன்பும், காதலுமாக விரிகிறது படம். ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ், தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன் இப்படி பலர் கதையின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். புதுமுகம் உத்தமராஜா இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்புக்கு ராஜேஷ் கண்ணன் எல்லாவற்றிலும் கவனிக்கத்தக்க வல்லுநர்கள். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக தயாரிக்க முன் வந்த ஜே எஸ் அபூர்வா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஜெய்சந்திரா சரவணக்குமாருக்கு பெரும் நன்றி. கவிஞர் கண்ணதாசன் கூறியது போல் "தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது' என்றாகிவிடும். அப்படி ஆகுமாயின், கலையும் படைப்பும் எந்த அழகும், ஒழுங்கும் இல்லாமல் சிதைந்துவிடும். சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் ஆகிவிடும்... அமைதி சிதைந்துவிடும். அதற்காகவேணும்... காதல் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்துவோம்.
 - ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com