சுதந்திரமாகப் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

"ஓடுகின்ற தண்ணீர், ஒரு பாறையை அடைந்த உடன் நின்று விடுமா? அப்படி நடக்காது, அது வலது பக்கமோ அல்லது இடது பக்கமாகவோ திரும்பி, போகத் தொடங்கும்.
சுதந்திரமாகப் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள்! - சாந்தகுமாரி சிவகடாட்சம்

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 33
 "ஓடுகின்ற தண்ணீர், ஒரு பாறையை அடைந்த உடன் நின்று விடுமா? அப்படி நடக்காது, அது வலது பக்கமோ அல்லது இடது பக்கமாகவோ திரும்பி, போகத் தொடங்கும். அதுபோல ஏறுமுக சிந்தனையாளன் நம்பிக்கையோடு, தன்னை எதிர்கொள்ளும் சவால்களை புறம்தள்ளி தன் இலக்கை அடைவான்.
 - மக்டும்
 துபாயின் அரசன் மக்டும் சொல்லியதை அந்நாட்டு மக்கள் நிறைவேற்றி காட்டியிருக்கிறார்கள் என்பதை மிராக்கிள் கார்டன் பறைசாற்றி நிற்கின்றது. பாலைவனத்தின் நடுவே ஒரு சோலைவனம். மொத்தம் 7.2 ஹெக்டர் நிலப்பரப்பில், 109 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, சிந்தையைக் கவர்கின்றன.
 மிராக்கிள் தோட்டத்திற்குள் காலடி வைத்ததுமே, என் கண்கள் இமைக்க மறந்தன, இதயம் ஒரு துடிப்பை இழந்தது, மனமோ கண்ட காட்சியை உள்வாங்கி அலைபாயும் இயல்பை மறந்து, ஸ்தம்பித்து நின்றது.
 கண்களுக்கு எட்டியவரை மலர்கள், மலர்கள், மலர்கள். 120-க்கும் மேலான மலர் வகைகளில், (Petunia) பெட்யூனியா என்கின்ற மலர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. "எதனால் இப்படி?'' என்று எங்களுடன் வந்த கைடைக் கேட்டேன். "பெட்யூனியா பன்னிரண்டுக்கும் அதிகமான நிறங்களில் கிடைக்கிறது, அதிக நாட்கள் வாடாமல் இருக்கிறது. ஆகையினால் இவைகளைக் கொண்டு பலவிதமான உருவங்களை பூக்களால் அமைக்கலாம்'' என்றார்.
 ஆர்ட்டின் வடிவத்தில் அமைக்கப்பட்ட வளைவுகளுக்கு, நடுவே நடந்து சென்று பூங்காவின் உள்பகுதியை அடைந்தோம். இந்த வளைவுகளில் எல்லாம் சிகப்பு நிற பெட்யூனியா மலர்கள் பூத்துக் குலுங்கின, தலைகளை அசைத்து நம்மை வரவேற்கின்றன.
 "ஏன் இந்த ஆர்ட்டின் வடிவமைப்பு
 தெரியுமா?'' என்றார் கைட்.
 "தெரியலையே'' என்றேன். "இந்த மிராக்கிள் தோட்டத்தை 2013- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வேலன்டைன்ஸ் நாள் அன்றுதான் திறந்தார்கள், அதனால் காதலின் சின்னமான ஆர்ட்டின் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறது'' என்று புன்னகைத்தார்.
 ஒரு கிலோ மீட்டர் நீண்டு செல்கின்ற மலர்களால் ஆன சுவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. குழாயில் இருந்து நீர் கொட்டுவதுபோல அமைத்திருந்தார்கள், கொட்டுவது மலர்கள் பூத்துக் குலுங்கிய கொடிகள். பார்ப்பதற்கு குழாயிலிருந்து மலர்கள் வழிந்தோடுவதுபோலத் தெரிந்தது. அப்பப்பா, கற்பனை சக்தியின் விளிம்புவரை சென்று பல வடி வமைப்புகளை அமைத்திருந்தனர்.
 அதில் ஆண் மயில்கள் விரிந்த தோகைகளோடு காட்சி கொடுத்தன. தோகை முழுவதும் பலவகைப் பூக்கள் கண்சிமிட்டி சிரிக்கின்றன. வளைவுகள், பூந்தொட்டிகள், கடிகாரம், கோபுரம் போன்ற அமைப்புகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது வீடுகளின் கூரைகள், அதன் சுவர்கள் என்று எல்லாவற்றின் மீதும் பூக்கள். நடந்து செல்லும் பாதைகளின் இருபக்கங்களிலும் விதவிதமான பூக்கள். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலைகளிலும் பூக்களின் ஆக்கரமிப்பு.
 ரோஜாக்கள், மெரிகோல்ட், கேலன்டியுலாஸ், டியுலீப் போன்ற மலர்கள் தங்கள் அழகில் என்னைக் கொள்ளை கொண்டன. ஒரு பாலைவனத்தில், எப்படி இவ்வளவு மலர்களை பயிர் செய்ய முடிகிறது என்று வியந்த எனக்கு கிடைத்த தகவல், உபயோகித்த பிறகு சாக்கடைக்கு செல்லும் நீரை சேமித்து சுத்தப்படுத்தி, நீண்ட ரப்பர் குழாய்களில் ஓட்டையிட்டு அதன் வழியாக சொட்டு முறையில் தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சி இப்படிப்பட்ட சொர்க்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். "வாவ்' துபாய் என்று கூவத் தோன்றியது, நாகரிகம் கருதி வாயை மூடிக்கொண்டாலும் மனம் மானாய் துள்ளியது.
 துபாய் மிராக்கிள் கார்டனுக்கு அருகில் இருக்கின்ற பட்டாம்பூச்சி தோட்டத்திற்கும் சென்றோம். சுண்டுவிரல் அளவிலிருந்து, உள்ளங்கை அளவில் இருந்த 32 வகையான பட்டாம்பூச்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம். வெளியில் பறந்து செல்லமுடியாதபடி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களுக்குள் சுதந்திரமாகப் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள் நம் தலையில், நீட்டிய கரங்களில் வந்து அமர்ந்து சிறகுகளை அடித்துக் கொள்ளும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. துபாய் சூடான பருவநிலையைக் கொண்ட நாடு, ஆனால் பட்டாம்பூச்சிகளுக்கு 28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலைதான் உகந்தது என்பதால், கூடாரங்களின் உள்ளே 28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்குமாறு அமைத்திருக்கிறார்கள்.
 துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குச் சென்ற எங்களுக்கு இந்த மிராக்கிள் தோட்டமும், பட்டாம்பூச்சி தோட்டமும், இயந்திரமயமாகிப் போன ஓட்டத்தை நிறுத்தி, இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாற வைத்தது.
 அடுத்த நாள் குளோபல் வில்லேஜ் நோக்கி பயணப்பட்டோம். ஒரே நாளில் மாங்கனி பெறுவதற்காக உலகைச் சுற்றி வந்த முருகப் பெருமானின் அனுபவத்தை நாமும் அந்த குளோபல் வில்லேஜ் வளாகத்தைச் சுற்றி வந்தால் அடையலாம்.
 உலகின் பல நாடுகள், நாங்கள் சென்றிருந்தபொழுது ரஷ்யாவும், ஜப்பானும் கூட இங்கே புதியதாக சேர்ந்து தங்களுடைய கூடாரங்களை அமைத்திருந்தன. மொத்தம் 17,200,000 ஸ்கொயர்
 ஃபீட் நிலப்பரப்பில், வருடத்திற்கு 5 மில்லியன் பார்வையாளர்கள் இங்கே வந்து குவிகின்றனர். டர்க்கி, ஓமான், சவுத் ஆப்பிரிக்கா, யுஎயி, ஈராக், இந்தியா, பாகிஸ்தான், சைனா, எகிப்து என்று நீளும் பட்டியலில், எது சிறந்தது என்று எப்படி சொல்வது.
 ஒவ்வொரு நாட்டின் விதவிதமான கைவினைப் பொருட்கள், துணி வகைகள், உணவு வகைகள், விளையாட்டுகள், நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், விளைபொருள்கள் என்று என்னை திக்குமுக்காட வைத்தன.
 ஆவலோடு இந்திய கூடாரத்துக்குள் நுழைந்தேன், மொத்தம் 300 ஸ்டால்கள், நம் நாட்டின் பல மாநிலங்களின் பொருட்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. பாரம்பரிய நடனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தன.
 டர்க்கி கூடாரத்தில் விலை உயர்ந்த பாதாம்பருப்பு, பிஸ்தா, அக்ரோட் போன்ற கொட்டைகளையும், ஓமான் கூடாரத்தில் அந்த நாட்டில் விளைந்த குங்குமப்பூவின் வாசனையில் மயங்கி ஒரு பெரிய டப்பாவில் அதை அடைத்து வாங்கி வந்தேன். பாகிஸ்தானின், எம்பிராய்டர் செய்யப்பட்ட துணி, சைனாவின் பீங்கான் செட் என்று வாங்கி மகிழ்ந்தேன்.
 பல நடனங்கள் பார்த்ததில் சவுத் ஆப்பிரிக்க மக்கள் ஆடிய நடனம் எங்களை மிகவும் கவர்ந்தது. படுவேகமாக அடிக்கப்பட்ட டிரம்ஸ்க்கு, இடுப்பையும், உடம்பையும் வளைத்து அவர்கள் போட்ட ஆட்டத்தை இன்று நினைத்தாலும் மனம் அதிர்கின்றது.
 டர்க்கிஸ் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று சென்றேன். கோன்களில் ஐஸ்கிரீமை வைத்து அதை விற்பவர் நீட்ட, நான் வாங்க முனைந்தபொழுது அந்த கோன் மேல் நோக்கிப் பறந்து, பிறகு விற்பனையாளர் கையில் வந்து அமர்ந்தது. மீண்டும் நான் கைகளை நீட்டியபோது அந்த கோனை தலைகீழாக சடக் என்று அவர் நீட்ட, நான் குலுங்கி மகிழ்ந்தேன்.
 டிஎஸ்எப் என்கின்ற துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்குச் சென்றால் இத்தனை அனுபவங்களையும் பெறலாம், பெரும் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.
 தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com