படமும் வெற்றி... பாடலும் வெற்றி! - கவிஞர் முத்துலிங்கம்

இயக்குநர் மகேந்திரன் மிகச்சிறந்த திறமைமிக்க இயக்குநர். இவர் துக்ளக் பத்திரிகையில் பணியாற்றியவர். இவர் இயக்கத்தில் இரண்டு படங்களில் நான் பாடல் எழுதியிருக்கிறேன்.
படமும் வெற்றி... பாடலும் வெற்றி! - கவிஞர் முத்துலிங்கம்
Published on
Updated on
3 min read

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 72

இயக்குநர் மகேந்திரன் மிகச்சிறந்த திறமைமிக்க இயக்குநர். இவர் துக்ளக் பத்திரிகையில் பணியாற்றியவர். இவர் இயக்கத்தில் இரண்டு படங்களில் நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் முதல் படம் "உதிரிப்
பூக்கள்'. இதில்
"கல்யாணம் பாரு - ஏ
கல்யாணம் பாரு
அம்மா அப்பா கல்யாணத்தை
இங்கு யாரு பார்த்தா - ஏய்
உனக்கடிச்சது யோகம்
நீ பார்க்கக் கொடுத்து வச்சே‘
என்ற பாடல் நான் எழுதிய பாடல். ஆனால் இந்தப் பல்லவியை எழுதியவர் இளையராஜா. சரணம் மட்டும் நான் எழுதினேன்.
படமும் வெற்றி, பாடலும் வெற்றி. இதற்குப் பிறகு மத்திய அரசின் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேசன் தயாரித்த "சாசனம்' என்ற படத்தில் மகேந்திரன் இயக்கத்தில் எழுதியிருக்கிறேன். அரவிந்தசாமியும், கெüதமியும் நடித்தப் படம். நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் சம்பந்தப்பட்ட படம். இதற்கு இசையமைத்தவர் பாலபாரதி.
பாலபாரதி இசையில் நான் பாடல் எழுதிய முதல் படம் "பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக்கூடாது' என்ற படம். இதில்
"முத்துவடி வேலன் உனக்கு
மூன்று தமிழ் மாலை தொடுத்தேன்
நித்தம் உன்னை நெஞ்சில் நினைத்து
அன்புமணி மேடை அமைத்தேன்'
என்ற பாடல் நான் எழுதிய பாடல். சித்ரா பாடியிருப்பார். சேதுராமன் என்பவர் தயாரித்த படம். பாடலும் ஓரளவு பிரபலமானது. படமும் பரவாயில்லை என்ற வகையில் இருந்தது. இது 1993-இல் வெளிவந்தது. நடிகர் பாண்டியராஜன், ஐஸ்வர்யா நடித்த படம். பாலபாரதி இசையில் சில படங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதில் "சாசனம்" என்ற படமும் ஒன்று. அதில் நான் எழுதிய பாடலை மலேசிய வாசுதேவன் பாடியிருப்பார். பாடல் இதுதான்.
தொகையறா
"ஆசைகளை நெஞ்சுக்குள்ளே
அவனவனும் மூடிவச்சு
வெளியிலே சொல்லாமலே வேஷம் போடுறான்
நல்லது செய்ய எண்ணி நாட்டுக்குள்ளே சிலபேரு
என்னைப்போல சிலநேரம் வேஷம் போடுறான் - அப்பச்சி என்னைப் போல சில நேரம் வேஷம் போடுறான்
பல்லவி
எத்தனையோ வேஷமிருக்கு நாட்டுலே - நான்
எல்லாத்தையும் சொல்லப்போறேன் பாட்டுலே
பல பேரை மொட்டையடிச்சு பாவமெல்லாம்
பண்ணுறவன்
பழனியிலே மொட்டை எதுக்கு அடிக்கிறான் - அதைப்
பார்த்துப்புட்டு முருகக் கடவுள் சிரிக்கிறான்
இவன் சிரிக்கிறதும் வேஷம்
மொட்டை - அடிக்கிறதும் வேஷம்
இளமை முதுமை கூட நமக்குக்
காலம் தந்த வேஷம்'
இப்படிப்பாடல் ஆரம்பமாகும். இதில் முதல் சரணம் இப்படி வரும்.
"ஏழை மனுஷன் உண்மையைச் சொன்னா
தலையில் ஓங்கிக் கொட்டுறான்
மேடை ஏறிப் பொய்யைச் சொன்னா
கையை நல்லாத் தட்டுறான்
ஆளுக்கேத்த வேஷம்போட்டு
அவனவனும் பொழைக்கிறான்
ஊருக்காக உழைப்பதுபோல்
உலகத்திலே நடிக்கிறான்.
மனுஷனோட வாழ்க்கை - அது
மேல போடும் சட்டைதான்
வாழ்க்கை முடிஞ்சு போனா - இது
காத்துப் போன கட்டைதான்
இவன் - நடிக்கிறதும் வேஷம்
இவன் - பொழைக்கிறதும் வேஷம்
சிலர் - சிரிக்கிறதும் வேஷம்
பலர் - அழுகிறதும் வேஷம்'
இதுபோல் இன்னொரு சரணம் வரும். இந்தப் படம் மிகச்சிறந்த படமென்று பெயர் பெற்றது. ஆனால் அதிக நாள் ஓடவில்லை.
ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு மனிதனும் வேஷம் போடுகிறான் என்று நான் எழுதிய இந்தப் பாடலைப் போல் கோவை குமார தேவன் என்ற கவிஞர்,
"ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வகையிலே
ஏமாளி - இப்படி
உள்ளதைச் சொன்னவன் உலகத்திலே கோமாளி'
என்று 1979- ஆம் ஆண்டு வெளிவந்த "ஜெயா நீ ஜெயிச்சிட்டே' என்ற படத்தில் எழுதியிருக்கிறார்.
கோவை குமாரதேவன் இதுவரை நூறு பாடலாவது எழுதியிருப்பார். இவர் பாடலாசிரியராக முதலில் அறிமுகமான படம். "வாழ வைத்த தெய்வம்' இது தேவர் பிலிம்ஸ் தயாரித்த படம்.
இதற்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். தேவர் பிலிம்ஸில் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன் தான். அந்தக் கம்பெனியில் இசையமைக்காத பிரபல இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் தான்.
திரைப்பட விநியோகஸ்தர்களில் பலர் எம்.எஸ்.விசுவநாதனை உங்கள் படத்திற்கு ஒப்பந்தம் செய்யுங்கள் என்று வற்புறுத்தியதால் ஒருமுறை சாண்டோ சின்னப்பாத்தேவர், விசுவநாதன் வீட்டுக்குச் சென்று வற்புறுத்தி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். அவரும் வாங்கிக் கொண்டார். இதையறிந்த அவருடைய தாயார் விசுவநாதனை அழைத்து அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்து, "அட்வான்சைத் திருப்பிக் கொடுத்துவிடு. நாமெல்லாம் சிரமப்பட்ட நேரத்தில் உனக்குக் கோரஸ் பாட வாய்ப்பளித்துப் பணம் வாங்கிக் கொடுத்தவர் கே.வி.மகாதேவன். அப்படிப்பட்டவர் இசையமைக்கும் கம்பெனியில் நீ இசையமைப்பது நீ அவருக்குச் செய்யும் துரோகம் ஆகாதா? இது தானா அந்தப் பெரிய மனிதருக்கு நீ காட்டும் நன்றி?'' என்று கோபமாகக் கூறினாராம்.
உடனே எம்.எஸ்.வி. அப்போதே தேவரிடம் அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம். எம்.எஸ். வியின் தாயாரை மனதாரப் பாராட்டி வணங்கி விட்டுத் தேவர் திரும்பிச் சென்றாராம். இதை விசுவநாதன் அண்ணனே ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். இன்றைய சினிமா உலகில் இப்படி நன்றியோடு இருப்பவர்கள் யாராவது இருப்பார்களா?
இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பிரபலமான கதாநாயக நடிகர் ஒருவர். அவர் பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்த ஒரு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கடைசிக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். மருந்து மாத்திரை வாங்குவதற்குக் கூட சிரமப்பட்டார்.
அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பத்திரிகையாளர், "உங்கள் உயர்வுக்குக் காரணமான அந்தத் தயாரிப்பாளர் மிகவும் சிரமப்படுகிறார். நீங்கள் அவருக்கு ஏதேனும் உதவுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நடிகர், " என்ன சார் விவரம் புரியாமல் பேசுகிறீர்கள். சினிமா உலகில் நன்றியெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதையெல்லாம் பார்க்க ஆரம்பித்தால் எங்களுக்கும் யாராவது உதவவேண்டிய சூழ்நிலை பின்னாளில் வந்துவிடலாம்'' என்று சொல்லிவிட்டாராம்.
அந்தத் தயாரிப்பாளர் தயாரித்த படத்தை இயக்கித்தான், அகில இந்திய அளவில் அந்தப் படத்தின் இயக்குநரும் பிரபலமானார். அந்த இயக்குநரிடம் அந்தப் பத்திரிகையாளர் உதவி கேட்டாரா என்பது தெரியாது. சட்டம் ஒரு இருட்டறை என்று அண்ணா சொன்னதைப் போல அந்தத் தயாரிப்பாளரின் கடைசிக் கால வாழ்க்கை இருட்டறைக்குள் அமைந்தது போல ஆகிவிட்டது.
இப்படி நன்றியில்லாத சினிமா உலகில் நன்றியுள்ளவர்களாக விளங்கிய அண்ணன் எம்.எஸ். விசுவநாதனின் தாயார் நமது வணக்கத்திற்குரியவராக விளங்குகிறார்.
"வாழவைத்த தெய்வம்' படத்தில் குமார தேவன் எழுதிய பாடல்
"கொல்லிமலைச் சாரலிலே
முள்ளுமுள்ளாக் குத்தும்பழம்
குடம்போலத் தொங்கக் கண்டேன்
என்னபழம் சொல்லு மச்சான்'
இந்தப் பாடலை எஸ்.சி. கிருஷ்ணனும், எல்.ஆர். ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். படமும் வெற்றிப்படம். இந்தப் படம் தான் ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முதல் நேரடித் தமிழ்ப்படம். அதற்கு முன்பு மொழிமாற்றுப் படங்களில் தான் எழுதினார். இதற்குப் பின் தேவர் தயாரிப்பில் வந்த 95 சதவீதப் படங்களுக்கு ஆரூர்தாஸ் தான் வசனம் எழுதினார்.
அடுத்து 1960- ஆம் ஆண்டில் வெளிவந்த "யானைப் பாகன்' என்ற படத்தில்
"பதினாறும் நிறையாத பருவமங்கை - காதல்
பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை'
என்ற பாடலை எழுதினார். இதை டி.எம். செüந்தரராஜன் பாடியிருப்பார். இதற்கும் கே.வி.எம். தான் இசை.
1976-இல் வெளிவந்த "ஒரு ஊதாப் பூ கண்சிமிட்டுகிறது' என்ற படத்தில் வி. தட்சிணாமூர்த்தி இசையில்
"நல்ல மனம் வாழ்க
நாடுபோற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான்மழை போல்
சிறந்து என்றும் வாழ்க'
என்ற பிரபலமான பாடலை எழுதியவரும் இவர்தான். இதை ஜேசுதாஸ் பாடியிருப்பார்.
நானும் அவரும் சேர்ந்து ஒரு படத்தில் பாடல் எழுதியிருக்கிறோம். அது ஆர்.ஆர். பிக்சர்ஸ் டி.ஆர். ராமண்ணா தயாரித்த "நீச்சல் குளம்" என்ற படம். அதில் "ஆத்துக்குள்ளே ஊத்து ஆடுதம்மா நாத்து' என்ற பாடல் நான் எழுதியது.
"ஆடி பதினெட்டு ஆடுது பூஞ்சிட்டு
எல்லோரும் வந்தாடுங்க
கூடியே கும்பிட்டு கூட்டத்தில் அமுதிட்டு
கொண்டாடும் திருநாளுங்க'
என்ற பாடலை குமாரதேவன் எழுதினார். இந்தப் பாடல்தான் அந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடல். இதை எஸ். ஜானகி பாடியிருப்பார். தாராபுரம் சுந்தரராஜன் இசையமைத்த படம் இது.
அவர்தான் என் வீட்டுக்கு வந்து என்னைப் பாடல் எழுத அழைத்துச் சென்றவர். கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ் போன்றவர்களுக்கெல்லாம் நெருங்கிய நண்பராக விளங்கியவர்
தாராபுரம்.
1971- இல் சங்கர்கணேஷ் இசையில் வெளிவந்த "தேன்கிண்ணம்' படத்தில் எல்லாப் பாடல்களையும் குமாரதேவன் எழுதினார். இதில்,
"தேன் கிண்ணம் தேன்கிண்ணம்
பருவத்தில் பெண்ணொரு தேன்கிண்ணம்'
என்ற பாடல்.
"உத்தரவின்றி உள்ளேவா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா'
என்ற பாடல். இவையெல்லாம் அந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் எல்.ஆர். அஞ்சலி பாடியிருப்பார். இன்றைக்கு குமாரதேவனுக்கு எண்பது வயதிற்கு மேலாகிவிட்டது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நினைவாற்றல் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இவரைப் போன்றவர்களை நான் குறிப்பிடவில்லையென்றால் வேறு யார் குறிப்பிடப் போகிறார்கள்?
(இன்னும் தவழும்)
படங்கள் உதவி: ஞானம்




 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com