ஆஃப்கானிஸ்தான் நாடோடிக்கதை: புதையல்!

காபூல் நகரின் அருகில் ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த அவர் ஒரு காலணி தைக்கும் தொழிலாளி.

காபூல் நகரின் அருகில் ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த அவர் ஒரு காலணி தைக்கும் தொழிலாளி. அவருக்கு ஒரே மகன். தந்தையும் மகனும் தங்கள் வயிற்றுப்பாட்டிற்காக நாள் முழுக்க தங்கள் தொழிலில் ஈடுபட்டு கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு வருமானம் போதவில்லை. இதனை அந்தத் தொழிலாளியின் மகனான குபு மிகவும் வெறுத்தான். 

பொதுமக்கள் பழங்காலத்துப் புதையல்கள் பற்றி பேசுவதை கதை கதையாக அவன் கேள்விப்பட்டிருந்தான். அவற்றை பற்றிக் கேட்கும் போதெல்லாம் குபுவை ஓர் ஆசை பற்றிக்கொள்ளும் அவ்வளவுதான். அப்படிப்பட்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்கக்கூடிய புதையலைத் தேடி எடுத்துக்கொண்டு வந்துவிட  வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான் அவன்.

அவன் கேள்விப்பட்ட கோட்டைகள் இருந்த ஊர்களில் கொஞ்சம் சமீபத்திலிருந்த, ஒரு நாள் பயணத்தில் சேர்ந்துவிடக்கூடிய ஊரைத் தேர்ந்தெடுத்தான். ஒரு நாள் காலை பயணத்தைத் தொடங்கினான். இரவு வந்துவிடவே அங்கிருந்த பாழடைந்த வீடு ஒன்றில் படுத்து உறங்கினான்.
குபு மறுநாள் காலை தன் பயணத்தை  மீண்டும் தொடங்கினான். அன்று மாலை அவன் திட்டமிட்டிருந்த ஊரை அடைந்து அங்கிருந்த பாழடைந்த கோட்டைக்கும் வந்து சேர்ந்தான். கோட்டைக்குள் புதையலைத் தோண்டி எடுக்கும் ஆவேசத்தில் இருந்த அவனுக்கு சிதிலமடைந்த கோட்டையின் நிலை அவனை எந்தவித அச்சத்திற்கும் உள்ளாக்கவில்லை.

கோட்டையின் இடிபாடுகள், குவிந்து கிடந்த குப்பைக்கூளங்கள், சிலந்தி வலைவிரிப்புகள் யாவும் கோட்டையின் வாசல்கள், கூடங்கள், தாழ்வாரங்கள் ஆகிய அனைத்து இடங்களையும் அடைத்துக்கிடந்தன. ஒரே முடை நாற்றம்.

எனினும் புதையலை கண்டெடுக்கும் தீவிரத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு பாதி இருளில் குபு ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு நடந்தான். போகப்போக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. தாழ்வாரங்கள் நீண்டுகொண்டிருந்தன. அவனுக்கு வியர்த்துக்கொட்டிற்று. அந்த அரை இருட்டில் மேலும் கொஞ்ச தூரம் நடந்தபோது அவனுக்கு அவன் மேலேயே கோபம் கோபமாக வந்தது.    அந்த நிலையில் கோட்டையின் கடைசித் தாழ்வாரத்தில் இறங்கி நடந்துகொண்டிருந்தவன் அதன் எல்லையை நெருங்கியபோது...

அங்கே அவன் கண்ட காட்சி!...! அப்படியே அதிர்ந்துபோய் மலைத்து நின்றான். 
அங்கே ஒரு சின்ன குளம். அதில் சொக்கத்தங்க மேனி ஜொலிக்க மெல்ல நளினமாக மிதந்து ஊர்ந்து வந்தது ஒரு வாத்து. குளத்தின் எல்லையில் நிற்கும் அவனைக் கண்ட அது நெருங்கி வந்தது. அதிசயித்து நின்ற குபுவைப் பார்த்து பேசவும் செய்தது. ஆம், அவனது மானிட மொழியிலேயே  அது பேசிற்று: ”இளைஞனே! நீ யார்? எதற்காக இங்கு வந்தாய்?” என்று விசாரித்தது.

ஓர் அதிசய உணர்விற்கு அடியோடு ஆட்பட்டிருந்த குபுவிற்கு  அவன் அங்கு வந்திருந்த நோக்கம், பட்ட கஷ்டங்கள்  எல்லாமே மறந்துபோன நிலையில் அந்த வாத்தை  பார்த்துச் சொன்னான்: உன்னத்தான் தேடிக்கொண்டு வந்தேன். உனது அழகையும் நல்ல பண்பையும் கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்.

""உண்மையாகவா இளைஞனே?'' என்றது வாத்து.

""ஆம். உண்மையாகத்தான் சொல்கிறேன்.''  என்றான் குபு.

அப்படியானால் நான்  உனக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உன்னால் நான் மீண்டும் எனது பழைய மனித வடிவத்தைப் பெறுவேன்.  அது மட்டுமல்ல, நான் விரும்பும் தேவதை வடிவத்தையும் பெற முடியும்.

அதே கணம் அந்த வாத்து ஓர் பேரெழில் இளமங்கையாக மாறி அவன் முன்னால் நின்றது. பொன்னிற பூக்கள் வேய்ந்த நீல நிற ஆடையில் ஓர் தேவதையாகவும் அது நின்றது.

இப்போது குபுவைப் பார்த்து அந்த தேவதை பேசிற்று:  நீ ஒரு பரம ஏழை என்பதை அறிவேன். உனக்குப் பரிசாக நூறு பொற்காசுகள் அளிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. கொடுக்கும் அத்தனை காசுகளையும் நீ உனக்காகவே செலவு செய்ய வெண்டுமே தவிர  அதில் ஒரு காசைக்கூட மற்ற யாருக்கும் கொடுத்து விடக்கூடாது. தவறினால் காசுகள் அத்தனையையும் இழந்து மீண்டும் நீ ஏழையாகிவிடுவாய் என்று அவனை எச்சரித்தவாறு நூறு பொற்காசுகளை அவனுக்கு அந்த தேவதை வழங்கிற்று.

அந்த ஊரில் இருந்த பெரிய உணவு விடுதி ஒன்றுக்குள் நுழைந்தான். அங்கிருந்த  ருசியான பண்டங்கள் அத்தனையையும்  போதும் போதும் என்று சளைக்காமல் சாப்பிட்டான். வயிறு புடைத்துவிட்ட திருப்தியோடு வெளியே வந்தான்.

அப்போதுதான் தன்னைத்தானே ஒரு முறை பார்த்துக்கொண்டான். அவனது அழுக்கேறிய கந்தல் ஆடை அவனை மிகவும் வெட்கப்படச்செய்தது. உடனே ஒரு பெரிய துணிக்கடையைத்  தேடி அதற்குள் நுழைந்தான். விலை உயர்ந்த ஆடை அணிகலன்களைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டான். ஒரு ராஜகுமாரத் தோற்றத்தோடு வெளிய வந்தான்.

அவன் வீதியில் வந்து நின்றபோது  அவனிடம் இன்னும் காசுகள் மிச்சம் இருந்தன. அப்போது கிழவர் ஒருவர்,  ""தம்பி! நான் சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. பசி தாளமுடியாமல் துடிக்கிறேன். என் பசிக்கு ஏதாவது உதவி செய்யப்பா. உனக்குக் கோடி புண்னியம்'' என்று கெஞ்சினார்.'

அப்போது தேவதை அவனுக்கு இட்டிருந்த நிபந்தனை நினைவிற்கு வந்தது. தனது பழைய வறிய நிலைக்குத் திரும்பிவிட நேருமோ என்னும் அச்சத்தால் அவன் தடுமாறி நின்றான். ""தம்பி, என்ன தயக்கம்? என் பசி போக்க உதவி செய்வதால் உனக்கு ஒரு தீங்கும் வராது. இல்லாமையால் கஷ்டப்படும் ஏழைக்கு உதவும் இரக்கமும் ஈகையும் உள்ள நல்லவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் புரிவான். எல்லாம் இருந்தும் இல்லாதவர்க்கு எதையும் ஈயாதவரே உண்மையில் தரித்திரர்கள்.'' என்றார்.

குபுவிற்கு அதற்கு மேலும் தாங்க முடியவில்லை. அந்த கிழவருக்கு உதவ வேண்டும் என்ற உணர்வே வென்றது. தன்னிடம் மீதமிருந்த காசுகளில் கொஞ்சம் காசுகளை எடுத்து அவருக்குக் கொடுத்தான். அவர் அவனை வாழ்த்திவிட்டுத் திரும்புகையில் ஐயோ, என்ன கொடூரம்! ஒரு பயங்கரச் சூறாவளிக் காற்று வீசி அடித்து ஊரையே கபளீகரம் செய்தது.

குபு திகைத்துப்போய் நடுங்கி நின்றான். அப்போது அந்த முதியவர் திரும்பிப் பார்த்துச் சொன்னார்: தம்பி! துளியும் பயப்படாதே. உனக்கு ஒன்றும் நேராது. ஓர் ஏழைக்கு நீ உதவி இருக்கிறாய். நீ ஒருபோதும் இனி ஏழையாக மாட்டாய். நலமோடு வீடு திரும்பி செழிப்புடன் வாழ்வாய். இறைவன் அருள் உனக்கு உண்டு. அவர் திரும்பி விரைந்து நடந்து மறைந்துவிட்டார்.

வீசி அடித்த புயல் தணிந்து ஓய்ந்தது. குபு ஊருக்கு நலமாக திரும்பி வந்தான். தந்தையுடன் சேர்ந்து அவர்களது காலணி செய்யும் தொழிலை மிகவும் முனைந்து நம்பிக்கையுடன் செய்தான். தொழில் வளர்ந்து செல்வந்தனானான். எந்த குறையும் இல்லாமல் அவர்கள் சுகமாக வாழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com