என்றும் இருப்பவர்கள்! - 27

1893-ஆம் ஆண்டில் "விவேகசிந்தாமணி' என்ற தமிழ் மாத இதழில் "கமலாம்பாள் சரித்திரம்' அல்லது ஆபத்துக்கிடமான "அபவாதம்' என்ற பெயரில் தொடர்கதை வெளிவந்தது.
என்றும் இருப்பவர்கள்! - 27

1893-ஆம் ஆண்டில் "விவேகசிந்தாமணி' என்ற தமிழ் மாத இதழில் "கமலாம்பாள் சரித்திரம்' அல்லது ஆபத்துக்கிடமான "அபவாதம்' என்ற பெயரில் தொடர்கதை வெளிவந்தது. எழுதியவர் வத்தலகுண்டு ராமசாமி ஐயர். ராஜம் ஐயர் என்கிற பி.ஆர்.ராஜம் ஐயர். அதுதான் தமிழின் முதல் தொடர்கதை. இருபத்தைந்து மாதங்கள் வெளிவந்த்து. அதிலிருந்து தொடர்கதைகள் பத்திரிகைகளில் முக்கியமான இடம் பிடித்துக் கொண்டுவிட்டன. பாட்டி, அத்தையிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் படிக்கக் கற்றுக் கொண்டதும் தொடர்கதைகள் படிக்க ஆரம்பித்தார்கள். 

தமிழில் தொடர்கதைகள் படிப்பதை சுவாரசியமான அனுபவமாக மாற்றியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. "ஆனந்தவிகடனில்' அவர் எழுதிய "கள்வனின் காதலி' கதைச் சொல்லப்பட்ட முறையாலும், வசன நடையாலும் ஏராளமானவர்களின் மனங்கவர்ந்தது.

கல்கி இதழில் "பார்த்திபன் கனவு', "சிவகாமியின் சபதம்', "பொன்னியின் செல்வன்', "அலையோசை' என்று நீண்ட தொடர்கதைகள் எழுதினார். அவை எழுதப்பட்டக் காலத்தில் படிக்கப்பட்டது போலவே தற்காலத்திலும் பெண்களும் ஆண்களும் படித்து வருகிறார்கள்.

கல்கிக்கு அடுத்து தொடர்கதைகள் எழுதி புகழ் பெற்றவர் அகிலாண்டம் என்கிற அகிலன். அவர் பத்திரிகையாசிரியர் இல்லை. தொடர்கதை எழுத்தாளர்தான். தமிழ்நாட்டில் பிரசுரமான எல்லா பெரிய பத்திரிகைகளிலும் அவர் தொடர்கதைகள் எழுதினார். அவற்றில் சமூக தொடர்கள், சரித்திர தொடர்கள் எல்லாம் உண்டு. அவருக்கு ஏராளமான வாசகர்கள் இருந்தார்கள். அவர் தமிழ்நாடு அரசு பரிசு,  சாகித்ய அகாதெமி விருது, ஞான பீடம் பரிசு உட்பட பல பரிசுகள் - விருதுகள் பெற்றிருந்தார். அவரின் "பாவை விளக்கு' என்ற தொடர் சினிமா படமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. அவர், சமூக அவலங்கள், இலக்கியங்கள் பற்றி பேசக் கூடியவராகவும் இருந்தார்.

தொடர்கதைகள் எழுகிறவர்களை தீவிரமான வாசகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் சற்று தொலைவில் ஒதுக்கியே வைத்திருந்தார்கள். அது தமிழ்நாட்டில் மட்டுந்தான் என்றில்லை. எல்லா நாடுகளிலும் அப்படியே செய்துவந்தார்கள்.

தொடர்கதை ஆசிரியர்களும், அவர்களின் அபிமானிகளும், தொடர்கதைகள் எழுதி மகத்தான வெற்றி பெற்ற சார்லஸ் டிக்கன்ஸ், டால்ஸ்டாய் , டால்ஸ்தாய் வெஸ்கி போன்றவர்கள் தொடர்கதை எழுத்தாளர்கள் தான் என்று சொல்லிப்பார்த்தார்கள். ஆனால், அவையெல்லாம் எடுபடவே இல்லை.

பத்திரிகைளுக்குத் தொடர்கதைகள் தேவையாக இருந்தன. அதுபோலவே எழுத்தாளர்களுக்கும் பத்திரிகைகள் தேவையாக இருந்தன. எனவே பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதியவர்கள் பிரபலமாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அகிலன். அவர் எழுத்தாளராக இருந்ததோடு சென்னை வானொலி நிலையத்தில் இலக்கியப்பிரிவில் ஓர் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.

ஒரு நாள் சென்னை வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக இருந்த ஏ.நடராஜனைப் பார்த்து பேசிவிட்டு மாடிபடி.யில் இறங்கி கீழே வந்து கொண்டிருந்தேன்.

அகிலன் மேலேபடியேறி கொண்டிருந்தார். அவரோடு பழக்கம் கிடையாது. எனவே அவருக்கு என்னைத் தெரியாது என்று நினைத்துக்கொண்டே படியிறங்கினேன். அவர் நின்று "கந்தசாமி' என்றார். வணக்கம் தெரிவித்தேன். என்னை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார். எதிர்நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு குடும்ப நலன், எழுத்து பற்றியெல்லாம் விசாரித்தார். நான் பதில் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

"வானொலியில் ஏதாவது சிறுகதை சமீபத்தில் ஒலிபரப்பப்பட்டிருக்கிறதா?' என்று கேட்டார். பதில் சொன்னேன்.

"வானொலியில் ஒலிபரப்ப பன்னிரெண்டு நிமிடங்கள் வருவது போல ஒரு சிறுகதை கொடுங்கள். ஒலி பரப்பலாம் கைவசம் ஏதாவது கதைகள் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்.

யாரோ அவர் அறைக்கு வந்தார்கள்.

""ஒரு வாரம், பத்துநாளில் கதை கொண்டு வந்து கொடுங்கள். முறைப்படி ஒப்பந்தம் வரும். கையெழுத்திட்டு அனுப்புங்கள். கதைக்கு சன்மானம் கொடுக்கப்படும்'' என்றார்.

விடை பெற்றுக் கொண்டேன்.

இருபது நாட்கள் கழித்து "இப்படி நடந்தது'  என்று எழுதப்பட்ட சிறுகதைகயை எடுத்துக்கொண்டு வானொலி நிலையம் சென்றேன். அகிலன் இருக்கையில் இல்லை. அடுத்து நாற்காலியில் அவர் உதவியாளர் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரித்தேன். "என்ன விஷயம்' என்று கேட்டார்.
""சிறுகதை கேட்டிருந்தார். கொடுக்க வந்திருக்கிறேன் என்றேன். அவர் கையை நீட்டினார். கதையைக் கொடுத்தேன். தலைப்பைப் படித்தார். இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். தலையை அசைத்துக்கொண்டு மேசை மீது கதையை வைத்துவிட்டு, இதுவரையில் வானொலியில் ஏதாவது கதை வெளியாகி இருக்கிறதா?'' என்று வினவினார்.

""இல்லை'' என்றேன்.

""வானொலியில் ஒரு கதை ஒலி பரப்ப சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கதை அதற்குள் வர வேண்டும். அதோடு தேவைப்பட்டால் கதைகயை சுருக்குவோம்; மாற்றி எழுதுவோம். சர்க்கார் விவகாரம். யாரும் ஒன்றும் சொல்லக்கூடாது'' என்றார். 

நான் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவர் முகத்தைப் பார்த்தேன். பின்பு, ""அகிலன் வந்ததும் கதையைக் கொடுங்கள். அவருக்கு என்னைத் தெரியும்'' என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். 

"இப்படி நடந்தது' என்ற சிறுகதை, ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் நடக்கும் கதை. சிங்கப்பூர், சென்ற சோமு கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு வருகிறார். மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அவனுக்கு ஒரு வீடு கட்டுகிறார்கள். வீடு கட்டப்படுவதை மகனும், தந்தையும் மேற்பார்வை இட்டுக் கொண்டிருக்கிறார்கள். காற்று அடிக்கிறது. மழை பொழிகிறது. அவசரம் அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்குகிறார்கள். சுவர் இடிந்து மகன் மீது விழுகிறது. அவன் செத்துப் போய் விடுகிறான். தந்தை தன் மருமகளோடு சிங்கப்பூருக்கு கப்பல் ஏறுகிறார். கதை முடிந்துவிட்டது.

இப்படி நடந்தது சிறுகதைகயை ஒலிபரப்பமாட்டார்கள் என்று தான் கருதினேன். ஆனால் ஒலி பரப்பப்பட்டது.  பின்னால் அகிலனை சந்தித்தேன். "கதையைக் கேட்டீர்களா? குரல்வளம் மிக்க வானொலி நாடக நடிகரைப் படிக்க வைத்தோம்' என்றார்.

""நன்றாகப் படித்தார். கேட்க சந்தோஷமாக இருந்தது.''

""நல்ல கதைதான். ஆனால் கொஞ்சம் நெருடக்கூடிய கதை. இம்மாதிரியான கதைகளை எல்லாம் வழக்கமாக வானொலியில் ஒலிபரப்ப மாட்டார்கள். ஆனால் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான் ஒலிபரப்பினோம். ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமான பேர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.''

நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். 

""ஆறு மாதத்திற்கு ஒரு சிறுகதை கொடுங்கள் ஒலி பரப்பலாம்.''

 ராஜாஜி அரங்கில் நடைபெற்றத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் அகிலனை ஒரு முறை சந்தித்தேன். அவர் சாகித்ய அகாதெமிக்காக, தமிழ்ச் சிறுகதைகள் என்றொரு தொகுப்பைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். நான் கேட்டுக்கொண்டேன்.

"உயிர்கள்' என்ற உங்கள் கதையைத் தேர்ந்து எடுத்திருக்கிறேன். உங்களுக்கு வேறு கதையைச் சேர்க்கலாம் என்ற கருத்து இருக்கிறதா''  என்று கேட்டார். 

""உங்கள் தேர்வே என் தேர்வு'' என்றேன்.

""சாகித்ய அகாதெமியில் இருந்து முறையான கடிதம் வரும். பதில் எழுதிவிடுங்கள்'' என்றார்.

நான் கரம் குவித்தேன்.

சாகித்ய அகாதெமியில் இருந்து கடிதம் வரவில்லை. அகிலன் 1988-ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். அவர் தொகுப்பில் இடம் பெறாமல் போன அவருக்கு நெருக்கமான பிரபல எழுத்தாளர்கள் சண்டை போட்டு தொகுப்பு வெளிவராமல் முடக்கிவிட்டார்கள் என்று பின்னால் தெரிய வந்தது.

1993-ஆம் ஆண்டில் அகிலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பை சாகித்ய அகாதெமி வெளியிட்டது. தொகுப்பாசிரியர் அகிலன் என்று பெயர் இருந்தது. அதில் அவர் தேர்ந்தெடுத்த "உயிர்கள்' சிறுகதை இருந்தது. அது "மஞ்சரி"யில் மறுபிரசுரமானது. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி'யில் வெளிவந்தது.

நா.பார்த்தசாரதி தமிழ் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் தொடர் கதைகள் ஆசிரியர். அவர் "கல்கி"யில் எழுதிய "குறிஞ்சி மலர்', "பொன்விலங்கு" தொடர்கள் பிரசித்திப் பெற்றவை. அவர் நாவல்களின் கதாபாத்திரங்கள் பெயர்களை வாசகர்கள் தங்கள் மகள், மகனுக்குச் சூட்டினர். தூய அறவொழுக்கம் போதிக்கும் தொடர் எழுத்தாளர். சாகித்ய அகாதெமி விருது உட்பட பல பரிசுகள் விருதுகள் பெற்றவர்.

1965-ஆம் ஆண்டில் "கல்கி' பத்திரிகையில் இருந்து விலகி "தீபம்' என்ற இலக்கியப் பத்திரிகையை தொடங்கி சிற்றிதழ் போன்று நடத்தி வந்தார். ஓராண்டு கழித்து கதையொன்று கேட்டுக் கடிதம் எழுதினார். "நினைவு சக்கரம்' என்ற கதையை அனுப்பி வைத்தேன். இரண்டு மாதங்கள் கழித்து வெளிவந்தது.

1970-ஆம் ஆண்டுகளில் "தீபம்' அலுவலக மொட்டை மாடியில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். எல்லீஸ் தெருவில் நடைபெற்றக் கூட்டங்களில் ஏ.கே ராமானுஜன், க.நா.சுப்ரமணியம், பி.எஸ்.ராமையா, வல்லிக்கண்ணன், சி.சு.செல்லப்பா என பலரும் பேசினார்கள். நான் பல கூட்டங்களில் பார்வையாளனாகச் சென்று இருக்கிறேன்.

"தீபம்'  இதழில் பிரபல எழுத்தாளர்கள் "நானும் என் எழுத்தும்'  என்ற தொடர் எழுதி வந்தார்கள். ஒர் இலக்கியக் கூட்டத்தின் போது, அடுத்த மாதம் ""நீங்கள் "நானும் என் எழுத்தும்' தொடரில் கட்டுரை எழுதுகிறீர்கள்'' என்று ஒரு காகிதத்தில் எழுதி திருப்பூர் கிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பினார். அப்போது எனக்கு முப்பத்தொரு வயதாகி இருந்தது. "சாயாவனம்', " கோணல்கள்' எல்லாம் வெளிவந்திருந்தன. ஆனால்,  நான் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கலாம் என்று எழுதி அனுப்பிவிட்டேன். 

பின்னால் நானும் நா.பார்த்தசாரதியும் நெருக்கமாகிவிட்டோம். மாதம் ஒரு முறையோ-இரண்டு முறையோ "தீபம்' அலுவலகம் செல்வது வழக்கமாக இருந்தது. பெரும்பாலும் பிற்பகல்தான். நா. பார்த்தசாரதி, பலமுறைகள் வாலாஜா சாலையின் முகப்பில் இருந்த உடுப்பி ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய் காபி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

1977-ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில்  நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் எல்லாம் அவசரநிலை ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவசரநிலை அவசியம் என்று பத்திரிகைகளில் எழுதினார்கள்; கூட்டம் போட்டு பேசினார்கள். அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டப் பின்னர் மொராஜி தேசாய் பிரதமரானார். நா.பார்த்தசாரதி,  பிரதமரை அழைத்து எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ஒரு மாநாடு நடத்தினார். நான் அவரை எதிர்த்து கையால் போஸ்டர் எழுதி கொண்டு போய் ராஜாஜி ஹாலின் சுவரில் ஒட்டினேன்.

நா.பார்த்தசாரதி,  சாகித்ய அகாதெமி தமிழ்ப்பிரிவின் கன்வீனராக இருந்தார். க.நா.சுப்ரமணியம் டில்லியில் இருந்து கொண்டு சென்னைக்கு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும், தன் புத்தகங்களை அச்சில் போட்டுக் கொண்டும் இருந்தார். அவருக்கு டில்லியில் சாகித்ய அகாதெமி சார்பாக புதுமைப்பித்தன் கருத்தரங்கு ஒன்றை நடத்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு இருந்தது. அவரைப் பார்க்க நா.பார்த்தசாரதி வந்த போது தன் ஆவலைத் தெரிவித்தார். அதற்குப் பார்த்தசாரதி ""ஒரு கடிதம் எழுதுங்கள். சென்னையில் சாகித்ய அகாதெமி ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் வைத்து அனுமதி வாங்கி விடலாம்'' என்றார். 

க.நா சுப்ரமணியம்,  சாகித்ய அகாதெமிக்கு என்னிடம் கடிதம் எழுதிக் கொடுத்தார். சென்னை அலுவலகத்தில் அதைக் கொண்டு போய் சேர்த்தேன். இரண்டு மாதத்திற்குப் பிறகு புதுமைப்பித்தன் கருத்தரங்கு நடத்த அனுமதி வந்தது. க.நா.சுப்ரமணியம் பேச்சாளர்கள் பட்டியலை டில்லிக்கு அனுப்பிவைத்தார்.

ஒரு நாள் மயிலாப்பூரில் இருந்த க.நா.சுப்ரமணியம் வீட்டிற்கு நா.பார்த்தசாரதியும், திருப்பூர் கிருஷ்ணனும் வந்தார்கள். நான் க.நா.சுப்ரமணியம் வீட்டில் இருந்தேன். நா.பார்த்தசாரதி, "புதுமைப்பித்தன் கருத்தரங்கிற்கு யாரையெல்லாம் அழைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டார்.
""வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி, வெங்கட்சாமிநாதன், வலம்புரிஜான்'' என்றார் க.நா.சுப்ரமணியம்.

""கந்தசாமி இருக்கிறாரா?''

""இல்லை. அவர் நம்மோடு இருக்கிறார். அதனால் அவரை டில்லிக்கு அழைக்கவில்லை'' என்றார்.

பிறகு புதுமைப்பித்தன், அவர் எழுத்துகள் பற்றி சிறிது நேரம் பேசப்பட்டது. புறப்பட ஆயத்தமான  பார்த்தசாரதி, "கந்தசாமி வாங்க. உங்களை வீட்டில் விட்டுவிட்டுப் போகிறேன்' என்றார். அவர் போகும் வழியில் நந்தனத்தில் என் வீடு இருந்தது.

நாங்கள் பார்த்தசாரதி காரில் ஏறி அமர்ந்தோம். அவர் காரைஓட்டிக் கொண்டே, "கந்தசாமி நீங்கள் புதுமைப்பித்தன் கருத்தரங்கிற்கு டில்லி வருகிறீர்கள். நான் செயலாளரிடம் பேசி, உங்களை அழைக்கச் சொல்கிறேன். கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கிறீர்கள். கட்டுரை எழுதி செயலாளருக்கு அனுப்பிவிடுங்கள்' என்றார்.

நான் தலையசைத்தேன். 

""நான் சிங்கப்பூருக்கு ஒரு கருத்தரங்கத்திற்குச் செல்கிறேன். அதை முடித்துக் கொண்டு புதுமைப்பித்தன் விழாவிற்கு நேராக வந்து விடுகிறேன். நாம் டில்லியில் சந்திப்போம்'' என்று சொல்லிவிட்டு,  என்னை வீட்டில் இறக்கி விட்டுவிட்டுச் சென்றார்.

புதுடில்லியில் சாகித்ய அகாதெமி அரங்கில் தொடங்கிய புதுமைப்பித்தன் கருத்தரங்கிற்கு நா.பார்த்தசாரதி வரவில்லை. அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. நாளை வருவார் என்கிறார்கள். அடுத்த நாளும் அவர் வரவில்லை. அவர் உடல் நிலை சீரடையாததால் சென்னைக்குச் செல்கிறார் என்று சொல்லப்பட்டது. நா.பார்த்தசாரதி வராமலேயே கருத்தரங்கு முடிவுற்றது.

நானும், வல்லிக்கண்ணனும் ரயிலில் பயணித்து சென்னை வந்தோம். காலைப்பொழுது மழை பொழிந்து கொண்டிருந்தது. சென்ட்ரலில்  ஆட்டோ பிடித்து வல்லிக்கண்ணனை லாயிட்ஸ் சாலையில் இருந்த அவரது வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

12 டிசம்பர் 1987 மாலைப் பொழுது தொலைக்காட்சியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். முக்கிய அறிவிப்பு பிரபல எழுத்தாளர் நா.பார்த்தசாரதி மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நந்தனம் சி.ஐ.டி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.

நான் அவசர அவசரமாக மேல்சட்டையை எடுத்துக் போட்டுக் கொண்டு படியிறங்கினேன். 

(அடுத்த இதழில் எஸ்.பொன்னுதுரை, 

அ.ராஜரத்தினம்)


சா. கந்தசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com