என்றும் இருப்பவர்கள்! 29 - சா. கந்தசாமி

1980 -ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் நாட்டு கலாசார நிறுவனமாகிய மாக்ஸ் முல்லர் பவனில் கலை இலக்கியக் கருத்தரங்கு, எழுத்தாளர்கள், கவிதை வாசிப்பு, சந்திப்புகள் நடத்தினார்கள்.
என்றும் இருப்பவர்கள்! 29 - சா. கந்தசாமி

1980 -ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் நாட்டு கலாசார நிறுவனமாகிய மாக்ஸ் முல்லர் பவனில் கலை இலக்கியக் கருத்தரங்கு, எழுத்தாளர்கள், கவிதை வாசிப்பு, சந்திப்புகள் நடத்தினார்கள். அதோடு இசை நிகழ்ச்சிகள், பொம்மலாட்டம் மைமிங் நாடகங்கள் எல்லாம் நடைபெற்றன. பல நிகழ்ச்சிகள் ஜெர்மனி நிகழ்ச்சிகளாகவும், சில தமிழ் நிகழ்ச்சிகளாகவும் இருந்தன. அதோடு பழைய படங்கள் - பேசாதப் படங்கள், புதிய சோதனைப் படங்கள், சர்வதேச விருதுகளைப் பெற்ற படங்கள் எல்லாம் காட்டினார்கள். சினிமா பார்ப்பதற்கு அதிகமான கூட்டம் வந்து கொண்டு இருந்தது.
 ஒரு முறை ஜெர்மனி-இந்திய கூட்டு முயற்சியில் 1925-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட "பிரேம்சன்யாஸ்' என்ற படம் காட்டப்பட்டது. அது எட்வின் ஆர்னால்டு என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய "புத்தர் வரலாறு'. அதற்கு "ஆசியஜோதி' என்று பெயர்.
 பிரான்ஸ் ஓல்டன் என்ற ஜெர்மனி இயக்குநரும் ஹிமான்ஸுராய் என்ற இந்திய இயக்குநரும் இணைந்து, இயக்கித் தயாரித்தது. 1927-ஆம் ஆண்டில் திரையிடப்பட்டது. ஹிமான்ஸு ராய் புத்தர். சீதாதேவி என்ற நடிகை புத்தர் மனைவியாக நடித்தார். படம் முழுக்க முழுக்க இந்தியாவில் ஜெய்ப்பூர் அரண்மனைகளில் எடுக்கப்பட்டது.
 தேவிகாராணி என்ற வங்காள இளம் பெண் அரங்க நிர்மாணத்தைக் கவனித்துக் கொண்டார். அவர் பின்னர் ஹிமான்ஸுராயைத் திருமணம் செய்து கொண்டார். 1930-ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஜொலித்தார்.
 சென்னை மாக்ஸ் முல்லர் பவனில் பிரேம் சன்யாஸ் -
 அதாவது "ஆசிய ஜோதி' படம் காட்டப்பட்டது. அதற்கு அசோகமித்ரன் வந்திருந்தார். அவர் நிறைய சினிமா படங்கள் பார்க்கக்கூடியவர். நானும் அவரும் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்து "ஆசிய ஜோதி'-பேசாதப்படம் பார்த்தோம். சப் டைட்டில் ஜெர்மன், ஆங்கில மொழிகளில் போடப்பட்டிருந்தது. மரபான முறையில் புத்தர் வாழ்க்கையைச் சொல்லும் கதை. ஆனால், முடிவு மிரட்சியளிக்கக்கூடியது.
 புத்தர் தன் இருபத்தொன்பதாவது வயதில் அரண்மனை, அரச வாழ்வு, மனைவி, மகன் ராகுல் என்று எல்லாவற்றையும் துறந்து நாட்டை விட்டு கானகம் சென்றார். கடுந்தவம் புரிந்தார். தவத்தால் பயனில்லை என்பதை அறிந்து கொண்டு தியானம் புரிய ஆரம்பித்தார். தன் முப்பத்தைந்தாவது வயதில் ஞானம் பெற்றார். தான் பெற்ற ஞானத்தை வாரணாசி அருகில் சாரநாத் என்னும் இடத்தில் மாஞ்சோலையில் தவம் புரிந்து கொண்டிருந்தவர்களுக்கு முதன் முதலாகத் தர்ம உபதேசம் புரிந்தார். அதுதான் புத்தர் வாழ்க்கையில் நிகழ்த்திய முதல் பேருரை. அவர் பேருரையோடு "ஆசியஜோதி' என்ற பேசாதப்படம் முடிவடைந்து விட்டது.
 "ஆசிய ஜோதி' படம் பார்த்துவிட்டு வெளியில் வந்ததும் அசோகமித்ரன் குறிப்பிட்டார். "மிகவும் புத்திசாலியான இயக்குநர்கள். அவர்களுக்குச் சினிமா படத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதை விட, எங்கே முடிப்பது என்பது நன்றாகத் தெரிந்து இருக்கிறது. அதுதான் ஆசிய ஜோதியை இப்பொழுதும் பார்க்க வைக்கிறது'' என்று.
 அசோகமித்ரன் தன் இருபத்தொன்றாவது வயதில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமாகிய ஜெமினியில் வேலைக்குச் சேர்ந்தார். அது தான் அவர் முதல் வேலை. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் "பூலோக ரம்பை', "சந்திரலேகா', "மதன காமராஜன்' என்று படங்கள் எடுத்து நாடெங்கும் அறியப்பட்டவராக இருந்தார். அதோடு ஜெமினி நிறுவனம் தெலுங்கு, இந்தி படங்களும் தயாரித்து வெளியிட்டு வந்தது.
 எஸ்.எஸ், வாசனை ஆசிரியராகக் கொண்ட "ஆனந்த விகடன்' பத்திரிகைத் தமிழ் மக்களின் அபிமானப் பத்திரிகையாக இருந்தது. இளைஞராக அசோகமித்ரன் கலை சார்ந்த தொழில் கூடத்தில் தான் வேலை பார்த்தார். அது அவர் கலையார்வத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தது என்றே குறிப்பிட வேண்டும்.
 அவர் முதலில் ஆங்கில மொழியில் கதைகள் எழுதினார். சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஆங்கில இதழ்களுக்கு அனுப்பி வைத்தார். பிரசுரமாகவில்லை. பின்னர் தான் ஆங்கிலத்தில் எழுதுவது சரியில்லை என்று அவருக்கே பட்டது. அவர் படித்த தமிழ், ஆங்கில நாவல்கள், சிறுகதைகள், பார்த்த சினிமா படங்கள் கதையெழுத ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
 ஜெமினியில் அவர் பல இயக்குநர்கள், சினிமா கதை வசன கர்த்தாகள், ஒளிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், கலை இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், உதவி இயக்குநர்கள், துணை நடிகர், நடிகைகள் என்று பலரோடும் பழகி வந்தார். அவர்களின் உளவியல் அவருக்குத் தெரிந்தது. அதன் அடிப்படையில் கதைகள், நாடகங்கள் எழுதினார். ஜெமினியில் அவர் வேலை பார்த்தபோதே எழுத்தாளராகத்தான் இருந்தார். ஆனால், அவர் கதைகள் சினிமா உலகத்திற்கு வேண்டியதாக வாசன் உட்பட யாரும் கருதவில்லை.
 "ஒளவையார்', "மோட்டார் சுந்தரம்பிள்ளை', "வஞ்சிக்கோட்டை வாலிபன்' என்று பிரபலமான சினிமா படங்கள் எடுத்து வந்த ஜெமினி நிறுவனம் மூடப்பட்டது. அசோகமித்ரன் வேலை இழந்தார். எழுத்து அவர் வாழ்க்கையாகியது.
 1964-ஆம் ஆண்டுகளில் நாங்கள் நடத்தி வந்த இலக்கியச் சங்கக் கூட்டங்களுக்குச் சைக்கிளில் வருவார். மெல்ல பேசுவார். அவர் சிறுகதைகள் "கலைமகள்" பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தன. அவற்றைப் படித்து நாங்கள் அவர் மீது மரியாதைக் கொண்டு இருந்தோம்.
 அவர் தியாகராயநகர், தாமோதர ரெட்டித் தெருவில் வசித்து வந்தார். அவரிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அவரது தந்தை ஜெகதீசன், செகந்திராபாத்தில் வாங்கியது என்றார். நன்றாகத் துடைத்து ஆயில் போட்டு வைத்துக் கொண்டிருந்தார். நான் அவரோடு சென்னையில் பல இடங்களுக்கும் சென்று இருக்கிறேன். குறிப்பாக கன்னிமாரா நூலகம், பிரிட்டீஷ் கவுன்சில், அமெரிக்க நூலகம் எல்லாம் சைக்கிளில் தான் வருவார்.
 அமெரிக்கத் தூதுவர் அலுவலகம் புதிதாக ஜெமினி அருகில் கட்டப்பட்டது. அதில் ஒர் சிற்றரங்கம் இருந்தது. அதில் இருபது, இருபத்தைந்து எழுத்தாளர்கள் ஓவியர்கள், இயக்குநர்கள் என்று சிலரை அழைத்து அபூர்வமான ஹாலிவுட் சினிமா பாடல்கள் கொண்டு வந்து காட்டினார்கள். நானும், என் மனைவி ரோகிணியும், ஹெர்மன் மெல்வெல் எழுதிய "திமிங்கலவேட்டை-மோபிடிக்' படம் பார்த்தோம்.
 இன்னொரு முறை நானும், அசோகமித்ரனும் "சிட்டிசன் கேன்' என்ற அமெரிக்கப்ப படம் பார்த்தோம். அது இருபத்து நான்கு வயது ஆர்சன் வெல்ஸ் இயக்கியது. இது வரையில் சிட்டிசன் கேனுக்கு இணையாக இன்னொரு சினிமா படம் வெளிவர வில்லையென்று விமர்சனங்கள் எழுதியபடி இருக்கிறார்கள்.
 அசோகமித்ரன் நிறைய சினிமா பார்த்தவர் என்பது மட்டுமல்ல. ஆங்கிலத்திலும், தமிழிலும் சினிமா பற்றி அதிகமாக எழுதியவரும் அவர் தான். சினிமா மட்டமானது என்று எழுத்தாளர்கள் சாதாரணமாகச் சொல்வதுண்டு. ஆனால் அது ஓர் அரிய கலையானது என்றே அவர் எழுதி வந்தார்.
 "இருட்டிலிருந்து இருந்து வெளிச்சம்'- என்ற அவரின் சினிமா கட்டுரை படைப்பாற்றலின் வெளிப்பாடாகவே இருக்கிறது. வெற்றி தோல்வி என்பதற்கு இடையில் மனிதர்களின் உளவியல் புரிந்து கொள்ளத்தக்க விதமாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் சினிமாவில் உச்சமாக வெளிச்சத்தில் இருந்த தேவிகா ராணியை பெங்களூரில் ஒரு திரைப்பட விழாவில் ஒளியிழந்து கவனிப்பாரின்றி கைவிடப்பட்டது பற்றி மனம் கசியும் படி எழுதியிருக்கிறார்.
 அசோகமித்ரனின் மிகச் சிறந்த நாவலில் ஒன்று "கரைந்த நிழல்கள்' சினிமா நாவல். ஆனால் சினிமா பற்றியது இல்லை. சினிமா என்பதில் இருக்கும் பலவிதமான மனிதர்களின் ஆசா பாசங்கள், சிறியதும் பெரியதுமான செயற்பாடுகளை நுட்பமான தொனியில் சொல்லி இருக்கிறார்.
 சினிமா தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இருந்த போது, "சிந்து பைரவி' படம் தணிக்கைச் சான்றிதழ் பெற வந்தது. இயக்குநர் சார்பாக அனந்த், பிரமிட் நடராஜன் வந்திருந்தார்கள். அவர்களிடம் "சிந்து பைரவி' படத்திற்குக் கொடுக்கப்பட்ட சில கட்களை அதிகாரி தெரிவித்தார். அதிகாரப் பூர்வமான பேச்சுகள் முடிந்ததும் வெளியில் வந்தோம்.
 "சிந்து பைரவி எப்படி இருக்கிறது?'' என்று அனந்த் கேட்டார்.
 "நன்றாக ஓடும். சிவகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை "ஹாப்மேன்' படத்தில் இருந்து அப்படியே தழுவி இருக்கிறீர்கள்'' என்றேன்.
 அனந்த் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "ஜெர்மன் படத்தை எங்கே பார்த்தீர்கள்?' என்று கேட்டார். "மாக்ஸ் முல்லர் பவனில்தான்' என்றேன்
 "நான் ஜெர்மனியில் ஒரு திரைப்பட விழாவில் பார்த்தேன். நல்ல காட்சி. யாரும் ஒரிஜினல் பார்த்து இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்'' என்றார். நான் பதிலொன்றும் சொல்லவில்லை.
 அனந்த் பெரிய சினிமா ரசிகர். உலகத்தில் பல நாடுகளிலும் நடைபெறும் சினிமா திருவிழாக்களில் படம் பார்த்து நல்ல கதை, கருத்தான வசனம், நகைச்சுவை காட்சிகள் என்று பலவற்றையும் கொண்டு வந்து இயக்குநர் பாலசந்தருக்குக் கொடுக்கக்கூடியவராக இருந்தார்.
 அவருக்கு கவிதாலயா நிறுவனம் ஓர் ஆட்டோ கொடுத்து இருந்தது. அதில்தான் மேற்கு மாம்பலத்தில் இருந்த தன் வீட்டில் இருந்து மயிலாப்பூரில் இருந்த கவிதாலயாவிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார். சில சமயம் நந்தனத்தில் இருந்த என் வீட்டிற்கு வருவார். இரண்டு பேரும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இலக்கியம், சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். அசோகமித்ரன் சினிமா நாவலான "கரைந்த நிழல்கள்' படிக்கக் கொடுத்தேன்.
 சென்னை மாக்ஸ் முல்லர் பவனில் குண்டா கிராஸ் என்ற ஜெர்மன் எழுத்தாளரோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அசோகமித்ரன், சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி, நான் உட்பட இருபது எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தோம்.
 குண்டர் கிராஸ் சந்திப்பிற்குப் போக வேண்டுமா? என்ற விவாதம் எங்களிடையே நடைபெற்றது. ஏனெனில் அவர் இளம் பருவம் முதலே ஹிட்லர் ஆதரவாளர். எஸ்.எஸ் என்ற ரகசிய போலீசில் இருந்தவர். ஹிட்லர் ஆதரவு பிரசார அறிக்கைகள் எழுதி கொடுத்தவர். ராணுவத்தில் சேர்ந்து போரிட்டவர். அமெரிக்காவில் சிறை பிடிக்கப்பட்டு கைது முகாமில் வைக்கப்பட்டவர். போர் முடிந்ததும், விடுதலையான பின்னர் நிறைய சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதி பேர் வாங்கிவிட்டார். அதோடு மொழி பெயர்ப்பாளரும் கூட.
 1959-ஆம் ஆண்டு வெளிவந்த அவரின்" தி டின்ட்ரம்' என்ற நாவல் பெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பல மொழிகளிலும் மொழி பெயர்ப்புகளும் வந்து இருந்தன. பல முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரின் அரசியல் சார்பு காரணமாக நாவல் நிராகரிக்கப்பட்டு வந்தது.
 குண்டர் கிராஸ் எல்லோரிடமும் இணக்கமாகவே பழகினார். அவர் எளிய மனிதனாகவே இருந்தார். ஆனால் வேஷதாரி இல்லை என்றே பட்டது. தன் இளம் பருவ ஹிட்லர் ஆதரவு சித்தாந்தங்களை உதறிவிட்டவர் போலவே இருந்தார்.
 "நீங்கள் யாராக அறியப்பட வேண்டும் " என்று கேட்டதற்கு, "எழுத்தாளனாக மட்டும் அறியப்பட வேண்டும்' என்றார்.
 1999-ஆம் ஆண்டில் குண்டர் கிராஸ் நோபல் பரிசு பெற்றார். அவர் கவிதையொன்றை "கசடதபற' தமிழில் வெளியிட்டது.
 அசோமித்ரன் எங்களோடு பல இடங்களில் சிறுகதைகள் படித்திருக்கிறார். அவர் கதை படிப்பில் நகைச்சுவை மிளிரும். ஆர்ப்பாட்டம் இன்றி சிறுகதைப் படித்து மனம் கவர்ந்து விடுவார். பல ஆண்டுகள், நாங்கள் சிறுகதைகள் வாசிக்கும் இடமாக கதீட்ரல் தேவாலயத்தின் எதிரே இருந்த டிரைவ் இன் ஓட்டல் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு நான்கரை மணிக்குச் சிறுகதைகள், கவிதைகள் படிப்போம்.
 ஒரு முறை ஞானக்கூத்தன் "அம்மாவின் பொய்கள்' கவிதைப் படித்தார். நான் "பாய்ச்சல்' என்ற சிறுகதையை வாசித்தேன். அசோகமித்ரன் "வாழ்விலே ஒரு முறை' என்னும் சிறுகதையைப் படித்தார். கதை வாசிப்பின் இடையே விமர்சனர்களும் உண்டு. படிக்கப் பட்டப் படைப்புகள் மீதான விமர்சனங்கள் என்று தான் இல்லை. பெரும்பாலும் தமிழ்படைப்புகள், சினிமா, நாடகம் பற்றியெல்லாம் விமர்சனம் நடைபெறும். இரவு ஏழு மணிக்கு மேல், டிரைவ் இன் ஓட்டலுக்குச் சென்று மசால் தோசை சாப்பிட்டு விட்டு, கதைப் பேசிவிட்டு ஆளுக்கொரு சைக்கிளில் இரவு ஒன்பது மணிக்கு மேல் புறப்படுவோம்.
 நான் கன்னிமாரா நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகங்களில் உட்கார்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதுவேன். அசோகமித்ரன் காலை ஏழு மணிக்கு சைக்கிளில் சென்று, நடேசன் பூங்காவின் ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எழுத்து என்பது எழுதும் இடம் சார்ந்தது இல்லை.
 (அடுத்த இதழில்.. கே.எம்.ஆதிமூலம்)
 

மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்து கொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்றுதான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக் கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால் இரு அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் கூட ஊசலாட்டதைப் பிரதிபலித்தால்தான், எழுத்து உண்மையானது என்று நினைப்பேன்.
 -அசோகமித்ரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com