சம்பளம் வேண்டாம்!: இசை போதும்!!

நான்,  என் மனைவி லதா மேனன், எங்கள் மகள்கள், சரஸ்வதி மேனன், லட்சுமி மேனன். எனது தாயார் கல்யாணி மேனன் சிறந்த பாடகி. எங்கள் குடும்பமே கலைக் குடும்பம் தான்.
சம்பளம் வேண்டாம்!: இசை போதும்!!


குடும்பம்: நான்,  என் மனைவி லதா மேனன், எங்கள் மகள்கள், சரஸ்வதி மேனன், லட்சுமி மேனன். எனது தாயார் கல்யாணி மேனன் சிறந்த பாடகி. எங்கள் குடும்பமே கலைக் குடும்பம் தான். இன்னும் சொல்லப் போனால் சாப்பாட்டை விட நாங்கள் அதிகமாகக் கலையை பற்றியே பேசுவோம். எந்தப் படத்தை பற்றியும் நாங்கள் கூறுவது போல் யாரும் கருத்துக் கூறமுடியாது. அந்த அளவிற்கு நாங்கள் ஒரு கலையைப்  பற்றி அலசி ஆராய்வோம். சினிமாக் கலை பற்றி மட்டுமே சொல்லவில்லை, பல்வேறு கலைகளைப் பற்றியும் எங்கள் கருத்துகளை நாங்கள் ஆணித்தரமாகக் கூறுவோம். 

இசை: எனக்கு இந்த இசைதான் விருப்பம் என்று கூறமாட்டேன். எந்த வகையான இசை என்றாலும், என்னை மறந்து ரசிப்பேன். என்னுடைய “"மின்சாரக் கனவு'” படத்திற்கு என்ன சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ. வி.எம். சரவணன் கேட்டபோது,""நான் கேட்டது மியூசிக் அகாதெமியில் நிரந்தர சந்தாதாரராக ஆகி, டிசம்பர் மாதத்தில் என் குடும்பம் இசைக் கச்சேரிகள் கேட்க வசதி செய்து கொடுக்க வேண்டும்''” என்றேன்.

கிரிக்கெட்: நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு வாழ்க்கையை நமக்குக் கற்று கொடுக்கிறது என்றுச் சொல்லலாம். எண்ணிப் பார்த்தால் எல்லோருக்கும் புரியும்.  எனக்கு விருப்பமான விளையாட்டு வீரர்கள் என்றால் அனில் கும்ப்ளே, செüரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண். இன்றைய விளையாட்டு வீரர்களில், என்னால் மிகவும் நேசிக்கப்படுபவர்களில் தலையானவர் தோனி. இவர் விளையாடுகிறார் என்றால், நான் எங்கும் வெளியே செல்லமாட்டேன்.  

படிப்பு: இதுதான் படிப்பேன் இதை படிக்கமாட்டேன் என்று, ஒருபோதும் என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன். தொன்மையான கலைகள், அரசியல், சரித்திரம், தத்துவம், இலக்கியம் என்று எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படிக்கத் தொடங்கி விடுவேன். இது என் தந்தையாரின் பழக்கம். என் 15 -ஆவது வயதில் ஐஐடி.சென்ட்ரல் பள்ளியில் ஆரம்பித்தது என்னுடைய படிக்கும் பழக்கம். அது இன்று வரை தொடர்கிறது.இன்னும் சொல்லப் போனால் என் தந்தையாரின் புத்தகங்களில்,  இன்னும் சில என்னிடம் இருக்கிறது. 

குரு: ஒளிப்பதிவு என்றால் நான் சொல்ல விரும்பும் முதல் பெயர் அசோக் மேத்தா. தொப்பி அணிந்திருப்பார். போட்டோ கிராபியை பற்றிய என் மனக் கண்களை திறந்துவிட்டவர். அவர் ஒளிப்பதிவு செய்த பலப் படங்களை இன்றும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இயக்கம் என்றால், இயக்குநர்கள் சத்யஜித் ரே, குருதத், மணிரத்னம் போன்ற பலரிடம் நான் கற்றப் பாடங்கள் பல. ஒவ்வொருவரிடமும் நான் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். எழுத்து என்றால், சுஜாதா. அவரிடம் நான் கற்றது பல. அதில் கர்நாடக சங்கீதமும் அடக்கம்.

நடைப்பயிற்சி: நீங்கள் நலமாக வாழ இந்த நடைப் பயிற்சி  மிகவும் தேவை . அதுவும் காலை நேர நடைப் பயிற்சி . சூரியன் உதிக்கும் முன் நீங்கள் எழுந்து நடைப்பயிற்சியை செய்ய கிளம்பினால் அதுவே சரியான நேரமாகும். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் நடைப்பயிற்சி செய்ய மறக்காதீர்கள் என்று என் நண்பர்கள் எல்லோருக்கும் நான் கூறுவேன்.  எல்லாமே நல்ல எண்ணத்தில், முன்னேற்ற சிந்தனையில்,எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' -என்ற சொற்களின் படி நடந்தால் அதுவே வாழ்கையில் சந்தோஷத்தின் எல்லை. 

கேமரா: நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவேனா? நானும் கேமராவும் இந்த வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன்.  இன்றும் நான் வைத்திருந்த சிறிய கேமிராவை நினைத்துப் பார்க்கிறேன்.  மினோல்டா, பின்னர் ருஷ்ஷியன் கேமரா. "இந்து' பத்திரிகையில் வேலைப் பார்த்த தேசிகன் என்பவர் எனக்கு அந்த கேமிராவைக் கொடுத்தார்.  அதை எடுத்துக் கொண்டு நான் எடுத்த படங்களும், அது எனக்குத் தந்த மகிழ்ச்சியும் சொற்களில் அடங்காது. ஒளிப்பதிவாளர் ஆன பின்னர் நான் பல்வேறு கேமராக்களைக் கையாண்டுள்ளேன். ஆக கேமரா தான் என் முதல் உயிர்த் தோழன் என்று கூறலாம்.

பொருள்: கேமரா இருக்கலாம். அதைக் கையாள ஒருவர் இருக்கலாம். ஆனால் பொருள் இல்லை என்றால் என்ன செய்வது? அதாவது நாம் எடுக்கப் போகும் "பொருள்' என்ன என்று முதலில் முடிவு செய்யவேண்டும். இயற்கை, மனிதர்கள் என்று எதையும் படம் எடுக்கலாம். ஆனால் எல்லாமே நமக்கு முன் இருப்பவை. ஆனால் நான் காட்டுக்குள் சென்று புலிகளை படமெடுக்க விரும்பிப் பல நாட்கள்  காத்திருந்து எடுத்த படங்கள் பல. புலியின் உடலில் இருக்கும் வரிகள், அதன் நடை என்று நான் புலியை வர்ணித்துக் கொண்டே போவேன். என்னைப் பொருத்தவரை பொருள் என்றால், புலிகள் என்றுதான் கூறுவேன். காரணம் நாம் நினைக்கும் எதுவும் அங்கு நடக்காது.  எதுவுமே ஒரு நொடியில் படம் பிடிக்க வேண்டும்.

சர்வம் தாளமயம்: நான் வரும் வாய்ப்புகள்  எல்லாவற்றையும் ஒத்துக் கொள்வதில்லை. எனக்கு முதலில் சரியான கதை கிடைக்க வேண்டும். பின்னர் அதற்கு நான் சிறப்பான முறையில் திரைக்கதை அமைக்க வேண்டும். இவை எல்லாம் கிடைத்தால்தான் நான் படமே இயக்குவேன். சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு “"சர்வம் தாளமயம்'” என்ற படத்தை எடுத்துள்ளேன். மக்கள் இந்த படத்தைப் பார்த்து எனக்குப் பாராட்டு தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com