பாதுகாப்புப் பணியே போதும்! 

ஜெயலலிதாவை அவரது இளமைக்காலம் முதலே நான் அறிவேன்.  முதன் முதலில் அவர் சென்னைக்கு வந்த போது தெற்கு போக் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லத்திற்கு எதிரே இருந்த மாடி வீட்டில் தனது
பாதுகாப்புப் பணியே போதும்! 

சென்ற இதழ் தொடர்ச்சி.....

ஜெயலலிதாவை எப்போது முதல் அறிவீர்கள்?  

ஜெயலலிதாவை அவரது இளமைக்காலம் முதலே நான் அறிவேன்.  முதன் முதலில் அவர் சென்னைக்கு வந்த போது தெற்கு போக் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லத்திற்கு எதிரே இருந்த மாடி வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்தார்.  அதன்பின் தியாகராய நகரில் சிவஞானம் சாலையில் வசித்த பின்னரே போயஸ் தோட்ட இல்லம் சென்றார். 1960-ஆம் ஆண்டு என்று நினைவு. சென்னை கோல்டன் ஸ்டுடியோவில் எம்ஜிஆர் நடித்த "பாக்தாத் திருடன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுக் கொண்டிருந்த போது தனது தாயாருடன் அங்கு வந்த ஜெயலலிதா முதன் முறையாக எம்ஜிஆருக்கு அறிமுகமானார். அப்போது அவருக்கு சுமார் பத்து வயது இருக்கலாம். அந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த நாங்களும்,  அப்போதுதான் முதல் முறையாக ஜெயலலிதாவைப் பார்த்தோம். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் எம்ஜிஆர் தலைமையில் நடைபெற்ற, ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சியின் போதும் பின்னர் 1965-இல் முதன் முதலாக எம்ஜிஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பின் போதும் ஜெயலலிதாவைக் காண நேர்ந்தது. அதன்பின் எம்ஜிஆருடன் இறுதியாக அவர் ஜோடி சேர்ந்து நடித்த "பட்டிக்காட்டு பொன்னையா' திரைப்படம் வரை பல்வேறு திரைப்படங்களில் நாங்களும் அவருடன் நடித்து வந்துள்ளோம்.   

ஜெயலலிதா அரசியலில் வளர வேண்டும் என  எம்ஜிஆர் நினைத்தாரா?

நிச்சயம் நினைத்தார். அதனாலேயே கட்சியில் ஜெயலலிதா சேர்ந்த பின் அடுத்தடுத்து பொறுப்புகளைக் கொடுத்தார். ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் எங்களிடம் ஜெயலலிதாவுக்கு வரும் மக்கள் கூட்டம் பற்றி ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொள்வார்.  ஜெயலலிதாவின் உரை குறித்தும், அதற்கு மக்களின் ஆர்வம் எப்படி இருந்தது ? என்று கேட்பார். மக்கள்  கூட்டம் உங்களுக்கு வருவதைப் போன்றே ஆர்வமுடன் வருகிறது எனும் போது மகிழ்ச்சியடைவார். அம்முவிற்கு யாரும் ஆதரவில்லை. அம்மு அரசியலில் உயர்வான இடத்திற்கு வர வேண்டும் என்றும் எங்களிடம் கூறியுள்ளார்.

போயஸ் தோட்ட இல்லம் வாங்க எம்ஜிஆர் உதவி செய்துள்ளாரா?

போயஸ் தோட்ட இல்லத்தை கல்யாண ராமய்யர் என்பவரிடமிருந்து ஜெயலலிதாவின் தாயார் வாங்கிக் கட்டுமான பணிகள் செய்து வந்த சமயத்தில் உடல்நலம் சரியில்லாது கீழ்ப்பாக்கத்தில் கே. ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது எம்ஜிஆர் அவ்வப்போது சென்று கவனித்து வந்தார்.  அந்த சமயத்தில் எம்ஜிஆர் கேட்டுக் கொண்டபடி அவரது ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த நாங்கள் சந்தியா அம்மையாருக்கு தேவைப்பட்ட ரத்தம் வழங்கியதை என்றுமே எங்களால் மறக்க இயலாது.  அதன்பின் 1971-இல் சந்தியா அம்மையார் காலமான போது,  எம்ஜிஆர் இறுதிச்சடங்கில் பங்குகொண்டு ஜெயலலிதாவிற்கு ஆறுதல் கூறினார்.  அதன்பின் போயஸ் தோட்ட இல்லத்தின் கட்டுமானப் பணிகள் கடன் சுமைகளால் பாதிக்கப்பட்ட போது எம்ஜிஆர் மன
முவந்து  போயஸ்தோட்ட இல்லத்தின் பணிகள் முழுமையடைய உதவினார்.

முதல்வராக இருந்த  எம்ஜிஆர்,  உங்களுக்குப் அரசாங்க பதவி  கொடுக்க நினைத்தாரா?

நீண்டகாலம் அவருடனேயே இருப்பதால் எங்களுக்கு அரசில் பதவி கொடுக்க வேண்டுமென்றும் நினைத்தார். அதை நாங்கள் ஏற்கவில்லை. குடிசை மாற்று வாரியத் தலைவர் என். வி.என்.செல்வம் பதவிக்காலம் முடிந்தவுடன் அடுத்து அப்பதவியை எங்களில் யாருக்கேனும் கொடுக்க நினைத்து, என்னிடம் கேட்டார். நான்" வேண்டாம் அண்ணே' உங்களுடன் இருப்பதையே விரும்புகிறோம் என்றேன். சிரித்துக்கொண்ட எம்ஜிஆர்,  சரி உங்கள் விருப்பம் அதுவானால் நான் என்ன சொல்ல? அப்படியே ஆகட்டும் என்று கூறினார்.  அதன்பின் அப்பதவியை அவரது திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிய பா.அங்கமுத்துவுக்கு கொடுத்தார். காரணம் அப்போது எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்த நாங்கள் இந்தப் பதவியினால் ஏற்படும் இடைவெளியை விரும்பவில்லை. எம்ஜிஆருடன் கூடவே இருக்கும் பதவியை விட வேறு எந்த ஒன்றும் எங்களுக்குப் பெரிதல்ல.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலங்களில் உங்களுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற வருத்தமுண்டா?

ஜெயலலிதாவை சுமார் பத்து வயது முதலே நாங்கள் கண்டு வருகிறோம், எம்ஜிஆருடன் முதல்முதலாக  1965- இல் அவர் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்' படம் முதல்  1973- இல் ஜெயலலிதா இறுதியாக எம்ஜிஆருடன் நடித்த "பட்டிக்காட்டு பொன்னையா' வரை ஏராளமானப் படங்களில் அவருடன் பழகி வந்துள்ளோம்,  குறிப்பாக எம்ஜிஆருடன் ஜெயலலிதா நடித்துள்ளப் படங்களைத் தவிர மற்ற நடிகர்களுடன் அவர் நடித்துள்ள பல படங்களில் நான் நடித்துள்ளேன்,  ஜெயலலிதா ஜோடியாக நடித்த எம்ஜிஆரின் இரட்டை  வேடப் படங்களான "மாட்டுக்காரவேலன்',  "நீரும்நெருப்பும்', "பட்டிக்காட்டுபொன்னையா' போன்றப்  படங்களில் எம்ஜிஆரின் மற்றொரு வேடத்திற்கு டூப் நடிகராகவும் நடித்துள்ளேன்.    அதன்பின்  அரசியலிலும் இக்கட்டான சூழலில் அவருக்குப் பாதுகாவலர்களாக செயல்பட்டுள்ள எங்களை அவர் அவ்வளவு எளிதில் மறந்திட இயலுமா?  நிச்சயம் இயலாது. இருப்பினும் கால ஓட்டத்தில் ஏற்பட்ட  சில சூழ்நிலைகளால் அத்தகைய வாய்ப்புகளுக்கு  இடம் அமையவில்லை. அதனாலேயே எங்கள் மீதான அன்பு அவருக்கும் அதுபோல் அவர் மீதான அன்பு எங்களுக்கும்  இல்லை என்றாகாது.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com