என்றும் இருப்பவர்கள்!: ஓவியர் ஏ.பி.சந்தானராஜ் - 18

1988-ஆம் ஆண்டில் "சென்னை கவின் கலைக்கல்லூரி' என்று அழைக்கப்படும் ஓவிய சிற்பக்கல்லூரியின் முதல்வராக ஏ.பி.சந்தானராஜ் இருந்தார். சென்னை ஓவியக் கல்லூரி தான் இந்தியாவிலேயே முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது.
என்றும் இருப்பவர்கள்!: ஓவியர் ஏ.பி.சந்தானராஜ் - 18


1988-ஆம் ஆண்டில் "சென்னை கவின் கலைக்கல்லூரி' என்று அழைக்கப்படும் ஓவிய சிற்பக்கல்லூரியின் முதல்வராக ஏ.பி.சந்தானராஜ் இருந்தார். சென்னை ஓவியக் கல்லூரி தான் இந்தியாவிலேயே முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது. 1851-ஆம் ஆண்டில் டாக்டர் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அரசாங்கம் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
வங்காள ஓவியரும் சிற்பியுமான தேவி பிரசாத் ராய் செüத்திரி காலத்தில் இக்கல்லூரி அதிகமான புகழ் அடைந்தது. மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை மகாத்மா காந்தி சிலை  அவர் உருவாக்கியது தான்.
சென்னை ஓவிய சிற்பக்கல்லூரியில் பல மாநில மாணவர்கள் வந்து சேர்ந்து கலைகள் பயின்றார்கள். அதுவே தென்னிந்தியாவின் ஒரே கலைக்கல்லூரியாக இருந்தது. கல்லூரி,  சமூகத்திற்குக் கலை வழியாக வழங்கியவற்றையும், மக்கள் பெற்றவற்றையும் பதிவு செய்யும் விதமாக ஓர் ஆவணப்படம் எடுக்க தூர்தர்ஷன் நிதி உதவி அளித்தது. ஆவணப்
படத்தின் பெயர் :  "இந்தியாவின் முதல் கலை, கைத்தொழில் கல்லூரி.'
கல்லூரி அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே அதன் இயக்குநரைச் சந்தித்து அனுமதி கேட்டு ஒரு கடிதம் கொடுத்தேன். ஆவணப்படம் எடுக்கும் நோக்கத்தை விளக்கிக் கூறினேன். அவர் பாதியில் இடை மறுத்தார். 
""நீங்கள் காமிராவைத் தூக்கிக் கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் நுழையவே கூடாது. அது கல்லூரி பாடம் கற்பிக்கின்ற இடம். தூர்தர்ஷன் அது பற்றி படம் எடுக்க என்ன உரிமை இருக்கிறது. நீங்கள் எந்த அடிப்படையில் அனுமதி கேட்டு வந்தீர்கள்''  என்று வினவினார். 
""அது ஒரு கலைக் கல்லூரி. நமது பாரம்
பரிய பெருமைகளின் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், இப்படியொரு கல்லூரி இருப்பது பொது மக்களுக்குத் தெரியாது. அதன் சாதனைகளையும் மக்கள் அறிய மாட்டார்கள். ஆவணப்படம் கல்லூரியின் செயல்பாடு; மாணவர்கள் சாதனை என்பதையெல்லாம் எடுத்துச் சொல்வதாக இருக்கும். உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள், சிற்பிகள் எல்லாம் இங்கே உருவாகி வெளியில் பெயரும் புகழும் பெற்றிருக்கிறார்கள்.'' என்றேன். 
""எங்களுக்கு நீங்கள் ஒன்றும் பாடம் நடத்த வேண்டியதில்லை. ஆவணப்படம் எடுக்க அனுமதி கிடையாது. நீங்கள் போகலாம்'' என்றார் தொழில் நுட்பக்கல்வி இயக்குநர். 
கல்லூரி முதல்வர் ஏ.பி. சந்தானராஜிடம், இயக்குநர் சொன்னதைக் கூறினேன். அவர் ஒரு சிரிப்புச் சிரித்துக்கொண்டார். நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
""எத்தனை நாட்கள் படம் எடுப்பீர்கள். என்னவெல்லாம் எடுப்பீர்கள்?''
""மாணவர்கள் படம் வரைவது. வகுப்பறைகள். சில நேர்காணல்கள், கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், சாதனையாளர்கள், அவர்களின் படைப்புகள்'' என்றேன்.
""எனக்கொரு கடிதம் கொடுங்கள். நான் அனுமதி கொடுக்கிறேன். கல்லூரி பற்றி நல்லதைத்தானே சொல்லப் போகிறீர்கள். அதில் யாருக்கும் பாதிப்பு கிடையாது. நீங்கள் வாருங்கள்'' என்றார்.
ஏ.பி. சந்தானராஜ் என்னும் ஆன்ட்ரூஸ் பீட்டர் சந்தானராஜ் 1932-ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் பிறந்தார். அவரைப் பிறவி ஓவியர் என்றுதான் சொல்ல வேண்டும். சிறு வயதிலேயே ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். தன் பதினாறாவது வயதில் சென்னை ஓவிய, சிற்பக் கல்லூரியில் சேர்ந்தார். அப்பொழுது ராய் செüத்திரி முதல்வர். கே.சி.எஸ். பணிக்கர், எஸ்.தனபால் எல்லாம் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். 
உலகம் முழுவதிலும் கலைகளிலும், இலக்கியத்திலும் மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. பாப்லோ பிகாசோ ஒவ்வொரு கலைஞரையும் பாதித்துக்கொண்டிருந்தார். அது சென்னைக் கல்லூரியில் பணிக்கர், தனபால், ஜானகிராமன் வழியாகப் புகுந்து கொண்டிருந்தது.
சந்தானராஜ் நவீனத்தை உள்வாங்கிக் கொண்டு மரபின் செழுமையோடு புத்தகம் மற்றும் புதிய படைப்புகளை உருவாக்கினார். அது சக ஆசிரியர்களின் விமர்சனங்களையும், மாணவர்களையும் கவர்ந்தது. தனித்தன்மை கொண்ட ஓவியராக இருந்தார். 
ஓவியங்கள் மீது வெளிச்சம் பாய்வதையும்-அது பிரதிபலிப்பதையும் உண்ணிப்பாகக் கவனித்துக்கொண்டு இருந்தார். அதன் மீது அவருக்கு அதிகமான அக்கறை இருந்தது தெரிந்தது.
இரண்டாம் நாள் அவரை ஒரு ஓவியம் வரையும்படி கேட்டுக்கொண்டோம். கல்லூரி வளாகத்தில் இரண்டு மரங்களுக்கு அடியில் கேன்வாûஸ ஸ்டாண்டில் பொருத்தினார். ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொண்டு, கருப்பு, சிவப்பு, நீலம் என்று வர்ணங்களை மாறி மாறி எடுத்துக் கொண்டு வேக வேகமாக வரைய ஆரம்பித்தார். அரூபமான ஓவியம், அது ரூபமாக அவர் மனத்தில் உருவாகி இருந்தது. ஸ்டூலில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து சட்டையை இழுத்து விட்டுக்கொண்டார். சில விநாடிகள் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். தலையைச் சிலுப்பிக் கொண்டு பரவசமுற்றவர் போல வரைய ஆரம்பித்தார்.
மாணவர்கள் அவர் வரையும் நேர்த்தியையும், வேகத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அவருக்குச் சுற்றுப்புறச்சூழல் தெரியவில்லை. ஓவியமும் அவருமாக இருந்தார். ஓவியத்தை முடித்துவிட்டு எங்களைப் பார்த்து புன்னகைப்பூத்தார். நாங்கள் வாழ்த்துத் தெரிவித்தோம். கைவிரல்களை முறித்துக்கொண்டு சந்தோஷமாகச் சென்றார்.
அன்று மாலை ரெம்ப்ராண்ட், வான்காக், பிகாசோ, தாகூர் ஓவியங்கள் கொண்ட அறையில் அமர்ந்து நேர்காணல் கொடுத்தார். 
ஓவியம் என்பது பார்த்ததைப் பார்த்த
படியோ கற்பனையில் சிருஷ்டித்துக் கொண்டதைத் தெரிந்ததின் அடிப்படையிலோ வரைவது இல்லை. அது மனத்தின் அடியாழத்தின் இருந்து ஒளியிட்டு வருவதை வரைவது. கலைஞர்கள் பலரும் வெளிச்சம், இருட்டுப் பற்றி நிறைய பேசி இருக்கிறார்கள். ஏனெனில் அது பேசக்கூடியது. ஒரு படைப்பை உயிரோட்டமாக வைத்திருப்பது அதில் வெளிப்படும், வெளிச்சமும் இருட்டுந்தான். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது இல்லை. ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கிறது.
ரெம்ப்ராண்ட் என்ற நெதர்லாந்து ஓவியன்தான். அதனை துல்லியமாகக் கண்டறிந்து ஓவியம் வரைந்தான். பின்னர்தான் அது பற்றி பிரக்ஞை ஓவியர்களிடம் ஏற்பட்டது. முந்நூறு ஆண்டுகள் கழித்து அது சினிமாவிற்குள் புகுந்துவிட்டது. சினிமா ரெம்ப்ராண்ட்டால்தான் பிரகாசிக்கிறது என்றார்.
சந்தானராஜ் ஓவியர் என்பதற்கு மேல் விஞ்ஞான பூர்வமாக ஓளி பற்றியும் அறிந்தவராக இருந்தார். அவருக்குச் சொந்தமாக ஓவியம் வரைவதில் வண்ணம் கொடுப்பதில் ஞானம் இருந்தது போல அவை பற்றி பேசவும் அறிந்திருந்தார்.
ஆவணப்படம் எடுத்து முடித்ததும், அவரைப் பார்க்க அழைத்தோம். அவர் தலையசைத்து மறுத்துவிட்டார்.
அவர் பல ஆண்டுகளாக குரோம்பேட்டையில் எம்.சி.நகர் வாசியாக இருந்தார். நானும் குரோம்பேட்டை வாசியானேன். ஒரு காலைப் பொழுதில் வங்கி வாசலில் அவரைப் பார்க்க நேர்ந்தது. உணர்ச்சி வசப்பட்டவராக கையைப் பிடித்துக் கொண்டார். வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பழங்காலத்து மர கதவு. முதன் முதலாக என்னைப் பற்றி விசாரித்தார். எழுதுவது பற்றி கேட்டார். அவர் பேச்சில் இருந்து கவிதை நாவல் படிக்கக்கூடிய ஆசாமியாகப் படவில்லை. பைபிள் படித்திருக்கிறார். ஓவிய கண்காட்சிகள், கருத்தரங்குகளில் அறிதாக வந்து போனார். ஆனால் அவருக்கு மிதமான வண்ணங்கள் கொண்ட அக-புற வாழ்வை சித்திரிக்கும் ஆவல் அதிகமாக இருந்தது.
ஒரு முறை தன் வீட்டிற்கு அழைத்தார். மாலைப் பொழுது ஜன்னல் பக்கமாக உட்கார சொன்னார். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். மேசை மீது ஒரு பேப்பரை வைத்து, என்னை சித்திரமாக வரைந்தார். மிகவும் வேகமாக வரைந்தார். இரண்டு மூன்று முறைகள் தான் நிமிர்ந்து பார்த்தார். அதுவே அதிகம் என்று பட்டது போல வேகமாக வரைந்தார். சுமார் பதினைந்து நிமிடங்களில் வரைந்து முடித்துவிட்டார். 
என் படத்தை என்னிடம் காட்டினார். "நன்றாக இருக்கிறது' என்றேன்.
""உங்களுக்குத்தான். எடுத்துக்கொள்ளுங்கள்''  என்றார். மிகவும் பிடித்தமான ஓவியம். "தமிழ்ச் சிறுகதைகள்' என்ற நூலில் அது வெளியிடப்பட்டது.
சந்தானராஜை ஒரு முறை வீட்டிற்கு அழைத்தேன். மாலையில் வந்தார். தேநீர் பருகினார். அவருக்குத் தான் பெரிய ஒவியர் என்ற பிரக்ஞை ஒரு பொழுதும் இருந்தது இல்லை. 
காலையில் பசியாற தன் வீட்டிற்கு ஒரு முறை அழைத்தார். சுமார் எட்டு மணி வாக்கில் சென்றேன். வாசலில் காத்து இருந்து உள்ளே அழைத்துச் சென்றார். கையலம்ப இடம் காட்டினார். மேசையின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். எதிராக அவர் உட்கார்ந்து கொண்டார். பின்னர் மகாலட்சுமி என்று மனைவியை அழைத்தார். அவர் இரண்டு தட்டுக்களில் ஆவி பறக்கும் இட்லிகளோடு வந்தார். அவர் ஒரு தட்டை வாங்கி என் முன்னே வைத்தார். உடனே தலை நிமிர்ந்து பார்த்தார். பேன் வேகமாகச் சுற்றிக் கொண்டு இருந்தது. அவசர அவசரமாக எழுந்து போய் பேனை நிறுத்திவிட்டு வந்தமர்ந்தார்.
நான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.
""இட்லி மட்டுமல்ல உணவையே சுடசுட சாப்பிட வேண்டும். பேன் காற்றில் ஆறவிடக்கூடாது. இட்லி ஆறுவதற்குள் வாய்க்குள் போய்விட வேண்டும். சூடு குறைந்தால் சுவை குன்றி போய்விடும்'' என்றார்.
"'நாங்கள் சூடே சுவையென்று சுடசுட சாப்பிடுகின்ற குடும்பம். இட்லி ஆவி பறக்க வேண்டும். அடுப்படியில் உட்கார்ந்து கொண்டு தோசை சாப்பிடுகிறவர்கள். சோறு சுட வேண்டும். குழம்பு கொதிக்க வேண்டும்'' என்றார். சுடசுட சாப்பிடுகிற கலைஞரைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
 சந்தானராஜ் தன் காலத்தில் இந்தியாவில் ஓவியர்கள் சிற்பிகளுக்கு வழங்கப்படும் லலித் கலா அகாதெமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். அவர் படைப்புகள் கலாபூர்வமாக இருக்கின்றன என்று பாராட்டப்பட்டவர். அதோடு அவை நன்கு விற்பனையாகின. அவர் இந்திய ஓவியர்களில் தனிச்சிறப்பும், கெüரவமும் பெற்றிருந்தார். 
ஒரு நாள் ""இப்பொழுது நான் ஏற்காட்டில் இருக்கிறேன். நல்ல இடம். வசதியாக இருக்கிறது. நிறைய படங்கள் போட்டுக் கொண்டிருக்கிறேன். புதிய புதிய சோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும். ஒரு வாரம், பத்து நாட்கள் தங்கி இருக்கலாம். நீங்கள் எழுதலாம்; நான் வரையலாம்'' என்றார்.
நான் தலையசைத்தேன். ஆனால், போக முடியாமல் போய்விட்டது.
2009 -ஆம் ஆண்டில் தனது எண்பத்து மூன்றாவது வயதில் அவர் தனியாகப் போய்விட்டார். போய்விட்டார் என்றால் இல்லாமல் போய்விட்டார் என்பது இல்லை. அவரின் அபூர்வமான படைப்புகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக அவர் இருக்கிறார்.

(அடுத்த இதழில் எம்.கோவிந்தன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com