மராட்டிய நாடோடிக்கதை: பிறவிக் கடன்

வணிகன் ஒருவன் கடலையும் எள்ளும் விதைத்து, அதன் மூலம் கடலை எண்ணெயும், நல்லெண்ணெயும் விற்றுப் பிழைத்து வந்தான்.
மராட்டிய நாடோடிக்கதை: பிறவிக் கடன்

வணிகன் ஒருவன் கடலையும் எள்ளும் விதைத்து, அதன் மூலம் கடலை எண்ணெயும், நல்லெண்ணெயும் விற்றுப் பிழைத்து வந்தான். அவனது வேலைக்கு உதவியாக ஒன்றரைக் கொம்பு கொண்ட காளைமாடு ஒன்று அவனிடமிருந்து. அதன் பெயர் "துண்டா'. 
சில ஆண்டுகள் வரை அந்த வணிகனுக்கு வியாபாரம் சிறப்பாக நடந்தது. வரவர வியாபாரம் குறைந்தது. வறுமையில் வாடினான். பிழைப்புக்கே வழி இல்லாமல் திண்டாடினான். 
ஒரு நாள் வீட்டுத் திண்ணையில் அவன் வெறுப்புடன் உட்கார்ந்திருந்தான். தன் தலைவிதியை நொந்தபடி ""எங்கே போயிற்று என் பசுமையான வாழ்வு? இப்படி நான் எத்தனை நாள் வறுமையில் வாடுவது?'' என்று புலம்பினான். 
""எதற்காக அழுகிறாய்?''  என்று எங்கிருந்தோ சத்தம் கேட்டது. ""நாளைக்கு மகாராஜாவிடம் போய்  என் காளை மாட்டுக்கும் உங்களுடைய யானைக்கும் சண்டைப் போட்டி வையுங்கள்'' என்று கேட்டுக்கொள்.
இதைக் கேட்ட வணிகனுக்கு வியப்பாக இருந்தது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லையே! எங்கிருந்து பேச்சு சத்தம் வருகிறது? மாட்டுக் கொட்டிலிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு அங்கே போய் நின்று கவனித்தான். கொட்டிலில் அவன் காளை மாடான துண்டாவைத் தவிர வேறு யாருமில்லை! சத்தம் கொடுத்தது காளை மாடே!
அந்த மாட்டிடம் அவன் கேட்டான்"" அடேய் மிகப் பலம் பொருந்திய யானை எங்கே? ஒடிந்த கொம்புடைய நீ எங்கே?''
பதில் வந்தது. ""நீங்கள் மகாராஜாவிடம் போய் முதலில் சொல்லுங்கள்.'' அவர் கேட்டு, இது மிகவும் விநோதமாக இருக்கிறது என்பதற்காக உடனே ஒப்புக் கொள்வார்.
வணிகன் மகாராஜாவிடம் போய் விஷயத்தைச் சொன்னான். மகாராஜா இந்தப் புதிய சண்டையைப் பற்றிக் கேட்டு விநோதமாக இருக்கிறதே! என போட்டி நடத்த ஒப்புக் கொண்டார். 
குறிப்பிட்ட நாளன்று வணிகன் தன் காளை மாட்டை அழைத்துக் கொண்டு பந்தய மைதானத்திற்குச் சென்றான். அங்கே பட்டத்து யானையும் வந்தது. போட்டி தொடங்கியது. 
யானையும், காளைமாடும் மெதுவாக நேருக்கு நேர் முட்டி மோதும் பாவனையில் வந்தன. என்ன நேருமோ? என்று மக்கள் மிக ஆவலுடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஆவல். 
என்ன நேர்ந்தது என்று யாரும் அறிவதற்கு முன்பே யானை,  காளை மாட்டைக் கண்டு பயந்து ஒடிப் போய்விட்டது. ஜனங்கள் வியப்புடன் வாயடைத்து நின்று விட்டார்கள். 
காளை மாடு வெற்றி பெற்றதால் அதற்கு உரிமையாளரான வணிகனுக்கு இரண்டாயிரம் பொன் கொடுத்தார் மகாராஜா. 
வீடு திரும்பியதும் காளைமாடு வணிகனைப் பார்த்து "" எஜமான் நான் போகிறேன்'' என்றது.
""போகிறாயா? எங்கே போகிறாய்?''
""உன் திறமையினால் தான் நான் மறுவாழ்வு பெற்றேன். என்னை விட்டுப் போகாதே'' என்றான்.
""என்னுடைய பிறவி முடிகிறது'' என்றது காளைமாடு.
""பிறவிக் கடன் ஒவ்வொரு பிறவியிலும் தொடங்குகிறது? நீ பேசாமல் இங்கேயே இரு'' என்றான்.
""போன பிறவியில் நான் உன்னிடமிருந்து இரண்டாயிரம் பொன் கடன் வாங்கி இருந்தேன். அதனால் தான் இந்தப் பிறவியில் உன்னிடம் வேலை செய்யும்படி ஆயிற்று. மகாராஜாவின் யானை தான் போன பிறவியில் என்னிடம் பணம் கடன் வாங்கி இருந்த ஆள். அதை அவன் தீர்க்கவில்லை.
இந்தப்பிறவியில் யானையாகப் பிறந்து மகாராஜாவிடம் வேலை பார்க்கிறான் என்று எனக்குத் தெரிந்தது. சண்டைப் போட்டி நடக்கும் போது நேருக்கு நேர் நெருங்கி வந்து என்னைப் பார்த்ததும், போன பிறவியில் நான் பணம் கொடுத்தவன் என்று தெரிய வந்ததும், பயந்து ஓடி விட்டான். 
மேலும் இந்த அரசனுக்கும் யானைக்கும் போன பிறவியில் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனால் தான் அவன் உனக்கு இரண்டாயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான். இப்படிப் பிறவிதோறும் பட்ட கடனைத் தீர்க்கவே மறு பிறவியை நாம் அடைகிறோம். என் பிறவிக் கடன் முடிந்தது வருகிறேன்.'' என்றது காளைமாடு. 
மனம் இல்லாமல் மாட்டுக்கு விடை கொடுத்தான் வணிகன்.
அன்று இரவே காளைமாடு உயிர் நீத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com