நாட்டாமைக் கூட்டம்

நவீனமயமான நீதிமன்றங்கள் நமது நாட்டில் தற்போது பரவலாக அமைக்கப்பட்டு மக்களுக்கு நீதி பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
நாட்டாமைக் கூட்டம்


நவீனமயமான நீதிமன்றங்கள் நமது நாட்டில் தற்போது பரவலாக அமைக்கப்பட்டு மக்களுக்கு நீதி பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இத்தகைய நியாயத்தீர்ப்பு வழங்கும் சட்டரீதியான அமைப்புகள் உருவாகும் முன்னர், காலம் காலமாக நமது மண்ணில் நிலவி வந்த நடைமுறை தான் "நாட்டாமைக்கூட்டம்'.

மனித நாகரீகம் வளரத் துவங்கிய போதே பல்வேறு பிரச்னைகளும் கூடவே முளைக்க ஆரம்பித்தன. அதன் விளைவாக இத்தகைய நீதி அமைப்புகள் மெல்ல தலைதூக்கியது. ஆக, இது போன்ற நீதி பரிபாலன அமைப்புகள் வெகு காலத்திற்கு முன்னரே உருவாகியிருந்தன. கி.பி 13-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இவை இருந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1200 ஆண்டுகள் பெருமைமிக்க திருத்தலமாகத் திகழ்வது திருமயம் ஆகும். திருமெய்யம் என்கிற பழஞ்சொல்லே தற்போது மருவி திருமயம் என்று அழைக்கப்படுகிறது. திருமயம் என்றால் உண்மையின் இருப்பிடம் என்று பொருள். இங்குள்ள மலையின் தெற்குச்சரிவில் கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன.

இவற்றில் சத்தியகிரீசுவரர் மூவராக அருள்பாலிக்கும் சிவாலயமும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற நாமத்தில் பள்ளி கொண்ட பெருமாள் எழுந்தருளியுள்ள விஷ்ணு கோயில் மற்றொன்று. 108 வைணவ திவ்ய தேச திருத்தலங்களில் இது தொன்மைப் பெருமைமிக்கது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 

மாறவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன், மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன், சடையவர்மன் மூன்றாம் வீரபாண்டியன், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன், பெரும் பிடுகுப் பெருந்தேவி ஆகியோரது கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. முத்தரையர், சோழர் ஆகியோரைத் தொடர்ந்து கி.பி.13-ஆம் நூற்றாண்டில் இப்பகுதி பாண்டிய பேரரசின் கீழ் இருந்தது. அந்த வேளையில், பாண்டியருக்குக் கட்டுப்பட்டு கர்நாடகத்து ஹொய்சாலர்கள் சிற்றரசர்களாக திருமயம் பகுதியை ஆட்சிபுரிந்தனர். பாண்டியர்களைத் தொடர்ந்து கி.பி 14-ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களும், கி.பி15-ஆம் நூற்றாண்டில் சூரைக்குடி சிற்றரசர்களான பராக்கிரம பாண்டிய விஜயாலய தேவர், சுந்தர பாண்டிய விஜயாலய தேவர் ஆகியோரின் ஆட்சி நடந்தது. 

கி.பி 13-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பஞ்சம் உண்டானது. ஊருக்குள் சின்னஞ்சிறு சச்சரவுகளும், பிரச்னைகளும் ஆங்காங்கே தலைதூக்கத் துவங்கின. இதன் எதிரொலியாக இந்த இரு கோயில் நித்யபூசை, மற்றும் கைங்கர்யங்கள் திருவிழாக்கள் நின்று போயின.

கி.பி 1223-ஆம் ஆண்டு பூர்வபட்சத்து தசமி ஞாயிற்றுக்கிழமை நாளில் திருமயத்தில் ஊரார் பலரது நடுவே சரித்திர முக்கியத்துவமிக்க நாட்டாமைக்கூட்டம் ஒன்று கூடியது. இக்கூட்டத்திற்கு அந்நாளைய ஹொய்சால மன்னர் ஸ்ரீவீர சோமேசுவர தேவரின் படைத்தளபதியான அப்பண்ணதண்டநாயகர் தலைமை தாங்கினார். 

திரளானவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டன. அதன்படி, திருமயம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் சீராய்வு செய்து, வரிவசூல் மேற்கொள்ள வேண்டும். இந்த வரிகள் மூலம் கிடைக்கின்ற நெல், தானிய வகைகள், மற்றும் இதர வருவாயை ஐந்து பங்காகப் பிரிக்க வேண்டும். அதில் மூன்று பங்கை பெருமாள் கோயிலுக்கும். இரண்டு பங்கை சிவன் கோயிலுக்கும் கொடுத்துவிட வேண்டும்.

சிவன் கோயிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் இடையில் உறுதியான திருமதில் ஒன்றை எழுப்பிக்கொள்ள வேண்டும். இதற்காக ஆகும் செலவுத் தொகையில் மூன்று பங்கை பெருமாள் கோயில் நிர்வாகத்தினரும், இரண்டு பங்கை சிவன் கோயில் நிர்வாகத்தினரும் தர வேண்டும். திருமயம் மலையை சரிசமமாக இருபிரிவினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீர்த்தக்கிணறுகளை தூர்வரும்போது கிடைக்கக்கூடிய பொருட்கள் விக்கிரகங்கள் ஆகியவற்றை எந்த பிரிவினருக்கு உரியதோ, அதை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது உட்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இதில் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்கள் திரளானவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் எடுக்கப்ட்ட முடிவுகளுக்கு சாட்சிகளாக பலரும் ஓலையில் கையொப்பம் இட்டுள்ளனர். அவர்களில், கூடலூரு நம சோழ காநாட்டு வேளான், குலோத்துங்க சோழ வல்லநாட்டு வேளான், கோட்டையூர் உலகளந்த சோமு காநாட்டு வேளான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதனையடுத்து கூட்ட நடைமுறைகள் நிறைவு பெற்றன.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சமய பூசல் எவ்வாறு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது என்பதை அறியும் போது தமிழரின் நாகரிகமும், வரலாறும் நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com