ஆட்சியை இழந்தாலும் கவலைப்படாத எம்ஜிஆர்

தேர்தல் சமயங்களில் எம்ஜிஆரை காண அவரது பேச்சை கேட்கக் கூடிய காத்திருந்த மக்கள் கூட்டம் எங்களை பிரமிப்பு அடையச் செய்தது.
ஆட்சியை இழந்தாலும் கவலைப்படாத எம்ஜிஆர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

எம்ஜிஆரின் தேர்தல் பிரச்சாரக் காலங்களில் நீங்கள் கண்ட அதிசயிக்கதக்க விஷயம்?

தேர்தல் சமயங்களில் எம்ஜிஆரை காண அவரது பேச்சை கேட்கக் கூடிய காத்திருந்த மக்கள் கூட்டம் எங்களை பிரமிப்பு அடையச் செய்தது.  எம்ஜிஆர் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்னரே ஏறத்தாழ  12 மணி நேரம் வரையும் சில சமயங்களில்  24 மணி நேரம் வரை கூட உச்சி வெயிலையும் கூடப் பொருட்படுத்தாது மக்கள் காத்திருந்தது,   எம்ஜிஆர் வருவது அறிந்து அவரைப் பார்க்க பல கிலோ மீட்டர் சைக்கிளில் இளைஞர்கள் வருவதும் தாய்மார்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் உணவு கொண்டு வந்திருந்து அங்கேயே சாப்பிட்டு விட்டு காத்திருப்பதும் மற்றும் கிராமங்களில் சுமார் 7 வயது குழந்தை வரை எம்ஜிஆரிடம் பெயர் சூட்ட காத்திருந்தது என்பது போன்ற இன்னும் எங்களை வியப்படைய செய்த பல்வேறு நிகழ்வுகள் உண்டு. 

எம்ஜிஆர் எப்போது மகிழ்ச்சியுடன் காணப்படுவார்?

"அன்று மட்டும் மலர்ந்திருப்பார் அனைத்தையும் மறந்திருப்பார்' எனில் அது தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று மட்டுமே.  எம்ஜிஆர் கொண்டாடி மகிழும் ஒரே பண்டிகை பொங்கல் என்பதால் அந்த ஒரு நாள் முழுவதும் திரைத்துறை அரசியல் என அனைத்துத் துறையைச் சார்ந்த அனைவரையும் சந்தித்து அன்பளிப்புகளைக் கொடுத்து மகிழ்வார்.

எந்தெந்த தினங்கள் எம்ஜிஆரை அதிகக் கவலை கொள்ளச் செய்தவைகள்?

எம்ஜிஆரை அதிகம் பாதித்த தினங்கள் அவரது தாயார், மனைவி சதானந்தவதி, என்.எஸ்.கிருஷ்ணன்,  அண்ணா, எம்கே.ராதா போன்றவர்களின் மறைவு தினங்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் அவ்வளவு எளிதில் கலக்கமடையாதவர் எம்ஜிஆர். சொல்லபோனால் 1980-ஆம் ஆண்டு அவரது ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிட்டது எனும் செய்தி                கிடைத்தும் சற்றும் அதிர்ச்சியடையாமல் தொடர்ந்து பாகவதர் படம் பார்த்துக் கொண்டிருந்ததோடு அனைவருக்கும் இனிப்பு கொடுக்கச் சொன்னவர் எம்ஜிஆர். ஆட்சியை இழந்தாலும் கவலை கொள்ளாத அவர்,  தனது அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவர்களை இழந்தால் இடிந்து போய்விடுவார்.

எம்ஜிஆரை போலத் திரையிலிருந்து வந்த நடிகர்கள் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைப்பது குறித்து?

அரசியலுக்கு வருவதும் பின் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைப்பதும் அவரவர் விருப்பம். அது குறித்து நாம் கருத்துக் கூற முடியாது. ஆனால் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்ததும் பின் ஆட்சியமைத்ததையும் பின்பற்றி நாமும் அவ்வாறாகவே ஆகிவிடலாம் என்று நினைப்பது மாபெரும் தவறு. அப்படி யாரேனும் நினைத்தால் அவர்கள் எம்ஜிஆரின் திரையுலக வாழ்வின் முழுமையையும் அரசியல் பொதுவாழ்வின் அனைத்து அம்சங்களையும் புரிந்துகொள்ளாதவர்களாகத் தெரிந்துகொள்ளாதவர்களாகவே இருப்பர்.    

தற்போதைய  அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் எம்ஜிஆரின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் வித்தியாசம் என்ன?

எம்ஜிஆரின் தேர்தல் பிரச்சார வழி முறைகளை மற்றவர்களுடன் ஒப்பிடவே முடியாது. எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்தில் குளிர்சாதன வசதி கிடையாது, உள்ளே சொகுசான வசதிகள் கிடையாது . பிரச்சாரம் என்பது வாகனத்திற்கு உயரே உச்சி வெய்யிலிலும் மணி கணக்கில் நின்று கொண்டே பயணம் செய்து மக்களைச் சந்திப்பது- ஏழை எளிய மக்களின் இல்லங்களுக்கே சென்று அவர்கள் மிகுந்த அன்புடன் கொடுக்கும் சாதாரண உணவுகளையும் உட்கொள்வது அவர்களின் இல்லங்களில் ஒருவராகவே பழகுவது எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.  

திரைப்பட இயக்குநர் விஷயத்தில் எம்ஜிஆருக்கு குரு என யாரை சொல்லலாம்?

இயக்குநர் விஷயத்தில் எம்ஜிஆருக்கு குரு என்று யாரையும் குறிப்பிட முடியாது. இயற்கையாகவே அந்த ஆற்றல் எம்ஜிஆருக்கு அமைந்த ஒன்று. இருப்பினும் பழம்பெரும் இயக்குநர் ராஜா சந்திரசேகரிடமிருந்து சில தொழில் நுட்பங்களை எம்ஜிஆரே கேட்டுத் தெரிந்து கொண்டார். எம்ஜிஆரின் இயக்குநர் திறனை பழம்பெரும் இயக்குநர் கே.சுப்பிரமணியம் வியந்து போய் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அப்படியென்றால் அவருக்குப் பிடித்த இயக்குநர்கள் யார் யார்?

பொதுவாக எம்ஜிஆர் எல்லா இயக்குநர்களையும் விரும்புவார் அவருக்குப் பிடிக்காதவர்கள் என யாரும் இல்லை என்றாலும் அவர் மனம் விட்டு பேசும் இயக்குநர்கள் என ப.நீலகண்டன், கே.சங்கர் போன்றவர்களைக் கூறலாம். அவரது மதிப்புக்குரியவர்களாகப் பழம்பெரும் இயக்குநர் கே.சுப்பிரமணியம், கே.சோமு, ஏபி.நாகராஜன், போன்றவர்களைக் கூறலாம். எம்ஜிஆர், "ஆண்டவரே'  என்று பிரியமுடன் அழைப்பவர்களில் கே.சோமுவும் ஒருவர். இவர் இயக்கிய "மக்களை  பெற்ற மகராசி' படத்தில் நான் நடித்துள்ளேன் இவரது "பட்டினத்தார்' படத்தைப் பலமுறை நான் விரும்பிப் பார்த்துள்ளேன்.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com