கேரள நாடோடிக்கதை கண்ணாடியும் சந்தேகித்த மனைவியும்

அந்தக் காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி கிடையாது. பிற்காலத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மனிதனுக்குக் கண்ணாடி ஒன்று கிடைத்தது.
கேரள நாடோடிக்கதை கண்ணாடியும் சந்தேகித்த மனைவியும்

அந்தக் காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி கிடையாது. பிற்காலத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மனிதனுக்குக் கண்ணாடி ஒன்று கிடைத்தது. அதை வீட்டுக்கு எடுத்துச் சென்ற அவன் மறைவாகத் தன் இரும்பு பெட்டிக்குள் அதை ஒளித்து வைத்துக்கொண்டான். பிறகு ஒரு நாள் அதை ரகசியமாகத் தன் மனைவிக்குக் கூடத் தெரியாமல் எடுத்துப் பார்த்தான். அதற்கு முன் தன் முகத்தைப் பார்த்தறியாத அவன் தற்போது கண்ணாடியில் பார்த்த முகத்தைக் காலம் சென்ற தன் தந்தையினுடையது என்று எண்ணி வியந்து போனான்.

ஒவ்வொரு நாளும் காலையில் வேலைக்குச் செல்ல புறப்படுவதற்கு முன் கண்ணாடியை எடுத்துத் தன் தந்தையின் முகத்தை அதில் பார்த்து வைத்துவிட்டுத்தான் போவான். மீண்டும் இரவு படுக்கப் போகும் முன் கண்ணாடியில் தந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு உறங்குவதில் அவனுக்குப் பெரு மகிழ்ச்சி. அந்தக் காரியத்தை அவன் மனைவிக்குக் கூடத் தெரியாமல் தினமும் செய்து வந்தான். ஒன்றிரண்டு நாட்களில் அவன் மனைவி அதைப் பார்த்திருந்தாலும் அவள் அதைப்பற்றி அவனை ஒன்றும் கேட்கவில்லை.

பிறகு ஒரு நாள், அவன் இல்லாதபோது அவனது அந்தப் பெட்டியைத் திறந்தாள். அதிலிருந்த கண்ணாடியைப் பார்த்தாள். அதில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தாள். அவ்வளவுதான். அவளுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவள் கணவனுக்கு இன்னொரு காதலி இருந்தாள் என்று நிச்சயமாக நம்பினாள். அவளைத்தான் தினமும் காலையும் மாலையும் கண்ணாடியில் அவன் கண்டு களித்தான் என்று நம்பினாள். 

அன்று இரவு வீடு திரும்பியவன் தனக்கு ரொம்பவும் பசிக்கிறது என்று சொல்லி மனைவியைச் சீக்கிரமாகச் சமைக்கச் சொன்னான். ஆனால், அவள் கோபமாகச் சொன்னாள் ""ஏன் உங்களுடைய ஆசை காதலியிடம் போய் கேட்பது தானே! சமைத்துப் போடுவாளே!'' கணவன் ஒன்றும் புரியாமல் திகைத்தான். மனைவியோ தொடர்ந்தாள். ""யார் அவள் எங்கே இருக்கிறாள்? சும்மா நடிக்க வேண்டாம் நாள் தவறாமல் இரண்டு வேளையும் அவள் முகத்தைப் பார்க்காமல் முடியாதே! அதற்குத்தானே பெட்டியில் அந்தக் கண்ணாடி'' அவள் பொரிந்து தள்ளினாள்.

அப்போதும்  கணவனுக்குப் பேசியது ஒன்றும் புரியவில்லை. அவன் கேட்டான் ""நீ என்ன பேசுகிறாய்.  நான் யாரிடம் போக வேண்டும்.''  அவளோ பதிலுக்குச் சொன்னாள் யாரிடமா? ""அவள்தான் உங்கள் ஆசைக் காதலி அவளிடம் தான். அவள் படத்தைத்தானே பெட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் எப்போதுமே முட்டாளாய் இருக்கமாட்டேன். உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள்.  நான் என் அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறேன். யார் அவள் சொல்லிவிடுங்கள்.''

அவனுக்குப் புரிந்துவிட்டது. ""ஓ அப்படியா அடி பாவி. அது என் அப்பாவுடைய படம்'' என்றான். ""உம் . ஆனால், உங்கள் அப்பா ஒரு பெண் இல்லையே. கண்ணாடியை எடுங்கள் நானே காட்டுகிறேன்'' என்றாள் அவள். 

இருவரும் சேர்ந்து கண்ணாடியை பார்த்தார்கள். அவள், அவன் பின்னால் நின்ற வண்ணம் அவன் தோள் மேல் குனிந்து கண்ணாடியில் பார்த்தபோது கண்ணாடியில் அவன் முகத்தைக் கண்டாள். அவனோ அவள் முகத்தைப் பார்த்தான்.

இப்போது இருவருக்கும் தெரிந்தது கண்ணாடி அவர்கள் இருவர் முகத்தையும்தான் பிரதிபலித்துக் காட்டியது என்கிற உண்மை. அவள் சந்தேகம் தீர்ந்தது. கண்ணாடி என்ற அந்த அற்புதப் பொருள் கிடைக்கப் பெற்றதில் அவர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com