ஜெயலலிதாவிற்கு ஜாதகம் பார்த்தேன் - டி.என்.சேஷன்

இந்திய அரசின் அலுவலர்களில் பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கியவர் டி.என்.சேஷன்.
ஜெயலலிதாவிற்கு ஜாதகம் பார்த்தேன் - டி.என்.சேஷன்

இந்திய அரசின் அலுவலர்களில் பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கியவர் டி.என்.சேஷன்.

தேர்தல் கமிஷனை தனித்துவம் உள்ள அமைப்பாக நிறுவியவர் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். அவர் "A HEART FULL OF BURDEN', என்ற தனது சுயசரிதையில் ஜெயலலிதாவிற்கு ஜாதகம் பார்த்தது குறித்து விரிவாக எழுதி இருக்கிறார்.

அப்போதே அவர் தனக்கு ஜோதிடத்தில் மிகுந்த பயிற்சி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் ஜெயலலிதாவின் ஜாதகத்தை பார்த்து என்ன சொன்னார்? என்ன நடந்தது? தனக்கு ஜாதகம் பார்ப்பதில் அலாதியான ஈடுபாடு இருந்ததாக சேஷன் தெரிவித்துள்ளார். ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்த உடனேயே அதனுடைய சாதக பாதகங்களை சரியாக கண்டறியும் திறன் தனக்கு இருந்ததாகவும் அவர் எழுதி இருக்கிறார். 

இப்படி ஓர் அத்தியாயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் பற்றி சேஷன் ஒரு தகவலை தந்துள்ளார்.

அவரது ஜாதகத்தைப் பார்த்த போது தான் ஆடி போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்:

ஜோதிடத்தில் எனக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அதேபோல், ஜோதிட அறிவும் உண்டு. ஒருத்தர் ஜாதகத்தை பார்த்தேன் என்றால் அவர் எப்படிப்பட்டவர் அவர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஓரளவு கணித்துவிடுவேன். ஜெயலலிதாவுக்கும் எனக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலமாகத்தான் ஜெயலலிதாவின் ஜாதகம் எனக்குக் கிடைத்தது. அந்த நண்பர், எங்கள் இரண்டு பேரிடமும் கொஞ்சம் நட்புடனும் பிறகு கோபமுடனும் பழகியவர்.

அவர் கொடுத்த ஜாதகத்தின்படி ஜெயலலிதாவின் பிறந்த தேதி, 24.02.1948. ஜனன நேரம், மதியம் 2.30 மணி. பிறந்த இடம்: மைசூர்.

ஜெயலலிதாவின் ஜாதகம் உண்மையில் அருமையான ஜாதகம். ரொம்பவும் ராஜயோகமான ஜாதகம். ஒரு ராஜாவுக்கு இருக்க வேண்டிய அனைத்து அறிகுறிகளும் அவருடைய ஜாதகத்தில் இருந்ததை நான் பார்த்ததுமே புரிந்து கொண்டேன். ஆனால், இந்த மாதிரி ஜாதகக்காரர்களின் நிலை ஒரே மாதிரியாக இருக்காது. சக்கரத்தில் ஒரு புள்ளியை வைத்து சுற்றிவிட்டால், எப்படி அது மேலேயும் கீழேயும் மாறி மாறிப் போய் வருகிறதோ அதே மாதிரிதான் இந்த ஜாதகத்துக்கு உரியவர்களின் நிலையும். 

1990- 91 ஆம் ஆண்டுகளில் அவரது ஜாதகத்தில் எல்லாமே நல்லபடியாக அமைந்திருந்தன. ஆனால் 1993 -ஆம் வருட வாக்கிலேயே அந்த யோகங்கள் முடிந்து, எதிர்காலம் கடினமானதாக இருக்கும் என்று ஜாதகம் உணர்த்தியது. அதாவது பதவி, பெயர், புகழ் ஆகியவை கெட்டு, உச்சத்தில் இருக்கக் கூடிய நேரம் முடிந்து, அவர் கீழே வரும் நேரம் தொடங்கப் போகிறது என்று அவருடைய ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்ததுவிட்டது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் என்ற பதவியிலிருந்து கொண்டு "உங்களுக்கு சங்கடமான காலம் வரும்' என்று ஒரு அரசியல்வாதியிடம் சொன்னால், அதற்கு ஜோதிட முறையான விளக்கம் போய் வேறு ஏதாவது விளக்கம் வரக்கூடும் என்பதால் என் மனதுக்குள்ளேயே இந்தச் செய்திகளை வைத்துக் கொண்டேன்.
அப்படியேயும் லேசாக அவருக்குக் கோடிட்டுக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வந்தது. 1993- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 -ஆம் தேதி அன்று சனிக்கிழமை என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னையில் இருந்தேன். "மேடம் உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்று எனக்குச் செய்தி வந்தது. தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சென்று பார்த்தேன். அப்போது எஸ்.டி.எஸ்சும் உடன் இருந்தார். அது தனிப்பட்ட சந்திப்பு இல்லை.

ஏதோ பேச்சுவாக்கில் "உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன்' என்று நான் சொன்னேன். "அப்படியா? எப்படியிருக்கிறது? சொல்லுங்கள்' என்று ஜெயலலிதா கேட்டார். "நல்ல ஜாதகம்தான். ஆனால், நீங்கள் இனி கவனமாக இருப்பது நல்லது. நல்லநேரம் முடிந்து உங்களுக்கு மோசமான நேரம் ஆரம்பிக்கப் போகிறது"என்று சொன்னேன்.

அன்றைய நிலவரப்படி தெய்வ பக்தியும், நல்லவர்களின் சகவாசமும் இருந்தால் கெடுதல் அதிகம் வராமல் ஜெயலலிதா காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.

ஒரு சக்கரவர்த்திக்கும் மேலாக ஐந்து வருடம் கோலோச்சி, மாட மாளிகையில் இருந்தவர் இந்த நிலைக்கு வந்துவிட காரணம் கெட்ட நேரம்தான் என்று குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுவதாவது:

ஜெயலலிதாவின் நட்சத்திரம் மகம். அதற்காக "மகம் ஜெகத்தை ஆளும்' என்ற சின்னச்சின்ன பழமொழிகளை மட்டுமே நிரந்தரமாக நம்பி காரியத்தில் இறங்கிட முடியாது, இவ்வாறு தன் சுயசரிதையில் சேஷன் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாதகம் பார்த்த அனுபவத்தை எழுதி இருக்கிறார். இந்த செய்தி பலரும் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகவும், வியக்கத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது.
 
தொகுப்பு: ரத்தினம் ராமசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com