என்றும் இருப்பவர்கள்! - 11: வெ.சாமிநாதசர்மா

1952-ஆம் ஆண்டு சொந்த ஊரான மயிலாடுதுறையில் இருந்தேன். பன்னிரெண்டு வயதாகிவிட்டது.
என்றும் இருப்பவர்கள்! - 11: வெ.சாமிநாதசர்மா

1952-ஆம் ஆண்டு சொந்த ஊரான மயிலாடுதுறையில் இருந்தேன். பன்னிரெண்டு வயதாகிவிட்டது. காவிரி ஆற்றின் கரையில் வீடு. வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள். இடையிடையே மாமரங்கள். வீட்டின் முன்னே ஒரு குளம். பின்னால் இன்னொரு குளம். மழை  வந்தால் இரண்டு குளங்களும் நிரம்பி தண்ணீர் வெள்ளமாகச் சாலையில் ஓடும். மீன்கள் தண்ணீரை எதிர்த்துக் கொண்டு வேகமாக ஓடும். மீன் பிடிப்பது பெரிய விளையாட்டு. படிப்பு கூறைநாடு உயர்நிலைப்பள்ளியில். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது.

இந்திய பாராளுமன்றத்திற்காகப் பொது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல். இருபத்தொரு வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தார்கள். மயிலாடுதுறை ஒரு பாராளுமன்ற தொகுதியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.சந்தானம் போட்டியிட்டார். அவர் மத்திய ரயில்வே அமைச்சர். "இந்தியன் எக்ஸ்பிரஸ்'  ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியர். அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கே. அனந்த நம்பியார் போட்டியிட்டார். கேரளாவில் பிறந்தவர். திருச்சி, பொன்மலை ரயில்வே தொழிற்கூடத்தில் கிளார்க்காகப் பணியாற்றியவர். பின்னால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து தொழிற்சங்கவாதியானார்.

தமிழில் நன்றாகப் பேசக்கூடியவர். மத்திய ரயில்வே அமைச்சரும், ரயில்வே முன்னாள் ஊழியரும் எதிர் எதிராகத் தேர்தலில் நின்றார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் இரட்டை காளை மாடு. கம்யூனிஸ்டு சின்னம் கதிர் அரிவாள். ஊரெல்லாம் தேர்தல் பிரசாரம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர், ம.பொ.சிவஞானம், அனந்தநாயகி சொற்பொழிவு ஆற்றினார்கள். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அனந்த நம்பியார் சர்வ கட்சிகளின் ஆதரவுப் பெற்று இருந்தார். ஜீவா, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கே.கே.நீலமேகம் என்று பலரும் மாமரத்து மேடை, சித்தர் காட்டு சந்தை, வரதாச்சாரியார் பூங்கா, காவிரி துலா கட்டம் என்று பல இடங்களிலும் மேடை போட்டு அனல் பறக்கப் பேசினார்கள். அவர்கள் பேச்சு மனம் கவர்ந்தது. கேட்கப் பேரார்வம் தந்தது. மேடைக்கு முன்னால் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டும், மேடையின் மூங்கில் கழிகளைப் பிடித்துக் கொண்டும் கடைசி வரையில் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன்.

காங்கிரஸ்  தலைவர்கள் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, படேல் பெயர்கள் பலமாக ஒலித்தன. கம்யூனிஸ்டு கட்சியினர் காரல் மார்க்ஸ், தோழர் லெனின், தோழர் ஸ்டாலின்,   மா சே துங், அமெரிக்க ஏகாதிபத்தியம்  பட்டாளி வர்க்கம், "தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்'  என்று முழங்கினார்கள். கடைசியாக சிறப்புரை அனந்த நம்பியாரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று முடித்தார்கள். 

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் "பெரியார், சாக்ரடீஸ், பிளாட்டோ  மூட நம்பிக்கை சமூக சீர்திருத்தம், விவசாயிகள், தொழிலாளிகள் முன்னேற்றம்' என்றார்கள். பொதுக்கூட்டங்களில் புதுப்புது பெயர்கள் சொல்லப்பட்டன; புதிய சில வார்த்தைகள் காதில் விழுந்தன. அவற்றைத் தெரிந்து கொள்ள அக்கறை ஏற்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் கிட்டப்பா ஆசிரியர் வேலாயுத மன்றம் என்று ஒரு படிப்பகத்தைத் தொடங்கி இருந்தார். அது அண்ணாவால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவின் போது அண்ணா ""தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் படிப்பகங்கள் திறக்கப்பட வேண்டும். அவற்றில் அரிய நூல்களை வாங்கி வைக்க வேண்டும். நம் மக்கள் படித்து அறிவு பெற வேண்டும்'' என்றார்.  ஆசிரியர் வேலாயுத மன்றத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட இருபத்தைந்து முப்பது பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். "திராவிட நாடு', "முரசொலி', "ஜனசக்தி'," சுதேசமித்திரன்' என்ற நாளிதழ்கள் படிக்கக் கிடைத்தன. இரண்டு பெரிய மர பீரோக்களில் தமிழ்ப் புத்தகங்கள் இடம் பெற்று இருந்தன. அவற்றில் சில வெ. சாமிநாதசர்மா மொழி பெயர்த்தவை. 

ஒரு நாள் என் சகோதரர் திருமேனியும், கிட்டப்பாவும் படிப்பகத்திற்குள் வந்தார்கள். இருவரும் இளமை பருவத்தில் இருந்தே சிநேகிதர்கள். ஒன்றாகப் படித்தவர்கள் பள்ளிப் படிப்பு முடிந்ததும் என் சகோதரர் வேலைக்குப் போய்விட்டார். கிட்டப்பா அரசியலில் இறங்கிவிட்டார். "சமுதாய ஒப்பந்தம்'  என்ற நூலைப் படித்துக் கொண்டு இருந்தேன். கிட்டப்பா என் பக்கம் வந்தார். கையில் இருந்த புத்தகத்தை வாங்கி ஒரு பார்வை பார்த்து விட்டு, ""தம்பி இங்க வந்து நாம படிக்காதப் புத்தகம் எல்லாம் படிக்கிறான்'' என்றார். 

""வீட்டில் இவன் படிக்கிறதே இல்லை''  என்றார் என் சகோதரர் திருமேனி.

""வீட்டில் பாடம் படிக்காவிட்டால் என்ன? நம்ம படிப்பகத்தில் அடிக்கடி வந்து படிக்கிறான். அது போதும்'' என்றார் கிட்டப்பா.

மயிலாடுதுறை அரசியல், விவசாயிகள், நெசவாளர்கள் போராட்டக்களமாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் விவசாய கூலித் தொழிலாளர்களுக்காக செங்கொடி பிடித்து ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டிருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முதலமைச்சர் ராஜாஜியின் மாணவர்கள் அரைநாள் படிப்பு, அரைநாள் தொழில் கல்வி என்பது குலத்தொழிலுக்குக் கொண்டு போய்விடும் என்று எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். பொதுக்கூட்டங்கள் போட்டுப் பேசி வந்தார்கள். பெரும்பாலும் ஆசிரியர்கள், மாணவர்கள் சைக்கிளில் கொடி கட்டிக் கொண்டும்  நடந்தும் சென்றார்கள்.

மாலைப் பொழுதில் பெண்களும், ஆண்களும் இளைஞர்களும் நன்றாக உடுத்திக் கொண்டு சுந்தரம், கோமதி தியேட்டர்களுக்குச் சினிமா பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். தீபாவளிக்கு "பராசக்தி'  கோமதி தியேட்டரில் வெளியாகி இருந்தது. "பராசக்தி' சினிமா நன்றாக இருக்கிறது. வசனத்தில் அனல் பறக்கிறது. சமூகத்தின் யதார்த்த நிலையை உணர்த்தியது. மு.கருணாநிதி திறமை முழுவதும் "பராசக்தி' யில் பிரதிபலிக்கிறது. சிவாஜி கணேசன் அற்புதமாக நடித்து இருக்கிறார் என்று பலரும் ஆசிரியர் வேலாயுத மன்றத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் "பராசக்தி' படம் பார்த்தேன்.

1955-ஆம் ஆண்டு என் சகோதரர் திருமேனி சென்னைக்கு வேலைக்கு வந்தார். சில மாதங்கள் கழித்து நானும் என் தாயாரும் குடிபெயர்ந்தோம். கூவம் ஆற்றின் கரையில் வீடு. சகோதரர் ஸ்ரீகிருஷ்ணா டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். என்னை வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். திருமங்கலத்தில் இருந்து சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளிக்கு நா.கிருஷ்ணமுர்த்தி உட்பட ஐந்தாறு பேர்கள் ஒன்றாகச் சென்றோம். 

அங்கு  ஒரு நூலகம் இருந்தது. பள்ளிக்கூடம் விட்டதும்  நூலகம் சென்றேன். 

இடைவேளையின் போதும் நூலகம் சென்றேன். நூலகத்திற்குப் பொறுப்பாக இருந்த குணசேகரன் சிநேகிதமாகிவிட்டார். அவர் பாரதியார், விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேரு, திரு.வி.க, கல்கி புத்தகங்கள் எல்லாம் படிக்கக் கொடுத்தார். அவற்றை முடித்ததும் காரல் மார்க்ஸ், பிளாட்டோ, மாஜினி புத்தகங்கள் எல்லாம் எடுத்துப்படித்தேன். அவை வெ.சாமிநாதசர்மா மொழி பெயர்ப்பாகவோ எழுதியவையாகவோ இருந்தன. சில புத்தகங்கள் புரிந்தன. பல புரியவில்லை. ஆனால் எழுதப்பட்டப் புத்தகங்கள் என்பதற்காகவே படித்தேன். படிப்பதில் ருசி ஏற்பட்டுவிட்டது. நூலகர் குணசேகரன் வெ.சாமிநாதசர்மா புத்தகங்கள் படிப்பதைப் பார்த்துவிட்டு,  ""அவர் தியாகராயநகரில் உஸ்மான் சாலையில் இருக்கிறார். பெரியவர், ஆனாலும் நல்லவர். போய்ப்பார். உனக்கு நிறைய புத்தகங்கள் கொடுப்பார்''  என்று முகவரி எழுதிக் கொடுத்தார். 

ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலைப் பொழுதில் உஸ்மான் சாலையில் இருந்த அவர் வீட்டிற்குச் சென்றோம். அவர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து "கலைமகள்' படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் வணக்கம் தெரிவித்தோம். அவர் உட்காரச் சொன்னார். அவர் பக்கத்தில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தோம். பின்னர் அவர் கூஜாவில் இருந்து செம்பு குவளையில் குடிக்கத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். எங்கள் பெயர், ஊர், படிப்பு பற்றியெல்லாம் விசாரித்தார்.

வெ.சாமிநாதசர்மா என்பது வெங்களத்தூர் சாமிநாதசர்மா. அவர் 1895-ஆம் ஆண்டு பிறந்தவர். திரு.வி.கவின் "நவசக்தி', "தேசபக்தன்'  இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகள் கற்றவர். ஆரம்பக் காலத்தில் நாடகங்கள், சிறுகதைகள் எழுதி வந்தார். 1932-ஆம் ஆண்டில் தன் மனைவியோடு பர்மா சென்று ரங்கூனில் பாரத்பந்தர் என்று கடையொன்றை நடத்தினார். நண்பர்கள் சிலர் கூடினார்கள். 1937-ஆம் ஆண்டில் ஜோதி என்ற அரசியல், கதை, இலக்கியப் பத்திரிகை ஆசிரியரானார். ஜோதியில் புதுமைப்பித்தன் சிறுகதைகள் சில பிரசுரமாகி உள்ளன. 

உலக நிலவரம் மாறி வந்தது. ஹிட்லர், முசோலினி பெரும் சக்தியாக உருவாகி வந்தார்கள். எனவே அவர்கள் யாரென்று மக்கள் அறிந்து கொள்ள வரலாறு எழுதினார். அதோடு தமிழர்கள் தங்கள் தாய்மொழி மூலமாகவே ஐரோப்பிய சிந்தனைவளம் முழுவதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் பேசியவர்கள் வரலாற்றையெல்லாம் எழுதினார். அவர் தமிழ் நெருடலற்றது. படிக்கச் சுவையானது. எனவே தமிழக அரசியல்வாதிகள் யாரும் அவரின் அரசியல், சமூகம் பற்றிய நூலகளை வாங்கிப் படித்தார்கள். மேடைகளில் அவரைப் பற்றி பேசினார்கள்.

ஏழெட்டு முறைகள் அவர் வீட்டிற்குச் சென்று இருக்கிறேன். அப்பொழுது அவருக்கு அறுபத்து நான்கு வயதாகி இருந்தது. என்னிடம் மிகவும் இயல்பாகவே அரசியல் சரித்திரம் பற்றியும், ஒரு மனிதனை சித்தாந்தம் எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் பேசினார். சில நாட்கள் இருவரும் பனகல் பூங்காவிற்குப் பேசிக்கொண்டே போவோம். பேசிக்கொண்டே உட்கார்ந்திருப்போம். பேசிக் கொண்டே திரும்பி வருவோம்.

ஒரு நாள் தன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு போய் நூலகத்தைக் காட்டினார். அதில் அவர் எழுதிய, மொழி பெயர்த்த எழுபத்தைந்து நூல்களோடு பல ஐரோப்பிய சிந்தனையாளர்கள் எழுதிய நூல்களின் மொழி பெயர்ப்புகளும் இருந்தன. பிளாட்டோ எழுதிய "குடியரசு' என்ற நூலுக்கு ஐந்தாறு மொழி பெயர்ப்புகள் வைத்துக்கொண்டிருந்தார்.

""நீங்கள் எப்படி மொழி பெயர்க்கிறீர்கள்?''  என்று ஒரு முறை கேட்டேன். 

""வரிக்குவரி மொழி பெயர்ப்பது இல்லை. அது அவசியம் இல்லை. அரைபக்கம், ஒரு பக்கம் படித்துவிட்டு, கருத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழில் எழுதுகிறேன். எனக்கு கருத்து முக்கியம். அதனைச் சிதைக்காமல் கவனமாக எழுதுகிறேன்''  என்றார்.  இரண்டாவது மகாயுத்தம் தொடங்கிவிட்டது. தென்கிழக்காசிய நாடுகளை ஜப்பான் கைப்பற்றிக் கொண்டு வந்தது. பர்மாவின் எல்லைக்குள் போர் வந்து விட்டது. எனவே இனியும் பர்மாவில் வாழ முடியாது என்ற நிலை வந்ததும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாய்நாடு திரும்பினார்கள். ரங்கூனில் இருந்து கல்கத்தா வரை தம் மனைவியோடு கால்நடையாக நடந்து  வந்தார். அது பற்றி "பர்மா வழி நடைப்பயணம்' என்ற நூல் கூட எழுதியிருந்தார்.

சென்னை வந்த அவர் காரல் மார்க்ஸ் வரலாறு உட்பட பல நூல்களை எழுதினார். இரண்டாண்டுகள் ஏ.கே. செட்டியாரின் "குமரி மலர்'  பத்திரிகை ஆசிரியராக இருந்தார். ""நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை''  என்ற அவர் எழுபத்தைந்துக்கும்  மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தி எழுபதாவது பிறந்த நாளுக்கு உலகமெல்லாம் உள்ள சிறந்த அறிஞர்களிடம் காந்தி பற்றியக் கட்டுரைகள் வாங்கி ஆங்கிலத்தில் புத்தகமாகப் போட்டார்.

""அதில் ஒரு கட்டுரை  மகாத்மா காந்தி,  தென் ஆப்பிரிக்காவில் சத்யா கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கவர்னர் ஜெனரலாக இருந்த,  ஜெனரல் ஜான் மைட்ஸ் அவரைப் பிடித்து சிறையில் அடைத்துவிட்டார். காந்தி சிறையில் செருப்பு செய்தார். விடுதலையாகிய போது ஜெனரல் ஜான் மைட்ஸ்க்கு ஒரு ஜதை செருப்பை அன்பளிப்பாக வழங்கிவிட்டு வந்தார். அவர் அதனை கோடைகாலத்தில் போட்டுக் கொண்டு மிடுக்காக நடந்து வந்தார். அவர் பெரிய அறிவாளி. சிறந்த ராஜ தந்திரி என்று பெயரெடுத்தவர். மகாத்மா காந்தி திருக்கரத்தில் செய்த செருப்பை அணிந்து கொண்டு நடப்பது அவமான கரமான காரியம் என்று பட்டது. பின்னால் அதனை காந்திக்குத் சிறு குறிப்புடன்  திருப்பி அனுப்பினார். குறிப்பின் வாசகம் ""தங்களைப் போன்ற மகான்கள் திருக்கரத்தால் செய்த செருப்பைப் அணிந்து கொண்டு நடக்கத் தகுதியில்லை'' என்று  அதில் இருந்தது  என்றார்.

""நான் படித்து இருக்கிறேன்'' என்றேன்.

""எங்கே?'' என்றார்

""கன்னிமாரா நூலகத்தில் உங்கள் புத்தகங்களில் எல்லாம் இருக்கின்றன. அங்கே எடுத்துப் படித்தேன்.'' 

அப்படியா என்று கேட்டுவிட்டு என்னை உள்ளே அழைத்துக் கொண்டு ராஜ தந்திர யுத்தகளப் பிரசங்கங்கள் என்று பெரிய புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். தலைகுனிந்து வாங்கிக் கொண்டேன்.

""சாதாரணமாக என் புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது இல்லை. ஆனால் சிறுவயதாக இருந்தாலும் படிப்பதால் உங்களுக்குக் கொடுக்கிறேன்'' என்றார்.

வெ.சாமிநாதசர்மாவிற்கு வயதாகிக் கொண்டு வந்தது. அவர் மனைவி ஏற்கெனவே காலமாகிவிட்டார். குழந்தைகள் இல்லை. உறவினர்களோடு சேர்ந்து இருக்க அவர் விரும்பவில்லை. திருவான்மியூரில் ருக்மிணி தேவி கலாஷேத்ரா அமைத்திருந்தார். கடற்கரையை ஒட்டியது. இசை, நடனம் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தங்கி இருக்க வீடுகள் இருந்தன. அதில் சில கலைஞர்கள் தங்கி இருந்தார்கள். அது தன் கடைசிகால வாழ்விடமாக இருக்கும் என்று கருதினார். கைவசம் இருந்த பணத்தை எல்லாம் கலாஷேத்ராவிடம் கொடுத்துவிட்டு அங்கேயே வாழ ஆரம்பித்தார்.

நான் அவரை கலாஷேத்ராவில் நான்கைந்து முறைகள் சந்தித்தேன். எப்பொழுதும் அரசியல் நூல்கள் பற்றியே பேசியபடி இருந்தார். 1978-ஆம் ஆண்டில் தன் எண்பத்து மூன்றாவது வயதில் கலாஷேத்ராவில் காலமானார்.
வெ.சாமிநாதசர்மா இல்லை. ஆனால் எழுதிய மொழி பெயர்த்தப் புத்தகங்கள் வழியாக இருக்கிறார். 

(அடுத்த இதழில் த.நா. குமாரசாமி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com