ஜப்பானிய நாடோடிக்கதை: அன்பின் காணிக்கை

ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் தனியாக வசித்து வந்தார். உறவினர் யாரும் இல்லாததால் தமக்கான வேலைகளைத் தாமே செய்து வந்தார்.
ஜப்பானிய நாடோடிக்கதை: அன்பின் காணிக்கை

ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் தனியாக வசித்து வந்தார். உறவினர் யாரும் இல்லாததால் தமக்கான வேலைகளைத் தாமே செய்து வந்தார்.
ஒரு நாள் இரவு வீட்டிற்குள் பாத்திரம் ஒன்று விழும் சத்தம் கேட்டது. அவர் வேகமாகச் சென்று பார்த்தார். மேல் கூரையில் ஒரு பெட்டி மீதிருந்த இரும்பு கூஜா ஒன்று கிழே விழுந்திருந்தது.
முதியவர் அந்த கூஜாவை எடுத்தார். விளக்கொளியில் அதைப் பார்த்தார். தூய்மையாக இருந்த கூஜா எதற்கேனும் பயன்படும் என அதைத் தனியே வைத்தார்.
மறுநாள் வெந்நீர் காய்ச்ச அந்தக் கூஜாவை உபயோகித்தார். அந்தக் கூஜாவுக்கு ஒரு வித்தியாசமான சக்தி இருந்தது. அதாவது அதிலிருக்கும் வெந்நீரை எப்போது தொட்டாலும் சூடு ஆறாமல் இருந்தது. 
நாள் செல்லச் செல்ல கூஜாவின் அடிப்பகுதியிலிருந்து வெந்நீர் ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதைக் கவனித்த முதியவர் இனிமேல் இது பயன்படாது எனத் தெரிந்து கொண்டார். உடனே அதை அடுப்பில் தூக்கிப் போட்டார்.
கூஜாவை அடுப்பில் போட்டதும் அது ஒரு பறவை வடிவில் வெளியே வந்தது. கூர்மையான நகம் கொண்ட கால்களும் பெரிய இறக்கைகளுமாக ஒரு கழுகு வடிவில் அது காட்சி தந்தது.
முதியவருக்கு அதிர்ச்சி ஒரு புறம்;  ஆச்சர்யம் இன்னொரு புறம். "இதில் மர்மம் ஏதும் இருக்குமோ?'  என்று கூட அவர் நினைத்தார். 
கழுகு வடிவில் இருந்த அந்தப் பறவை அவர் வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது. அதைப் பிடித்து ஒரு பெட்டியில் அடைத்து வைத்தார்.
பொழுது விடிந்தது.
"பறவை எப்படி இருக்கிறது பார்ப்போம்'  என்று ஆவலுடன் பெட்டியைத் திறந்தார்.
அவருக்கு ஒரே அதிர்ச்சி. பறவை அங்கே இல்லை. மீண்டும் பழைய கூஜாவே இருந்தது.
""இதை இங்கே வைத்திருந்தால் மேலும் மேலும் பிரச்னைதான். யாரிடமாவது விற்றுவிட்டால் நல்லது'' என நினைத்தார்.
அந்த நேரம் ஒரு வியாபாரியை அவர் சந்தித்தார். நியாயமான விலைக்கு அந்தக் கூஜாவை அவரிடம் விற்றார்.
வியாபாரி பெட்டியில் இருந்த கூஜாவுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.
வீட்டின் ஒரு மூலையில் பெட்டியை வைத்துவிட்டு உறங்கினார். நள்ளிரவு நேரம்.. பயங்கரமான சத்தம் அந்தப் பெட்டிக்குள் இருந்து வந்தது.
ஒன்றும் புரியாமல் விழித்தார். அந்த வியாபாரி. பெட்டியைத் திறந்து பார்த்தார். கூஜா உருமாறி பறவையாக இருந்தது. அதைக் கண்டு அவர் துணுக்குற்றார்.
உடனே தன் நண்பன் ஒருவனை அணுகி, பறவையாக கூஜா மாறிய நிகழ்வைக் கூறினார். நண்பரோ உற்சாக வார்த்தைகளால் வியாபாரியிடம் நம்பிக்கையை வளர்த்தார்.
""இது உனக்கு நல்ல காலம் தான். பறவையாக மாறி அந்த கூஜாதான் உனக்குச் செல்வத்தை வாரி வழங்கப் போகிறது. அதன் அனுமதியை பெற்று புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கிடு..!'' என்று கூறினார்.
நண்பரின் யோசனையை ஏற்றார் வியாபாரி. ஒரு கடையைப் புதிதாகத் திறந்தார்.
""அதிசயம்.. ஆனால் உண்மை. இங்கே ஒரு கூஜா பறவையாக மாறும். அதுவே மீண்டும் கூஜாவாகும்!'' என்ற தகவலை விளம்பரமாக எழுதி வைத்தார்.
அந்த விளம்பரத்தைக் கண்டு மக்கள் ஆர்வத்துடன் கடை முன்பு கூடினர். வியாபாரி அந்தப் பறவையைத் தம் விருப்பம் போல் ஆட வைத்தான். மக்கள் அதைப் பார்த்து மகிழ்ந்தனர்.
சிறுதுளிப் பெருவெள்ளமாய் வியாபாரிக்குப் பணம் சேர்ந்தது. அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். ""இந்த வளர்ச்சிக்கெல்லாம் முதியவர் தானே காரணகர்த்தா அவருக்கு நல்லதொரு தொகையைத் தந்து நன்றி பாராட்ட வேண்டும்'' என்று நினைத்தார்.
ஒரு நாள் வியாபாரி அந்த முதியவரைத் தேடிச் சென்றார். ""ஐயா எனது அன்பின் காணிக்கை இது!'' என்று ஒரு பணப் பையை நீட்டினார்.
முதியவரோ, "" நீயே இதை வைத்துக்கொள் ஏழை எளியோருக்குச் செலவு செய்.. அப்படிச் செய்தால் அதுவே எனக்குச் செய்தது மாதிரி'' என்றார்.
""நன்றி ஐயா...!'' எனக்கூறி அங்கிருந்து கிளம்பினார் வியாபாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com