Enable Javscript for better performance
என்றும் இருப்பவர்கள்! 12- Dinamani

சுடச்சுட

  
  m6

  த.நா.குமாரசாமி
   எனக்குத் தெரிந்த ஒரு செயல் குழந்தைகளுக்குக் கற்பித்தல் மட்டுமே. இதற்கு நான் மிகவும் தகுதியானவன் என்பதால் வந்தது இல்லை. நானே முறையாகக் கல்வி பெறாதவன். ஆனால் இயற்கையை நேசிப்பவனாக இருப்பதால் குழந்தைகளுக்கு நல்லதொரு கல்வி கொடுக்க முடியுமென்று நம்புவதால் சாந்தி நிகேதனை ஆரம்பித்தேன். சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே என் நோக்கம்.
   -இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற போது ஆற்றிய உரை
   
   மொழி பெயர்ப்பாளர்களை துரோகிகள் என்று இலக்கியவாதிகள் சொல்கிறார்கள். ஏனெனில் மூல மொழியின் கருத்துகளை மெருகு குலையாமல் சொல்லத் தெரிவதில்லை. அதோடு சொல்லுக்குள் இருக்கும் நுட்பமான பொருள் புரிவதும் இல்லை. மொழி பெயர்ப்பாளருக்கு, மொழி பெயர்க்கும் மொழியில் சொல்லறிவு குறைவு. கலைமனம் இல்லாதவர்கள். ஆர்வத்தின் அடிப்படையிலும், நிர்பந்தத்தின் வழியாகவும் மொழி பெயர்ப்பு செய்கிறவர்கள். அதனால் உண்மையான படைப்பின் வசீகரம் அவர்களின் மொழி பெயர்ப்பில் இல்லை. அது வெளியில் இருக்கிறது. எனவே தான் மகத்தான படைப்புகள் மறுபடியும் மறுபடியும் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. எத்தனை மொழி பெயர்ப்புகள் கொண்டு வந்தாலும் அது மூலமாகிவிடாது. அதன் அருகில் இருக்கிறது.
   மொழி பெயர்ப்புகள் பற்றி எவ்வளவுதான் குற்றம் குறைகள் சொன்னாலும், மொழி பெயர்ப்புகள் தான் பிறமொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை, சொல்லப்பட்டக் கருத்துகளை அறிய ஆதாரமாக இருக்கிறது.
   உலகம் ஒரு மொழி கொண்டதில்லை. எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியான எழுத்து வடிவத்தில் எழுதப்படுவதில்லை. பேச்சின் ஒலியும் ஒன்று கிடையாது. ஆனால் மொழி பெயர்த்து கேட்கும் போது தனக்குத் தெரிந்த மொழியில் படிக்கும் போது சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாததையும் அறிந்து கொள்ள முடிகிறது. அது மொழி பெயர்ப்பின் வழியாகவே சாத்தியமாகிறது. எனவே மொழி பெயர்ப்பு அவசியமாகிறது.
   நெடுங்காலமாக ஒவ்வொரு மொழியிலும், பல்வேறு நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அது போலவே பிறமொழிகளில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்ப்பு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
   மொழிபெயர்ப்பு என்பது இலக்கியம், கலாசாரம், அரசியல், சமயம் சார்ந்தது மட்டுமில்லை. அது பண்பாடு, நாகரிகம் என்பதோடு இணைந்து செல்வது. எனவே ஒவ்வொரு மொழியிலும், பல நூல்கள் மொழி பெயர்ப்பு வழியாக உள்ளே வருவது போலவே வெளியேயும் சென்று கொண்டிருக்கின்றன.
   ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்க்கப்பட்டு மூலாதாரமான மொழியாக இருந்தது. மகாபாரதம், ராமாயணம், பகவத்கீதை, காளிதாசன் நாடகங்கள் என்று பலவற்றையும் இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து தழுவி எழுதியும் வந்தார்கள். ஆனால், அது பேச்சு வழக்கில் இல்லாத மொழியானதால், புதுமைக்கு உரியது எதுவும் இல்லை. யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் படைப்புகளும் கிடையாது. எனவே வங்காளம், இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் இருந்து நவீன படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.
   வெகுஜன பத்திரிகைகள் மக்கள் ஆதரவு பெற்றதும் வேறு மொழிகளில் இருந்து மற்ற மொழிகாரர்கள் நாவல்கள் சிறுகதைகள், புதுக்கவிதைகள், விமர்சனங்கள் என்று பலவற்றையும் மொழி பெயர்த்தார்கள். தமிழ் வெகுஜன பத்திரிகைகள் ஏற்கெனவே பத்திரிகைகளில் வெளிவந்து மக்கள் ஆதரவு பெற்ற கதைகளை மொழி பெயர்த்து வெளியிட்டன. நல்லாதரவு இருந்தது. எனவே வங்காளம், மராத்தி, இந்தி, மலையாளம், கன்னட மொழி படைப்புகளை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன. அவற்றுக்கு வாசகர்கள் அதிகமானார்கள். எழுத்தாளர்கள் சொந்தமாகத் தங்கள் வாழ்க்கை, கலாசாரம் பற்றி எழுதுவதைவிட, ஏற்கெனவே சொல்லப்பட்டு, அங்கீகாரம் பெற்றப் படைப்புகளை முன் மாதிரியாகக் கொண்டு எழுத ஆரம்பித்தார்கள். அது ஏற்கெனவே வாசகர்கள் படித்ததின் தொடர்ச்சியாக இருந்தது. புரிந்து கொள்ள இடர்பாடு இல்லாமல் இருந்தது. அதனால் வெற்றி பெற்றது.
   பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் வங்காளத்தில் உள்ள கொல்கத்தா இந்திய தலைநகரமாக இருந்தது. தலைமைச் செயலகம், பல்கலைக்கழகம், கல்லூரிகள் எல்லாம் இருந்தன. ஆங்கில மொழி பரவலாகப் பயன்பாட்டில் இருந்தது. ஆங்கிலம் படித்த சிலர், தாங்கள் படித்து ரசித்த நாவல்களை மொழி பெயர்த்தார்கள். பலர் அதன் அடிப்படையில் நாவல், சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்கள். மக்கள் விரும்பிப்படித்தார்கள். அது மொழி பெயர்ப்புக்குக் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
   பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்க மொழியின் முதல் நாவலாசிரியர். அவர் முதலில் ஆங்கிலத்தில் தான் நாவல் எழுதினார். அது மதிப்பு அடையாது என்பது தெரிந்து கொண்டதும், வங்க மொழியில் நாவல்கள் எழுதினார். அவரின் "ஆனந்தமடம்' என்ற நாவலை குமரேச சர்மா தமிழில் மொழி பெயர்த்தார். சரித்திர கதையாக உள்ள சமூக நாவல்.

   வங்காளத்தை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களுக்கு எதிராக இந்து மத சன்னியாசிகள் கிளர்ந்தெழுந்து புரட்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். கூட்டங்கள் போட்டு பேசுகிறார்கள். "வந்தே மாதரம்' என்று கவிதை பாடுகிறார்கள். அது வங்க தேசத்தைத் தாயாகச் சித்தரிக்கிறது. வந்தே மாதரம் என்றால் "தாயை வணங்குகிறேன்' என்பது பொருள். வங்காளத்தாய் பின்னால் பாரத மாதாவாக ஆக்கப்பட்டாள். "வந்தே மாதரம்' என்ற சொல் சுதந்திரம் என்பதின் குறியீடாகிவிட்டது.
   "ஆனந்தமடம்' நாவலில் வரும் வந்தே மாதரம் பாடலை பாரதியார் இரண்டு மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். முதல் மொழி பெயர்ப்பு அவருக்கு திருப்தி அளிக்காமல் போகவே இன்னொரு முறை மொழி பெயர்த்து உள்ளார்.
   எந்ததொரு மொழி பெயர்ப்பும் மூல ஆசிரியருக்கு நிறைவு அளிக்காதது போல- மொழி பெயர்ப்பாளருக்கும் திருப்தி அளிப்பதில்லை. எனவே மறுபடியும் மறுபடியும் மொழி பெயர்க்கிறார்கள். என்னால் இன்னும் சிறந்ததொரு மொழி பெயர்ப்பைக் கொடுக்க முடியும் என்று சிலர் மொழிபெயர்க்க முன் வருகிறார்கள். அதுவே ஒரு படைப்பிற்கு பல மொழி பெயர்ப்புகள் வர காரணமாக இருக்கிறது.
   வங்க மொழி கதைகளை-குறிப்பாக தாகூர் சிறுகதைகள், நாவல்களை நேரடியாக மொழி பெயர்த்தவர் த.நா.குமாரசாமி. அவர் வங்க மொழி கற்க தாகூரின் சாந்தி நிகேதன் சென்றார். தாகூரை சந்தித்து விஸ்வபாரதியில் படிக்க இடம் கேட்டார். ஆனால் அது கிடைக்கவில்லை. எனவே சென்னைக்கு வந்து சொந்த முயற்சியில் வங்கமொழி கற்றுக்கொண்டார். மொழி பெயர்ப்பில் ஈடுபட்டார்.
   த.நா.குமாரசாமி வில்லிவாக்கம் பாடியில் வசித்து வந்தார். என் வகுப்பாசிரியர் பட்டாபிராமன் ஒரு நாள் மாலைப் பொழுதில் த.நா.குமாரசாமி இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் என் இலக்கிய படிப்பு பற்றி விசாரித்தார். பின்னர் படிக்கும் நாவல்கள், சிறுகதைகள் பற்றி குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளும் படி ஆலோசனை கூறினார். சில நாட்களாக "காபூலி வாலா', "அஞ்சல்நிலையம்', "சிதைந்த கூடு' - என்று தாகூரின் சில சிறுகதைகள் "கோரா', "புயல்', "விநோதினி' நாவல்கள் பற்றி குறிப்புகள் எழுதினேன். பின்னர் அதனை விட்டுவிட்டேன்.
   இருபதாண்டுகளுக்குப் பின்னால் சென்னை நந்தனம் பகுதியில் வசிப்பதற்கு வந்தேன். அடுத்த குடியிருப்பில் த.நா.குமாரசாமி வசித்துக்கொண்டிருந்தார். அநேகமாக தினமும் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். அவரை ஒரு நாள் தாகூர் "கடல் அளவிற்கு எழுதி இருப்பாரா'' என்று கேட்டேன்.
   "மகா சமுத்திரம்'' என்றார்.
   தமிழ் மக்களின் அபிமான மொழி பெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர் கலைமகள், மஞ்சரி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். மராட்டி மொழி கற்றவர். அவர் மராட்டி மொழி நாவலாசிரியரான விஷ்ணு சகாராம் காண்டேகர் நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். நாவல்களின் கருத்தும், கதை சொல்லப்பட்ட விதமும், மொழியும், தமிழ் மக்களுக்குப் பிடித்தமானதாக இருந்தது. தமிழ் நாவல்கள் படிப்பது போல வாசகர்கள் அவரின் "கருகிய மொட்டு', "மனோரஞ்சிதம்', "சுகம் எங்கே?' "எரி நட்சத்திரம்', "யயாதி' உட்பட பல நாவல்களைப் படித்தார்கள்.
   கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழியாளுமைக்கு அவர் மொழிபெயர்த்த டி.டி. கோஸாம்பியின் பகவான் புத்தர் என்று, புத்தரின் வரலாற்றையும், வாழ்க்கையையும் சொல்லும் நூலையும் குறிப்பிட வேண்டும். அது வாழும் புத்தகமாக இருக்கிறது.
   ஒரு முறை காண்டேகர் கூறினார்; "என் தமிழ் மொழி பெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. நான் அவரை சந்தித்தது இல்லை. அவரும் என்னைத் தேடி வந்தது இல்லை. நான் மராட்டி மொழி எழுத்தாளன். ஆனால் எனக்குத் தமிழ்நாட்டில் தான் அதிகமான வாசகர்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் மொழி பெயர்ப்பாளர் தான். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.'' -என்று 1965-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம் இருந்தது. அதன் தலைவர் நாரண-துரைக்கண்ணன். நான் செயலாளர். அதன் முதலாண்டு விழாவின் போது வெ.சாமிநாத சர்மாவிற்கும், கா.ஸ்ரீ.ஸ்ரீக்கும் மொழி பெயர்ப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினோம்.
   கா.ஸ்ரீ.ஸ்ரீ அப்பொழுது மயிலாப்பூரில் வசித்தார். அடிக்கடி சென்று பார்த்து பழகி வந்தேன். அவர் ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளிலும தேர்ச்சி பெற்று இருந்தார்.
   ஒரு நேர்காணலில் அவரிடம், ""நீங்கள் மொழி பெயர்ப்புக்காக ஏதாவது பரிசு விருது பெற்று இருக்கிறீர்களா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் "செங்கல்பட்டு மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு பரிசளித்தது. அது ஒன்றுதான் வாழ்நாளில் நான் பெற்ற பரிசு'' என்றார்.
   தமிழில் இருந்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மொழி மலையாளம். புதிய மொழி. அதன் படைப்புகளே நவீனமாக இருக்கின்றன.
   முற்போக்கு இலக்கியம் அதிகம். பேராசிரியர்கள், இலக்கிய விமர்சனங்களை எல்லாம் புது எழுத்தைக் கொண்டாடி வந்தார்கள். தமிழ்நாட்டில் வெகுஜன பத்திரிகை கதைகள் பிரபல்யமாகக் கொண்டிருந்த போது, மலையாளத்தில் முற்போக்குப் படைப்புகள் அதிகம் வர ஆரம்பித்தன. சித்தாந்த ரீதியில் இல்லாவிட்டாலும், இலட்சியவாதமும் முற்போக்கும் கொண்ட எழுத்துகள் நிறைய எழுதப்பட்டன.
   தகழி சிவசங்கரன் பிள்ளை, கேசவதேவ், எஸ்.கே. பொற்றேகாட் எழுத்துகள் தமிழ் இளம் வாசகர்களுக்குப் பிடித்தமானவைகளாக இருந்தன. அவர்களில் சிலரின் அரசியல் வெற்றிகள் வசீகரித்தன.
   எஸ்.கே. பொற்றேகாட் முற்போக்கு எழுத்தாளர். யதார்த்தமாக ஊர், நகரம், நாடு என்று கதைகள் எழுதிக் கொண்டிருந்தார். 1962-ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். அவர் ஞான பீட பரிசு பெற்றதும் சென்னை வந்தார். அவரோடு இரண்டு நாட்கள் ஊர் சுற்றினேன். அவர் பேச்சில் அதிகமாக இலட்சியவாதம், கற்பனா வாதம் இருந்தது.
   "எப்பொழுது கம்யூனிஸ்டு ஆனீர்கள்?'' என்று கேட்டேன்.
   "நான் கம்யூனிஸ்டு இல்லை. முற்போக்கு எழுத்தாளன். எனக்கு அரசியல் அபிலாஷைகள் உண்டு. 1962-ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் வந்ததும், சுயேட்சையாகப் போட்டியிட்டேன். கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளித்தார்கள். வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குச் சென்றேன். ஆனால் இரண்டாண்டுகளுக்குள், பாராளுமன்றம் எழுத்தாளர்களுக்கான இடம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. சந்தோஷமாக வெளியில் வந்துவிட்டேன்'' என்றார்.
   "உங்கள் எழுத்துகள் எப்படி மதிக்கப்படுகின்றன?''
   "நான் மலபாரில் பிறந்தவன். மலையாளத்தில் தான் எழுதுகிறேன். ஆனால் திருவனந்தபுரவாசிகள் என்னை ஏற்றுக்கொள்வதில்லை. என் மலையாளம் தமிழ் என்று ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் மலையாளத்தில் சம்ஸ்கிருதம் அதிகம்'' என்று சொல்லி தன் விருந்தினராக அழைத்தார். ஆனால் போக முடியாமல் போய்விட்டது.
   எஸ்.கே. பொற்றேகாட், "ஒரு நகரத்தின் கதை' என்ற நாவலின் மொழி பெயர்ப்பாளர் சி.ஏ.பாலன். என் நண்பர். அவர் தகழியின் "கயிறு' உட்பட பல மலையாள மொழி நாவல்களை மொழி பெயர்த்தவர். ஜெயகாந்தனின் ஆழ்வார்பேட்டை மடத்திற்கும், கே.கே.நகர் சபைக்கும் வருகிறவர். அசல் கம்யூனிஸ்டு. ஒரு கொலைவழக்கில் சிக்கிக் கொண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர். எப்பொழுது வேண்டுமானாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இருந்தது. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தத்தால் விடுதலை அடைந்தார்.
   சி.ஏ.பாலன் தன் சிறை அனுபவத்தை "தூக்கு மர நிழல்' என்று ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். அது படிக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக அவரும் நானும் நண்பர்களாகவே இருந்தோம். ஆனால் அரசியல் கொலையில் நேரடி பங்கு இருந்ததா என்று நான் கேட்கவும் இல்லை: அவர் சொல்லவும் இல்லை. ஆனால், இந்திய அரசு அவருக்குத் தியாகி பென்ஷன் வழங்கி வந்தது. ரயில்வே துறை முதல் வகுப்பு ரயில்வே பாஸ் வழங்கி இருந்தது. அவர் மொழி பெயர்ப்பு மூலமாகவே வாழ்ந்து வந்தார்.
   (அடுத்த இதழில்
   மெüளி)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai