வீட்டிலேயே விவசாயம்

தற்போது அனைத்து வீடுகளிலும் மாடித் தோட்டம் அமைப்பது ஃபேஷன் ஆகி வந்தாலும், தன்னுடைய வீட்டையே முற்றிலும் விவசாய பூமியாக மாற்றி இருக்கிறார்கள் சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும்
வீட்டிலேயே விவசாயம்

தற்போது அனைத்து வீடுகளிலும் மாடித் தோட்டம் அமைப்பது ஃபேஷன் ஆகி வந்தாலும், தன்னுடைய வீட்டையே முற்றிலும் விவசாய பூமியாக மாற்றி இருக்கிறார்கள் சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் ஸ்ரீப்ரியாகணேஷ் குடும்பத்தினர்.
 இந்த ஐடியா உருவானது எப்படி?
 சில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானி நாகநாதன் இல்லத்திற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்றோம். அப்போது அவர் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்திருந்தார். வீட்டிலேயே நாம் விவசாயம் செய்யலாம். இதனால் நம்முடைய அன்றாட காய்கறி செலவு, பழங்கள் செலவை மிஞ்சப்படுத்தலாம் என யோசனை கூறினார். அதுவே எங்களுடைய முதல் படி என்கிறார் கணேஷ். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீப்ரியா, எனக்குச் செடிகள் மீது எப்போதுமே அலாதி ப்ரியம் உண்டு. அவரைச் சந்தித்த மறுநாளே வீட்டில் சில பூந்தொட்டிகளை வைத்தேன். அதனைத் தொடர்ந்து காய்கறி, கீரைகள், பழங்கள், மூலிகைகள் (வெற்றிலை, ஓமவள்ளி, ஆடாதொடா, துளசி) வீட்டிலேயே பயிர் செய்தோம். செடிகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக என்னுடைய கணவர் "ஷேட் நெட்'" என்னும் கூரை அமைத்துச் செடிகளுக்குச் சரியான அளவு வெப்பம் கிடைக்கும் படி செய்தார். நாங்கள் போட்ட விதை இன்று மரமாகி எங்களுக்கு நல்ல அறுவடையைத் தருகிறது.
 நீங்கள் பயிரிட்ட அனைத்தும் விளைச்சலை தந்ததா?
 நாள்தோறும் என்னுடைய வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான காய்கறிகள் வெண்டைக்காய், கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பூசணிக்காய், நார்த்தங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சமிளகாய், முருங்கைகாய் என அனைத்தும் கிடைத்துவிடும். நீண்ட புடலங்காயை விளைவிப்பது எங்களுடைய சிறப்பம்சம். நான் பயன்படுத்திய போக மீதி இருப்பவைகளை அருகில் வசிக்கும் என்னுடைய உறவினர்களுக்குக் கொடுத்து அனுப்பிவிடுவேன். வெளியில் காய்கறி வாங்க வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாதம் காய்கறி வாங்கும் பணம் மிச்சமாகும். இந்தச் செடிகளைப் பராமரிப்பதற்காக நாங்கள் அனைவரும் செலவு செய்வது இரண்டு மணி நேரம் மட்டுமே.

 மேலும் வெயில் காலத்தில் எல்லா இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் எங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வராது. காரணம் வீட்டில் அரிசி , காய்கறி கழுவ பயன்படுத்தும் தண்ணீரை அப்படியே செடிகளுக்கு ஊற்றி விடுவோம். வீட்டில் சேரும் குப்பைகளை வெளியே கொட்டுவதில்லை. அதனை நாங்களே தனி தொட்டியில் போட்டு மக்க செய்து உரமாக்கி விடுவோம். மொத்தத்தில் எங்கள் வீட்டிலிருந்து கழிவு நீர், குப்பை என எதுவுமே வெளியே செல்வதில்லை. எல்லாமே செடிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிறார் ஸ்ரீப்ரியா.
 கணேஷ் தொடர்கிறார்...சென்னையில் நீங்களும் வாங்கும் கீரைகள் பெரும்பாலும் பூச்சி மருந்தால் விளைவிக்கப்பட்டவை. எங்களுடைய செடிகள், கீரைகள் அனைத்திற்கும் 15 தினங்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெய், மஞ்சள் பொடி, மோர் கலந்து தெளித்து விடுவோம். இதையும் மீறி பூச்சிகள் வந்தால், அதற்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவையை அரைத்து போட்டு விடுவோம். நமது உழைப்பில் பூச்சி மருந்துகள் கலக்காமல், நாம் அக்கறையாகப் பார்த்து வளர்ந்த காய்கறிகளை பயன்படுத்தும் போது அதன் ருசியே தனி தான், மேலும் எங்கள் குடும்பத்தில் யாரும் காய்ச்சல், சளி தொந்தரவு வந்தால் டாக்டரிடம் செல்வதில்லை. தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை வைத்து கஷாயம் போட்டு குடித்துவிடுவோம் விஷக்காய்ச்சலாக இருந்தாலும் சரியாக விடும் என்றார் கணேஷ்.
 -வனராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com