அலைகடலும் ஆழ்கடலும் அவர்தான்!

"அரசியலை விடத் தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது.
அலைகடலும் ஆழ்கடலும் அவர்தான்!

"அரசியலை விடத் தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது.
 நிச்சயமாகச் சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. அதே நேரத்தில் இப்போது எது தேவையோ, அதை அக்கறையாக முன் வைக்கிற படம்.' என்கிறார் இயக்குநர் பாபு யோகேஸ்வரன். "தாஸ்' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் "தமிழரசன்' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.
 தமிழரசன்.... பெயர் சொன்னதும், அரசியல், ஈழம் எனப் பல ஞாபகங்கள் வந்து போகுதே....
 வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. தமிழரசன் என்கிற 40 வயதுக்காரர். மனைவி, குழந்தை என சாமானிய வாழ்க்கை. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வரும்.
 எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபடத் தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். அப்படி ஓர் இடம் இங்கே வந்து போகிறது. அதைக் கடக்கிற நேரத்தில் அவனுக்கு வந்து போகிற அனுபவங்கள்தான் முழுப் படமும். இதை இப்படி ரொம்பவே சுலபமாகச் சொல்லி விட்டுப் போகலாம். ஆனால், இதில் வருகிற அழுத்தம் எல்லாத் திசைகளுக்கும் உங்களைக் கொண்டு போகும்.
 
 படம் எப்படி வந்து இருக்கிறது ...
 இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் சந்தித்த சில மனிதர்களின் வாழ்க்கைதான் இது. ஒருவன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்தக் கதை.
 அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.
 
 விஜய் ஆண்டனி படங்கள் மீது பொதுவாக, ஒரு எதிர்பார்ப்பு உண்டு.....
 அதை உணர்ந்திருக்கிறேன். இந்தப் படத்தை ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறவர் செய்ய முடியாது. அதற்குக் கீழ் இருக்கிறவர் செய்யவும் முடியாது. அப்போது என் தேர்வாக வந்து நின்றவர் விஜய் ஆண்டனி. கதை சொல்லப் போனேன். இடைவேளை வரை கேட்டதுமே, இதை நாம் சேர்ந்து செய்யலாம் என நம்பிக்கை தந்தார் விஜய் ஆண்டனி. அதுவே என் முதல் நம்பிக்கை.
 கதையின் உணர்வை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். அதை அவ்வளவு நேர்த்தியாகக் கொண்டு வந்தார். கதை பிடித்து நடிப்பதை விட, அதைப் புரிந்து கொண்டு எனக்குப் பலமாக நின்றார். விஜய் ஆண்டனிக்கு நன்றி. அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன். அவர்களின் குழந்தையாக ஜெயம் ராஜாவின் மகன் பிரணவ். முக்கியக்கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, வந்து போய் சிரிக்க வைக்கிற இடத்தில் யோகி பாபு என எல்லா இடங்களிலும் படம் பளீச்சென வந்து சேர்ந்திருக்கிறது.
 
 இளையராஜா இசை...
 நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜா தொட்டு விட்டார். இனி என்ன இருக்கிறது... இசையின் இன்னொரு பரிமாணம்தான் இந்தப் படம். இந்தத் தலைமுறைக்கு அவர் கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இசை.
 அவ்வளவு இலகுவாகக் கைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் பலமே ராஜாவின் இசைதான். விஜய் ஆண்டனி ஒரு பாட்டு பாடியிருப்பது இன்னும் அழகு. ராஜாவின் இசை உள்ளே வந்த பின்னர்தான், படத்துக்கு இன்னொரு கலர் வந்து சேர்ந்தது. இப்போது இசையின் வடிவம் மாறியிருக்கலாம். உயிரோட்டம் மாறியிருக்கலாம். எத்தனை காலம் ஆனாலும் ராஜாவின் இசை மாறாது.
 
 முதல் படத்துக்கும், இப்போதும் 10 ஆண்டு இடைவெளி ஏன்...
 அது நான் திட்டமிட்ட ஒன்றுதான். சினிமா தவிர்த்து, விளம்பர உலகத்தில் இயங்கிக் கொண்டிருந்தேன். இப்போது கூட, தமிழரசன் முடித்ததும் "வெப் சீரியஸ்' ஒன்று இயக்கி கொண்டிருக்கிறேன். இதில்தான் இயங்குகிறேன். ஆனால், சினிமாவில் இல்லை. சினிமாவில் வேகம் எடுக்கக் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டேன். இனி தொடர்ந்து பார்க்கலாம். நல்லதே நடக்கும்.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com