கவிதை பிறப்பதற்கும் காலம் நேரம் உண்டு! -

இந்த ஆண்டுக்கான ஞானபீட விருது பெற்றிருப்பவர் மலையாள ஆளுமைகளில் ஒருவரான "அக்கிதம்' அச்சுதன் நம்பூதிரி.
கவிதை பிறப்பதற்கும் காலம் நேரம் உண்டு! -

இந்த ஆண்டுக்கான ஞானபீட விருது பெற்றிருப்பவர் மலையாள ஆளுமைகளில் ஒருவரான "அக்கிதம்' அச்சுதன் நம்பூதிரி. கேரளத்திற்கு ஆறாவது முறையாக ஞானபீட விருதினைச் சேர்த்திருக்கும் "அக்கிதம்' அச்சுதன் நம்பூதிரிக்கு 93 வயதாகிறது. "அக்கிதம்' அவரது குடும்பப் பெயர். அதுவே, அவரது பெயராகவும் மாறிவிட்டது. "மலையாளத்தின் மகாகவி' என்று போற்றப்படும் "அக்கிதம்' நாற்பத்தைந்து நூல்கள் எழுதியிருந்தாலும் மிகவும் மதிக்கப்படுவதும் போற்றப்படுவதும் "அக்கிதம்' வார்த்த "இருபதாம் நூற்றாண்டின் இதிகாசம்'" தான். மலையாளத்தில் நவீன இலக்கியம் என்று மதிக்கப்படும் இந்தப் படைப்பு மலையாள இலக்கியத்தின் ஒரு மைல்கல். 1947-இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றவர். "வெளிச்சம் துக்ககரமானது...இருட்டு ஆனந்தம் நிறைந்தது..' என்ற "அக்கிதம்' எழுதிய வரிகள் கேரளத்தில் வெகு பிரசித்தம்.
 வேத பண்டிதர்களின் குடும்பத்தில் பிறந்த "அக்கிதம்' தனது சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்களை எதிர்த்து வந்தவர் "கவிதைகள் நான் எழுதவில்லை.. எனக்குள் இருப்பவன் எழுதுகிறான்..' என்று சொல்லி வந்த "அக்கிதம்' கவிதை பயணத்தை வற்றாத நதியுடன் மட்டுமே ஒப்பிடமுடியும். கேரள நம்பூதிரி பிராமணக் குடும்பத்தில் பிறந்ததினால் "அக்கிதம்' வேதங்களைப் படித்து வேதப் பண்டிதராக வளர வேண்டும் என்று பெற்றோர் விரும்பினாலும், "அக்கிதம்' சிறு வயதிலேயே மலையாளத்தில் வேத சுலோகங்கள் எழுத ஆரம்பித்து மலையாளப் பெருங்கவி எடசேரி கோவிந்தன் நாயர் வழிகாட்டலில் கவியாகப் பரிணமித்தார்.
 கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாட் அக்கிதத்தின் குடும்ப நண்பர். அதனால் "அக்கிதம்' பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பக்கம் கவரப்பட்டார் என்றாலும் கட்சியின் உறுப்பினர் ஆகவில்லை. "சிந்தனைகளின் சங்கமம் குறித்துப் பேசும் ரிக் வேதம்', "தொடக்கக் காலப் பொதுவுடைமை இலக்கியம்' என்று உறுதிபட "அக்கிதம்' கூறி வந்தார். தனது முதல் குழந்தை இறந்ததும் "அக்கிதம்' பொதுவுடைமை சித்தாந்தங்களுக்கு விடை கொடுத்து ஆன்மிகத்தின் பக்கம் வந்துவிட்டார். "பிறருக்காக ஒரு துளி கண்ணீர் சிந்திய போது என்னுள் ஆயிரம் சூரியன்கள் உதித்தன... பிறருக்காக நான் புன்னகைத்த போது என்னுள் பூரணச் சந்திரனின் குளுமையான ஒளி பிரவகித்தது... இந்த அற்புத ஆனந்தக் குவியலை இதற்கு முன் நான் அனுபவித்ததில்லை. அந்த ஆனந்த பேரிழப்பை நினைத்து நினைத்து மீண்டும் அழுகிறேன்... அழுகிறேன்..' என்ற வரிகள் கேரளத்தை வசப்படுத்தியது.
 அக்கிதத்துடன் நெருங்கிப் பழகிய மூஸா, அப்துல்லா இருவரது மறைவு அக்கிதத்தைப் பெரிதும் நோகச் செய்தது. நண்பர்களைத் தனது இறவா கவிதையில் இடம் பெறச் செய்து உயிர்ப்பித்து மீண்டும் அந்தக் கவிதையில் வாழச் செய்தார்.
 "எனக்குச் சொந்தமாகப் பரம்பு (பண்ணை) உள்ளது. முன்பெல்லாம் நானே மண் வெட்டி கொண்டு குழிகள் வெட்டி பாக்கு மரங்கள் வளர்த்திருக்கிறேன். மண் வெட்டியை எந்த வகையிலும் கையாண்டு குழிகள் வெட்டுவது மாதிரி "பேனா எடுத்தோம்... பட பட வென்று' கவிதை எழுதி விட முடியுமா? முடியாது. பல தருணங்களில் பேனா ஏந்தி கவிதை வராத சந்தர்ப்பங்கள் எனக்கு ஏற்பட்டுள்ளன. கவிதை வரும் போதுதான் வரும். தாய் நினைத்த மாத்திரத்தில் குழந்தையைப் பிரசவிக்க முடியாது. பிரசவத்திற்கென்று நேரம் இருப்பது போல... கவிதை பிறப்பதற்கும் காலம்... நேரம் உண்டு..'' என்கிறார் அக்கிதம்.
 -பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com