தைபெய் திரைப்படவிழா

உலக விமர்சகர் சங்கத்தின் (Fipresci) மூலம் தைவானில் உள்ள தைபெய் நகரில் நடைபெற்ற 56-ஆவது "தங்க குதிரை திரைப்பட விழா'வில் ஒரு ஜூரியாக பங்கேற்று திரும்பியுள்ளார்,
தைபெய் திரைப்படவிழா

உலக விமர்சகர் சங்கத்தின் (Fipresci) மூலம் தைவானில் உள்ள தைபெய் நகரில் நடைபெற்ற 56-ஆவது "தங்க குதிரை திரைப்பட விழா'வில் ஒரு ஜூரியாக பங்கேற்று திரும்பியுள்ளார், பத்திரிகையாளர் சலன். அவரது அனுபவங்கள், பார்த்த படங்கள் எனப் பல விஷயங்களை இரு கட்டுரைகளாக இங்கு பதிவு செய்கிறார். முதல் கட்டுரை இது:
தங்கம் என்றாலே உயர்வானதுதான். குதிரை என்றாலே வேகமானது, ஆளுமை என்றும் சொல்லலாம். ஆக "தங்க குதிரை திரைப்பட விழா' என்றாலே உயர்வானது, திரைப்படத் துறையில் ஆளுமை நிறைந்தது என்று தாராளமாகச் சொல்லலாம். இந்தத் திரைப்பட விழா அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக நடை பெற்று வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
இந்த ஆண்டு நடைபெற்ற 56-ஆவது திரைப்பட விழா. பல்வேறு சிறப்புகளை உடையது என்று சொல்லலாம். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் இந்தத் திரைப்பட விழாவின் நாயகன், அதாவது தைபெயின் தங்க குதிரை திரைப்பட விழா குழுவின் தலைவர், ஒரு திரைப்பட இயக்குநர் தான்.
திரைப்படம் எடுப்பது எவ்வளவு பெரிய வேலை என்றும், எவ்வளவு பேரை அந்தத் திரைப்பட இயக்குநர் வழி நடத்தி செல்லவேண்டும் என்றும். சென்னையில் உள்ள பலருக்கும் தெரிந்த விஷயம்தான். திரைப்பட இயக்குநர் திரையுலகில் எல்லோரையும் அரவணைத்து செல்லும் போது ஒரு திரைப்படவிழாவை சிறப்பாக நடத்தமாட்டாரா? என்று யோசித்து "தங்க குதிரை திரைப்பட விழா'வை தலைமை ஏற்று நடத்த, திரைப்பட இயக்குநர் ஆங் லீ யை தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர்.
திரைப்பட இயக்குநர் ஆங் லீ என்று சொன்னவுடனே என்றோ, எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று யோசிப்பவர்களுக்கு, அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. ஆங் லீ தைவான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பிறந்தது தைவானில் உள்ள பிங்க்டுங்க் மாநிலம். அது தென் தைவானில் இருக்கிறது. பள்ளிப் படிப்பை தைவானில் முடித்து விட்டு, மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்தார். இப்போது அமெரிக்காவில் வாழ்கிறார். அவர் எடுத்த பல படங்கள் உலகமெங்கிலும் சிறப்பாக ஓடி, புகழைப் பெற்று கொடுத்துள்ளது. 
கடைசியாக அவர் இயக்கிய "லைஃப் ஆஃப் பை'" (life of pi) என்ற படத்திற்குத் தான் அவருக்கு அகாதெமி விருது கிடைத்தது. அதாவது ஆஸ்கார் விருது என்று எல்லோராலும் புகழப்படும் உயர்ந்த விருதும் வாங்கி உள்ளார். இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால், அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு விருதை பெற்றுக்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 
இப்படிபட்ட ஒருவர் தலைவராக இருக்கும் போது, எப்படி ஒரு திரைப்பட விழா சிறப்பாக இல்லாமல் இருக்கும். இவர் ஆஸ்கார் விருது வாங்கும் நாள் அன்று அவருக்கு வயது என்ன தெரியுமா 58 வயது . மிக வயதான விருது வாங்கியவர்களின் வரிசையில் அவர் 10-ஆவது இடத்தில் உள்ளார். 
இந்த அளவிற்குப் பெரிய இயக்குநரிடம் என்னை, "இவர்தான் பிப்ரெஸ்கியாக இந்தியாவில் இருந்து இங்கு வந்து சிறந்த ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து விருது கொடுக்க வந்திருக்கிறார்'' என்று அறிமுகப்படுத்தியவுடன், என்னிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினார் ஆங் லீ. அவரது படங்களைப் பற்றி, நான் கூற, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, "உங்களுக்கு இங்கு எல்லாம் செளகரியமாக இருக்கிறதா, ஏதாவது வேண்டும் என்றால் தயவு செய்து சொல்லுங்கள்' என்று அவர் சொன்ன பாங்கு என் மனதைத் தொட்டது. நான் என்றும் எனது தாய்த் திருநாட்டின் புகழை வெளிநாட்டில் இருக்கும் போது சொல்லாமல் இருந்ததில்லை. அது போலவே அவரிடம், இந்தியாவில் சுமார் 800 படங்களை எடுக்கிறோம். அதில் சுமார் 300 படங்கள் தமிழில் எடுக்கப்படுகிறது என்று கூறியவுடன், சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே, தெரியும் என்பது போல் தலை அசைத்து, என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு என்னைப் பார்த்தார். சிறிது நேரம் பல்வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்.

 சுமார் 200 திரைப்படங்கள், பல்வேறு பிரிவுகளில் காண்பிக்கபட்டன. அவை Master Class, Some where 4 some time, Viva Auteur, Panorama, New Waves, Another View, Window on Asia, Nippon Selection, L.G.B.T.Q., Music apocalypse, Crazy World, All about Cinema, Beyond the Verdict, Sport Light on Switzerland, focus. இதில் பிப்ரெஸ்கி (Fipresci) பிரிவுக்கு என்று சில படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த 10 படங்களில் ஒரு படத்தைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்தோம். அந்தப் படம்தான் "“Heavy Craving". இந்தப் படத்தில் பிடித்த விஷயம் என்னவென்றால், எனக்கு ஏதோ ஒரு தமிழ்ப் படம் பார்ப்பது போல் இருந்தது. படத்தின் கதாநாயகி ஒரு 30 வயதுள்ள கன்னி பெண். 
அவள் எடை 105 கிலோ. தனது தாயின் குழந்தைகள் காப்பாகத்தில் (Day care centre) சமையல் வேலை செய்கிறாள். ஒரு நாள் தனது வீட்டிற்குப் பொருள்களை விநியோகிக்க வரும் ஒரு இளைஞனிடம் பழக்கம் ஏற்படுகிறது. அந்தப் பழக்கத்தால் தனது எடையைக் குறைக்க முடிவு செய்கிறார். கன்னிப் பெண்ணின் எடை குறைப்பு நடவடிக்கையால், அவரது சமையலின் ருசி மட்டும் அல்ல, பல்வேறு உணவு பண்டங்களின் சுவை தாறுமாறாகப் போய்விடுகிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்திற்கு Fipresci பரிசு கொடுக்கப்பட்டது. அந்தப் பரிசை அதன் இயக்குநருக்கு மேடையில் நானே கொடுத்த போது சந்தோஷமாக இருந்தது. அந்த இயக்குநருக்கு இது தான் முதல் முழு நீள திரைப்படம் என்று கேள்விபட்ட போது எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. இந்தக் கதையை இங்கே உள்ள ஒரு தயாரிப்பாளரிடம் கூறியபோது, "நாமே தமிழில் இந்தக் கதையை எடுக்கலாமே'", என்று கூறினார். 
சுமார் 23-க்கும் மேற்பட்ட விருதுகள் இந்த படவிழாவில் வழங்கப்பட்டன. இது மட்டும் அல்லாமல் short,
documentary படங்களும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டன. வாழ் நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு பெற்றவர் Wang Toon. அதே போல் இந்த ஆண்டு மூன்று இயக்குநர்களில் படங்களும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன. அவர்கள் Elia Suleiman, Milcho Manchevski Utm Suo Masayuki. இந்தப் பட விழாவில் மக்களின் ஏகோபித்த பாராட்டு பெற்ற ஒரு படத்திற்குதான் சிறந்த படமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுப் பரிசு கிடைத்தது. அது மட்டுமல்ல மிக அதிகமான விருதுகளைப் பெற்ற ஒரு படம் என்றால் "A Sun" என்ற படத்தைதான் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். 
இந்தப் படத்திற்கு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் (Chung Mong Hong) சிறந்த நடிகர் (Chen Yiwen), சிறந்த குணசித்திர நடிகர் (Liu Kuanting) படத்தொகுப்பாளர் (Lal Hsiu hsiung), அது தவிர பார்வையாளர் விருதும் இந்தப் படத்திற்குதான் கிடைத்தது. இந்தப் படத்தின் கதை ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேர்களைச் சுற்றிச் சுழலுகிறது. தாய், தந்தை இரு மகன்கள். அவர்களின் பிரச்னைகள், அவை எப்படித் தீர்க்கப்படுகின்றன என்று உணர்வு பூர்வமாகச் சொல்லும் படம் இது. ஒவ்வொரு காட்சியும் மனதில் பதியும் வண்ணம் மிக அழகாக இயக்குநர் படம் பிடித்துள்ளார். இது ஒரு குடும்பக்கதை என்பதலோ என்னவோ மக்களுக்குப் பிடித்துள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார் இதன் இயக்குநர். 
இந்த ஆண்டு திரைப்பட விழாவில் இந்தியாவைப் பொருத்தவரை ஒரே ஒரு படம் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டது. அது "புல் புல் கென் சிங்'. இதன் இயக்குநர் ரீமா தாஸ். முக்கியமான பிரிவுகளில் இது இல்லை என்றாலும் பார்த்தவர்கள் பாராட்டியதாகத் திரைப்பட நிர்வாகம் தெரிவித்தது.
இந்த ஆண்டு 56-ஆவது "தங்க குதிரை திரைப்பட விழா' வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ள வேளையில் இந்தத் திரைப்பட விழா தான் ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழா என்று தைரியமாகக் 
கூறலாம். 
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com