பாரதி கவிதைகளில் இரணியன் வதைப்படலம்

கம்பர் எழுதிய ராம காவியத்தில் அடங்கிய மற்றொரு காவியமாக விளங்குவது இரணியன் வதைப்படலம்.
பாரதி கவிதைகளில் இரணியன் வதைப்படலம்

கம்பர் எழுதிய ராம காவியத்தில் அடங்கிய மற்றொரு காவியமாக விளங்குவது இரணியன் வதைப்படலம். இந்த இரணியன் வதைப் படலம் மகாகவி பாரதியின் நெஞ்சம் கவர்ந்த கதைப் பகுதியாகும். இந்தப் படலத்தைப் பற்றி பாரதி ஒன்பது இடங்களில் தமது கவிதையிலும் வசனத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
 1. "பாரதி அறுபத்தாறு' என்ற கவித்தொகுதியில், "சொல்லடா! ஹரி என்ற கடவுள் எங்கே?' என்று பிரகலாதன் இரணியன் உரையாடலை விருத்தப் பாடலாக்கி வியப்பூட்டுகிறார்.
 2. பாஞ்சாலி சபதத்தில் திரெளபதி கண்ணனிடம் செய்யும் பிரார்த்தனையில் "கம்பத்தில் உள்ளானோ? அடா, காட்டு உன்றன் கடவுளைத் தூணிடத்தே' என்ற வரியில் இரணியன் வதைப்படலம் இடம்பெற்றுள்ளது.
 3. புதிய ருஷ்யா என்ற கவிதையில், "இரணியன் போல் அரசாண்டார்' என்று இப்படலத்தை பாரதி சுட்டிக் காட்டுகிறார்.
 4. லாலா லஜபதிராய் பற்றிய கவிதையில் "ஆரன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்குற்ற கோரங்கள் சொல்லத் தகுமோ?' என்று பாரதி இப்படலத்தைப் பற்றி உரைக்கிறார்.
 5. "தந்தையும் மகனும் கடவுளும்' என்று பாரதி எழுதிய மூவர் நாடகத்தில் இவ்வரலாறு சித்தரிக்கப்படுகிறது.
 6. பாரதி மொழிபெயர்த்த பகவத்கீதை முகவுரையில் இரணியன் வதைப்படலம் சுட்டிக் காட்டப்பெற்றுள்ளது.
 7. கண்ணன் பாட்டில், "கண்ணம்மா என் காதலி' என்ற தலைப்பில் "முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ' என்று இரணியன் வரலாறு சொல்லப்பட்டுள்ளது.
 8. பாரதி எழுதிய "நம்பிக்கை' என்ற கட்டுரையில் இரணியன் வதைப்படலம் கூறப்பட்டுள்ளது.
 9. கம்பராமாயணத்தில் "உனது கடவுள் எங்கே இருக்கிறான்?' என்று இரணியன் கேட்க, அதற்குப் பதிலாக பிரகலாதன், "சாணினும் உளன் கோணினும் உளன்! குன்றிலும் உளன்! தூணினும் உளன்! நீ சொன்ன சொல்லினும் உளன்!' என்ற கம்பர் கவிதையை பாரதி மேலும் விரிவுபடுத்தி, "வல்லபெருங் கடவுள் இலா அணுவொன்றில்லை' என்று கூறி, "இந்த ஏடும் எழுத்தும் எழுதுகோலும் தெய்வம்' என பாரதி அறுபத்தாறில் கூறுவது... கம்பர் வழியில் சென்று கம்பரையே வெல்லும் உத்தியாகும்.
 - எதிரொலி எஸ். விசுவநாதன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com