சீன- தமிழர் உறவு: கல்வெட்டு சொல்லும் உண்மைகள்!

தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனமாக அறியப்பட்டிருந்தாலும்  வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கும்  போது தொன்றுதொட்டு அவர்கள் வணிகம், கலாச்சாரம் பண்பாட்டு ரீதியாக
சீன- தமிழர் உறவு: கல்வெட்டு சொல்லும் உண்மைகள்!

தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனமாக அறியப்பட்டிருந்தாலும்  வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கும்  போது தொன்றுதொட்டு அவர்கள் வணிகம், கலாச்சாரம் பண்பாட்டு ரீதியாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தங்கள் தடத்தைப் பதித்துள்ளனர் என்பதைப் பல ஆய்வுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அந்த வகையில் சீனாவுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திலேயே வணிக ரீதியாக இருந்துள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.

சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தின் ஜுவன்ஜோ துறைமுகம், முந்தைய கடல்வழி பட்டுப்பாதையின் துவக்கமாக இருந்தது.  கடல் பயணியர்களான மார்கோபோலோ (இத்தாலி), இபின் பதூதா(மொராக்கோ)  ஆகியோரின் சான்றுரை ஜுவன்ஜோ துறைமுகம், உலகிலேயே அதிக வர்த்தகம் நடைபெற்ற இடம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

சீனாவின் சொங் மற்றும் யுவான் வம்ச ஆட்சியின் போதுதான், "ஹுவான் யிங், ஹுவான் யிங்' என  வரவேற்கும் சீனர்களுடனான தமிழர்களின் வணிகம் தொடங்கியது. 

7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில், சீனாவில் பல்லவ மன்னன் மிகப்பெரும் வணிகனாக உலா வந்துள்ளான்.  சீனாவின் உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் இவ்வணிகத்தின் வேகத்தில் 9-ஆம் நூற்றாண்டில் சிறு சுணக்கம் கண்டாலும், மீண்டும் 10-ஆம் நூற்றாண்டின் பாதியில் சோழதேசத்து வணிகர்கள் சீனர்களுடனான வணிகத்தைப் புதுப்பித்தனர்.

சோழ வம்சத்தின் ராஜராஜனின் அரசவை உறுப்பினர்கள், 1015-ஆம் ஆண்டு சீனாவைச் சென்றடைந்ததாக சுங் ஷி (Sung Shi) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனர்களின் வணிகம் தொடர்பான குறிப்புகளோ, கல்வெட்டுகளோ சோழ வானத்தின் கீழ் கிடைக்கவில்லை. ஆனால், சொங் வம்சத்தைச் சேர்ந்த ஜாவ் ஜு குவா (Chau Ju Gua) என்பவரது எழுத்தாணி வரைந்த வரலாற்று ஓவியத்தின்படி, சோழ வம்சத்தில் ராஜராஜன் (1015), ராஜேந்திரன்-1 (1033), குலோத்துங்கன் (1077), ஆகிய ஆளுமைகளின் கற்றறிந்த சான்றோர்கள் சீன மண்ணில் காலடி எடுத்து வைத்து வணிகத்துக்குத் தொன்று தொட்டு நீர்ப் பாய்ச்சியுள்ளனர். இனிமையாகச் செயல்படும் 71 வணிகர்களும் சான்றோர்களுடன் இணைந்து சென்றுள்ளனர்.  அத்துடன், அவர்களுக்கு 81 ஆயிரத்து 800 செம்பு நாணயங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டதாக சு குவாவின் தரவுகள் எடுத்துரைக்கின்றன. 

சீனத் தரப்பிடமிருந்து அதிக அளவிலான தங்கம், வெள்ளி, ஈயம், தகரம், நாணயங்கள் ஆகியன  பண்டமாற்று முறையில் கையாளப்பட்டன. இதனால் சீனாவில் இத்தகைய உலோகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படவே, ஒரு கட்டத்தில் அவற்றுக்கு சீனத் தரப்பு தடை விதித்தது. அதையடுத்து காகிதப் பணத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. சீனாவிலிருந்து வந்த அத்தகைய உலோகங்கள் சோழ வீதிகளில் புழங்கப்பட்டதற்கு உதாரணமாக, "சோழர்கள் காலத்தில்தான் செப்பு நாணயங்கள், வெண்கலச் சிலைகள் போன்றவை அதிகமாக உருவாக்கப்பட்டன' என்று ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

ஜுவன்ஜோவில் கிறிஸ்துவமும், இஸ்லாமும் காலூன்றியது. அவ்வாறே, வணிகம் புரிந்த சோழர்களும் சீன மண்ணில் தங்களது இறை நம்பிக்கையை விதைக்கத் தவறவில்லை என்றாலும் அவர்கள் அதைப் பரப்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சோழர்கள் சீனர்களுடன் வணிகம் செய்ததற்கு அழியாச் சான்றாக இருக்கும்  ஜுவன்ஜோவில் உள்ள கையுவான் புத்த கோவிலின் ஒருபகுதியில் சிவா, விஷ்ணு, கிருஷ்ணர், லஷ்மி என பல ஹிந்து கடவுள்களின் சிலைகளைக் காண முடிகிறது.  16 முகங்கள் கொண்ட 2 தூண்களின் 4 புறங்களிலும் ஹிந்துக்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. தூணின் ஒரு பகுதியில், காக்கும் கடவுள் விஷ்ணுவின் 5-ஆவது அவதாரமான வல்லமை-போற்றும் நரசிம்ம சொரூபன், சொரூபமாகக் காட்சி அளிக்கிறார். அக்கோயிலுக்குள் செல்வபவரை ஒரு நிமிடம் நின்று ரசிக்க வைக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. சிவலிங்கத்துக்கு மாலை சூட்டும் யானை, நடராஜர், கிருஷ்ண லீலைகள், மல்யுத்தம் புரியும் வீரர்கள் எனப் பல உருவங்களைக் காண முடிகிறது.

இதுமட்டுமல்லாமல், ஜுவன்ஜோ நகரில் இன்னும் எத்தனை ஹிந்து கோயில்கள் எழுப்பப்பட்டிருக்கும் என ஆய்வறிஞர்கள் எழுப்பும் கேள்விக்கு விடையாக 1930-களுக்குப் பிறகு, ஜுவன்ஜோவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ஹிந்து கோயில்கள், சிதிலம் அடைந்த கடவுள்களின் சிலைகள் நகரின் பல்வேறு இடங்களிலிருந்து கிடைத்த வண்ணம் உள்ளன. அத்தனையும் மங்கலக் குறியீடுகள், வரலாற்றுப் பக்கத்தில் மறைந்துள்ள புதிர்கள். அதனால் அவற்றுக்கு ஜுவன்ஜோ கப்பலோட்டம் அருங்காட்சியகத்தில் சிறப்பு இடம் வழங்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனால், தற்போது எந்த ஹிந்து கோயில்களும் ஜுவன்ஜோவில் இல்லை. எனினும்,  ஹிந்து கடவுளை புத்த கடவுளாகக் கருதி வழிபடும் கிராமம் ஜுவன்ஜோவில் குடிகொண்டுள்ளது. அதன்பெயர் ட்சீதியன் (Chidian). இக்கிராமத்தில், தீய சக்தியை காலால் மிதித்து; நான்கு கை விரித்து; இரண்டு சீடர்களுடன் அமர்ந்திருக்கும் சிலையைக் காணும்போது,  "அட ! ஹிந்து கடவுள் போல உள்ளதே' என்ற சிந்தனை நம் எல்லோர் மனதிலும் எழும்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இக்கோயிலை மீண்டும் புதுப்பித்துள்ளனர்.   

தமிழ் கல்வெட்டு

ஜுவன்ஜோ கடற்பயண அருங்காட்சியகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பல ஹிந்து கடவுள் சிலைகள் மற்றும் ஒப்பீட்டுப் படங்களுக்கு மத்தியில் வெளிர் மஞ்சள் நிற ஒளியில் தமிழ் கல்வெட்டு ஒன்று மிளிர்ந்து கொண்டிருக்கும். கண்ணாடிப் பேழையில் மிகப் பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ள அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமே. ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன பொருள் தரும் எனத் தெளிவுறுத்தும் விதம் சீன மொழியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 1281-ஆம் ஆண்டு 4-ஆவது மாதம் அக்கல்வெட்டு சீன அரசருக்குப் பரிசாக  அளிக்கப்பட்டுள்ளது. அது (சாராம்சம் மட்டும்) இவ்வாறு கூறுகிறது:

""இங்கு வணிகம் செய்வதற்கு உரிமம் வழங்கியதற்கும், கோயில் கட்டுவதற்கும், கடவுள் சிலைகள் பொறிப்பதற்கும் அனுமதி அளித்ததற்கு மாட்சிமை பொருந்திய மங்கோலிய செகடய் (Chegetai, செங்கிஸ்கானின் ஒரு மகன்) அவர்களுக்கு மிக்க நன்றி. அரசர்  செகடய் அவர்கள் நல்வளத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறோம்.'' 

- ""சம்பந்த பெருமாள் தவச்சக்கரவர்த்திகள்''

தஞ்சைபிரகதீசுவரர் கோயில் தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் விமானத்தில் 2-ஆவது தளத்தின் வடகிழக்கு மூளையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிலையானது மங்கோலியரின் உருவத்தை ஒத்துக் காணப்படுகிறது. மீசை, குறுந்தாடி, சீன கழுத்துப் பட்டையுடன் கூடிய அரைக்கைச் சட்டை ஆகியவை இவர் மங்கோலியர் அல்லது சீனராக இருக்க வாய்ப்புண்டு என்று "அமராவதி' ஆய்வு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜராஜசோழன் நேரடிக் கண்காணிப்பில் இக்கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவருடைய ஒப்புதலின் பேரிலேயே இச்சிலை அங்கு நிறுவப்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது. இது சோழருக்கும், சீனருக்கும் இடையேயான உறவுக்கு இது மிகச்சிறந்த  சான்றாக நின்று முக்காலத்துக்கும் பதில் அளித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com