மூன்றாவது கண் சொல்லும் உண்மைகள்!

நாம் சொந்த பயணமாகவோ, அலுவல் ரீதியாகவோ எங்குச் சென்றாலும் இந்த மூன்றாவது கண்ணின் பார்வை நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
மூன்றாவது கண் சொல்லும் உண்மைகள்!

நாம் சொந்த பயணமாகவோ, அலுவல் ரீதியாகவோ எங்குச் சென்றாலும் இந்த மூன்றாவது கண்ணின் பார்வை நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம்மைத் தினம் தினம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது. பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரி, முக்கிய வணிக நிறுவனங்கள், மக்கள் கூடும் இடங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.,மையம்  என இந்த மூன்றாவது கண் எப்போதும் நம்மைக் கண்காணிக்கிறது. இந்த மூன்றாவது கண்  பாதுகாப்பா? ஆபத்தா? 


""முன்பு குற்றம் நடந்தால் இந்த நபர்தான் என்பதை எளிதில் செய்முறை குற்றவாளிகள் பட்டியலை வைத்தே கண்டுபிடித்து விடலாம். தற்போது வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் திட்டமிட்டுக் குற்றங்களைச் செய்து விட்டு சொந்த ஊருக்கே தப்பிச் சென்று விடுகிறார்கள்.  தற்போது புதுக்குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாறி வரும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுவது தான் இந்த காமிரா எனும் மூன்றாவது கண். நாம் கண் உறங்கினாலும் காமிரா கண் உறங்காது. காமிராவைப் பொருத்தவரையில் குற்றத்தடுப்பிற்கு (prevention) பெரிதும் உதவுகிறது. ஒரு பகுதியில் சிசிடிவி இருந்தால் குற்றவாளிகள் வருவதும், போவதும் தடுக்கப்படுகிறது. (Detection) குற்றம் நடந்த பின்பு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. கண்டுபிடித்த குற்றவாளிகளுக்கு (conviction) தண்டனை வாங்கித் தர உதவுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ள அனைத்து காமிராக்களையும் கண்காணிப்பது என்பது இயலாத ஒன்று. எனவே முக்கியச் சந்திப்புகளில் காமிரா மூலம் எப்போதும் காவல்துறையினர் கண்காணிப்பார்கள். இரவு நேரத்தில் முக்கியப் பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கும். காவல்துறை சார்பாகப் பொருத்தப்பட்டு இருக்கும் காமிராவில் பிளாஷ் லைட் போட்டு இருக்கிறோம். இதுவே குற்றவாளிகளை எச்சரிக்கும் நோக்கில் பொருத்தப்பட்டதுதான். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அந்தந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ள காமிராவை ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தால், அதில் இருக்கும் காட்சிகளை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம்.

காமிரா பொருத்துவதைப் பொதுமக்கள் செலவாகப் பார்க்காமல் முதலீடாகப் பார்க்கவேண்டும். உங்கள் சொத்துகளைப் பாதுகாக்க நீங்கள் செய்யும் செலவு இது. ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் "ஹெல்த் இன்சூரன்ஸ்' செலவு போன்றது தான் இதுவும்''  என்கிறார் சென்னை வடபழனி காவல் ஆய்வாளர் சந்துரு. 

காவல்துறை சார்பாகச் சென்னை மாநகரப் பகுதியில் கண்காணிப்புக் காமிரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கும் Mi Tech நிர்வாகி கண்ணனிடம் பேசினோம்:  "" நான் பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தக் காமிரா பொருத்தும் பணியைச் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளில்  காமிராவை பொருத்தினோம். அதனைக் கேள்விப்பட்டு எங்களை அழைத்து மூன்றாவது கண்  என்று சொல்லும் காமிராப் பொருத்தும் பணியைக் காவல்துறையினர் வழங்கினார்கள். பொதுவாகக் காமிராவைப் பொருத்தவரை இரண்டு வகைதான் முக்கியம். ஒன்று HD (High definition) காமிரா, மற்றொன்று IP Internet protocol காமிரா. தெரு முனைகளில் வைப்பது (HD) காமிரா. இது குறைவான விலையில் கிடைக்கும். 

ஐ.பி காமிரா என்பது முக்கிய இடங்களில் காவல்துறையால் வைக்கப்படும் காமிரா. சிக்னல்களில் கடந்து செல்லும் வண்டியின் பதிவு எண்ணைக் கூட மிகத்துல்லியமாக எடுத்துவிடும். மேலும் பதிவான காட்சிகளில் உள்ள நபர்களின் முகங்களையும் தெளிவாகக்காட்டும். மேலும் குற்றச் சம்பவம் நடந்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளியின் புகைப்படத்தை வைத்தே அவர் முன்பே குற்றம் செய்தவராக இருந்தால் என்னென்ன குற்றம் செய்திருக்கிறார் என்ற விவரத்தை உடனே கொடுத்துவிடும் வகையில் கணினி மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.

காமிரா பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் தற்போது அதிகமாக உள்ளது. வீட்டிற்கு டி.வி எப்படி அவசியமோ அதே போன்று காமிரா என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது. ஆனால் காமிரா பொருத்துபவர்கள், சரியான தொழில்நுட்பங்களுடன் கூடியவற்றைப் பொருத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் பெரிதும் பயன்படும். மேலும் பதிவு செய்யும் காட்சிகளைச் சேமித்து வைக்கும் hard disk திறன் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நான்கு காமிராக்கள் ஒரே இடத்தில் இருந்தால் அதனுடைய காட்சிகள் ஒரு மாதம் வரை சேமிக்கலாம். காமிராவின் எண்ணிக்கை அதிகமாகும் போது சேமிப்பு நாள்களின் எண்ணிக்கை குறையும். காமிரா இணைப்புக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும்படி செய்ய வேண்டும். பெண்கள் தனியாக வசிக்கும் இடங்கள், வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடுகள் போன்றவற்றில் காமிரா பொருத்த வேண்டியது அவசியமாகும் என்றார். ''

""கண்காணிப்புக் காமிராக்கள், ஸ்பை காமிரா எனப்படும் உளவு பார்க்கப் பயன்படுத்தப்படும்  காமிராக்கள் என விதவிதமான நவீன காமிராக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. மலிவான விலையிலும்  கிடைக்கின்றன. ஒருபுறம், அவை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், மற்றொரு புறத்தில் தனிமனிதர்களின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. நமக்குச் சம்பந்தமே இல்லாத யாரோ சிலருடைய பார்வையின் ஊடுருவலில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.  உதாரணத்திற்கு நேர்காணல் செல்லும்  நபர் வரவேற்பறையில் காத்திருக்க வைக்கப்படுகிறார். அவருடைய நடவடிக்கைகளை உள்ளிருந்து கண்காணிக்கும் அலுவலர்கள் அவரைப் பணியில் அமர்த்தலாமா? வேண்டாமா? என முடிவு செய்கிறார்கள். மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகளை உள்ளிருந்தே பார்க்கும் மருத்துவர்  மருத்துவம் அளிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறார்.  காமிராவால் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவிட்டது. எனவே, அதைப் புரிந்து கொண்டு நாம்தான் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்''என்கிறார்  குற்றவியல் துறை பேராசிரியர் ஜெய்சங்கர்.

""மனிதனின் கண்கள் முன்னோக்கிச் செல்ல, பின்தொடரும் கண்களாகச் செயல்படுபவை கண்காணிப்புக் காமிராக்கள். இப்போது சிறு வீடுகளிலும் கூடக் காமிராக்களை காணமுடிகிறது.  பொதுவான பார்வையில் காமிராக்கள் பொருத்தப்படுவதன் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதே.  இந்தப் பகுதியில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று பொது மக்களுக்குத் தெரியும்படி அறிவுறுத்தல் வாசகம் பொது மக்கள் பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும் என அரசுக் குறிப்புத் தெரிவித்தாலும் அந்தக் குறிப்பு பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. அவ்வாறு குறிப்பிடாமல் காமிராக்கள் பொருத்துவது சட்ட விதிமுறை மீறல் ஆகும். அந்த அறிவிப்புக் குறிப்பிடப்பட்டிருந்தால்,  பொது இடங்களில் கவனக் குறைவாக இருந்தாலும் இந்த அறிவிப்பைக் கண்டு சரி செய்து கொள்ளலாம். அதாவது பெண்கள், பெண் குழந்தைகள் ஆடைகளைச் சரி செய்து கொள்வதற்கு எச்சரிக்கையாக இருக்கும்.  தவறான எண்ணத்துடன் செயல்படுபவர்கள் கூட அறிவிப்பைப் பார்த்ததும் பின்னடைய வாய்ப்பாகும். 

காமிராக்கள் பொருத்தப்படுவதுடன் விட்டுவிடாமல் பதிவுகளை ஆவணப்படுத்திச் சேகரித்து வைத்திடல் வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரியவரும். ஆனால் நடைமுறையில் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். காமிரா எவ்வளவு துôரத்திற்குக் காட்சிகளை உள்வாங்கும் சக்தி கொண்டது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு அப்பால் வைத்துக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.  பொது இடங்களில் பொருத்தப்படும் காமிராக்களுக்கு அளவீடுகள் ஏதும் குறிப்பிடப்படாததால், சில இடங்களில் பல்வேறு வசதிகள் கொண்ட காமிராக்கள் பொருத்தப்படுகின்றன. அதன் மூலம் யாரும் அறியாத வண்ணம் பெண்களுக்கு எதிரான சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. 

காமிராக்கள் பொருத்தப்படுவதில் உள்ள சிறுசிறு குறைபாடுகள் சரி செய்யும் வகையில் அரசினால் ஒழுங்குமுறை விதிகள் சரியாக ஏற்படுத்தப்பட்டு, கூகுள் வரைபடம் போன்று இணையத்தின் மூலம் கண்காணிக்கப்படும் வகைகள் ஏற்படுத்தப்பட்டால் இன்னமும் குற்றச் செயல்கள் தடுக்கப்படலாம் என்றாலும், தனி மனித ஒழுக்கக் குறைவும், பொருளாதார ஏற்றத் தாழ்வுமே பெரும்பாலான குற்றங்களுக்கு வித்திடுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது'' என்கிறார் பட்டிமன்ற பேச்சாளர்  தேவிபாலா குணசேகரன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com