அல்ஜீரியா நாட்டு நாடோடிக்கதை நீதிபதி
By -மயிலை மாதவன் | Published On : 15th July 2019 01:22 PM | Last Updated : 15th July 2019 01:22 PM | அ+அ அ- |

அல்ஜீரியா நாட்டில் அரசன் ஒருவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். அங்குள்ள நீதிபதிகளில் ஒருவர் மிகவும் நேர்மையானவர் என்றும், வழக்குகளில் உண்மையை உடனே தெரிந்து கொள்வார். எந்தக் குற்றவாளியும் நீதிபதியிடமிருந்து தப்ப முடியாது என்றும் கேள்விப்பட்டான். அரசன் ஒரு வியாபாரி போல் வேடமிட்டு அந்த நீதிபதி தங்கியிருந்த நகரத்தை நோக்கி புறப்பட்டான்.
நகரத்தை அடைந்ததும் அங்கிருந்த முடவன் ஒருவன் அரசனை அணுகி பிச்சை கேட்டான். அரசனும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கினான். ஆனால், முடவன் அரசனை விடாமல் ஆடையைப் பிடித்துக் கொண்டான். "நீ செல்லும் வழியில் என்னை விட்டுவிடு' எனக் கேட்டான் முடவன். சரி என்று தனது குதிரையில் ஏற்றிக் கொண்டான். குறிப்பிட்ட இடம் வந்ததும் முடவனை இறங்கச் சொன்னான் அரசன். ஆனால் முடவன் மறுத்துவிட்டான்.
முடவனோ, " இது என்னுடைய குதிரை, இதை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடு, இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்காட வேண்டியிருக்கும்' என அரசனை மிரட்டினான்.
வியாபாரி வேடமிட்ட அரசனும், முடவனும் நீதிமன்றம் சென்றனர். அங்கு ஒரே கூட்டம். ஒவ்வொரு வழக்காக வரிசையாக விசாரித்துக் கொண்டிருந்தார் நீதிபதி.
இவர்களுடைய வழக்கு வந்ததும் முடவனும், அரசனும் வழக்கின் விவரங்களைச் சொன்னார்கள்." குதிரையை இங்கேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள். நாளை வாருங்கள்' என அனுப்பி வைத்தார்.
மறுநாள் நீதிபதியின் தீர்ப்பைக் கேட்க, இருவரும் நீதிமன்றம் வந்தார்கள்.
இருவரையும் அழைத்த நீதிபதி "20 குதிரைகளின் நடுவே உன் குதிரையை அடையாளம் காட்ட முடியுமா?' இருவரிடம் தனித்தனியாகக் கேட்டார்.
"முடியும்' என்று இருவரும் கூறினார்கள்.
அரசனைப் பார்த்து" நீ என்னுடன் வா!' என்றார். இருவரும் குதிரை லாயத்திற்குச் சென்றார்கள். அரசன் தன் குதிரையை அடையாளம் காட்டினான். "உன் குதிரை தான் அது. அதை நீ கூட்டிக் கொண்டு போ' என்றார். முடவனுக்கு ஐம்பது கசையடி கொடுக்க உத்தரவிட்டார்.
ஆனால், அரசன் அங்கிருந்து போகவில்லை. நீதிபதியை பின் தொடர்ந்தான். "உனக்கு என்ன வேண்டும். உனக்கு என் தீர்ப்பில் திருப்தி இல்லையா?' என்று கேட்டார் நீதிபதி.
"குற்றவாளியை எப்படித் தெரிந்து கொண்டீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை' என்று அரசன் கேட்டான். நீதிபதி சொன்னார்.
"இருபது குதிரைகள் இருக்கும் இடத்தில் உன்னுடைய குதிரை உன்னைப் பார்த்ததும் தலையசைத்து உன் பக்கமாக வந்தது. ஆனால், முடவன் அருகே போனதும் அவனை உதைப்பதற்காகத் தயாரானது. அதிலிருந்து நீயே குதிரையின் எஜமான் என்பதைத் தெரிந்து கொண்டேன்' என்று விளக்கினார்.
உடனே ஆச்சரியமடைந்த அரசன், "நான் வியாபாரி இல்லை' எனத் தனது வேடத்தைக் கலைத்தான். நீதிபதியை பாராட்டினான். "உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன்' என்றான்.
"எனக்குப் பரிசு எதுவும் தேவையில்லை. அரசனே என்னைப் புகழ்ந்தார் என்ற பெருமையே போதும்' என்று கூறிவிட்டார் நீதிபதி.