அதிசயப்பள்ளி: கல்வி கட்டணமாக பிளாஸ்டிக் கழிவுகள்!
By -பிஸ்மி பரிணாமன் | Published On : 09th June 2019 02:53 PM | Last Updated : 09th June 2019 02:53 PM | அ+அ அ- |

காலை நேரம். பள்ளிக்குப் போகும் அவசரம். புத்தகப்பையை முதுகில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது மறக்காமல் பிளாஸ்டிக் கழிவுகள் நிரப்பப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர் மாணவ மாணவிகள்.
பள்ளிக்குள் நுழைந்ததும் பிளாஸ்டிக் பைகளைச் சேகரிப்பவரிடம் ஒப்படைத்துவிட்டு வகுப்பிற்குள் செல்கின்றனர். "ஏன் இப்படிப் பிளாஸ்டிக் கழிவுகளை வீட்டிலிருந்து கொண்டுவந்து பள்ளியில் ஒப்படைக்கிறீர்கள்.' என்று கேட்டால்... பள்ளியில் கல்விக் கட்டணத்திற்குப் பதிலாகப் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து வழங்குகிறோம்..' என்கிறார்கள்.
கல்விக் கட்டணத்திற்குப் பதிலாகப் பிளாஸ்டிக் கழிவுகளா..? இந்திய முழுவதும் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளைப் பெற்றுக் கொண்டு இலவச கல்வி வழங்கும் பள்ளியும் இந்தியாவில் இருக்கிறதா? நம்புங்கள். இருக்கிறது.
அசாம் மாநிலத்தின் தலைநகரான குவாஹாட்டியின் எல்லைக்கு வெளியே "பமோஹி' பகுதியில் "அக்சர்' பள்ளி மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அங்குதான் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி அளித்து வருகிறார்கள். நூற்றி பத்து மாணவ மாணவிகள் படிக்கும் "அக்சர்' பள்ளியின் வித்தியாசமான செயல்பாடுகள் ஐ.நா வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. "அக்சர்' பள்ளியின் நிறுவனர்கள் மஜின் முக்தர் - பர்மிதா சர்மா.
மஜின் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். நியூயார்க்கில் பொறியியல் பட்டம் பெற்றாலும் வித்தியாசமான சமூகச் சேவை செய்யப் பள்ளி ஒன்றைத் துவங்க வேண்டும் என்று இந்தியா வந்தவருக்கு அசாமைச் சேர்ந்த பர்மிதா சர்மாவின் அறிமுகம் கிடைத்தது. "சமூகத் தொழில்' முதுநிலை பட்டதாரியான பர்மிதாவும் மஜினைப் போலவே தனது மாநிலத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற அலைவரிசையில் பயணித்ததால் இருவரும் நண்பரானார்கள். அசாமிற்கு வந்தனர். பழகியதில் புரிதல் ஏற்பட்டு 2018 -இல் தம்பதிகள் ஆனார்கள்.
மஜின் இந்தியாவின் கனவுப் பள்ளியான "அக்சர்' குறித்து சொல்கிறார்: "அக்சர்' என்றால் "எழுத்து' என்று அர்த்தம் . "அக்சர்' இதர பாரம்பரிய பள்ளிகளிலிருந்து விலகி நிற்பது. பாடத்திட்டமும் அப்படியே. இதர பள்ளிகளில் சொல்லித்தரப்படும் கல்வியுடன் , கைத் தொழில், சுற்றுப்புறத் தூய்மை குறித்தான விழிப்புணர்வு சேர்த்துப் பயிற்றுவிக்கிறோம். ஒன்று இரண்டு என்று தொடங்கிப் பத்தாம் வகுப்பு என்கிறோமே.. அது இங்கே இல்லை. மற்ற பள்ளிகளில் "வகுப்பு' என்று குறிப்பிடுவதை "அக்சரில்' நிலை (கங்ஸ்ங்ப்) என்கிறோம்.
முதல் நிலையில் ஐந்து வயது மாணவரும் இருப்பார். எட்டு ஒன்பது வயது மாணவரும் பயிலுவார். பள்ளிக்கே போகாத ஒரு பையனை அல்லது சிறுமிக்கு ஒன்பது வயது என்றாலும் முதல் நிலையில் சேர்த்துக் கொள்வோம். இங்கே காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆசிரியர் மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பார்.
ஆசிரியர் மாணவர்களின் தரத்தை அவர்களது கல்வித் திறன், செயல்பாடுகளை வைத்து நிர்ணயித்துக் கல்வி ஆண்டின் முடிவில் அடுத்த நிலைக்குத் தேர்வு பெற்றுள்ளதாக அறிவிப்பார். ஒன்றிரண்டு பாடத்தில் போதிய அறிவு இல்லை என்று தோன்றினால் அந்தப் பாடங்களில் போதிய அறிவு பெறும் வரை அதே நிலையில் அந்த மாணவர் தொடர்வார்.
தேர்ச்சி பெற்ற பாடங்களை மேலும் விரிவாகப் படிக்க அடுத்த மேல் நிலையில் தொடர்வார். சில மாணவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு நிலைகளில் படிப்பார்கள். எங்கள் பள்ளியில் முதல் நிலையிலிருந்து மொத்தம் ஒன்பது நிலைகள் உள்ளன. பத்தாம் நிலைக்கு மாணவர்களைத் தயார் செய்து தேசிய திறந்த வெளிகல்வி முறையில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் செய்து "பிளஸ் ஒன்' படிக்க தகுதி சான்றிதழ் பெறச் செய்வோம். எங்கள் பள்ளியில் பயில்பவர்கள் பத்தாவது தேர்வை 2020 -இல் எழுதுவார்கள்.
காலை வேளைகளில் ரவையில் செய்யப்பட கேக், பால் மாணவ மாணவிகளுக்கு வழங்குகிறோம். மதியம் வரை பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு மதிய உணவும் உண்டு. மூன்று வயது முதல் எட்டு வயது வரையுள்ள சிறார்களுக்குப் பள்ளி நேரம் காலை எட்டு மணி முதல் பன்னிரண்டு வரை.
ஒன்பதிலிருந்து பதினைந்து வயதுள்ள மாணவர்களுக்குப் பள்ளி நேரம் காலை ஏழரை முதல் மதியம் இரண்டரை வரை. தொழில் பயிற்சி பிற்பகல் மூன்று முதல் மாலை ஆறு வரை சொல்லித்தரப்படுகிறது. எங்கள் பள்ளியில் சேர சிறார்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வசதி இல்லாமல் ஏழை பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலத்தை நிறுத்தவே அக்சர் பள்ளியைத் தொடங்கியிருக்கிறோம். பள்ளியில் சேரும் போது பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கக் கூடாது என்ற உறுதி மொழியும் எடுக்க வேண்டும்.
இங்கு மூங்கில் ஓலைகளால் வேயப்பட்ட எட்டு பெரிய குடில்கள்தான் வகுப்பறைகள். குடிலுக்குள் தூண்களால், ஜன்னல்கள் எல்லாம் மூங்கில் மரத்தால் செய்யப்பட்டவை. நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு டிஜிட்டல் அறைகளும் உண்டு. பெரிய நிலையில் படிக்கும் மாணவர் சிறிய நிலையில் படிக்கும் குழந்தைகளுக்குப் பாடங்கள் சொல்லித்தருவார்.
மாணவரே ஆசிரியராகும் போது அந்த மாணவனுக்குப் பொறுப்பு வந்துவிடுகிறது. அதனால் அதிக ஆசிரியர்கள் அக்சர் பள்ளிக்குத் தேவைப்படுவதில்லை. தொழில் முறை கல்வியில் பாடல், நடனம், சோலார் பேனல்களைப் பொருத்துவது, எம்பிராய்ட்டரி, ஒப்பனைக் கலை, தச்சுவேலை, தோட்டம் அமைத்தல், இயற்கை விவசாயம், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் மறு சுழற்சி துறைகளில் பயிற்சி அளிப்பதால் மாணவ மாணவிகள் பெரியவர்களாகும் போது தொழில் செய்து சொந்தக் காலில் நிற்கலாம்... அக்சர் பள்ளி நன்கொடைகளாலும் நிதி உதவிகளாலும் நடத்தப்படுகிறது.." என்கிறார் மஜின்.
மாணவர்கள் பள்ளிக்குக் கொண்டுவரும் பிளாஸ்டிக் கழிவுகளின் பயன்பாட்டினைக் குறித்து பர்மிதா விளக்குகிறார். "குப்பையாகச் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கும் வழக்கம் இங்கும் உள்ளது. குளிர்காலத்தில் வெப்பம் கிடைக்க பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது எவ்வளவு கேடு என்று விளக்கினாலும் பெரும்பாலோர் தொடர்ந்து எரிக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான் வீட்டில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கல்விக் கட்டணத்திற்குப் பதிலாகக் கொண்டுவரச் சொல்கிறோம்.
அப்படி வரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்குள் பிளாஸ்டிக் உரைகளை சிறு இடைவெளி இல்லாமல் வைத்து அமுக்கி நிரப்புகிறோம். பாட்டிலை மூடிவிட்டால் பிளாஸ்டிக் பாட்டில் நசுங்காது. செங்கல் மாதிரி உறுதியாக இருக்கும். அதை "ஈகோ' செங்கல் என்கிறோம். இந்த ஈகோ செங்கல்களைப் பயன்படுத்தி நடைபாதை, காம்பவுண்ட் சுவர், மரங்களைச் சுற்றி திண்டுகள் அமைக்கிறோம். இந்த ஈகோ செங்கல் செய்யும் மாணவர்களுக்கும், சிறிய நிலை மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பெரிய மாணவர்களுக்கும் சிறு ஊக்கத் தொகையும் அன்பளிப்பு செய்கிறோம். அதை மாணவர்கள், தங்களின் பள்ளித் தேவைகளான பாடப் புத்தகம், பென்சில், பேனா, சீருடை, காலணி வாங்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.'